காதலோடு என்னருகே நெருங்கி நின்றாய்-ஏன்
கவிப்பெண்ணே கண்டவுடன் பயந்துச் சென்றாய்
மாதரசி மனவானில் தேடுயொன்றா-நீ
மறைந்தாயா அறியேனே இதும்நன்றா
பேதமது நம்மிடையே வருதல் வேண்டா-என்
பேரன்பில் இனிமேலும் ஐயம்உண்டா
ஆதலினால் அன்பேநீ ஓடிவருவாய்-என்
அழைப்புக்கு செவிசாய்த்து நாடிவருவாய்
கற்றதமிழ் கைகொடுக்கத் தினமுமொன்றே-நான்
கவிபாடி என்வலையில் தரவும்நன்றே
உற்றதுணை நீதானே மறந்தாபோனாய்-நெஞ்சம்
உற்றதுயர் அறிந்துமா பறந்தேபோனாய்
குற்றமென்ன கண்டாயா கூறுப்பெண்ணே-என்
குறைகண்டு நீக்கிடவும் கவிதைப்பெண்ணே
செற்றமது வேண்டாவே என்பாலென்றும்-நல்
செம்மொழியே துணையாக இருப்பாயென்றும்
உண்மைமிகு உறவுகளைத் தேடித்தந்தாய்-இவ்
உலகமெனைப் பாராட்ட ஓடிவந்தாய்
தொண்மைமிகு தனித்தமிழே வருவாயாக-உன்னை
தினம்பாட நல்வாய்ப்பு தருவாயாக
தண்மைமிகு தென்றலென தழுவநீயே-நெஞ்நில்
தவழ்கின்ற மழலையென வருவாய்தாயே
திண்ணமுற என்வலையில் எழுதநானே-என்றும்
தெவிட்டாது இனிக்கின்ற கொம்புத்தேனே
புலவர் சா இராமாநுசம்
கருத்துகள்
அய்யா அருமையான கவிதையை
அய்யா அருமையான கவிதையை எளிமையில் இயற்றி தந்தமைக்கு நன்றிகள் 
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
தமிழ் வருவாளய்யா! தங்களின்
தமிழ் வருவாளய்யா!
தங்களின் இந்தக்கவிதை கண்டும் தமிழ்ப்பெண் வரவில்லையென்றால்,
அவளும் தமிழ் மறந்த நம் உறவுகள் போலாகி விடுவாளே!









