VISWAM's படம்

அம்மா வந்து இருந்தாள்- என்னை பார்த்துவிட்டு போகலாம் என்று.
பார்த்தாள்,பிறகு,"அப்ப நா கிளம்பறேன் மஞ்சு. மாப்பிள்ளை வந்தா நா
வந்தேன்னு சொல்லு" என்று கிளம்பினாள். அம்மாவை விரட்டுவதிலேயே குறியாய் இருந்தேன். அவர் வருவதற்குள்ளாக அம்மாவை அனுப்பியாக
வேண்டும். அம்மா வாசற்படியில் கால் வைத்தப்போது-மழை
பெரிசாக பெய்ய ஆரம்பித்தது. அம்மா உள்ளே வந்து உட்கார்ந்து விட்டாள்.

இனி அம்மாவை விரட்டவா முடியும். அம்மாவுக்கு எது தெரியக்கூடாது என்று நினைத்தேனோ அது தெரிய போகிறது.அம்மா
நிறைய வருத்தப்படுவாள்.நான் எது குறித்தும் கவலைப்படுபவள் இல்லை.
மணி ஒன்பதானது. மழை விடுவதாக தெரியவில்லை. அம்மா இன்று இங்கே தான் தங்குவாள ."மாப்பிள்ளை டெய்லி வர இவ்வளவு லேட்டாகுமா"
என்று அம்மா கேட்டு கொண்டு இருக்கும் போதே வாசலில் பைக் சத்தம்.

சங்கர் தான். வண்டியை சைட் ஸ்டாண்ட் தான் போட்டார்.
அவரால் இயல்பாக நிற்க முடியவில்லை. கால் தடுமாறியது. டெய்லி
குடித்து விட்டு தான் வண்டியில் வருகிறார். வாசலில் வந்து செருப்பை உதறினார். ஒன்று மிதியடியிலும், மற்றொன்று அம்மாவின் காலடியிலும்
வந்து விழுந்தது. பேன் ஒடியதால் ஹால் முழுக்க பிராந்தியின் வாடை பரவி
வயிற்றை புரட்டியது. அம்மா எழுந்து கொண்டாள். அவர் ஷோபாவில் சாய்ந்தார்

அம்மா பெட்ரூமுக்குள் போய் நின்று கொண்டாள். அம்மாவை "வாங்க" என்று கூப்பிடும் நிலையில் கூட சங்கர் இல்லை. பேண்ட்டில் இருந்து லுங்கிக்கு மாறுவதற்குள்ளாக ரெண்டு முறை தடுமாறி ஷோபாவில்
விழுந்தார். நான் பெட்ரூம் பக்கம் திரும்பி பார்த்தேன். அம்மா மௌனமாக
எல்லாவற்றையும் பார்த்து கொண்டு இருந்தாள். சங்கருக்கு சாப்பாட்டை
எடுத்து வைத்த போது தான் அம்மாவை சாப்பிட சொல்லாதது, ஞாபகத்திற்கு
வந்தது. சங்கரை சாப்பிடச் சொல்லிவிட்டு- ஒரு தட்டு நிறைய சோறு
போட்டு அம்மாவிடம் கொண்டு போய் கொடுத்தேன்.

அம்மா ,"எனக்கு பசிக்கல. சோறு வேண்டாம்" என்றாள்.
அம்மாவை பார்த்தேன்."ப்ளீஸ்ம்மா". தலையாட்டினாள். அம்மா கோபத்திலும்,
வேதனையிலும் இருந்தால் சாப்பிடமாட்டாள். பட்டினி போட்டு தன்னை வதைத்து கொள்வாள். எனக்கும் சாப்பிட பிடிக்கவில்லை. அம்மாவை
கிச்சனுக்கு வரச்சொன்னேன். இவரை பெட்ரூமுக்குள் தள்ளி விடவேண்டுமே.
வீடு ரெம்ப சின்னது. ஒரு சின்ன ஹால். ஹாலை ஒட்டி பெட்ரூம்.
பெட்ரூமை ஒட்டி டாய்லெட். ஹாலின் எதிர்ப்பகுதியில கிச்சன்.

இதற்கே 4500 ரூபாய் வாடகை. "அம்மா வந்துருக்காங்க"
என்றேன்-சங்கரிடம். "விடு... அவரு தூங்கட்டும்" என்ற அம்மா குரல் மட்டும
கேட்டது. கல்யாணமான இந்த எட்டு மாதத்தில்-முதல் முறையாக வந்து
இருக்கிறாள். இனி வருவதற்கான வாய்ப்பும் இல்லை. அம்மாவை பார்க்க பயமாய் இருந்தது. அதற்கு காரணம் இருந்தது. கிச்சனுக்குள் நுழைந்தேன்.

வாழ்க்கையில் சில தருணங்கள் மிக மிக சங்கடத்திற்குரியவை
மற்றும் சந்திக்க விரும்பாதவை. ஆனால் சந்தித்து தான் ஆக வேண்டும். "இதுக்கு தான் எங்கள வரவேணாம், வரவேணாம்னு சொன்னீயா" என்றாள்.
வெளியே பெட்ரூம் கதவை சாத்தி திரும்ப கிச்சனுக்கு வந்தேன். "எத்தனை
நல்ல மாப்பிள்ளைகள் வந்தாங்க. இந்த நாத்தத்துக்குள்ள வாழணும்னு உனக்கு
தலையெழுத்து" என்றாள். இந்த சாராய நாற்றத்தின் கொடுமையை
பெண்களை தவிர வேறு ஒருவரும் அறியமாட்டார்கள். அம்மா
நாற்றம் என்றதுமே- ராஜனின் ஞாபகம் வந்தது. ராஜனை நான் இன்னும் ஞாபகத்தில் வைத்துள்ளேனா...

"பார்த்த ஒவ்வொரு பையனையும் வேணாம், வேணாம்னு சொன்ன.
சிலது சரியில்ல தான். ஆனா அந்த சண்முகம் அண்ணே மகன் ராஜன் ரெம்ப நல்ல பையன் தெரியுமா... அந்த தம்பிய ஏன் வேணாம்னு சொன்ன" நான் நிமிர்ந்துஅம்மாவை பார்த்தேன்.

வெளிய சொல்ல முடியாத ரகசியம் அம்மா... காரணம்
சொன்னால் நீ சிரித்தாலும் சிரிக்கக்கூடும் அல்லது என் முட்டாள்தனத்திற்காக
வருத்தப்படக்கூடும். "அம்மா நீ தூங்கு" என்று ஜமுக்காளத்தை விரித்து போட்டு விட்டு, லைட்டை ஆப் செய்து உட்கார்ந்தேன். "நீ உள்ள போய் படுக்கல"அம்மா கேட்டாள். தலையை ஆட்டிவிட்டு அம்மாவின் பக்கத்தில் படுத்தேன்.

அந்த ஹாலில் இன்னும் பிராந்தியின் கெட்ட வாடை அடித்து கொண்டு தான் இருந்தது. மூக்கை பொத்திக்கொண்டேன்.ஹாலின் ஏதாவது ஒரு இடத்தில் சங்கரின் எச்சில் சிதறி இருக்கலாம். அதான் வாடை போகாமல் உள்ளது. அம்மா சேலை தலைப்பால் மூக்கை மூடிக்கொண்டு தான் படுத்து இருந்தாள்.

"அந்த சண்முகம் அண்ணே மகனை ஏன் வேணாம்ன " அம்மா திரும்பகேட்டாள். "உன் பொறுமை எனக்கு ஆச்சர்யமா இருக்கு" என்றாள். நான் தூங்கிவிட்டவள் போல் பாவனை செய்தேன். பொறுமை சிலருக்கு இயல்பில்லையே இருக்கும்.சிலருக்கு சூழ்நிலை கற்று தரும். நான் இரண்டாவது ரகம். ஆம் நான் ஏன் அத்தனை நல்ல ராஜனை நிராகரித்தேன். அம்மாவிடம் சொல்ல முடியாததை அல்லதுசொல்ல ப்ரியப்படாததை உங்களிடம் சொல்கிறேன். ராஜன் பெண் பார்க்க வந்த தினத்தை நினைத்து பார்க்கிறேன்.

அவர் என்னை பார்க்க, நான் அவரை பார்க்க-இருவருக்கும் ஒருவரை ஒருவரை பிடித்து போகிறது. "ரெண்டு பேரும் அந்த ரூம்ல போய் பேசுறதுனா பேசுங்க" பெரியவர்களே வழி தர -அந்த அறைக்குள் நுழைகிறோம். ஆளுக்கொரு நாற்காலியில் அமர்கிறோம். நான் தான் முதலில் பேச்சை
துவக்கினேன்.

அவருக்கு கூச்ச சுபாவம் போலும். தயங்கி தயங்கி பேசினார். அவர் பேசிய எதுவும் என் காதில் விழவில்லை. அவர் வாயிலிருந்து வந்த துர்நாற்றமே என் மூளையை ஆக்ரமித்தது. மூக்கை ஆக்ரமித்தது. மூக்கை பொத்தி கொண்டேன். அந்த நொடியிலேயே அவரை வெறுத்தேன். ஒரு வித எரிச்சல் அடைந்தேன்.

"சரி, வெளிய போவோம்" என்றேன். அவர்கள் போனதும்"இந்த மாப்பிள்ளை வேணாம்"என்றேன். அம்மா திட்டினாள். "வேணாம்னா ஏன் வற்புறுத்தற" என்றார் அப்பா.காரணத்தை மட்டும் யாரிடமும்- கடைசிவரை சொல்லவில்லை.

இன்னும் சாராய வாடை அறையிலிருந்து போய் இருக்கவில்லை
. மூக்கை பொத்திக்கொண்டேன்.

நன்றி : தமிழ் உதயம்/http://tamiluthayam.blogspot.com/2009/11/blog-post_6710.html

4.75
Your rating: None Average: 4.8 (4 votes)

கருத்துகள்

kishore1490's படம்

(No subject)


7

Clap Clap


கிஷொர் குமார்


VISWAM's படம்

நன்றி


நன்றி

சரவணன்'s படம்

கதை நல்லாயிருக்கு.


8

கதை நல்லாயிருக்கு.


உ.சரவணன்
திருநெல்வேலி


VISWAM's படம்

நன்றி


நன்றி