kirikasan's படம்

ஒன்று பட்டாலுண்டு வாழ்வு - நம்மில்
. ஒற்றுமை நீங்கிடின் விளைவது கேடு
என்றுமெம், தமிழ்மனம்மீது - நிதம்
. ஏற்படும் பிரிவினை சாபத்தின் கேடு
நன்றி கெட்டே பகையோடு - இவர்
. நடந்திடும் உறவுகள் நாட்டிற்கு ஊறு
வென்றுவிட்டோம் என்றபோது - இவர்
. வினைகளை எதிரிட அழிந்திடும்வாழ்வு

மனமது பண்படவேண்டும் - அதில்
. மலர்வது உணர் வுடல் மாளிகை போலும்
கனஎழில் வண்ணங்கள் தூங்கும் - அதில்
. காட்சிகள் கற்பனைச் சரங்களும் ஆடும்
இனமொழி யுணர்வுகள் மேலும் - அதில்
. இருப்பது பொன்னுடை நகைக ளுமாகும்
உனதெழில் அணிந்திடக் கூடும், - இவ்
. வுலகதில் தமிழது உயர்வென ஆகும்

உணர்வுக ளிருந்திட வேண்டும், - உன்
. உதிரத்தை உறைத்திடும் சுரம்கொள்ள வேண்டும்
தணலென மனம்கொள்ள வேண்டும் - அத்
. தகிப்பினில் உதிரமும் சுடும்நிலை வேண்டும்
மணமற்ற மலர்களைப் போலே - நீ
. மதியற்ற செயலினை மறந்திட வேண்டும்
குணந்தனில் தமிழ் எனும் பெருமை - உன்
. குருதியில் சிவப்பெனும் நிறந்தர வேண்டும்

இழிவதில் இறப்பதுமேலாம் - நீ
. இருந்திடில் உறுதிதன் மானமும்வேண்டும்
பழிஎனும் பெயரையும் தாங்கி - நாம்
. பலதுறை நடப்பினும் தாய் ஒன்று ஆகும்
வழிபல போய்ப் பணம் தேடு - நீ
. வருவது பகையெனில் தமிழ் எனக்கூடு
மொழியுன தறிவினில் தருமே - அது
. முழுமை யிலிலையெனில் அகந்தனில்குருடே

இவன் ஒரு தமிழன் என்றுலகில் - நீ
. எதுமுனை காணினும் உனதெழில் பெயரே
தவழ்திடும் பொழுதினி லிருந்து - நாம்
. தரைவிடும் வரைதனும் தமிழென ஒன்றே
எவனினம் தமிழ்தனைப் பழிப்போன் - அவன்
. எதிரியென் றுணர்; உன தாயவள் தன்னை
அவ மரியாதை செய்திழுத்தே - அவன்
. அழகினைகெடுத்திடும் அரக்கனைஎன்றும்

மனமது மன்னிக்கலாமோ - அவன்
. மணிமுடி கொள்ளினும் மறந்திடப் போமோ
சினமது எழுந்திட வேண்டும் - அவன்
. செயலினை நிறுத்திட உணர்வெழ வேண்டும்
இனமிவன் தமிழென இழிய - நீ
. இளித்தவன் கரம் பற்றல் எதுவிதம்- அன்னை
தனிலன்று பால்குடித்தாயோ - இல்லை
. தரம்கெட மதுவுடன் விசம் குடித்தாயோ

தமிழெனில் உயிரென எண்ணு - உன்
. தாயினும் சிறந்தவள் மொழிஎன்று கொள்ளு
அமிழ்திடும் தாய்சில காலம் - உன்
. அகமதில் ஒலித்திடும் தமிழ்முழுவாழ்வும்
தமிழினை மறந்தவன் இழியோன் - அவன்
. தொடுமிடம் எங்கணும் விசமெனும் கொடியோன்
தமிழ்தனை விற்பவன் மூடன் - அவன்
. தரணியில் புழுவிலும் இழிவெனும் தேகன்

திருந்திடு தமிழ்தனை எண்ணு - நீ
. தேன்சுவைத் தமிழினை உயர்த்திட நில்லு
வருவது பெருந்தொகையென்று - உன்
. வாழ்வினை எண்ணிடில் பெருதவறொன்று
தருமமும் நீதியும் வெல்லும் - அது
. தருமொரு வாழ்வென தலைநிமிர் சொல்லு
அருந்தமிழ் சிதைந்திட அன்னை - அவள்
. ஆருயிர் காப்பவர் யார் எமைவிட்டு

)ஈழத்தமிழரிடையே காணும் பிரிவு பிளவுகளை எண்ணி வேதனையில் வெளிவந்தது இக்கவி)

7.57143
Your rating: None Average: 7.6 (7 votes)

கருத்துகள்

rajudranjit's படம்

நன்றாக உணர்த்தினீர் உணர்வாரா


5

நன்றாக உணர்த்தினீர் உணர்வாரா எம் தமிழர்? Clap Clap Clap Clap Clap Clap Clap Clap

tamilparks's படம்

அருமை பாராட்டுக்கள்


10

அருமை பாராட்டுக்கள் Clap Clap Clap


தமிழ்த்தோட்டம் http://tamilparks.50webs.com
தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் www.tamilthottm.in


joshi2010's படம்

அருமையான் கவிதை.......


10

அருமையான் கவிதை....... நிச்சயம் ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு
Clap Clap Clap Clap


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


yarlpavanan's படம்

தமிழா! "ஒன்றுபட்டால் உண்டு


6

தமிழா!
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - ஒற்றுமை
நீங்கில் அனைவரும் தாழ்வு" என்பதும்
தமிழருக்கே...


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

தமிழ்மனம்மீது - நிதம் .


7

தமிழ்மனம்மீது - நிதம்
. ஏற்படும் பிரிவினை சாபக் கேடு

உண்மை ஐயா

இதை மட்டும் நாம் ஒற்றுமையுடன் வென்று விட்டால் மீண்டெழும் காலம் மிகவிரைவிலேயே உள்ளது.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...