Ponvannan's படம்

துதிபாடும் நெஞ்சம்

துதிபாடும் நெஞ்சம் கொண்டாரிடம் என்றும்
நதிபாயும் வெள்ளம் தனைப் போல பொங்கும்
நிதியாவும் நிறைத்து வறுமைத் தளை நீக்கி
மதியாவும் மகிழவே வருவாயடி அம்பிகையே

எதுவேண்டும் என்றாலும் உன்தயவை நாடியே
புதுவரவு கேட்டிங்கு மனதாலே உன்னினும்
அதுவாக எமைத் தேடி வியப்புடனே வருகுதே
மதுராம் நகர்தனிலே அரசாளும் மீனாட்சியே

உலகோடு உயிர்வாழ பலயாவும் கற்றேனில்லை
தலமோங்கும் உன்புகழை தவறாது போற்றி நின்றேன்
நலமோடு நான் வாழ வளமோடென் கிளைவாழ
குலமோடு பெயர்வாழ வகைசெய்தாயடி அபிராமியே

எப்படிநான் வாழ்ந்தாலும் உன்புகழே எடுத்துரைப்பேன்
தப்படியே வைத்தாலும் உன்னடிக்கே தலைவைப்பேன்
கைப்பிடியாய் கரம்நீட்டி காலமெல்லாம் துணைதந்து
இப்படியே மனங்களிக்க வரம்தருவாயடி கருமாரியே

நினையாத போதென்னை நீ நினைக்க வைத்தாயடி
வனையாத போது என்னை உன்பக்கம் இழுத்தாயடி
வினையால் அழுந்திநான் தடுமாறி நிற்கும் பொழுது
முனையாத என்னுயிரை அணைத்தாயடி பராசக்தியே

நன்றிசொல்ல எனக்கு நல்ல தமிழ் இல்லையென்று
குன்றி நின்ற எனக்கு தமிழாக உருவெடுத்தாய்
கன்றிணைந்த பசுவினைப்போல் உன்முகம்கண்டு
என்றுமில்லா ஆனந்தம் அடைந்தேனடி உமையே

(என் கனவில் தோன்றி காட்சி அளித்த என் அன்னை அபிராமிக்கு நான் எழுதிய கவிதைகளில் ஒன்று)

8.66667
Your rating: None Average: 8.7 (3 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

அம்பிகையே மீனாட்சியே அபிராமிய


8

அம்பிகையே
மீனாட்சியே
அபிராமியே
கருமாரியே
பராசக்தியே என அழைத்த
அறிஞர் பொன்வண்ணன் அவர்களே
எனக்கு
அபிராமிப் பட்டர் நினைவு வர
இனிய இறைபாடல் என உணருகிறேன்!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


அவந்தி's படம்

கவிதை அடைமழையா? அருவியா?


9

கவிதை அடைமழையா? அருவியா? சொல்லுமளவிற்கு எனக்கு தகைமை இல்லை ஐயா, மிக மிக நன்று

Ponvannan's படம்

நண்பர் யாழ்பாவாணன்


நண்பர் யாழ்பாவாணன் அவர்களுக்கும் அவந்தி அவர்களுக்கும் என் இதய‌ம் கனிந்த நன்றி. அன்னை அபிராமி உங்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் அளிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

rajudranjit's படம்

தொடக்கம் தொட்டு அடக்கம்


9

தொடக்கம் தொட்டு அடக்கம் கொண்டு அன்னையவள் அடி தொழுதால் பழுதில்லா வாழ்வுண்டு என்பதை ஐயாவின் பா விளக்குவது அருமை!

தங்களிடம் காட்சி தந்த அன்னையை எமக்கும் பா வடிவில் காணவும் தரிசிக்கவும் தந்த தங்களுக்கு எமது நன்றிகள்!

யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற தந்த இராமானுஜர் ஞாபகம் தான் வருகின்றது!

என்றும்: சுஷ்ருவா