காப்பு அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. 0 கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவேபெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே. 1 அக்ஷர நிலை ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே. 2 சரியை விலக்கல் ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியைநாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே. 3 யோக நிலை உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே. 4 தேகநிலை வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால்விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனேநடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல்சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே.5 ஞான நிலை என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையேஎன்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின்என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ?என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே. 6 நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ?அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே. 7 மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ;எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ;கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ-நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய். 8 அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே. 9 அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே. 10 கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே. 11 நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே! 12 யோக நிலை சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ?மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லீரேல்சாத்திரப்பைநோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே! 13 நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்.பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்!ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவேகாலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே. 14 வித்தில்லாத சம்பிரதாயம் மேலும்இல்லை கீழுமில்லைதச்சில்லாது மாளிகை சமைந்தவாறும் அதெங்ஙனே?பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்!சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே. 15 அஞ்சும்மூணும் எட்டாதாய் அநாதியான மந்திரம்நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செபிப்பீரேல்பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யினும்பஞ்சுபோல் பறக்கும்என்று நான்மறைகள் பன்னுமே. 16 அண்டவாசல் ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம்ஆறிரண்டு நூறுகோடி யானவாசல் ஆயிரம்இந்தவாசல் ஏழைவாசல் ஏகபோக மானதாய்எம்பிரான் இருக்கும்வாசல் யாவர்காண வல்லரே? 17 சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும்சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்ஊமையான காயமாய் இருப்பன்எங்கள் ஈசனே!18 சங்கிரண்டு தாரை ஒன்று சன்னபின்னல் ஆகையால்மங்கிமாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை?சங்கிரண்டை யும்தவிர்த்து தாரை ஊதவல்லீரேல்கொங்கைமங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே. 19 அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்துஅஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்.அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்!அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே! 20 அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே அனாதியானது அஞ்சுமே!பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்!நெஞ்சில்அஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லீரேல்அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியாகித் தோன்றுமே! 21 நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர்,வாழவேணும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே?காலன்ஓசை வந்தபோது கைகலந்து நின்றிடும்ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே! 22 ஓடம்உள்ள போதெல்லாம் நீர் ஓடியே உலாவலாம்;ஓடம்உள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம்;ஓடமும்உடைந்த போதில் ஒப்பிலாத வெளியிலேஆடும்இல்லை கோலும்இல்லை யாரும்இல்லை ஆனதே! 23 கிரியை நிலை வீடெடுத்து வேள்விசெய்து மெய்யனோடு பொய்யுமாய்மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில்ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாணும் உடலமே! 24 உற்பத்தி நிலை அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியேபெண்ணும்ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்கண்ணிலாணின் சுக்கிலம் கருவில்ஓங்கும் நாளிலேமண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே? 25 அறிவு நிலை பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை?பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை?மிண்டனாய்த் திரிந்தபோது இறைத்தநீர்கள் எத்தனை?மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை? 26 அண்டர்கோன் இருப்பிடம் அறிந்துஉணர்ந்த ஞானிகாள்பண்டறிந்த பான்மைதன்னை யார்அறிய வல்லரே?விண்டவேதப் பொருளைஅன்றி வேறு கூற வகையிலாக்கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே.27 தூரம்தூரம் தூரம்என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்பாரும்விண்ணும் எங்குமாய்ப் பரந்தஅப் பராபரம்ஊருநாடு காடுமோடி உழன்றுதேடும் ஊமைகாள்!நேரதாக உம்முளே அறிந்துணர்ந்து நில்லுமே! 28 தங்கம்ஒன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்செங்கண்மாலும் ஈசனும் சிறந்திருந்த தெம்முளேவிங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரேஎங்குமாகி நின்றநாமம் நாமம்இந்த நாமமே!29 நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தம்நித்தம் நீரிலேவிருப்பமொடு நீர்குளிக்கும் வேதவாக்கியம் கேளுமின்;நெருப்பும்நீரும் உம்முளே நினைந்துகூற வல்லீரேல்சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்துகூடல் ஆகுமோ! 30 பாட்டில்லாத பரமனைப் பரமலோக நாதனைநாட்டிலாத நாதனை நாரிமங்கை பாகனைகூட்டிமெள்ள வாய்புதைத்துக் குணுகுணுத்த மந்திரம்வேட்டகாரர் குசுகுசுப்பைக் கூப்பிடா முகிஞ்சதே. 31 தரிசனம் செய்யதெங்கி லேஇளநீர் சேர்த்தகார ணங்கள்போல்ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டனன்.ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்வையகத்தில் மாந்தர்முன்னம் வாய்திறப்ப தில்லையே. 32 அறிவு நிலை மாறுபட்டு மணிதுலக்கி வண்டின்எச்சில் கொண்டுபோய்ஊறுபட்ட கல்லின்மீதே ஊற்றுகின்ற மூடரே.மாறுபட்ட தேவரும் அறிந்துநோக்கும் என்னையும்கூறுபட்டுத் தீர்க்கவோ குருக்கள்பாதம் வைத்ததே. 33 கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே. 34 செங்கலும் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்செம்பிலும் தராவிலும் சிவன்இருப்பன் என்கிறீர்உம்மதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்அம்பலம் நிறைந்தநாதர் ஆடல்பாடல் ஆகுமோ! 35 பூசைபூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்.பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம்?ஆதிபூசை கொண்டதோ, அனாதிபூசை கொண்டதோ?ஏதுபூசை கொண்டதோ? இன்னதென்று இயம்புமே! 36 இருக்குநாலு வேதமும் எழுத்தை அறவோதினும்பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான்இரான்உருக்கிநெஞ்சை உட்கலந்திங்கு உண்மைகூற வல்லீரேல்சுருக்கம்அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமோ! 37 கலத்தின்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால்கலத்திலே கரந்ததோ கடுத்ததீக் குடித்ததோநிலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோமனத்தின்மாயை நீக்கியே மனத்துள்ளே கரந்ததோ! 38 பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே! 39 வாயிலே குடித்தநீரை எச்சில் என்று சொல்கிறீர்;வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ?வாயில்எச்சில் போகஎன்று நீர்தனைக் குடிப்பீர்காள்வாயில்எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே! 40 ஓதுகின்ற வேதம்எச்சில்., உள்ளமந்திரங்கள் எச்சில்;போதகங்க ளானஎச்சில்., பூதலங்கள் ஏழும்எச்சில்;மாதிருந்த விந்துஎச்சில்., மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே! 41 பிறப்பதற்கு முன்னெல்லாம் இருக்குமாற தெங்ஙனே?பிறந்துமண் ணிறந்துபோய் இருக்குமாறு தெங்ஙனே?குறித்துநீர் சொலாவிடில் குறிப்பில்லாத மாந்தரே.அறுப்பென செவிஇரண்டும் அஞ்செழுத்து வாளினால். 42 அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் சங்குமோ?கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ?இன்பமற்ற யோகியை இருளும்வந்து அணுகுமோ?செம்பொன் அம்பலத்துளே தெளிந்த சிவாயமே. 43 சித்தம்ஏது, சிந்தைஏது சீவன்ஏது! சித்தரேசத்திஏது? சம்புஏது சாதிபேத அற்றதுமுத்திஏது? மூலம்ஏது மூலமந் திரங்கள்ஏது?வித்தில்லாத வித்திலே இதினெனதென்று இயம்புமே. 44 ஒடுக்க நிலை சித்தமற்றுச் சிந்தையற்றுச் சீவனற்று நின்றிடம்சத்தியற்றுச் சம்புவற்றுச் சாதிபேத மற்றுநல்மூத்தியற்று மூலமற்று மூலமந்தி ரங்களும்வித்தைஇத்தை ஈன்றவித்தில் விலைந்ததே சிவாயமே. 45 கிரியை சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெலாம்பூதவாசல் ஒன்றலோ, பூதம்ஐந்தும் ஒன்றலோ?காதில்வாளில், காரை, கம்பி, பாடகம்பொன் ஒன்றலோ?சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ? 46 சித்தர் பாடல்கள்சைவம் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 சிவவாக்கியம் 2 - சிவவாக்கியர் சிவவாக்கியம் 3 - சிவவாக்கியர் சிவவாக்கியம் 4 - சிவவாக்கியர் சிவவாக்கியம் 5 - சிவவாக்கியர் சிவவாக்கியம் 6 - சிவவாக்கியர் சிவவாக்கியம் 7 - சிவவாக்கியர் சிவவாக்கியம் 2 - சிவவாக்கியர்› Log in to post comments 1706 views கருத்துகள் இப்பாடல்களுக்கு பொருள் இருந்த இப்பாடல்களுக்கு பொருள் இருந்தால் மிக்க பயனுள்ளதாக அமைந்திருக்கும். Log in to post comments சித்தர் பாடல்களை எழுதியும் சித்தர் பாடல்களை எழுதியும் படித்தும் பயன் என்? கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. Log in to post comments
இப்பாடல்களுக்கு பொருள் இருந்த இப்பாடல்களுக்கு பொருள் இருந்தால் மிக்க பயனுள்ளதாக அமைந்திருக்கும். Log in to post comments
சித்தர் பாடல்களை எழுதியும் சித்தர் பாடல்களை எழுதியும் படித்தும் பயன் என்? கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162