smariappan's படம்

இன்று அவனுக்கு முதல் இரவு.அவன் என்றால் கிருபால் ரத்தினம்.பழைய பெயராகவும் கிறிஸ்தவப் பெயராகாவும் இருக்கிறதா?ஆனால் இரண்டும் இல்லை.மிகுந்த ஆபத்தான ஆபரேஷன் மூலம் அவன் பிரசவித்ததால்,அவனையும் அவன் அம்மாவையும் காப்பாற்றிய அந்த மருத்துவர் பெயர் கிருபால் ரத்தினம் என்ற நன்றிக்கடனாக அந்தப் பெயரையே வைத்துவிட்டார்கள்.வயது?இருபத்தி நான்கு தான்.இந்த முதல் இரவு அவன் அம்மாவின் அவசரப் புத்தியால் இந்த வயதிலேயே.என்ன செய்யப்போகிறானோ என்று படபடப்பாய் உணர்ந்து கொண்டிருக்கிறான் கிருபால் ரத்தினம்.

7 மாதங்களுக்கு முன்புதான் அந்த பெரிய கம்பெனியில் நல்ல சம்பளத்தில் சேர்ந்தான்.அப்பொழுதே அம்மா அனத்த ஆரம்பித்தாள்.

கிருபாலின் தந்தை அவனுக்கு மூன்று வயதாக இருக்கும்பொழுதே தாயையும் குழந்தையும் தவிக்கவிட்டு இறந்து போனார்.அம்மாதான் இவனை ஆளாக்கியவள்.

கிருபாலம்மா என்றாலே அந்தப் பகுதிமக்கள் சற்று புருவம் உயர்த்தித் தான் பேசுவார்கள்.அவளின் உழைப்பும் முனைப்பும் அப்படி.அந்த ஏரியாவைப் பொறுத்தவரை அவள் கிருபால்அம்மா.எந்நேரமும் கிருபால்தான் அவளுக்கு எல்லாமும்.

மிகுந்த வைராக்கியத்தோடு வளர்த்தவள்.இடுப்பில் இவனை இடுக்கிக் கொண்டு டியூசன் எடுப்பாள்.அது மாலை வேளைகளில். மதியம் குழந்தையை தூங்கச் செய்தவுடன் படிப்பாள்.வருமானத்திற்கு அவளின் மெனக்கெடல்கள் அதிகம்.என்றாலும் பிள்ளையை தனியாக வளர்த்த வேதனையை ஒருநாளும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டாள் யாரிடமும்.மிகுந்த அன்பின் வெளிப்பாடாக ஒன்றைச் செய்து விட்டு அது எவ்வளவு கடினம் தெரியுமா என்று வியாக்யானம் பேசினால் அந்தச் செயலுக்கான அர்த்தமே மாறிவிடும் என்பது அவளின் எண்ணம்.கண்டிப்போடு வளர்த்திருந்தாலும் கிருபாலின் எந்த விருப்பத்திற்கும் இன்று வரை இடையே நின்றதே இல்லை.

“கராத்தே கிளாஸ் சேரணும்மா,வெங்கடேஷ்,சஞ்சய் எல்லாரும் சேர்த்துருக்காங்க”

அடுத்த நாளே சேர்த்துவிட்டாள்.இப்படியான விருப்பங்கள் தடை பட்டதே இல்லை கிருபாலுக்கு. கிரிக்கெட் விளையாட்டில் அவனுக்கு அலாதி ப்ரியம்.வேர்ல்டு கப் வந்தவுடன் கலர் டி.வியில் பார்க்க வேண்டும் என்று அழுதவனை சமாதானப் படுத்தி இரண்டாவது மேட்சை புத்தம் புது கலர் டிவியில் அவளும் அருகே அமர்ந்து ஆசையாய் பார்த்தவள்.மகனின் ஆசைகளைப் பூர்த்தி செய்ய அவள் அலுவலகத்தில் வாங்கிய லோன்களும் விற்ற நகைகளும் ஒரு நாளும் அவளை மலைக்கச் செய்ததில்லை.

இதோ..நினைத்தபடி கிருபால் இப்பொழுது ஆம்பளை.அம்மாவை தங்கத் தட்டில் வைத்து தாங்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே படித்து வேலையிலும் சேர்ந்து விட்டான்.

முதல் சம்பளத்தை வாங்கிக்கொண்டு அவனும் அவன் தாயும் வீதிகளில் உற்சாகமாய் சுற்றியதை இன்றும் ஊர் சொல்லும்.

கிருபால்ரத்தினம்..முதல் இரவின் ஆரம்பத்தில் இருந்தான்.கொஞ்சம் படபடப்பு என்பதையும் விட பெயர் சொல்ல முடியாத ஒன்று அவன் வயிற்றில் அமிலமாக சுரந்து கொண்டே இருந்தது.எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதாலா அல்லது இதைப் பற்றிய இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்ற ப்ரக்ஞையே இல்லாமல் இருந்ததாலா? அவனால் எதையும் சிந்திக்கவும் முடியவில்லை..தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை..

எத்தனை முறை அழுதிருப்பான் அம்மாவிடம்..எதிலும் அவசரப் படாதே என்று..கேட்டால்தானே அவள்.

காலையில் லேசாக நெஞ்சுவலி என்றாள்,தண்ணீர் கொடுத்துவிட்டு என்ன ஏது என்று கேட்பதற்குள் இப்படி ஒரு நிமிடத்தில் செத்தே போய்விட்டாளே...அள்ளி அணைத்து எருவாட்டியை முகத்தில் சரியாகப் பொறுத்தி,நெய்யை நிறைய ஊற்றி எரித்து விட்டு வந்தாகிவிட்டது.கொள்ளி என்றார்கள் அதை.

அம்மா இல்லாமல் அந்த வீட்டில் தனியாக இருக்கப் போகும் முதல் இரவு...படபடப்பாய் உணர்ந்துகொண்டிருக்கிறான் கிருபால் ரத்தினம்.

.. Sad Sad Sad

5.72727
Your rating: None Average: 5.7 (11 votes)

கருத்துகள்

umami12's படம்

நல்ல அம்மா.


6

நல்ல அம்மா.


uma