ந கோபிநாத்
பாட்டிமாரின் அன்றாடச் சந்திப்புக்களில் பேசப்படுகிறது
பாட்டன்மார் கொல்லப்பட்ட தந்திரங்கள். தடதடப்பு எழவும்,
பொக்கை வாய்களைப் பொத்தியபடி கலைந்த கிழவிகள்
பூனைகளாக உருமாறிப் பாய்ந்து செல்கின்றன.
பூனைகள் தானும் வெறி தணியாதிருப்பதற்காக
உள்ளே பிரார்த்திக்கிறேன்.
திறந்த வானத்தின் பரப்புகளில் தூதுக்கு வந்திருந்த முகில்கள்
போர்ச் சமநிலை அற்றுப் போனதுடன் கலைந்து செல்கின்றன.
பல்லாயிரம் பிண் டங்களை
விட்டகன்ற வால் முளைத்த மனங்கள்,
மண்ணிடுக்குகளில் நுளைத்துத்
துளையெடுத்துத் தம்மை
ஊன்றிக் கொள்கின்றன,
முகில்களை நம்பி!
கள்ளும் புலைக் கறியும் கொள்பவர்கள் உட்புகவும்
கன்னிகளைக் காத்தலின்றிக் கண்ணகியும் சென்றுவிட்டாள்.
மதுரையை எரித்த பின்னர்,
வற்றாப்பளைக்கு வந்திருந்தாள்.
காடையர்கள்
எம்மை எரித்த பின்னர்
எங்கெழுந்து போயிருப்பாள்?
தாயே?
மாதவியின் வழிவந்த
சங்கமித்தையின் பேரர்களுக்குப்
பயந்து அடங்கினியோ,
பெற்றவளே?
ஒரு இனம் அழிக்கப்படுகிறது!
எமது இறைமையைக் காலிற் போட்டுச் சிதைத்தபடி எதிரியின் படைகள்
அல்லோல கல்லோலப் படுகின்றன.
அட்டூழியத்தை வாய்களில் ஊதி
வானத்திற் பாய்ச்சுகின்றன.
முகில்கள் பயந்து ஓடுகின்றன!
தமது இனத்தின் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் காட்டுவதற்காக
எமது குழந்தைகள், பெண்களினதும்
அழுகிய பிணங்களுடன் நின்று
ஒளிப்படம் எடுத்துக் கொள்கின்றனர் வீரர்கள்.
எமது இறை தூதனின் கரிசனைக்கு எட்டவென,
எனது வழியில் போனவர்களின் அமைதிக்காக,
ஒரு கை கொண்டு அகவணக்கம் செலுத்துகிறேன்.
எதிரியின் துப்பாக்கி முனை
நாடியில் தொட்டு நிமிர்த்திய போது
பாட்டன் காலத்து முற்றத்தில்
உள் நுழைந்தேன்!
போராடிப் பெறவேண்டியிருந்த நிலத்தின்
வருங்காலக் கனவுகளுக்குள்
பறந்து கொண்டிருந்தேன்.
துப்பாக்கியும் தோட்டாக்களும்
எனது மெளனத்துடன் பேசிக்கொண்டிருந்தன - எனது
துப்பாக்கியின் தோட்டாக்களும்
எமது தேச எல்லைகளிற் சென்று வீழ்ந்தன.
எதிரிகளோ வீடுகளுக்குள்
வெறியாடிக் கொண்டிருந்தனர்.
முளைகள் கிளைத்து எழுவதற்காகக்
கிழவிகள் களிம்பூறிய செம்புகளிற்
தண்ணீர் வார்த்துவிட்டுப்
பூனைகளாக மாறிப்
பாய்ந்து சென்றனர்.
எனது கண்களில்
சோடனைகளும் களியாட்டங்களும்
தெரிந்த போது,
அரண்மனையின் மீது
முகில்கள் அழுது கொண்டிருந்தன!
வாசலில் நின்ற கிழவிகள்
தமது செம்புகளினால் எல்லோரது
தாகங்களையும் தீர்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களது வால்களில்
வரிகள் தெரிந்தன!
செம்பாட்டு மட்தெருவில்
தேரோட்டமும், காரோட்டமும்,
பண்பாடு போற்றி நிற்கும் விழாக்களுமாய்;
மண்ணோடு உறவுக்கென மாண்புமிகு நாடுகளும்
வந்தாடத் தலைநகரும் தன்பாட்டில் விருத்தியுற!
எம் பாட்டைப் பார்க்கவென
எம் பாட்டன் நிலப் பொழிலில்
நாம் நகர்ந்த தெருவினிலே,
கல்லோடு நின்றிருந்த மல்லிகையும்
காற்றினிற்குச் சம்மதத்தைச்
சிலுசிலுத்துச் சொல்லுமந்தக்
காலங்கள் தாண்டி நீளும்
எல்லையில்லா வாக்கியத்தின்,
மொழி தெரியாத் திகைப்பினிலே
கண் மயங்க,
எங்களுக்கும்
சொந்த நாட்டினிலே
சுகங்கிடைக்கப் பேறுமுண்டோ?
கருத்துகள்
கவிதை என்னென்னவோ செய்கிறது.
கவிதை என்னென்னவோ செய்கிறது. சொல்கிறது, உணர்த்துகிறது....

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


















