1. காற்றோடு வந்த கீதம்
வெயிலடித்த வேதனையில் உடல்நொந்து புவியாள்
இருளெடுத்து துகிலெனவே இடையுடுத்து தூங்க
அதையெடுத்துப் பார்க்கமன ஆசைகொண்ட நிலவன்
இருளுடையை ஒளிக்கரத்தால் எடுத்தொதுக்கி காண
கிளுகிளுத்து உளம்சிரித்து நதியொருத்தி ஓடி
கீழ்விழுந்து புரளுமொரு கானகத்தி னூடே
கரும்பெரிய மரங்களெல்லாம் காற்றில் தலையாட்ட
வருமயலூர் நோக்கி ஒரு வழிப்பயணம் சென்றேன்
சிறுபருத்த மரங்களிடை சிதறிய வெண்ணொளியும்
சின்ன ஒளி தூக்கியோடும் மின்மினிகள் நூறும்
தருமழகில் மதிமயங்கி தனிநடையில் செல்ல
அருகினிலோர் பாட்டினொலி அதிசயமாய் கேட்டேன்
காற்றினிலே கலந்துவந்த கானமதைப் பாடும்
கானகத்துப் பூங்குயில்யார் கண்டுவிட எண்ணி
மேற்றிசையில் காலெடுத்து மெல்லநடை கொண்டேன்
பார்த்ததொரு காட்சிஅதை எப்படிநான் சொல்வேன்
சின்னதொரு மண்குடிசை முன்னே சிலையாக
வண்ணமிகு வாலிபத்து பெண்ணொருத்தி நின்றாள்
விண்ணெழுந்த தீயை மூட்டி முன்னிருந்து பாடும்
அன்னவளின் மேனிவண்ணம் கண்டு வியந்திட்டேன்.
(அவள் பாடுகிறாள்)
உன்னையே எண்ணி உருகிநின்றேன் அன்பே
என்னைக் கலந்திடநீ என்று வருவாயோ
கன்னம்பிடித்தழகு காணஉந்தன் கையிருக்க
கட்டழகை வெட்டவெளிக் காற்றே தழுவுதய்யா
மேனிஅனல் பிடித்து காய்ந்து சருகானதய்யோ
கூனிக்கிழமெடுத்து கொள்ளமுதல் வந்திடாயோ
ஆன இளவயது அழகு செழித்ததெல்லாம்
தானாய் கருகுமட்டும் தவிக்க விடுவதுஏன்
பூவில் வண்டுறங்கும் பொய்கையிலே மீனுறங்கும்
பாவோடுபண்ணுறங்கும் பனிபுல்லின் மேலுறங்கும்
பாவை இவள்உறங்கிப் பன்னெடுநாள் ஆச்சுதய்யோ
சாவில் உறங்கவென தள்ளிவைத்து நின்றனையோ
கூவி அழைத்துநாளும் குயிலாகப் பாடுகின்றேன்
ஏனோ எனை மயக்கி இன்பம் தர நீ மறுத்தாய்
தாவி உடல் வருத்தி தேகம் முறுக்கி வலி
ஆவி எடுக்கமுன்னர் அள்ளி இன்பம் தாருமய்யா
உள்ளம்துடிக்குதையோ உத்தமனே எங்கிருந்தாய்
கல்லாய் மனதுகொண்டாய் கன்னி உயிர் போகுதய்யா
கொல்லும் நெருப்பில் எந்தன்கோலம் அழித்திடுவேன்
இல்லைஎன் மேனியெனில் இந்தவதை போகுமன்றோ
***
முன்னே இருந்தபெரு மூள் நெருப்பில் சாகவென
கன்னி நடக்கையிலே கண்டுமனம் தான் துடித்து
பெண்ணே நிறுத்து வெறும் பேதை மனது கொண்டாய்
உன்னை அழித்துவிடில் என்னபயன் நீபெறுவாய்
பொன்னாய் உனதுடலை பூவுலகில் செய்தவனோ
மண்ணாய் மடிவதற்கோ மாசறுபொன் மேனிவைத்தான்
மின்னல் ஒளியழகும் மேனிவளர் செங்கனியும்
என்னே அழகு இது இவ்வுலக சொர்க்கமன்றோ
உந்தன் விரகம்உடல் கொண்டதுயர் வேதனையும்
கண்டேன் மனங்கலங்கி கண்கள் குளமாதல் தவிர்
எங்கோ ஒருவன் உனக்கிவ்வுலகில் வந்திருப்பான்
மங்கை உனையடைவான் மனதில் துணிவு கொள்ளு
கண்ணில் வியப்பினொளி காட்டிஎனை பார்த்துவிட்டு
என்னை மணக்குமந்த மன்னவனும் நீர்தானோ
வெள்ளிச் சலங்கையொலி வீசுங்குளிர் காற்றிலெழ
துள்ளிச் சிரித்தபடிசொல்லிக் கணம் மறைந்தாள்
வா என்றழைத்தாளா வண்ணமிகு மாதுஇவள்
போகின்ற போதுசெய்த புன்னகைக்கு என்னபொருள்
ஏதோ மனங்குழம்பி என்மனது சொல்லமுன்னே
தானே என் கால்நடந்து தக்க இடம் சென்றதடா
தொடரும்...
குறிப்பு: இது போன்ற நீள் கவிதை எழுதுவது எனக்குப் பிடிக்கும். ஆனால் உங்களுக்கு பிடிக்க வேண்டுமே!
நிச்சயமாக டல் ஆக இருக்காது என்று நினக்கிறேன்,கதை சொல்லும் பாணியில் இருப்பதால்!
உங்கள் கருத்து எனக்கு அளிக்கும் பொற்குவியலாக கருதுவேன்
கருத்துகள்
வித்தியாசமா யோசிக்கிறீங்க
வித்தியாசமா யோசிக்கிறீங்க நண்பரே....

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
கண்ணில் வியப்பினொளி காட்டிஎனை
கண்ணில் வியப்பினொளி காட்டிஎனை பார்த்துவிட்டு
என்னை மணக்குமந்த மன்னவனும் நீர்தானோ
வெள்ளிச் சலங்கையொலி வீசுங்குளிர் காற்றிலெழ
துள்ளிச் சிரித்தபடிசொல்லிக் கணம் மறைந்தாள்
வா என்றழைத்தாளா வண்ணமிகு மாதுஇவள்
போகின்ற போதுசெய்த புன்னகைக்கு என்னபொருள்
ஏதோ மனங்குழம்பி என்மனது சொல்லமுன்னே
தானே என் கால்நடந்து தக்க இடம் சென்றதடா
மாதவளின் ஒரு பார்வைபோதும் ஆடவன் மனம் கெட்டுப்போக...
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...







