kirikasan's படம்

செழுமலர் நிறைபொழில் சிதறிய திவலைகள்
சொரிவது எனவிழி நீர்வழிய
மெழுகெனும் குளிர்சுனை மலரது இதழ்களும்
எழுமெழில் முகமதில் தீ பரவ
தழுவிடு எனையென பருவமும் அவனிடம்
கொலை கொலையென மனம்தான் அழிக்க
எழுமிலை மறைகனி இதிலுறை பனிவிழும்
எழிலுறும் வகையென இவளிருந்தாள்

சொலுவென்ன குறையது சிறுவய துடையொரு
சிலையெனும் வடிவெடு ஆரணங்கே
கொலுவினி லிருஉரு உயிர்வர அருகினில்
குறுநடை பழகிட வருமெனவே
பொலபொலஎன உதிர் புதுவகை மலரெனும்
பொலிவொடு இதழ்வழி மதுமினுங்க
குலுங்கிடு மிவையென்ன கொடுமைகள் தருதென
குடமிரு வளை யயல் கோபமிட்டான்

அலைகடல்பெரியது அதைவிட இதுபெரும்
அதிசய மலையுது நீரின்றியே
மலையிடைஎழுமதி முகில்வரு மிடையினில்
மகிழ்வென நீந்திடும் மதிகுலைய
உலையிடு உயிரென ஊறிடும் நீர்விழு
உளதுயர் தெளிவெடு மீனசைய
விலையில திவளெழில் சிதைவது கொடிதென
விளைவது ஏதென இவன் வினவ

இழிவெரு துடனெடு எறிகயிறுளனென
திருபொருள் `திருவுடன்` அதிலொருகால்
அழி`வு`செய் இனமிவன் எதுஎன துயிர்துடி
ஒலியிடும் பொருள்கொள விழி பொழிந்தேன்
ஒழிவில தொருமுறை உயரிய பதில்தர
உளதொரு பெரியவர் உமையடைந்தேன்
வழியறி அறிவது வரவில்லை எதுவரை
வாழ்வென மீளவும் வழியுரையும்

எவனுன துடைமையை இருவிழி நீருற
எதிரியென் றில்லமும் கன்னமிட்டோன்
அவனது தருவனோ அதைவிட அவனது
எடுபொருள் கவரென இவனுரைத்தான்
நவமணி பொலிந்திடு ஒளியுடை சிலையென
இவளெழில் வதனமும் பூமலர
அவனிலை இவனென எடுஉன திதயமும்
எங்குள தெனஇதழ் களவுசெய்தாள்

7.33333
Your rating: None Average: 7.3 (3 votes)

கருத்துகள்

kirikasan's படம்

பொருள் ( 3 வது பந்தி) அலைகடல்


10

பொருள்
( 3 வது பந்தி)

அலைகடல் அதிசயிக்கத் தக்க வகையில் பெரியது. அதைவிட இந்த அதிசயம் பெரியது.
அதாவது நீரில்லாமலேயே அவளுடலில் அலையை க்காணும் அதிசயமென கூறி (அலைபோலும் மேனி. அலைபோல வளைந்த மேனி, அலைந்து திரியும் மேனி , அலைபோல உணர்வுகள் கொள்ளும்மேனி, எப்படியாவது எடுத்துக்கொள்ளுங்கள்)
அந்த அதிசயித்தில் மனம் கவர வானில் முகிலிடையே நிலவு நீந்துவது போலும் , தாங்களும் தண்ணீரில் நீந்தவேண்டுமே என்ற எண்ணத்தைவிட்டு உலைகொதி நீரிலிட்ட உயிரினம் துடிப்பதுபோல அசைந்தமீன்கள் போன்ற கண்களில் நீர்வழிய அழகு கெடுகிறதே என்று அத காரணத்தை வினவினான்

(4 வது)
இழிவு! எருதுடன் எடு கயிறு உளன் (உடையவன்)( எமன்போல )
எனதிரு (என்னிடமுள்ள) பொருளினை `திருவுடன்` என்பதில்
`வு`அழித்து வரும் (திருடன்) இனத்தவன் எனது உயிர்துடிப்பான
ஒலியிடும் பொருளை (இதயத்தை) திருடிவிட்டதால் அழுதேன். அதற்கு என்ன செய்யலாம் எனக்கேட்க

(5 வது)

கன்னமிட்டோன் - களவு செய்தவன்
முடிவில்.. அவன் அல்ல! அது இவன் நீதான் எனக்கூறி எடு உன் இதயத்தை என்று
அவள் இதழ்களை அவன் கன்னத்தில் பதித்து முத்தமிட்டாள்.
(களவுசெய்தாள் - கன்னமிட்டாள்)

yarlpavanan's படம்

மிக நன்று


7

மிக நன்று


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rajudranjit's படம்

நன்று என்று நண்பர் சொன்னதற்கு


5

நன்று என்று நண்பர் சொன்னதற்கு எனது ஆதரவும் உண்டு!
ஆனால் சில பொருட்கள் சிதறியுள்ளது (விலையில திவளெழில் சிதைவது கொடிதென என்பதில் விலையிலா என்றல்லவா வரும் விலையில என வரும்போது யிவளெழில் என்றல்லவா வர வேண்டும்)

எழுத்துப்பிழையாகினும் தாங்கள் செய்யும் போது பொறுக்கயிலவில்லை எனது தவறுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

இழிவெரு துடனெடு எறிகயிறுளனென
திருபொருள் `திருவுடன்` அதிலொருகால்
அழி`வு`செய் இனமிவன் எதுஎன துயிர்துடி
ஒலியிடும் பொருள்கொள விழி பொழிந்தேன்
ஒழிவில தொருமுறை உயரிய பதில்தர
உளதொரு பெரியவர் உமையடைந்தேன்
வழியறி அறிவது வரவில்லை எதுவரை
வாழ்வென மீளவும் வழியுரையும்

அருமையான இக்கவிதையில் உமது உள்ளத்தின்க் கேள்வியைப் புரிந்துகொள்ள இவ்வரிகள் உணர்த்துகின்றன‌