மதிநின்று விளையாடும் மலைமீது தொடுமேகம்
மழை கொண்டு நீர்தூவுமாம் - வளர்
புதிதென்ற மலைவாழை இலைதள்ள அதுகொண்ட
பசுஞ்சோலை எழில் கொள்ளுமாம் - ஒரு
முதிதான மரமொன்றில் கிளைநின்ற குயில்பாட
மலர்க்கூட்டம் இதழ் பூக்குமாம் - தொங்கி
குதித்தோடிக் கிளைதூங்கி கருமந்தி மரந்தாவ
குளிர்நீரும் பூத் தூவுமாம்
அழியாத கலையோடு பெருங்கோவில் அமைந்தொன்று
அழகோடு உயர்ந்தோங்கவே - ஓடி
வழிமீது நடுவானில் வரும்மேகம் இடைநின்று
விடு என்று அதை மோதுமாம் - மெல்ல
விழி ஏய்க்குங் குளிர்காற்று வெண்பஞ்சு உடல்நீவ
வளைந்தோடி முகில் ஓடுமாம் - போலும்
எழிலான பலநூறில் எது தானும் அழகென்று
இசைபாட அருள்தேவியே
மழைவந்து நிலம்மீது உறவாடும் மணல்சேர
மண்வாசம் எழும் கண்டுமே - எங்கும்
நுழைந்தோடு பூங்காற்று அதையள்ளி மணம்வீசி
நனிபூவை மறந்தோடுமே - நின்று
வளைந்தாடும் கொடிபூத்த வகையான மலர்த்தேனில்
விழுந்தூறல் கலந்தோடவே - அங்கு
அழைந்தின்ப மதுவுண்ணும் இளந்தும்பி சுவையின்றி
அருந்தாம லெழுந்தோடுமே
குழல்மீது மலர்கொண்ட குறும்பார்வை தனிலன்பு
கொள்நங்கை தனை ஆடவன் - அவள்
சுழல்அம்பு விழிகண்டு சிந்தும்புன் னகையன்ன
சுடர்தானும் புவிமாதினை - சொட்டு
மழை நின்ற பெருவானில் கருமேகமிடையாலே
மறைந்தங்கு ஒளிசிந்தவும் - வந்த
மழைபோகச் சிறு தூறல் தனில்ஏழு நிறமோடி
இதுவண்ணம் வாழ்வென்குமே
பிழையான குரு பாடம் பயிலாத சிறுபாலன்
படுகின்ற துயராகவே - நடை
பழக்காத ஒருமாடு நடுவீதி தடுமாறிப்
பிரம்பாலே வெருண்டோடுமே - கொள்
முழவோடு சிறுநாத மிசைபாடிஒருகூட்டம்
மெதுவாக நடைகொள்வதும் - காண
அழகோடி எமதான மலைகூடும் சிறுஊரில்
அருங்காட்சி தினம் தோறுமே!
-கிரிகாசன்
கருத்துகள்
நண்பரே தவறாக எண்ணாதீர்,
நண்பரே தவறாக எண்ணாதீர், பழங்காலத்திலிருந்திருக்கலாம் ஆனால் இன்று எல்லாம் எதிர்மறையாக இருக்கின்றது, இருப்பினும் தங்களதுக் கவிதை எம்மை அதுபோலொரு அழகான இடத்திற்கு இட்டு செல்வது மிகவும் அருமை!
காட்சியை நேரில் பார்த்தது
காட்சியை நேரில் பார்த்தது போல, நல்ல இசையோட படிக்கப் படிக்கச் சுகம் தரும் பாவிது.

யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
மலை நாட்டில் வாழுகின்றேன்
மலை நாட்டில் வாழுகின்றேன் நான். மழை வழிந்து நிலம் செழித்து மக்கள் உழைப்பினால் முகம் மலர்ந்து செல்வம் கொழிக்கக் காணுகின்றேன். மலேசிய நாட்டை வருணிப்பது போல் அமைந்த உமது கவிதை அழகைப் பாராட்டுகிறேன். அதை விட தமிழின் அழகைக் கண்டு மனம் களிக்கின்றேன்.








