திசை மாறுமோ 3

URI: http://tamilnanbargal.com/node/533421 கருத்துகள்97 views
kirikasan's படம்

5.  குறிஞ்சி நிலம்

ஓங்குமலை வீசும் தென்றல் என்ன கூறுது - அது
ஓடிவந்து உந்தன்காதில்  என்ன சொன்னது
ஏங்கும் வாழ்வில் என்றும்கொள் சுதந்திரத்தினை - இன்று
ஏன்மறந்து காண்பதென்று என்னைக் கேட்குது
தேங்கிவீழ்ந்து ஓடும்பாறை தொட்டுசிந்திடும் - அந்த
தூயநீர்கொள் அருவியோடி என்ன சொல்லுது
நீங்கியுன்நி லம்மறந்த வாழ்வைச் சாடுது - இங்கு
நீயில்லாமல் தேசமா என்றென்னை வையுது

பூங்கொடிக்குள் கொத்துகொத் தென்றான தேன்மலர் - தானும்
புன்னகைப்பில் உன்னைப் பார்த்து என்னசொன்னது
தாங்கிநீ மனம் பொறுத்த தன்மை ஏனது - உன்றன்
தாயெனும் நல்தேசம் மீட்கதேடு என்குது
மாங்கனிந்த சோலை யெங்கும் ஆடும் இன்பழம் - அது
மாறிஉள்ளம் தேய்ததேனே என்றுகேட்குது
மூங்கில் கூட்டம் மோதிதீ பிடித்த போதிலும் - உன்றன்
மூச்சுக்காற்றில் வெம்மையில்லை என்று நோகுது

செங்கனலென் றந்திவானம் மாறியதேனோ - அங்கு
சீறி நெஞ்சம் கோபமிட்ட மேகமும் ஏனோ
கங்கைவெள்ளம் போலமண்ணில் காணுது செந்நீர் - இதைக்
கண்டும் தூக்கம் கொள்வையோ என்றென்னைப் பேசுது
அங்கமெங்கும் அழகுமின்ன ஆடுது தோகை - அது
அங்கிருப்ப துச்சிமலைக் கந்தனின் கோவில்
தங்கவண்ணத் தோகை வேலன் தன்னைக் கேட்குது வேலும்
துன்பம் நீக்கிக் காக்கும் வீரம்கொள்ளத் தூண்டுது

பொங்கியோடும் பொய்கையூடு பொன்னிழில் மின்ன இந்தப்
போதினிலே நான் இருப்பேன் பொற்றமிழ்மன்றம்
சங்குமூதும் சத்தமொன்று கேட்பதுமென்ன - உந்தன்
சங்கநூலைப் போட்டுவிட்டு சென்றிடு கூட
தொங்கியாடும் ஊஞ்சல் வாழ்வை வென்றிடுநாளை - நல்ல
தூய நோக்கம் மின்னும்வண்ணம் தீயெழக் காளை
நங்கையோடு அன்னை நாட்டின் சின்னவர் குழந்தை - இவர்
நாளும் இன்ப வாழ்வுகாண வென்றிடு தேசம்

**************************

 6.  சதி அரங்கேற்றம்

வெட்டி முழக்கிய மேகம் மின்னலில்
கொட்டித் தூறுது மழை - அவை
தொட்டுக் கூரையின் மீது விழுந்திட
டக்டக் டக்கென இசை   
கட்டிக் காத்தவை கள்வர் நுழைந்திடக்
கடும்புய லோ கடல் அலை - அது
முட்டத் திரள்வது போலப் புகுந்திட
முற்றிலும் அள்ளுது நிலை

திட்டமிட் டாற்றிடத் தோன்றிடு பகையும்
திசைகள் மூன்றிலும் கடல் - அவை
வட்ட மென்றாகியும் வந்து நுழைந்திடில்
வாழ்விற் குளதோ இடம்
விட்டுப்போவது உலகென் றாயினும்
வந்தே பிறந்திட்ட நிலம் -அட
கெட்டுப் போகினும் கும்பிட்டாவது
கீழ்மையில் வாழ்ந்திடும் குணம்

நெஞ்சுள் மூச்சினை கண்டே வாழ்வென
நின்றவரோ பயிர், களை - புவி
மஞ்சம் மாலைகள் மலரில் சயனமும்
மயங்கச் செய்திவர்களை
வஞ்சப் பாதையில் வழியும் காட்டிட
வென்றது உலகின் வலை - இனி
அஞ்சிக் கிடந்தவர் செல்திசை மாற்றித்
திருப்பம் நிகழுமோ விடை??

 (தொடரும்)

 

8
Your rating: None Average: 8 (1 vote)

கருத்துகள்

vinoth's படம்
0

குறிஞ்சி நில மகள் அழகை வர்ணித்தல் சிறப்பாக இருக்கிறது.

 

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

புதிய கருத்தை சேர்