மொய்ப்பணம்

URI: http://tamilnanbargal.com/node/532436 கருத்துகள்272 views
manovasant's படம்

மொய்ப்பணம்

 

அந்த குக்கிராமத்தின் எதிரே  உள்ளடங்கி அமைந்திருந்த மாரியம்மன் கோவிலை நெருங்கும் போது அங்கே கல்யாணம் ஒன்று நடக்கப் போவதற்கான அறிகுறிகள் எதுவுமே தென்படவில்லை. பட்டு வேட்டி, சட்டையுடன் ஓடி வந்து வரவேற்ற செல்வத்தைப் பார்த்த பின்புதான் சந்தேகம் தீர்ந்தது. சரிதான் ! சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறோம்.

 

மாப்பிள்ளை செல்வம் எங்கள் பேங்கில் வேலை பார்க்கும் ஆபீஸ் பாய். எங்களுக்கு தண்ணீர் கொடுப்பது, தினந்தோறும் மேஜைகளைத் துடைத்து வைப்பது, குப்பைகளை வெளியில் போடுவது, மற்றும் எங்களுக்கு சில்லறை வேலைகள் செய்வது என்று ஆபீஸில் எல்லாவற்றுக்கும், எல்லோராலும் தேடப்படும் ஒரு ஆத்மா.

 

போன வாரம் என் ரூமுக்கு வந்து கையைக் கட்டிக்கொண்டு “அடுத்த வாரம் எனக்கு கல்யாணம் சார் ! என்றான். “சந்தோஷம்பா எங்க கல்யாணப் பத்திரிக்கை ? என்று கேட்டவுடன் “பத்திரிக்கை எல்லாம் அடிக்கலை சார். செலவாகும்னு விட்டுட்டோம் கல்யாணத்துக்கே நெறைய செலவு சார் ! நீங்க கட்டாயம் கல்யாணத்துக்கு வரணும் சார்” “ன்னு சொல்லிட்டுப் போனான். விசாரித்துப் பார்த்ததில், வயதான அம்மா, தம்பி, தங்கைகள் என்று பெரிய குடும்பம் என்றும், கைக்கும் வாய்க்குமான ஒரு அன்றாட வாழ்க்கை என்றும் சொன்னார்கள்.

 

கல்யாணம் புதன் கிழமையானதால், காலையிலேயே கல்யாணத்தைப் பார்த்து விட்டு அப்படியே வேலைக்குப் போய் விடலாம் என்று முடிவு செய்து கிட்டத்தட்ட பேங்கில் உள்ள எல்லோருமே வந்திருந்தோம். மற்றபடி 30 அல்லது 40 பேர்தான் மொத்தக் கூட்டமே. முகூர்த்த நேரத்தில் ஊர்ப் பெரியவர் தாலியை எடுத்துத் தர, மாலை மாற்றி, தாலி கட்டி, சற்று நேரத்தில் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தும் சத்தமில்லாமல் முடிந்து போனது. நாதஸ்வரம், மேள தாளம் கூட இல்லாமல் கோவில் மணியின் மங்கல ஓசையிலேயே எல்லாம் நடந்து முடிந்தது.

 

முன்னதாகவே கேள்விப்பட்டிருந்தாலும் ஏழ்மையை நேரில் இருந்து பார்த்தபோது, ஏனோ மனது வலித்தது. நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கும் நிதர்சன வாழ்க்கையிலிருந்து நடுத்தர மக்களான நாமெல்லாம் விலகி நிற்கிறோமோ என்ற ஒருவித குற்ற உணர்ச்சி உள்ளுக்குள் அழுத்திக் கொண்டிருந்தது.

 

மாப்பிள்ளை கையில் கவரைக் கொடுத்து விட்டு வாழ்த்தி விட்டு புறப்படலாம் என்று ஏற்கனவே பெயர் எழுதி வைத்திருந்த கவரை எடுத்தேன், கவருக்குள் ஏற்கனவே ஒரு ஐநூறு ரூபாய்த் தாளை வைத்திருந்தேன். இப்போதெல்லாம் ஐநூறு ரூபாய் என்பது ஒரு குறைந்தபட்ச அன்பளிப்பாக ஆகிப்போனதே ! சற்று யோசித்து இன்னுமொரு ஐநூறு ரூபாய்த் தாளை எடுத்து கவரின் உள்ளே திணித்து செல்வம் கையில் கொடுத்து விட்டு, காலில் விழுந்த பொண்ணு மாப்பிள்ளையை ஆசிர்வதித்து கிளம்பினோம். எனக்கு ஆயிரம் ரூபாய் என்பது பெரிய பணம் இல்லை, ஆனால் செல்வத்திற்கு அது நிச்சயம் மிகவும் பெரிய தொகைதான்.

 

அடுத்த இரண்டு நாளிலேயே செல்வம் மீண்டும் வேலைக்கு வந்துவிட்டான். இன்னுமொரு ஜீவனுக்கு கூடுதலாக சம்பாதித்துப் போடவேண்டுமே என்ற கவலையை தவிர வேறு ஒரு மாற்றமும் அவனிடம் தெரியவில்லை.

 

வேலைச் சுமையில் ஆறு மாதங்கள் போனது கூடத் தெரியவில்லை. அதிலும் கடந்த ஒரு மாதமாக என் ஒரே மகனின் திருமண ஏற்பாடுகளில் இங்கும் அங்கும் அலைந்து மண்டபம், சாப்பாடு, பத்திரிக்கை, அழைப்பு, மேளதாளம், டிரஸ், சேலை, தாலி, நகைகள், மாலை, அலங்காரம், ஐயர், பூஜை புனஸ்காரம் என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

 

ஒரு வழியாக மாப்பிள்ளை அழைப்பு, வரவேற்பு, திருமணம் எல்லாம் முடிந்து பொண்ணு மாப்பிள்ளையை மறு வீடு அனுப்பி வைத்து விட்டு அக்கடா என்று உட்கார்ந்தேன். மனைவி, பீரோவில் இருந்து ஒரு பிரீஃ கேசை எடுத்து வந்தாள். “இந்த மொய்ப் பணத்தையெல்லாம் கணக்குப் பண்ணி சரிபார்த்து, நோட்டில் எழுதி வையுங்க ! நான் ஒரு காப்பி போட்டுட்டு வரேன் ! என்று சொல்லி சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

பிரீஃப்கேசைப் பிரித்தேன். கவர்களால் நிரம்பி வழிந்தது. வீட்டின் முதல் விசேஷம் என்பதால். அழைத்தவர்களில் பெரும்பான்மையாக வந்திருந்தனர். அதில் அதிகமான பரிசளிப்புகள் கவர்களாகவே இருந்தது. கவர்களில்தான் எத்தனை வகை. பூப்போட்ட கவர்கள், ஜரிகை போட்ட கவர்கள், ஒரு ரூபாய் நாணயம் பதித்த கவர்கள், வெள்ளைக் கவர்கள், பிரவுன் கவர்கள், கலர் கலரான கவர்கள், நீளமான ஆபீஸ் கவர்கள், என்று விதவிதமான கவர்கள் உள்ளே இருந்தன.

 

ஒவ்வொரு கவராக எடுத்து, முதலில் பெயரை நோட்டில் எழுதி, பின் உள்ளிருக்கும் பணத்தை எண்ணி சரிபார்த்து, தொகையை நோட்டில் எழுதிக்கொண்டே வந்தேன். ஒரு கசங்கிய பிரவுன் கலர் கவரின் வெளியே “செல்வம், இந்தியன் வங்கி, மணல்மேடு” என்று எழுதியிருந்தது. ஆபீஸ் பாய் செல்வம்தான். ரிசப்ஷனுக்கு புது மனைவியுடன் வந்திருந்தான். “கட்டாயம் சாபிட்டுப் போங்க” என்று சொல்லி அனுப்பினேன். பேங்கில் இருந்து வந்திருந்த மற்றவர்களோடு சாப்பிடச் சென்றதையும் மனநிறைவோடு பார்த்தேன்.

 

ஆறு மாதம் முன்பு செல்வத்தின் திருமணத்திற்கு சென்றதும், அது நடந்து முடிந்த விதமும், என் கண்முன் நிழலாடியது. இலட்சக் கணக்கில் செலவு செய்து இப்போது நான் நடத்தி முடித்த இந்தக் கல்யாணமும், பத்திரிக்கை அடிக்கக் கூட பணமில்லாத அந்தக் கல்யாணமும் சமூகத்தின் மேடு பள்ளங்களை ஏனோ நினைவு படுத்தியது.

 

நான் ஒன்றும் கம்யூனிஸ்ட்டோ, சித்தாந்தவாதியோ, சீர்திருத்தவாதியோ இல்லை. இரண்டு திருமணங்களுமே என்னோடு சம்பந்தப்பட்டது என்பதாலும், நானே நேரில் பார்த்தது என்பதாலும் ஏதோ ஒரு நெருடல் அவ்வளவுதான். இந்த ஏற்றத் தாழ்வுகளை எல்லாம், ஒரு தனிமனிதனாக என்னால் நிவர்த்தி செய்யவோ, களையவோ, முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

 

ஆனாலும் ஏதோ ஒரு இளகிய உணர்வு, உள்ளுக்குள் கசியும் ஈரம், நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற ஒரு உந்துதல் இதுதான் அன்றைக்கு ஐநூறு ரூபாய் கொடுக்கவிருந்த எண்ணத்தை மாற்றி ஆயிரம் ரூபாய் கொடுக்க வைத்தது. ஆயிரம் ரூபாய் என்பது என்னளவில் பெரிய பணம் இல்லை, ஆனால் செல்வத்திற்கு அது நிச்சயம் மிகவும் பெரிய தொகைதான். அன்றைக்கு நான் செய்த அந்த செயல், மனதிற்கு மிகவும் திருப்தியாகவும் பெருமிதமாகவும் இருந்தது.

 

என்னுடைய பெருந்தன்மையை அசை போட்டுக் கொண்டே செல்வம் கொடுத்திருந்த அந்த கசங்கிய கவரைப் பிரித்தேன். கவரின் உள்ளே நீட்டிக் கொண்டிருந்தது இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள். அதில் இருந்த காந்தித் தாத்தா, திகைத்துப் போய் உட்கார்ந்திருந்த என்னுடைய ஏழ்மையைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்.

 

--- மனோவசந்த்

Rating: 
9
Your rating: None Average: 9 (1 vote)

கருத்துகள்

yembee's படம்
0

ரொம்ப நல்ல கதையும் அதை சொல்லிய சரளமான நடையும் ...

ஏழைகளுக்கு சுய கௌரவம் தான் மிகப்பெரிய சொத்து மொய் பணம் திருப்பி கொடுக்க முடியாமல் ஊரை விட்டு சென்ற குடும்பத்தை பற்றியும் படித்திருக்கிறேன் 

vinoth's படம்
0

கிராமங்களில் ஒரு பழக்கம் உண்டு. 

மற்றவர்கள் என்ன செய்தார்களோ அதை நினைவில் வைத்திருந்து அதை திரும்ப செய்வது. பாரம்பரியம் கற்றுக்கொடுத்த மரபு அது. 

மொப்ப்பணமும் இப்படித்தான். 

 

கதை நடை அருமை. 

 

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

புதிய கருத்தை சேர்