சிவவாக்கியம்
வாகு - வலிமை
பாலகனாக வேணும்என்று பத்திமுற்றும் என்பிரேல்
நாலுபாதம் உண்டதில் நினைந்திரண்டு அடுத்ததால்
மூலநாடி தன்னில்வன்னி மூட்டிஅந்த நீருண
ஏலவார் குழலியூடே ஈசர்பாதம் எய்துமே. 431
எய்துநின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்தவல்லீரேல்
எய்தும் உண்மைதன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும்
மைஇலங்கு கண்ணிபங்கள் வாசிவானில் ஏறிமுன்
செய்தவல் வினைகளும் சிதறும்அஃது திண்ணமே. 432
பங்கன் - பார்வதியை இடப்பாகத்தில் உடையவன்
வாசி - காற்று
திண்ணம்என்று சேதிசொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
அண்ணல் அன்புளன்புருகி அறிந்து நோக்கலாயிடும்
மண்ணும் அதிரவிண்ணும் அதிரவாசியை நடத்திடில்
நண்ணிஎங்கள் ஈசனும் நமதுகடலில் இருப்பனே. 433
இருப்பன் எட்டெட்டுஎண்ணிலே இருந்துவேற தாகுவன்
நெருப்பவாயு நீருமண்ணும் நீள்விசும்பும் ஆகுவன்
கருப்புகுந்து காலமே கலந்தசோதி நாதனைக்
குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே. 434
கொள்ளுவார்கள் சிந்தையில் குறிப்புணர்ந்த ஞானிகள்
அள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டிவேண்டி ஏத்தினால்
உள்ளுமாய்ப் புறம்புமாம் உணர்வதற்கு உணர்வுமாய்த்
தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே. 435
தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம்பெறும்
தெளிந்தநற் கிரியைபூசை சேரலாம் சாமீபமே
தெளிந்தநல்ல யோகம் தன்னில் சேரலாகும் சாரூபம்
தெளிந்தஞானம் நான்கிலும் சேரலாம் சாயுச்யமே. 436
சேருவார்கள் ஞானம்என்று செப்புவர் தெளிவுளோர்
சேருவார்கள் நாலுபாதச் செம்மைஎன்ற தில்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்
சேருமாறு கண்டுநாலும் செய்தொழில் திடப்படே. 437
திறமலிக்கு நாலுபாதம் செம்மையும் திடப்படார்
அறிவிலிகள் தேசநாடி அவத்திலே அலைவதே
குறியதனைக் காட்டிஉள் குறித்துநோக்க வல்லீரேல்
வெறிகமழ் சடையுடையோன் மெய்ப்பதம் அடைவரே. 438
அடைவுளோர்கள் முத்தியே அறிந்திடாத மூடரே,
படையுடைய தத்துவமும் பாதகங்கள் அல்லவோ?
மடைதிறக்க வாரியின் மடையில் ஏறு மாறுபோல்
உடலில்மூல நாடியைஉயர ஏற்றி ஊன்றிடே. 439
ஊன்றிஏற்றி மண்டலம் உருவிமூன்று தாள்திறந்து
ஆன்றுதந்தி ஏறிடில் அமுதம்வந்து இறங்கிடும்
நான்றிதென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படும்
ஆன்றியும் உயிர்ப்பரம் பொருந்திவாழ் வதாகவே. 440
தந்தி - நாடி
ஆகமூல நாடியில் அனல்எழுப்பி அன்புடன்
மோகமான மாயையில் முயல்வதும் ஒழிந்திடில்
தாகமேரு நாடியே அனேகமான வாறுபோல்
ஏகர்பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே. 441
அறிந்துநோக்கி உம்முளே அயந்தியானம் உம்முளே
பிறந்திராமல் ஏகர்பாதம் பெற்றிருப்பது உண்மையே
அறிந்துமீள வைத்திடா வகையுமரணம் ஏத்தினார்
செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரும் உம்முளே. 442
சோதியாக உம்முளே தெளிந்துநோக்க வல்லீரேல்
சோதிவந்து உதித்திடும் துரியகீதம் உற்றிடும்
ஆதி சக்கிரத்தினில் அமர்ந்துதீர்த்தம் ஆடுவன்
பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே. 443
திருவுமாகிச் சிவனுமாகித் தெளிந்துளோர்கள் சிந்தையில்
மருவிலே எழுந்துவீசும் வாசனைய தாகுவன்
கருவிலே விழுந்தெழுந்த கந்மவாத னைஎலாம்
பரிதமுன் இருளதாய் பரியும்அங்கி பாருமே. 444
பரிதி - சூரியன் அங்கி - நெருப்பு
பாரும்எந்தை ஈசன்வைத்த பண்பிலே இருந்துநீர்
சேருமே நடுவறிந்து செம்மையான அப்பொருள்
வேரையும் முடியையும் விரைந்துதேடி மால்அயன்
பார்இடந்து விண்ணிலே பிறந்தும்கண்டது இல்லையே. 445
மால் - திருமால் பார் - உலகம் இடந்து - தோண்டி
கண்டிலாது அயன்மால்என்று காட்சியாகச் சொல்லுறீர்
மிண்டினால் அரசனும் மேவலாய் இருக்குமோ?
தொண்டுமட்டும் அன்புடன் தொழுதுநோக்க வல்லீரேல்
பண்டுமுப் புரம்எரிந்த பத்திவந்து முற்றுமே. 446
முற்றுமே அவன்ஒழிந்து முன்பின்ஒன்றும் காண்கிலேன்
பற்றிலாத ஒன்றுதன்னை பற்றிநிற்க வல்லது
கற்றிதாலோ ஈசர்பாதம் காணலா யிருக்குமோ?
பெற்றபேரை அன்புடன் பிரியமாகக் கேளுமே. 447
கேட்டுநின்ற உன்னிலை கிடைத்த காலந்தன்னுளே
வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும்
வீட்டிலே வெளியதாகும் விளங்கவந்து நேரிடும்
கூட்டிவன்னி மாருதம் குயத்தைவிட்டு எழுப்புமே. 448
எழுப்பி மூலநாடியை இதப்படுத்த லாகுமோ
மழுப்பிலாத சபையைநீர் வலித்துவாங்க வல்லீரேல்
சுழுத்தியும் கடந்துபோய் சொப்பனத்தில் அப்புறம்
அழுத்திஓர் எழுத்துளே அமைப்பதுஉண்மை ஐயனே. 449
அல்லதில்லை என்றுதான் ஆவியும் பொருளுடல்
நல்லஈசர் தாள்இணைக்கும் நாதனிக்கும் ஈந்நிலை
என்றும்என்னுள் நேசமும் வாசியை வருந்தினால்
தொல்லையாம் வினைவிடென்று தூரதூரம் ஆனதே. 450
ஆனதே பதியது உயிர் அற்றதே பசுபாசம்
போனவே மலங்களும் புலன்களும் வினைகளும்
கானகத்தில் இட்டதீயில் காற்றுவந்து அடுத்ததோ?
ஊனகத்தில் வாயுஉன்னி ஒன்றியே உலாவுமே. 451
உலாவும் உவ்வும் அவ்வுமாய் உதித்தடர்ந்து நின்றதும்
உலாவிஐம் புலன்களும் ஒருதலத்து இருந்திடும்
நிலாவும்அங்கு நேசமாகி நின்றும் அமுதம்உண்டுதாம்
உலாவும் எங்கள் ஈசனைக் குறித்துணர்ந்து கும்பிடே. 452
கும்பிடும் கருத்துளே குகனைஐங் கரனையும்
நம்பியே இடம்வலம் நமக்கரித்து நாடிட
எம்பிரானும் அம்மையும் இருத்தியே நடுவனைத்
தும்பிபோல வாசகம் தொடர்ந்துசோம்பி நீங்குமே. 453
நீங்கும்ஐம் புலன்களும் நிறைந்தவல் வினைகளும்
ஆங்காரமாம் ஆசையும் அருந்தடந்த பாதமும்
ஓங்காரத்தின் உள்ளிருந்து ஒன்பதொழிந் தொன்றிலத்
தூங்காஈசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே. 454
கருக்கலந்த காலமே கண்டுநின்ற காரணம்
உருக்கலந்த போதலோ உன்னைநான் உணர்ந்தது
விரக்கில்என் மறைக்கில்என் வினைக்கிசைந்த போதெலாம்
உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ? 455
ஞானநூல்கள் தேடியே நவின்றஞான யோகிகாள்,
ஞானமான சோதியை நாடிஉள் அறிகிலீர்
ஞானம்ஆகி நின்றதோர் நாதனை அறிந்தபின்
ஞானம்அல்லது இல்லைவேறு நாம் உரைத்த துண்மையே 456
கருத்தரிப்ப தற்குமுன் காயம்நின்றது எவ்விடம்?
உருத்தரிப்ப தற்குமுன் உயிர்ப்புநின்றது எவ்விடம்?
மருட்பொதிந்த சிந்தையில் மயக்கம்நின்றது எவ்விடம்?
விருப்புணர்ந்த ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே. 457
கருவினில் கருவதாய் எடுத்தஏழு தோற்றமும்
இருவினைப் பயத்தினால் பிறந்திறந்து உழன்றிடும்
மறுவினைப் பிறவிமூன்று காலமும் வகுத்தபின்
உறுவினைப்பயன் இதென்று உணர்ந்தஞானி சொல்லுமே. 458
வாயில்எச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர்
வாயிருக்க எச்சில்போன வாறதென்ன எவ்விடம்?
வாயில்எச்சில் அல்லவோ நீர்உரைத்த மந்திரம்?
நாயினை அறிந்தபோது நாடும்எச்சில் ஏதுகொல்? 459
தொடக்கதென்று நீர்விழத் தொடங்குகின்ற ஊமர்காள்
தொடக்கிருந்தது எவ்விடம்? சுத்தியானது எவ்விடம்?
தொடக்கிருந்த வாறறிந்து சுத்தபண்ண வல்லீரேல்
தொடக்கிலாத சோதியைத் தொடர்ந்துகாண லாகுமே. 460
மேதியோடும் ஆவுமே விரும்பியே புணர்ந்திடில்
சாதிபேத மாம்உருத் தரிக்கும்ஆறு போலவே
வேதம்ஓது வானுடன் புலைச்சிசென்று மேவிடில்
பேதமாய்ப் பிறக்கிலாத வாறதென்ன பேசுமே. 461
மேதி - எருமை
வகைக்குலங் கள்பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள்
தொகைக்குலங் கள்ஆனநேர்மை நாடியே உணர்ந்தபின்
மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறுஒன்று கண்டிலீர்
நகைக்குமாறு மனு எரிக்கநாளும்நாளும் நாடுவீர். 462
ஓதும்நாலு வேதமும் உரைத்த சாத்திரங்களும்
பூதத்தத்து வங்களும் பொருந்தும் ஆகமங்களும்
சாதிபேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேதம ஆகியே பிறந்துஉழன்று இருந்ததே. 463
அங்கலிங்கம் பூண்டுநீர் அகண்டபூசை செய்கிறீர்
அங்கலிங்கம் பூண்டுநீர் அமர்ந்திருந்த மார்பனே
எங்கும்ஓடி எங்கும்எங்கும் ஈடழிந்து மாய்கிறீர்
செங்கல்செம்பு கல்லெலாம் சிறந்துபார்க்கும் மூடரே. 464
தீட்டம்தீட்டம் என்றுநீர் தினமும்மூழ்கும் மூடரே
தீட்டமாகி அல்லவோ திரண்டுகாயம் ஆனதும்
பூட்டகாயம் உம்முளே புகழுகின்ற பேயரே
தீட்டுவந்து கொண்டலோ தெளிந்ததே சிவாயமே. 465
உந்திமேலே நாலுமூன்று ஓம்நமசி வாயமாம்
சந்திசந்தி என்றுநீர் சாற்றுகின்ற பேயரே
மூந்தவந்து நம்முளே மூலநாடி ஊடுபோய்
அந்திசந்தி அற்றிடம் அறிந்துணர்ந்து பாருமே. 466
வன்னிமூன்று தீயினில் வாழும்எங்கள் நாதனும்
கன்னியான துள்ளிருக்கக் காதல்கொண்டது எவ்விடம்
சென்னிநாலு கையிரண்டு சிந்தையில் இரண்டிலொன்று
உன்னியுன்னி நம்முளே உய்த்துணர்ந்து பாருமே. 467
தொண்டுசெய்து நீங்களும் சூழஓடி மாள்கிறீர்
உண்டுஉழன்று நும்முளே உற்றுணர்ந்து பார்க்கிலீர்
வண்டுலாவு சோலைசூழ வாழும்எங்கள் நாதனும்
பண்டுபோல நும்முளே பகுத்திருப்பன் ஈசனே. 468
பரம்உனக்கு எனக்குவேறு பயம்இல்லை பாரையா
கரம்உனக்கு நித்தமும் குவித்திடக் கடமையாம்
சிரமுருக்கி அமுதளித்த சீருலாவும் நாதனே
உரம்எனக்கு நீஅளித்த உண்மைஉண்மை உண்மையே. 469
என்அகத்தில் என்னைநான் எங்கும்ஓடி நாடினேன்
என்அகத்தில் என்னைஅன்றி ஏதும்ஒன்று கண்டிலேன்
மின்எழுப்பி விண்ணகத்தின் மின்ஒடுங்கு மாறுபோல்
என்அகத்துள் ஈசனோடு யானும்அல்ல தில்லையே. 470
இடங்கள்பண்ணி சுத்திசெய்தே இட்டபீட மீதிலே
அடங்கநீறு பூசல்செய்து அருந்தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனார் உதிக்கும்ஞானம் எவ்விடம்?
அடங்குகின்றது எவ்விடம்? அறிந்துபூசை செய்யுமே. 471
புத்தகங் களைசுமந்து பொய்களைப் பிதற்றுவீர்.
செத்திடம் பிறந்திடம் அதுஎங்ஙன்என்று அறிகிலீர்
அத்தனைய சிந்தனை அறிந்துநோக்க வல்லீரேல்
உத்தமத்துள் ஆயசோதி உணரும்போகம் ஆகுமே. 472
அருளிலே பிறந்துநின்று மாயைரூபம் ஆகியே
இருளிலே தயங்குகின்ற ஏழைமாந்தர் கேண்மினோ.
பொருளிலே தவம்புனைந்து பொருந்திநோக்க வல்லீரேல்
மருள்அதுஏது? வன்னியின் மறைந்ததே சிவாயமே. 473
தன்மசிந்தை ஆம்அளவும் தவமறியாத் தன்மையாய்க்
கன்மசிந்தை வெயில்உழன்று கருத்தழிந்த கசடரே,
சென்மம்சென்மம் தேடியும் தெளிவொணாத செல்வனை
நன்மையாக உம்முளே நயந்துகாண வேணுமே. 474
கள்ளவுள்ள மேயிருக்கக் கடந்தஞானம் ஓதுவீர்
கள்ளம்உள் அறுத்தபோது கதிஇதன்றிக் காண்கிலீர்?
உள்ளமே விளக்கிநித்தம் ஒளியணுக வல்லீரேல்
தெள்ளு ஞானம் உம்முளே சிறந்ததே சிவாயமே. 475
காணவேண்டும் என்றுநீர் கடல்மலைகள் ஏறுவீர்
ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே?
வேணும் என்று அவ்வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல்
தாணுவாக நின்ற சீவன் தான்சிவம் அதாகுமே. 476
தாணு - பரம்பொருள்
அணுவினோடு அகண்டமாய் அளவிடாத சோதியைக்
குணமதாக உம்முளே குறித்துநோக்கின் முத்தியாம்
மிணமிணென்று விரலைஎண்ணி மீளொணா மயக்கமாய்த்
துணிவிலாத படியினால் தொடர்ந்து பூசை செய்குவீர். 477
எச்சில்எச்சில் என்றுநீர் இடைந்திருக்கும் ஏழைகாள்
துச்சில்எச்சில் அல்லவோ தூயகாயம் ஆனதும்
வைத்தெச்சில் தேனலோ, வண்டின்எச்சில் பூவலோ?
கைச்சுதாடல் வைத்துடன் கறந்தபாலும் எச்சிலே! 478
சுதா - பசுவின் முலைக்காம்பு
தீர்த்தலிங்க மூர்த்திஎன்று தேடிஓடும் தீதரே
தீர்த்தலிங்கம் உள்ளில்நின்ற சீவனைத் தெளியுமே
தீர்த்தலிங்கம் உம்முளே தெளிந்துகாண வல்லீரேல்
தீர்த்தலிங்கம் தான்அதாய்ச் சிறந்ததே சிவாயமே. 479
ஆடுகொண்டு கூறுசெய்து அமர்ந்திருக்கும் ஆறுபோல்
தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே
நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே
போடுதர்ப்ப பூசைஎன்ன பூசைஎன்ன பூசையோ? 480
என்னை அற்பநேரமும் மறக்கிலாத நாதனே
ஏகனே இறைவனே இராசராச ராசனே
உன்னை அற்ப நேரமும் ஒழிந்திருக்க லாகுமே
உனதுநாமம் எனதுநாவில் உதவிசெய்வீர் ஈசனே. 481
எல்லையற்று நின்றசோதி ஏகமாய் எரிக்கவே
வல்லபூர ணப்பிரகாசர் ஏகதபோகம் ஆகியே
நல்லஇன்பம் மோனசாக ரத்திலே அழுத்தியே
நாடொணாத அமிர்தம்உண்டு நான்அழிந்து நின்றநாள். 482
ஆனவாற தாயிடும் அகண்டமான சோதியை
ஊனைகாட்டி உம்முளே உகந்துகாண வல்லீரேல்
ஊனகாயம் ஆளலாம் உலகபாரம் ஆளலாம்
கானநாடும் ஆளலாம் வண்ணநாடர் ஆணையே. 483
நித்தமும் மணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து
வத்தியே கதறியே கண்கள்மூடி என்பயன்?
எத்தனைபேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ?
அத்தனுக்கிது ஏற்குமோ அறிவிலாத மாந்தரே? 484
எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை
மட்டதாக உம்முளே மதித்துநோக்க வல்லீரேல்
கட்டமான பிறவிஎன் கருங்கடல் கடக்கலாம்
இட்டமான ஒளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே. 485
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தண்மையான மந்திரம் சமைந்துரூபம் ஆகியே
வெண்மையான மந்திரம் விளைந்துநீற தானேதே
உண்மையான மந்திரம் அதொன்றுமே சிவாயமே. 486
தச்சுவாயில் உச்சிமேல் ஆயிரம் தலங்களாய்
முச்சுடரும் மூவிரண்டும் மூண்டெழுந்த தீச்சுடர்
வச்சிரம் அதாகியே வளர்ந்துநின்றது எவ்விடம்?
இச்சுடரும் இந்திரியமும் ஏகமானது எங்ஙனே? 487
வல்லவாசல் ஒன்பதும் மறுத்தடைத்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர்ஐந்தும் சொல்லவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்ப தில்லையே. 488
வண்டுபூ மணங்களோடு வந்திருந்த தேன்எலாம்
உண்டுளே அடங்கும்வண்ணம் ஓதுலிங்க மூலமாய்க்
கண்டுகண்டு வேரிலே கருத்தொடுங்க வல்லீரேல்
பண்டுகொண்ட வல்வினை பறந்திடும் சிவாயமே. 489
ஓரெழுத்தில் லிங்கமாக ஓதும்அக் கரத்துளே
ஓரெழுத்து இயங்குகின்ற உண்மையை அறிகிலீர்
மூவெழுத்தும் மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாலெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே. 490
தூரதூர தூரமும் தொடர்ந்தெழுந்த தூரமும்
பாரபார பாரம்என்று பரிந்திருந்த பாவிகாள்!
நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லீரேல்
தூரதூர தூரமும் தொடர்ந்துகூடல் ஆகுமே. 491
குண்டலங்கள் பூண்டுநீர் குளங்கள்தோறும் மூழ்குறீர்
மண்டுகங்கள் போலநீர் மனத்தின் மாசறுக்கிலீர்;
மண்டைஏந்து கையரை மனத்திருந்த வல்லீரேல்
பண்டைமால் அயன்தொழப் பணிந்து வாழலாகுமே. 492
மண்டுகம் - தவளை
கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல்
ஆடிரண்டு கன்றைஈன்ற அம்பலத்துள் ஆடுதே;
மாடுகொண்டு வெண்ணெய்உண்ணும் மானிடப் பசுக்களே!
வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே. 493
நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்!
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? 494
நானும்அல்ல நீயும்அல்ல நாதன்அல்ல ஓதுவேன்
வானில்அல்ல சோதிஅல்ல சோதிநம்முள் உள்ளதே
நானும்நீயும் ஒத்தபோது நாடிகாண லாகுமோ?
தானதான தந்தான தாதனான தானனா. 495
நல்லதல்ல கெட்டதல்ல நடுவில்நிற்பது ஒன்றுதான்
நல்லதென்று போதது நல்லதாகி நின்றபின்
நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகும் ஆதலால்
நல்லதென்ற நாடிநின்று நாமம்சொல்ல வேண்டுமே. 496
பேய்கள்கூடிப் பிணங்கள்தின்னும் பிரியமில்லாக் காட்டிலே
நாய்கள்சுற்ற நடனமாடும் நம்பன்வாழ்க்கை ஏதடா?
தாய்கள்பால் உதிக்கும்இச்சை தவிரவேண்டி நாடினால்
நோய்கள்பட்டு உழல்வதேது நோக்கிப்பாரும் உம்முளே. 497
நம்பன் - பரமேசுவரன்
உப்பைநீக்கில் அழுகிப்போகும் ஊற்றையாகும் உடலில்நீ
அப்பியாசை கொண்டிருக்கல் ஆகுமோசொல் அறிவிலா
தப்பிலிப்பொய் மானம்கெட்ட தடியனாகும் மனமேகேள்;
ஒப்பிலாசெஞ் சடையனாகும் ஒருவன்பாதம் உண்மையே. 498
பிறப்பதெல்லாம் இறப்பதுண்டு பேதைமக்கள் தெரிகிலாது
இறப்பதில்லை எனமகிழ்ந்து எங்கள்உங்கள் சொத்தெனக்
குறிப்புப்பேசித் திரிவரன்றிக் கொண்டகோலம் என்னவோ?
நிறப்பும்பொந்தி அழிந்தபோது நேசமாமோ ஈசனே. 499
சுட்டெரித்த சாந்துபூசும் சுந்தரப்பெண் மதிமுகத்
திட்டநெட்டு எழுந்தறியாது ஏங்கிநோக்கு மதவலீர்
பெட்டகத்துப் பாம்புறங்கும் பித்தலாட்டம் அறியிரோ?
கட்டவிழ்த்துப் பிரமன்பார்க்கில் கதிஉமக்கும் ஏதுகாண்?
500
வேதம்ஓது வேலையோ வீணதாகும் பாரிலே!
காதகாத தூரம்ஓடிக் காதல்பூசை வேணுமோ?
ஆதிநாதன் வெண்ணெய் உண்டஅவனிருக்க நம்முளே?
கோதுபூசை வேதம்ஏது குறித்துப்பாரும் உம்முளே. 501
பரம்இலாதது எவ்விடம்? பரம்இருப்பது எவ்விடம்?
அறம்இலாத பாவிகட்குப் பரம்இலைஅது உண்மையே;
கரம்இருந்தும் பொருளிருந்தும் அருளிலாத போதது
பரம்இலாத சூனியமாம் பாழ்நரகம் ஆகுமே. 502
மாதர்தோள் சேராததேவர் மானிலத்தில் இல்லையே!
மாதர்தோள் புணர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே,
மாதராகும் சத்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்துகொண்டான் ஈசனே. 503
நீலிகங்கை - நீல நிறம் உடைய கங்கை
.
சித்தர்என்றும் சிறியர்என்றும் அறியொணாத சீவர்காள்!
சித்தர்இங்கு இருந்தபோது பித்தர்என்று எண்ணுவீர்!
சித்தர்இங்கு இருந்தும் என்ன பித்தன்நாட்டிருப் பாரோ?
அத்தன்நாடும் இந்தநாடும் அவர்களுக்கெலா மொன்றே.
504
மாந்தர்வாழ்வு மண்ணிலே மறந்தபோது விண்ணிலே
சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லீரேல்
வேந்தன்ஆகி மன்றுளாடும் விமலன்பாதம் காணலாம்
கூந்தலம்மை கோணல்ஒன்றும் குறிக்கொணாதி துண்மையே.
மன்று - மன்றம்; சபை; விமலன் - மலமற்றவன் 505
சருகு - உதிர்ந்த இலை.
சருகருத்தி நீர்குடித்துச் சாரல்வாழ் தவசிகாள்!
சருகருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலம் உண்டாகுமே;
வருவிருந்தோடு உண்டுஉடுத்தி வளர்மனை சுகிப்பிரேல்
வருவிருந்தோன் ஈசனாகி வாழ்வளிக்கும் சிவாயமே. 506
காடுமேடு குன்றுபள்ளம் கானின்ஆறு அகற்றியும்
நாடுதேசம் விட்டலைவர் நாதன்பாதம் காண்பரோ?
கூடுவிட்டு அகன்றுன்ஆவி கூத்தனூர்க்கே நோக்கலால்
வீடுபெற்ற அரன்பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே. 507
கட்டையால்செய் தேவரும் கல்லினால்செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும்
வெட்டவெளிய தன்றிமற்று வேறுதெய்வம் இல்லையே. 508
தங்கள்தேகம் நோய்ப்பெறின் தனைப்பிடாரி கோயிலில்
பொங்கல்வைத்து ஆடுகோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்கச்சொல்லு நலிமிகுந்து நாளும்தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள்குலத்துத் தெய்வம்உம்மை உருக்குலைப்ப தில்லையே. 509
ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம்செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர்
பூசையோடு நேமநிட்டை பூரிக்கச்செய் பாதகர்
காசினியில் எழுநரகைக் காத்திருப்பது உண்மையே. 510
நேசமுற்றுப் பூசைசெய்து நீறுபூசிச் சந்தனம்
வாசமோடு அணிந்துநெற்றி மைதிலகம் இட்டுமே
மோசம்பொய் புனைசுருட்டு முற்றிலும்செய் மூடர்காள்
வேசரிகளம் புரண்டவெண் ணீறாகும் மேனியே. 511
வாதம்செய்வேன் வெள்ளியும் பொன்மாற்றுயர்ந்த தங்கமும்
போதவே குருமுடிச்சுப் பொன்பணங்கள் தரவெனச்
சாதனைசெய் தெத்திச்சொத்து தந்ததைக்க வர்ந்ததுமே
காததூரம் ஓடிச்செல்வர் காண்பதும் அருமையே. 512
யோகசாலை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம்கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர்போல் பேருலகில் சாவரே. 513
காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வதுஎங்கு மடிப்புமோசம் செய்பவர்
நேரமாகக் கஞ்சாஅடித்து நேர்அபினையைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே. 514
நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று
ஊரினில் பறைஅடித்து ஊதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்குஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை நீளவும்கைப் பற்றுவார். 515
காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம்யோக தண்டுகொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம்எங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட்டு அலைவரை. 516
முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனக்
சத்தியங்கள் சொல்லிஎங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறுவளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரேல். 517
செம்மைசேர் மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர்
கொம்மையற்ற கிளையில்பாத குறடுசெய்து அழிக்கிறீர்
நும்முளே விளங்குவோனை நாடிநோக்க வல்லீரேல்
இம்மலமும் மும்மலமும் எம்மலமும் அல்லவே. 518
எத்திசைஎங்கும் எங்கும்ஓடி எண்ணிலாத நதிகளில்
சுற்றியும் தலைமுழுகச் சுத்தஞானி யாவரோ?
பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்;
முத்திஇன்றி பாழ்நரகில் மூழ்கிநொந்து அலைவரே. 519
கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில்
வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில்
தொல்லைஅற் றிடம்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர்?
இல்லைஇல்லை இல்லைஇல்லை ஈசன்ஆணை இல்லையே. 520
இச்சகம் சனித்ததுவும் ஈசனைஐந்து எழுத்திலே
மெச்சவம் சராசரங்கள் மேவும்ஐந்து எழுத்திலே
உச்சிதப் பலஉயிர்கள் ஓங்கல்அஞ் செழுத்திலே
நிச்சயமெய்ஞ் ஞானபோதம் நிற்கும்ஐந் தெழுத்திலே. 521
சாத்திரங்கள் பார்த்துப்பார்த்துத் தான்குருடு ஆவதால்
நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்காள்
பாத்திரம் அறிந்துமோன பக்திசெய்ய வல்லீரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தர்ஆவர் அங்ஙனே. 522
மனவுறுதி தானிலாத மட்டிப்பிணை மாடுகள்
சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர்எங்கும் சுற்றிதிண்டிக்கே அலைபவர்
இனமதில் பலரும்வையும் இன்பம் அற்ற பாவிகள். 523
சிவாயவசி என்னவும் செபிக்கஇச் சகம்எலாம்
சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே. 524
முற்றிற்று.
===========================================








