நீங்கள் பஸ்சிலோ, ரயிலிலோ சென்றுகொண்டு இருக்கிறீர்கள். திடீரென, "டங்க டங்க டங்க டங்க டங்'... என தோசைச்சட்டியை கரண்டியால் குத்தி, குதறும் சத்தம்
கேட்டால், சாட்சாத்! மதுரைக்கு வந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
அந்த சத்தத்தை கிளப்பியது, வேறொன்றுமில்லை, மதுரைக்கே உரித்தான "கொத்து புரோட்டா' தயாரிக்கும் சத்தம் தான். கொத்து புரோட்டா, முட்டை புரோட்டா, வீச்சு
புரோட்டா, எண்ணெய் புரோட்டா... என ஏகப்பட்ட "நாமகரணம்' சூட்டிக்கொண்ட இத்தனை அயிட்டங்களுக்கும் மூலகர்த்தா, புரோட்டா மட்டுமே. இந்த புரோட்டாவின் கதை
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
பெயர் காரணம்: வட மாநிலங்களில், "பரத்தா' என அழைக்கப்படும், "அயிட்டம்' தான், தமிழகத்தில் "புரோட்டா' என்ற பெயரை சுவீகரித்துக்கொண்டது. இரண்டுக்கும் பெரிய
வித்தியாசம் இல்லை. "பரத்தா' என்பது கொஞ்சம் சப்பட்டையாக இருக்கும். புரோட்டா, கொஞ்சம் உப்பலாக இருக்கும். மற்றபடி, இரண்டுமே "அக்கா, தங்கச்சி' தான்.
புரோட்டாவின் வரலாறு பற்றி பலரும் பல ஆராய்ச்சிகள் செய்து பார்த்துவிட்டனர். அதில் அறிந்த உண்மை, "இது முழுக்க, முழுக்க இந்திய உணவு' என்பது. இதில்
அடங்கியுள்ள உட்பொருட்களும் குறைவானவையே. இந்தியில் கோதுமை மாவுக்கு பெயர் "ஆட்டா'. "பரா' என்றால் அடுக்கு. சுட்ட பிறகு, அடுக்கடுக்காக அமைந்துள்ள
மைதா மாவு என்ற அர்த்தத்தில் "பரா+ஆட்டா', "பரத்தா'வாகி இருக்கிறது.
தயாரிக்கும் முறை: மைதா மாவை தண்ணீருடன் கலந்து, சிறு "மலை'யாக குவித்து, அதன் "தலை' மீது எண்ணெய்யை ஊற்றி, சிறிது நேரம் ஊறவிட்டு, "மலை'யை சிறு
உருண்டைகளாக உருட்டி, லேசாக கையாலேயே அமுக்கி, துணி துவைப்பதுபோல் வீசி, மீண்டும் அதே துணியை சுருட்டி, மடிப்பதுபோல், சுற்றிச் சுற்றி சுருட்டி,
தோசைக்கல்லில் வைத்து, எண்ணெய்யை ஊற்றி கொஞ்சம் நேரம் வேக வைத்து, "பொன்னிறத்திற்கு' அது வந்ததும், புரட்டிப் போட்டு, மீண்டும் லேசாக எண்ணெய் ஊற்றி,
அந்த பக்கத்தையும் "பொன்னிறமாக' வேக வைத்து, கொஞ்சம் "மொறு, மொறு'ப்புடன் எடுத்து, சில புரோட்டாக்களை மொத்தமாக அடுக்கி, செங்குத்தாக நிற்க வைத்து,
கையால் "நாலு சாத்து, சாத்தி', அப்படியே "பொல, பொல' என்று ஆக்கினால், நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் புரோட்டா ரெடி. "பரத்தா' போல, தட்டையாக இல்லாததால்,
புரோட்டா என்பது தமிழக உணவாக கருதப்படுகிறது. "இட்லி, தோசையைப் போல், புரோட்டாவையும் நாங்கள் தான் கண்டுபிடித்தோம்,' என தமிழர்கள், "ஜொள்ளு'
விட்டுக்கொள்ளலாம்.
சேர்த்துக்கிட்ட ஜோடி: வடமாநிலங்களில் பெரும்பாலும் ஊறுகாய் அல்லது வெண்ணெய்யுடன் பரத்தாவை சாப்பிடுகின்றனர். தமிழர்களுக்கு இதெல்லாம் ஒத்து வராது.
ஊறுகாய், வெண்ணெய் போன்றவை உடல்நலத்திற்கு தீங்கு என நினைத்தார்களோ என்னவோ... புரோட்டாவுக்கு "சால்னா' என்ற இன்னொரு "ஜோடி'யை
கண்டுபிடித்திருக்கின்றனர். அசைவ குழம்புக்கு உரிய அனைத்து சேர்மங்களையும் "கம, கம' என அரைத்து, கொஞ்சம் எலும்பு துண்டுகளைப் போட்டு, அல்லது
வாடிக்கையாளரை ஏமாற்ற, "மட்டன், சிக்கன்' போட்டது போல் "பம்மாத்து' செய்து, இலையில் விட்டால், அணை கட்டினாலும் அடங்காமல் பாய்ந்து ஓடினால்... அது தான்
"சால்னா'. என்ன தான், தண்ணீராய் ஓடினாலும், புரோட்டாவை "பீஸ், பீஸாக' பிய்த்துப் போட்டு, அதன் மீது "சட்டியோடு' சால்னாவை கவிழ்த்து ஊற வைத்து, அப்படியே
வாயில் "அமுக்கினால்'... அடேங்கப்பா!, "சூப்பர்' என "ஜொள்ள' வைக்கும்.
அசைவம் சாப்பிடாதவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்காகவே, புரோட்டாவை முக்கி எடுக்க, "குருமா'வையும் கூடவே கண்டுபிடித்திருக்கின்றனர்.
சுகாதாரத்தை சுருட்டி வைத்துவிட்டு, ரோட்டோர கடையில், பத்து ரூபாய் செலவில், வயிற்றை நிரப்பி விடலாம் என்பதால் இது, ஏழைகளின் அமிழ்தம். இது ஒரு நல்ல
பசி நிவாரணி. இந்தியாவில் இருந்து, பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு, பர்மா, மொரீசியஸ் நாடுகளிலும், புரோட்டா ஒரு உணவாக பரவி உள்ளது. இன்னொரு "கொசுறு'
தகவல், புரோட்டா போட்ட "குட்டி"கள் தான், "ரொட்டி' மற்றும் "நாண்' என்றும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
எத்தனை வகை? கீழே வரும் பெயர்களுக்கு பின்னால், "புரோட்டா'வை சேர்த்துக்கொள்ளவும். கொத்து, முட்டை, வீச்சு, சிலோன், கைமா, கிரீன் பீஸ், சில்லி, ஆலு, மட்டன்,
சிக்கன், கோபி, விருதுநகர், கேரளா, மஸ்ரூம்... இத்யாதி, இத்யாதி. எதனுடன் வேண்டுமானாலும் புரோட்டாவை கலக்கலாம் என்பதால், அவரவர் திறமைக்கேற்ப ஒரு
பெயரை வைக்கும் வசதி இதில் உள்ளது.

கருத்துகள்
தின்னு தின்னு
தின்னு தின்னு கண்டுபிடிச்சிங்க போல,

uma








