Skip to main content

மனமென்னும் கோவிலிலே

URI: http://tamilnanbargal.com/node/37700
கருத்துகள்: 4Likes: 0694 views

மனமென்னும் கோவிலிலே

Ponvannan's படம்

மனமென்னும் கோவிலிலே
மணிமகுடம் தரித்தவளே
மதிவிளங்க முறை செய்தே
மதிப்பளித்த மன்பதையே
மறைகளெல்லாம் புகழ்ந்துரைக்க
மறை பொருளாய் நின்றவளே
மழை வழங்கும் முகில்போலே
மகிழ்ந்தோடி முகிழ்த்தவளே

சேயான எனைத் தாங்கி
தாயாகி நின்றவளே
காயான என் மனதைக்
கனியாகச் செய்தவளே
காணாத கண்களையும்
காணவைத்த கயல்விழியே
கோணாத குணம் கொடுத்து
கோமகளாய் நின்றவளே

அறிவால் உன்னை உணர்ந்தவரை
அன்பாலே அணைத்திடுவாய்
நெறி நின்று வாழ்பவரின்
நெஞ்சினிலே நின்றிடுவாய்
செறிவான சிந்தனையில்
சிங்காரமாய் வாழ வைத்தே
குறியாத குற்றங்களை
கணப் பொழுதில் களைந்திடுவாய்

கோடுபோட்டு வாழ்ந்தவரை
கோபுரத்தில் ஏற்றி வைப்பாய்
பீடு நடை போடவைத்து
வீடுபேறு அளித்திடுவாய்
தோடுடைய சிவனைக் கூடி
தேடும் மனதில் தோன்றிடுவாய்
ஓடுடைந்து போகுமுன்னே
ஒளிவழங்கி மகிழ்ந்திடுவாய்

காணாத கண்களுக்கு
கவினழகாய்க் காட்சி தந்தாய்
பேணாத என் மனதை
பேச வைத்து பொருளுரைத்தாய்
நாணாத என்னுயிரை
நாணவைத்து நெருங்கி நின்றாய்
வாணாளில் யான் பெறாத
வானத்தையே வளைத்துத் தந்தாய்

தாயாகித் தந்தையாகி என்னுள்
சேயாகித் திரிந்தவளே
தீயாகி வானாகி நீரொடு நிலனாகி
ஓயாத காற்றும் ஆனவளே
நாயாகிப் பேயாகி நன்றிகெட்ட
சென்மம் கொண்ட என்னை
காயாது கடியாது கணப்பொழுதில்
காத்து நின்றனையே

எத்தனை சென்மங்கள் எடுத்தாலும்
எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
அத்தனை காலமும் உனதடியில்
சத்திய வழியில் நின்றிடுவேன்
நித்திய சித்தியை நான் பெறவே
சத்திய சோதியாய் என்னுள்ளே
முத்தரும் சித்தரும் கரைகண்ட
வித்தக வாழ்வினைக் கொடுத்தனையே

ஊரை விட்டேன் உறவை விட்டேன்
பேரையும் விட்டேனடி
யாரைவிட்டுப் போனாலுமுன்
சீரை விட்டுப் போகேனடி
நீரையிட்டேன் பூவையிட்டேன்
தாரையிட்டே உருகி நின்றேன்
வேரை விட்டே வளர்தமிழால்
வானளாவும் அன்பைப் பெற்றேன்.

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

ஐயா மனத்துள்ளின் உள் சென்று ஆழ பதிந்த பக்தியை வேர் பதித்து விழுது விட்ட ஆலமரம் போன்றதானக் கவிதை! வளர்தமிழ் தங்களுக்கு மேலும் பாராட்டுக்கள் பெற்றுத் தரும்!

பக்தியில் தொடங்கி பட்டினத்தடிகள் பாவரிகள் போன்று முடிக்கும் வரை இறைஅன்னையை, தமிழன்னையைப் பாடி எங்களுக்குள்ளும் பக்தி உணர்வை ஊட்டுகிறீர்கள்.