தமிழரின் இலங்கை
தமிழரில்லாத இலங்கையாக
மாறிக்கொண்டு வருவதை
நினைவூட்டலாமா...
மாறிவிடும் என்பதை
'நினைவிற் கொள்க' என்று
எடுத்துக் கூறலாமா...
எதைக் கூறுவதென்று
என் உள்ளம்
குழம்பி நிற்கின்றதே!
ஆளுக்கொரு கட்சி
ஆளுக்கொரு இயக்கம்
ஆளுக்கொரு கொடி
எத்தனையோ பிறந்து இருந்தன...
'தமிழருக்கு விடுதலை' பெற்றுத் தருவதாக
எல்லோருமே கூறி நின்றன...
பின்னர்
'தமிழரை ஆள்வது யார்?' என்று
ஆளுக்காள் போட்டி போட்டு
அழிந்து போயின என்றோ
அழிவதற்குத் தயார் என்றோ
பார்க்கக் கூடியதாக இருக்கிறதே!
1983 ஆடிக் கலகம்
சுடுகலன் போரை அறிமுகம் செய்ததா?
எந்தெந்த நாடுகளுக்கு
ஏதிலியாகப் போகலாம் என்பதை
அறிமுகம் செய்ததா?
தமிழரின் இலங்கை
தமிழரில்லாத இலங்கையாக
மாறுவதைக் கண்டு உணரலாமே!
புலிகளை அழித்ததும்
வன்முறைப் போருக்கு
முற்றுப்புள்ளி வைத்தாச்சே...
சுடுகலன் ஏந்துவோர்
எவராயினும் இருப்பின் அழிக்கப்படுவார்களே...
இன்றைய ஈழத் தமிழர்
இப்படித்தான்
முணுமுணுப்பதைக் காணலாமே!
ஈழத் தமிழரின்
முணுமுணுப்புக்குள்ளே
மறைந்திருப்பது என்ன?
தனிப் பெரும்
சிங்களத் தலைமையை ஏற்பது
நன்று என்று தானே இருக்கும்!
எப்படியாயினும்
தமிழர் நலம் பேணுவதாயின்
கட்சிகளோ இயக்கங்களோ
ஒன்றிணைய மறுத்தால் நடப்பதென்ன?
கட்சிகளாயின்
தடைபோட்டுச் செயலிழக்கச் செய்யலாமே...
இயக்கங்களாயின்
புலிகளை இல்லாது ஒழித்தது போல
அழிந்து போகச் செய்யலாமே...
அப்படியாயின்
யார் நலனை யார் பார்ப்பது?
உலகெங்கும் வாழும்
ஈழத் தமிழினமே
உண்மையைக் கூறுவீர்களா?
ஈழத் தமிழர் நலன் பேணாத
எந்தச் சக்தியும் இருந்தும்
பயனில்லைக் கண்டியளோ!
கருத்துகள்
மனதை உருக்கும் உறுத்தும்
மனதை உருக்கும் உறுத்தும் கவிதை! அன்பரே தமிழர்களுக்கு தமிழர்களே எதிரி என்பதை கோடிட்டு காட்டியுள்ளீர்கள்! எப்போது திருந்தும் நம்மினம்?
"யார் நலனை யார் பார்ப்பது?"
"யார் நலனை யார் பார்ப்பது?" எனும் வரிகளில் தொணிக்கும் உள்ளத்தின் வேதனையை நம்மால் உணர முடிகின்றது.





