எல்லாம் தலையெழுத்து உண்மையா
சொல்லுங்க தோழரே! என் தோழர்களே!
மது விற்று காசு சேர்த்து அரசின் மறுவாழ்வு இல்லம்
சொல்லுக்கு சொரணையில்லை என் தோழர்களே!
கோடிப் பணம் கொட்டி மன்றத்தில் நுழைந்தவர்களுக்கு
மாடிமேல மாடி வச்சு வீடுவுள்ள வறுமையாளர்களுக்கு
சொகுசுக் காருக்குள்ளமர்ந்து பவனிவரும் பாவங்களுக்கு
ஒரு மடிகணினி வாங்குவதற்கு வழியில்லா ஏழைகளைப் பாரு!
வயிறு ஒட்டி வசதியா வரப்புமேல தலை சாய்த்து
கஞ்சிக்கு கையேந்தும் விவசாயி நிலைமை பாரு
வீடுக்கட்ட நிலத்தை வித்து வருந்தாத குடும்பமிருக்க
கோட்டு போட்ட கோமாளி பாட்டுக்கு ஆட்டம் பாரு!
அடிச்சக் காத்து "தானே" அது யாரு செஞ்ச குற்றம்
அரசின் கையை பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம்
பாவப்பட்ட உறுப்பினருக்கு பணமில்லை வங்கியிலே
வெள்ளை வேட்டி மடிப்புக்கு வரக்கூடாதே பங்கம்!
அண்ணாயிருந்தாலும் புரட்சித் தலைவரிருந்தாலும்
கண்ணீர் விட்டழுதிருப்பார் கவலைப்பட்டு நொந்திருப்பார்
பலகோடிக் கொட்டி கல்லறையைப் பழுது பார்ப்பதற்கு
வாடிவதங்கும் மக்களுக்கு மகிழ்ச்சியிது கொடுக்குமோவென!
மாடா உழைச்சு ஓடாத் தேய்ஞ்சு போன உழைப்பாளி
மாத்துக் கோவணமில்லா மகத்துவம் யாரறிவா
கன்னத்தில் கைவைத்து வாக்களித்த மக்கள் பார்த்திருக்க
சாக்குபோக்கு சொல்லி வெற்றி நடைபோடுது அரசாங்கம்!
தாலிக்கு தங்கம் கொடுத்து சோம்பேறியாக்கி
தொலைகாட்சி பெட்டிக்கு இது நல்லதென்றாக்கி
மின்சாரமில்லாம மிக்சி கிரைன்டர் ஓடுதுங்க
சம்சாரம் கையிலுள்ள மாவிலே விலைவாசி தெரியுதுங்க!
ஏழைகள் வாழும் நாடு ஒளிருதுன்னு சொன்னவங்க
ஓடிவிட்ட போதிலும் ஓலக்குரலுக்கு வக்காலத்து வாங்க
தானமாக வந்த மாடு தவிக்குதுங்க புல்லில்லாம
கவனமா இருக்குறாங்க நம்மநட்டு மக்கள் வாக்களிக்க!
தேர்தலுக்கு தேர்தல் பணம் புரளும் நாடுதாங்க
இலஞ்சத்தை ஒழிக்க மக்களுக்கு இலஞ்சமுங்க
அம்மா ஐயா யார் வந்தாலும் இதுதான் கதியென்றாச்சு
ஒருபக்கம் குரலொன்று நாம் தமிழரென்குதுங்க!
சாதிய மறக்க முடியல சாமிக்கு கும்பிடுபோட
பேதிக்கு மாத்திரை மருத்துவமனையில் இல்லைங்க
படிப்புக்கு வழியில்ல பகுத்தறிவு பேசுதுங்க ஒரு கூட்டம்
உண்மையை சொல்லுறேங்க என்மேல கோவமேனுங்க?
தேசம் முன்னேற திடமான கரமில்லை பாருங்க
திருத்த முயல கரத்திற்கு வலுவில்லை வெட்கமுங்க
இப்போது காலமது சர்னு ஓடுதுங்க வேடிக்கையே
பார்க்கின்ற மக்களோ கதறக்கதற துடிக்குதுங்க!
எத்தனை நிறமிருக்கோ அத்துனைக்கும் வெகுமதியாய்
துண்டு துண்டா துணி பறக்க பேச்சிலே அனல் வீச
குழப்பத்தில் முழிபிதுங்கி தொண்டையை நெறிக்குதுங்க
பத்திரிக்கை செய்தியிலே அண்டப்புழுகு அம்பலமுங்க!
நாடென்ன செய்ததென்னு கேட்கக் கூடாதுங்க
தலைவருக்கு கோவம் வந்தா சாட்டையை சுத்துவாங்க
பாவப்பட்ட ஏழைகள் பவனி வரும் பழந்தமிழ் நாடுங்க
சோத்துக்கு ரோஷமென்ன கிடக்குது நிதியில்லா நாட்டிலே!
வேஷம் போட்டு மோசம் பண்ணும் அரசியல் பாருங்க
பிழைப்புக்கு வழிக் கேட்டா கோஷம் போட கிடைக்குமாம்
கேடுகெட்டு போனதாரு கேட்டுபுட்டா கோபப்பட்டு
அடாவடிஇடிஅடித்து தினாவட்டு முட்டுக்கட்டையாச்சுதுங்க
தண்ணிய குடிச்சுபுட்டு தனி வீரம் பேசுதுங்க கேடிங்க
காவலே பயிரையும் மேயுதுங்க கேட்பதற்காருமில்லைங்க
உரிமைக்கு குரல்கொடுக்க எங்க தலைவருமில்லைங்க
அம்மான்னு கூப்பிட்டா கோட்டைக்கும் கேட்கலீங்க!
விலைவாசி ஏற்றமோ அது பொருளாதர முன்னேற்றமாம்
ஆளுகின்ற வர்க்கத்தில் அடியாட்கள் வலம் தொடர
வேடிக்கைப் பார்ப்பதற்கு காவல்காரன் உறுதுணைங்க
வாக்களிக்கும் வரை எங்க காலு பொன்னாயிருந்ததுங்க!
தொகுதி பணி கேட்டுபுட்டா தர்ம அடி கொடுப்பாங்க
பொன்னான எங்க காலு புண்ணாகி போச்சுதுங்க
எல்லாம் தலையெழுத்து இரத்தம் அசுத்தமுங்க
அருவா வெட்ட சுத்தி நசுக்குமுங்க வேடிக்கைதானுங்க!
எம்மேல கோபம் வேண்டாமுங்க கேளுங்க தோழர்களே
நாட்டிலே இப்படிதாங்க நடக்குது நிலைமைங்க பாருங்க
வட்டியில சோறு இருந்தா வயித்துக்குள் போடுவேனுங்க
ஊரெல்லாம் இதே பேச்சுங்க உங்க காதுல போட்டேனுங்க!
என்றும்: சுஷ்ருவா!
கருத்துகள்
நாட்டு நடப்புகளை நறுக்காகச்
நாட்டு நடப்புகளை
நறுக்காகச் சொன்னீர்...
நாடு நலம் பெற
உரிய இடத்தில
நல்லவர் அமர வேண்டுமே!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
தண்ணிய குடிச்சுபுட்டு தனி
தண்ணிய குடிச்சுபுட்டு தனி வீரம் பேசுதுங்க கேடிங்க
காவலே பயிரையும் மேயுதுங்க கேட்பதற்காருமில்லைங்க
உரிமைக்கு குரல்கொடுக்க எங்க தலைவருமில்லைங்க
அம்மான்னு கூப்பிட்டா கோட்டைக்கும் கேட்கலீங்க!
============ நல்ல பதிவு =========================
கேட்கிறோம் பதில் சொல்லத்தான்
கேட்கிறோம்
பதில் சொல்லத்தான் யாருமில்லை 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
வணக்கம், தங்கள், எங்கள்
வணக்கம், தங்கள், எங்கள் நாட்டு நடப்பையெலாம் தங்கத்தமிழால் தவழ விட்டுள்ளீர்.
அத்தனையும் அருமையான வரிகள்.
நன்றி.
உரிமையோடும் உணர்வோடும் இளங்கவி.














