Skip to main content

அன்பிற்கு அர்த்தம், அன்னை!

URI: http://tamilnanbargal.com/node/42114
கருத்துகள்: 19Likes: 3153 viewsசிறப்பு பதிவு

அன்பிற்கு அர்த்தம், அன்னை!

அன்பிற்கு அர்த்தம், அன்னை!

ஐயிரண்டு மாதங்கள்

அக்கறையாய் எனைச் சுமந்து



ஒவ்வொரு நிமிடமாய் என்

முகம் காண தவமிருந்து



வரமென்று எண்ணி (?) எனை

ஈன்றெடுத்த என் இறையே...



உன் உயிர் போகும் வலியிலும் என்

முகம் கண்டு பேருவகை கொண்டு



உன் நல்லுயிரை மரமெனக்கு

உரமாக வார்த்தனையே! .....



உன்பெருமை நான் மறவேன்!

உத்தமனாய் நான் வளர்வேன்!!



உன் பெயரை உலகெங்கும்

எதிரொலிக்க முன்னிற்பேன்!



பொன்னுக்கு மயங்காதே

பொறுப்புடனே அறிவுரைத்தாய்!



தன்கையே தனக்குதவி

பொன்மணியாம் கருத்துரைத்தாய்!



பொன்னுக்கு உழைத்தாலும் எனை

பொன்னாகப் போற்றி நின்றாய்



அன்போடு அறிவையும் நான்

பெறுவதற்கே துணை நின்றாய்



இணையில்லை உமக்கிங்கு

தாயே இன்னும்...



உன் உளம் போலே நான் வாழ்ந்தால்

வாழ்வே பொன்னாம்!



உன்னைப் போலிங்கு யாரும் உளரோ

நீ தரும் அன்பை அவர் தந்திடுவாரோ



கண்ணினைக் காக்கும் இமை போலே

கருத்தாய் என்னையும் காத்து நின்றாயே



எனக்கே எனக்காய் தோன்றிய இறையே...

உனக்கென உகுக்க உளது என் உயிரே..



கயிறாய் உயரே தொங்கும் இவ்வாழ்வில்

உயர்வாய் வாழும் வரமருள்வாயே!



அம்மாவென்று உன்னை அழைக்கையிலே

அன்பே நெஞ்சில் பெருகுதம்மா



உன்னோடு நானிருந்து உலகைக்காண

எந்நாளும் என்னுடனே இருப்பாயம்மா



இறைவன் இங்கில்லை என்ற வறட்டு வாதத்தை

இல்லாமல் செய்து வாழும் இறையாய் நின்ற தாயே



மறை சொல்லும் தெய்வம் வேறில்லை தாயே,

அது நீயே என் தாயே..!



கறையில்லா கனக மலர் வேறில்லை தாயே,

அது நீயே என் தாயே..!



ஈகையே உருவாய் விளங்கிடும் தாய்மைக்கு

ஈடிணை தரணியில் எங்கெனும் உண்டோ



அமைதி சாந்தம் அர்ப்பணிப்பு எனும்

அருங்குணங்கள் நிறைந்தவளே அம்மா



ஆசானாகவும் அருமருந்தாகவும் ஆனவளே-உன்னை

அனுதினம் துதித்தே வாழ்த்திட அருள்வாயே



எத்தனை பிறவி எடுத்தாலும் நீயே எனக்குத்-தாயாகி

அன்போடு நெஞ்சில் அணைத்துக் கொள்வாயே!!

--------------------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம்:  தோழி தர்ஷினி, நண்பர் வினோத், திரு. பொன்வண்ணன் அவர்கள் மற்றும் சுந்தரேசன் புருஷோத்தமன் 

இது, "தமிழ் நண்பர்கள் இதயத்திலிருந்து உருவாகும் இனியதோர் கவிதை!" எனும் கவிதை விளையாட்டிலிருந்து உருப்பெற்ற கவிதை! 


மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

பல அன்னைகளை ஒரு அன்னையாக்கிய அன்பரே!வண்ணங்கள் எத்தனையாயினும் அத்தனை வண்ணங்களிலும் ஒளிர்ந்திருக்கும்,ஒளிந்திருக்கும் ஒரு வண்ணமே --அன்னை என்னும் ஒரு வண்ணம்.எண்ணங்களைக் கூட்டி வண்ண மலராய்த் தொடுத்த உம் எண்ணம் [எத்தனைப் பிறவி பெறினும் நீயே என் தாய் ] திண்ணமாக வேண்டும் கண்ணன்.      

இது 
ஒரு 
சிறந்த படைப்பு
நன்றாகத் தொகுத்த 
தங்களுக்குப் பாராட்டுகள்!
உங்கள் முயற்சிக்கு
என்றும்
என் ஒத்துழைப்பு இருக்கும்!

இந்த படைப்பின் ஆரம்பத்திலேயே.... இதை சிறப்பாக்கித் தருமாறு தாங்கள் நம் தமிழ் நண்பர்களிடம் வேண்டியதை இன்று மனமகிழ்வுடன் நினைவுக்கு கொண்டு வருகிறேன்!

 
தங்களைப்போன்ற நல் நண்பர்களின் ஊக்கத்தாலும் ஒத்துழைப்பாலும் நல்ல பல படைப்புகள் துளிர்விடுகின்றன!
அன்பரின் அன்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்! வணக்கங்கள்!

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

நன்றி நண்பனே!

 
உமது வாழ்த்தை,
மேற்குறிப்பிட்ட நண்பர்கள் அனைவர்க்கும் அர்ப்பணிக்கிறேன்!

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

vinoth's படம்

மேன் மேலும் பல உள்ளங்களின் ஒரு மித்த கருத்து கவிதைகளாய் பிறக்க வேண்டும்

      

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

தங்களைப் போன்ற நல் நண்பர்களின் உதவியோடு இதுபோன்ற கவிதைகள் இனியும் பிறக்கும்!

தங்களின் ஒத்துழைப்பிற்கு என் மனம் நிறைந்த நன்றிகள் தோழனே!

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

நதிகளின் சங்கமம் கடலில் முடிவது போன்று
இங்கு கவிகளின் சங்கமம் கண்டேன்
நானும் கலக்கமுடியாது இருந்துவிட்டேனே
என வருந்துகிறேன்.
இனிவரும் கவிச்சங்கமத்தில் எனக்கும்
சிறுதகவல் தரலாமே!

வேலைப்பளுவால் இந்தபதிவினை
கவனிக்கவில்லை.........

மன்னிக்கவும்....

       

எனதன்பரே,
 
தங்களின் இச்செய்தி கண்டு ஒரு பக்கம் தங்களின் வருத்தமெண்ணி மிகுந்த வேதனையும், 
மறுபக்கம்....தமிழினைத் தாங்க மற்றுமோர் திண் தோள் மனமுவந்து விழைவது எண்ணி 
மிகுந்த மன நிறைவும் ஆனந்தமும் வாய்க்கப் பெற்றேன்!
 
நண்பர்களுக்கு சரியாக இதை தெரியப் படுத்தாமைக்கு முற்றிலும் நானே பொறுப்பாளி!
எனவே, இங்கு மன்னிப்பு வேண்டுவது நானாயும், மன்னிப்பருளும் நிலையில் தாமும் இருப்பதே உகந்தது!
 
இனிவரும் கவிச் சங்கமத்திற்கு எனது முதல் அழைப்பு மடல் உமக்கேயாம்!
 
தங்களின் அன்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே!

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

ஆம்,
அன்பும் அன்னையும் ஒன்றுக்கொன்று அர்த்தமாயின!
இதனுள் மற்றொன்று உட்புகலென்பது இயலாத ஒன்று!
தங்களின் கருத்திற்கு நன்றி சுமதி!

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

veerakrish's படம்

ஏன் நண்பரே 
அன்னையை பாடாத கவிதைகள் உண்டா
இல்லை அன்னையை பாடாத கவிஞன்தான் உண்டா
இப்புவியில்.....
ஆயிரம் உறவுகள் நம் முன் நின்றாலும்
அன்னைக்குபின்தான் அத்தனையும்

இதை யாரேனும் மறுக்க முடியுமா
இல்லை மறக்கதான் முடியுமா.........

இவ்வுலகாள்வது கடவுள் என்றால்
சொல்பவன் கண்ணைகுத்துவேன்
கண்திறந்து பாரடா
கடவுளுக்கு ஏது உருவம் என்று......

இடம் மாறிவந்த கடிதம்போல் அலைகிறேன்
உரியவனைதேடி......... வீரா