தம்புசாமிக்கு வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்னை. அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக ஒரு ஜென் குருநாதரைத் தேடிச் சென்றான்.
அவர் தம்புசாமியின் புலம்பலைப் பொறுமையாகக் கேட்டார். அதன்பிறகு ‘நீ ஏன் கடவுளை நோக்கித் தவம் செய்யக்கூடாது?’ என்றார்.
‘தவமா? நானா?’
’ஆமாம். நான் சொல்லும் மந்திரத்தைத் தொடர்ந்து பல லட்சம் முறை சொல்லவேண்டும். கடவுள் வருவார். உன் பிரச்னைகளையெல்லாம் நொடிப்பொழுதில் தீர்த்துவைத்துவிடுவார்!’
தம்புசாமி அந்தக் குருநாதருக்கு நன்றி சொன்னான். கடவுளை நோக்கித் தவம் செய்ய ஆரம்பித்தான்.
பலகாலம் கழித்து, கடவுள் அவன் முன்னே தோன்றினார். ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார்.
’கடவுளே, என்னைச்சுற்றி எல்லோரும் கவலை இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால் நான்மட்டும் ஏகப்பட்ட பிரச்னைகளால் அவதிப்படுகிறேன்’ என்றான் அவன். ‘நீ என்னுடைய கவலைகளையெல்லாம் தீர்த்துவிடு. நான் துயரமே இல்லாத மனிதனாக வாழ ஆசைப்படுகிறேன்!’
கடவுள் சிரித்தார். ‘மகனே, கவலை இல்லாத மனிதனாக வாழ்வது உன் கையில்தான் இருக்கிறது. நான் அதைச் செய்யமுடியாது.’
தம்புசாமி யோசித்தான். ‘அப்படியானால், இந்த உலகத்திலேயே மிகக் குறைவான கவலைகளோடு சந்தோஷமாக வாழ்கிறவர் யார் என்று கண்டுபிடித்துச் சொல், அவருடைய கவலைகளையும் என்னுடைய கவலைகளையும் இடம் மாற்றிவிடு!’ என்றான்.
‘அதை நீயே கண்டுபிடிக்கலாம்’ என்றார் கடவுள். ‘நான் உனக்கு ஒரு விசேஷ வரம் தருகிறேன். உன்னுடைய கவலைகளையெல்லாம் நீ ஒரு மூட்டையாகக் கட்டிக்கொள். அந்த மூட்டையைச் சுமந்துகொண்டு தெருத்தெருவாக, ஊர் ஊராக, நாடு நாடாகச் சுற்றி வா. நீ சந்திக்கிற ஒவ்வொரு மனிதரின் முதுகிலும் ஒரு கவலை மூட்டை தெரியும். அதில் யாருடைய மூட்டை உன்னுடைய மூட்டையைவிட மிகச் சிறியதாக இருக்கிறதோ அவர்களிடம் உன் மூட்டையைக் கொடுத்துவிட்டு அவர்களுடைய மூட்டையை வாங்கிக்கொள்!’
தம்புசாமிக்கு மகிழ்ச்சி. கடவுளுக்கு நன்றி சொன்னான்.
மறுநிமிடம், அவன் கையில் ஒரு தேங்காய் சைஸ் மூட்டை இருந்தது. அதற்குள் அவனுடைய கவலைகள் அனைத்தும் பொட்டலம் கட்டப்பட்டிருந்தன. அதைத் தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் தம்புசாமி.
முதல் வேலையாக, அவன் தன்னுடைய பணக்கார நண்பர்கள், உறவினர்களுடைய வீடுகளுக்கெல்லாம் சென்றான். அவர்கள்தான் கவலை இல்லாமல் வாழ்கிறவர்கள் என்பது அவனுடைய எண்ணம்.
ஆனால் தம்புசாமி நினைத்ததற்கு நேர் எதிராக, அந்தப் பணக்கார நண்பர்கள் ஒவ்வொருவருடைய முதுகிலும் பானை சைஸ், பலாப்பழ சைஸ், யானை சைஸ் கவலை மூட்டைகள் இருந்தன.
திகைத்துப்போன தம்புசாமி மற்ற மனிதர்களைக் கவனித்தான். அநேகமாக எல்லோரும் தேங்காய் சைஸ் கவலை மூட்டையாவது வைத்திருந்தார்கள்.
தம்புசாமிக்குக் கடவுள் ஏன் இந்த வரத்தைத் தந்தார் என்று புரிந்தது. ‘எனக்கு இந்த மூட்டையே போதும் சாமி, எக்சேஞ்ச் ஸ்கீமெல்லாம் வேண்டாம்!’ என்று அவர் இருக்கும் திசையை நோக்கி ஒரு கும்பிடு போட்டுவிட்டுப் பிழைப்பைப் பார்க்க ஆரம்பித்தான்!
இனைய தளத்தில் நான் படித்தவை...
நன்றி தமிழ் பேப்பர் பத்மா அவர்களே..
http://www.tamilpaper.net/
கருத்துகள்
கருத்துள்ள கதை தான். மூட்டையை
கருத்துள்ள கதை தான். மூட்டையை எறக்கி வெச்சிட்டு போயிட்டேயிருக்கற பக்குவம் வர்றது தான் கஷ்டமா இருக்கு. வித்தியாசமான தலைப்பு
நல்ல கருத்துள்ள கதைதான்!!
நல்ல கருத்துள்ள கதைதான்!!












