kirikasan's படம்

மாலைவெயில் மஞ்சளிடும் மதுமலரும் வண்டுறங்கும்
மாமன் உந்தன்நெஞ்சி லெந்தன் மனமுறங்காதோ
சோலையிலே கிளியுறங்கும் சொல்லுங் குயில் தானுறங்கும்
சுந்தரமென் கூந்தல்மணம் கண்டுறங்காயோ
ஓலையிலே காற்றுவந்து ஓசையிடப் பாட்டிசைக்கும்
ஊமையிவள் பாடுங்குரல் உனையழைக்காதோ
காலையிலே பூமலரும் காற்றில்மணி யோசைவரும்
கற்பனையில் நீயிருப்பாய் கண்முன் எழாயோ

நீலவிழி மையெழுதி நினவிலுந்தன் மையலெழுதி
நீந்துகிறேன் கனவில் என்றும் நேரில் வாராயோ
வேலெறியும் விழியிலிவள் வேதனைதான் மீந்ததென்று
விரகமுடும் பனிவிலக வெம்மை தாராயோ
கோலமுகம் விண்ணுலவும் குளிர்நிலவின் விம்பமென்றார்
கூடுமொரு வான்முகிலாய் கொள்ள வாராயோ
பாலமுதம் போலவெனப் பனிமலரும் நீயெனவே
பார்த்துஒரு சேதிசொல்லப் பக்கம் வாராயோ

ஆடிவரும்தென்றலெனில் ஆக்கும்துயர் கொஞ்சமல்ல
அத்தனையும் நீக்கியுளம் அன்புகொள்ளாதோ
கூடிவரும் பூவின்மணம் கொல்லுதய்யா உன்நினைவில்
கொண்டதுவோர் துன்பம்தனைக் கிள்ள வாராயோ
கோடியெனத் தன்னருகில் கொள்ளையெழிற் தாரகைகள்
கொட்டிகிடந்தென்ன மதி கூடிவிடாதே
ஓடிஒரு சோடியினை உள்ளமதிற் காணும்வரை
ஒவ்வொருநாள் தேய்ந்துமது ஒய்ந்துவிடாதே

பூவில்மது உண்ணுவண்டு போய்விடவே துன்பம்வரும்
போதிலொரு சோலைமலர் வாடிடுமாமே
ஆவியிலே நீகலந்து ஆகிவிட்டோம் ஒன்றெனவே
ஆருயிரே நீஇலையேல் அழிந்திடுவேனே
கோவிலிலே பார்த்த சிலை குறுநடையில் போகுதடா
குமரியிவள் பேரழகு என்றதும் ஊரே
ஆவியிலே பேய்கலந்து ஆனதுவோ கோலமென்ன
ஆகஇவள் நோய்பிடித்தாள் என்றதுமின்றே!

நூல்திரிந்து போனதென நெய்விழியாள் ஆனதென்ன
நூலெடுத்து ஆடைநெய்ய நேர்ந்திடும் வாழ்வே
கால் இருந்து உச்சிவரை காதலெண்ணி நோயெடுத்தேன்
கன்னியென்னைக் காத்துவிட கைதொடுநீயே
வேல்விழியில் நீரெடுத்து விழிகலங்கி பார்வைகெட்டு
வேதனையில் பாடுகிறேன் விடிவு தாராயோ
வால்முளைத்த வெள்ளியொன்று வானிறங்கக் கனவுகண்டேன்
வாழ்வு இவள் முடியமுன்னே வந்துவிடாயோ

7
Your rating: None Average: 7 (2 votes)

கருத்துகள்

vinoth's படம்

(No subject)


7

Clap Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

நாட்டுப் பாடல் வரிகளைப்


7

நாட்டுப் பாடல் வரிகளைப் போன்று சில உள... அவை இன்னும் பாடலை வாசிக்கத் தூண்டுகிறதே...


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil