பரிதவிக்கும் உள்ளத்திற்கு உரித்தான உறவே
கரிநிறத்து மழைமேகம் புவனமெல்லாம் பொழிந்து
தரித்திரமே பறந்தோட கான்மலைகள் செழிக்க
உரித்தநிலை உருமாறி உயிர்களெல்லாம் சிறக்க
சிரித்தமுக இயற்கையன்னை தவழ்ந்தே வருகவே
பரிதவிக்கும் உள்ளத்திற்கு உரித்தான உறவே
கரிமுகத்து ஐங்கரனே கருணைதரும் விருந்தே
எரிவாயில் அழியுமுன்னே ஏழையென்னைப் பொருந்தி
விரிசடையான் சரிபாதி புகழ்பாட அருள்வாயே!
கிரிவலமே வந்துன்னை வணங்காத போதும்
அரிதான அருங்குணங்கள் தவறாது தந்தே
தெரியாத நிலையிலும் தெளிய வைத்து என்னை
தறிகெட்டுத் திரியாமல் உடனிருந்தே காப்பாய்
எரிகின்ற தீயிலுந்தன் ஒளிமுகமே கண்டேன்
விரிகின்ற பிரபஞ்சம் சுருங்கிடவே கண்டேன்
பிரிகின்ற உயிரதிலே அடங்கிடவே கண்டேன்
சொரிகின்ற உனதன்பில் மகிழ்ந்திடவே நின்றேன்
நெறிநின்று நினதன்பைப் பரிவோடு பகிர்ந்து
குறியாது வாழும் நிலை அடியோடு மறந்து
அறியாத திறன்மாறி வாய்மையோடு இணைந்து
பொறிபுலன்தன் வழியிலே செல்லா தமைந்தேன்
வறிதான வாழ்வெனக்கு வந்தமைந்த போதும்
பறித்துண்டு வாழாத நிலை தந்து காத்தாய்
கறிக்குதவா கற்பனைகள் கரைந்தோடிப் போக
செறிவான அறிவுதந்து ஆனந்தமே கொடுத்தாய்
ஆயகலைகள் அத்தனையும் உனை ஏற்றிப் பாட
நாயகனாய் நன்மணியாய் நலம்காக்க வருவாய்
தூயஉன் பதத்தினையே தொழுது எழுவாரின்
நோயகற்றி அவர்நோக்கம் நிறைவேற அருள்வாய்
வாரணங்கள் வரிந்துநிற்க வானவர்கள் வணங்கிநிற்க
காரணனாய் எழுந்துநிற்கும் பூரணனை வாழ்த்துகிறேன்
தோரணங்கள் மிளிர்ந்து நிற்க சீர்வரிசை சிறந்து நிற்க
ஆனைமுக ஐங்கரனை அகங்குளிரப் பாடுகின்றேன்.
கருத்துகள்
தும்பிக்கையான் மீது நம்பிக்கை
தும்பிக்கையான் மீது
நம்பிக்கை வைத்தால்
எல்லாவற்றிலும் வெற்றியே!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
இக்கவிதையின் ஒவ்வொரு வரிகளும்
இக்கவிதையின் ஒவ்வொரு வரிகளும் அருமை ஐயா அவர்களே!
என்னமோ என்னை ஈர்த்த வரிகள் இவைகளே!
வறிதான வாழ்வெனக்கு வந்தமைந்த போதும்
பறித்துண்டு வாழாத நிலை தந்து காத்தாய்
கறிக்குதவா கற்பனைகள் கரைந்தோடிப் போக
செறிவான அறிவுதந்து ஆனந்தமே கொடுத்தாய்
// // // //
வாரணங்கள் வரிந்துநிற்க வானவர்கள் வணங்கிநிற்க
காரணனாய் எழுந்துநிற்கும் பூரணனை வாழ்த்துகிறேன்
தோரணங்கள் மிளிர்ந்து நிற்க சீர்வரிசை சிறந்து நிற்க
ஆனைமுக ஐங்கரனை அகங்குளிரப் பாடுகின்றேன்.
என்னையும் அறியாமல் என்கரங்கள் தொழ விழைந்த வரிகள்!
அருமை! அருமை! அருமை!





