kirikasan's படம்

4. உண்மை உரை(றை)த்த‌து

ஏய்பேயே நில்லங்கே என்னைநீ தீண்டாதே
மாய உருவெடுத்து மயக்கியது சரிதானோ
பாவம் எனநினத்துப் பக்கமதில் வந்தவனை
பேயாய்மாறி என் பிணம்தின்ன கூடினையோ

அங்கே ஓர்கணம் அலைபோல் மிதந்துருகி
வந்த செயல் விட்டு வலிந்து ஒருபுன்னகைத்து
சாந்தம் அடைந்து ஓர் சரிபாதி பெண்ணாகி
மீதமுரைத்ததனை மெய்சிலிர்க்க கேட்டுநின்றேன்

பேயும் நானல்ல பிசாசல்ல கேள் தோழா
நீயும் நினைத்துபோல் நீசமனம் எனக்கல்ல
உந்தன் உள்ளமிடை ஒளிந்ததோர் வக்கிரம்தான்
இந்த உருவெடுத்து இளமகளாய் பெண்ணானேன்

கண்ணில் காண்கின்ற கன்னியர்கள் அத்தனையும்
மண்ணில் அடைந்துவிட மனம் எண்ணும் பித்தனே
உன்னை உனக்கேயார் என்றுஇனம் காட்டிடவே
என்னைப் பெண்ணாக்கி எதிர் நின்று பாட்டிசைத்தேன்

கட்டியது சேலையெனில் கலங்கி மனஉறுதி
விட்டவரின் பின்னாலே வீணாகச் செல்லாதே
கண்ணாலே பார்த்து கதைபேசி கட்டழகுப்
பெண்ணின் மனதேய்த்து பொய் பேசிக்கூடாதே

பெண்ணும் அவள்தான் பேயும் அவள்தான் நல்
பேரரிய அன்புள்ள தாயும் அவளேதான்
தன்னையே ஈந்து தன்குலம் வாழச்செய்
உன்னதமான உயிர்த் தெய்வம் அவளேகாண்

கண்டதும் மஞ்சத்துக் கழைத்திடும் பெண்களும்
காதலை காசெண்ணி வித்திடும் பெண்களும்
உண்டென்றுஎண்ணி உள்ளத்தே காமத்தீ
பொங்கி வழியப் புறப்பட்டுச் செல்லாதே

காதல் செய் ஒருத்தியை கைபிடித்தேற்றபின்
காண்பதை அவளிடம் கண்டே நீ இன்பம் கொள்
ஆதல் இதுவன்றி அடுத்தபெண் நோக்காதே
ஈனச்செயல் செய்து இளமையைக் கெடுக்காதே

உந்தன் உள்ளத்தே உறங்கிக் கிடக்கிறேன்
என்னை எழுப்பாதே எழுந்திடில் உன்னை நான்
பேயாய் சுடுகாட்டில் பிணம் தின்ன அலைவதுபோல்
நீயும்பெண் உடல்தின்னும் பேயாய் அலையவைப்பேன்

/நல்லமொழி ஆயின் இல்லாளூடன் ஒன்றி
இல்லாதவன் என்றும் இன்னலுடன் மனைவியுடன்
பொல்லாத சண்டை பிணக்கென்னில் வேறுசுகம்
கொள்ளாதவன் நிற்கக் கூறுவதுசரியாமோ?/

உன்னையே எண்ணி ஓடுகிறாய் பெண்ணவளோ
தன்னந்தனிவீட்டில் தவிக்கவைத்தல் சரியாமோ
அன்னவளின் கோபத்தின் அர்த்தம் புரிந்தவளை
என்னவெனக்கேட்டு இணைந்துவிடமாட்டாயோ

அன்புக்கு அடி பணியா பெண்ணொருத்தியில்லை
வன்மைப்பேச்சு வாய்க் குதர்க்கம் அழிவுதரும்
நல்லமைதிநிலவ நலம்பேண வேண்டுமெனில்
வெல்ல எண்ணாதொருவர் விட்டு கொடுத்திடணும்

கைபிடித்துக் காலமெலாம் கட்டில் சுகம்தந்து
மெய்நொந்து பிள்ளைபெற்று மேனியழிந்தே குலத்தை
கை பிடித்துக் காத்து காலமெல்லாம் கூடவரும்
தையல்மனம்மகிழத் தக்கனசெய் சுகம் தருவாள்

பெண்ணே தாயாவாள் பெண்ணே பேயாவாள்
பெண்ணேஇன்பமெனும் பெரும்ஊற்றின் பிறப்பிடமாம்
பெண்ணே துன்பமாம் பெண்ணே கடவுளுமாம்
ஆணோசிற்பி அவன் கைவண்ணச்சிலையாவாள்

கூறிக்கணம் செல்லக் கோரஉருப்பேய் மறைந்து
போக இருள்தானும் கூடியதோர் சுடுகாடும்
மாறிக் கரைந்துவிட நான்குசுவர் நடுவே
மீளப் படுத்திருந்தேன் மேனி பிழைத்தது போ!

பெண்ணொன்று சிரித்துப்பேசியதுபோல என்
செல்போன் மணியடிக்க சென்று அதையெடுத்தேன்
கன்னத்தில் வைத்தேன் காதில் ஒலித்தவளோ
என்னைக் கணவனென ஏற்ற திருமகளாம்

அன்பே ஆரணக்கே உன்நினைவே ஒன்றல்லால்
எந்த நினைவும்இங் கெனக் கில்லை ஊர்விட்டு
வந்தேன் பொருள்தேடி வாழ்வுதனில் நாம்கூடி
ஒன்றாகுவோம் விரைவில் உன்நிலமை ஏதென்றேன்

அவளோ..
உன்னையே எண்ணி உருகிநின்றேன் அன்பே
என்னை கலந்திடநீ என்றுவருவாயோ
கன்னம் பிடித்தழகு காணஉந்தன் கையிருக்க
கட்டழகை வெட்ட வெளிகாற்றே தழுவுதய்யா......

(முடிந்தது)

10
Your rating: None Average: 10 (1 vote)

கருத்துகள்

vinoth's படம்

பெண்ணும் அவள்தான் பேயும்


10

பெண்ணும் அவள்தான் பேயும் அவள்தான் நல்
பேரரிய அன்புள்ள தாயும் அவளேதான்
தன்னையே ஈந்து தன்குலம் வாழச்செய்
உன்னதமான உயிர்த் தெய்வம் அவளேகாண்

பெண்ணே தாயாவாள் பெண்ணே பேயாவாள்
பெண்ணேஇன்பமெனும் பெரும்ஊற்றின் பிறப்பிடமாம்
பெண்ணே துன்பமாம் பெண்ணே கடவுளுமாம்
ஆணோசிற்பி அவ‌ன் கலைக்கேற்ப சிலையாவாள்

நல்ல வரிகள் Clap bye


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Ragavan's படம்

"பெண்ணே தாயாவாள் பெண்ணே


"பெண்ணே தாயாவாள் பெண்ணே பேயாவாள்
பெண்ணேஇன்பமெனும் பெரும்ஊற்றின் பிறப்பிடமாம்
பெண்ணே துன்பமாம் பெண்ணே கடவுளுமாம்
ஆணோசிற்பி அவ‌ன் கலைக்கேற்ப சிலையாவாள்"

மிக மிக அருமை...
பட்,
சட்டுனு முடிசிட்டீங்களே.....


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


kirikasan's படம்

உங்கள் பாராட்டு


உங்கள் பாராட்டு உள்ளம்குளிர்விக்க‌
மெய்சிலிர்த்து கொண்டேன் மிக நன்றி=ஏதும்
கல் விழுமோ என்று காத்திருக்க மலர்போன்ற‌
சொல்லெறிந்த அன்புக்குச் சொல்லொணா நன்றிகள்!