1. ஒரு பறவை வானில் பறக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். அதுபோல இறைவழிபாட்டிற்கு அன்பும், ஆச்சாரமும் வேண்டும். அன்பில்லாத ஒழுக்கமோ அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும்.
கண்ணால் காணமுடியாததால் கடவுள் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பிலேயுள்ள உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? உயிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் தெய்வமும் உறைந்திருக்கின்றன. ஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார். எவ்வுயிரும் இறைவன் சன்னிதியே. அதனால், எல்லா உயிர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மை கடவுளுக்குச் செய்யும் நன்மையாகும்.
கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்காகும். ஒவ்வொரு யுகத்திலும் இறைவனை அடையும் வழிகள் வேறுவேறாகும். கிருதயுகத்தில்ஞானத்தினாலும், திரேதாயுகத்தில் தானத்தினாலும், துவாபரயுகத்தில் யாகத்தினாலும், கலியுகத்தில் பக்தியினாலும் முக்தி பெறலாம். பக்தி செய்ய பணச்செலவு செய்ய வேண்டியதில்லை. இறைவனின் திருநாமத்தை அன்போடு அனுதினமும்
உச்சரித்தால் போதும்
2. கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ, அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும். அதனால் தான் “என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றார் அப்பர். இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை ” அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்கிறார் மாணிக்கவாசகர்.
* பல இழைகள் ஒன்றுபட்டுத் திரித்த வடக்கயிற்றைக் கொண்டு பெரிய தேரை இழுத்து விடலாம். ஆனால், தனி இழையான துரும்பினைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஒரே சிந்தனையுடன் பல அன்பர்கள் கோவிலில் கூட்டு வழிபாடு செய்யும் போது இறைவனின் திருவருளை உறுதியாகப் பெற முடியும். பல காலமாக கணக்கு வழக்கில்லாமல் பிறவிகளை எடுத்து வருகின்ற நாம் இறைவனை உள்ளத்தூய்மையுடன் உருகி வழிபட்டு நாளும் அர்ச்சித்து வந்தால் நம் பிறவிநோய் தீரும். நம் வீட்டில் அனைவரும் இயன்ற வரையில் நாள்வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும் இல்லங்களில் குடும்ப ஒற்றுமை சிறந்து விளங்கும். தெய்வஅருளும், லட்சுமி கடாட்சமும் நிறைந்து இருக்கும். நீராடி தூய ஆடை அணிந்து நல்ல சிந்தனையுடன் ஒழுக்கநெறியில் கோவில்களுக்குச் செல்ல வேண்டும். கோவிலில் இருக்கும் நேரத்தில் மனம் ஒருமுகப்பட்ட நிலையில் இறைசிந்தனையுடன் இருப்பது மிக அவசியம்
3. *சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தருமம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், அமைதி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்கள் மட்டுமே நமக்கு உகந்த உற வினர்கள் ஆவர்.
*விடாது கடைந்தால் பாலிலிருந்து வெண் ணெய் வெளிப்படும். அதுபோல, இடைய றாத தியானத்தாலும், வழிபாட்டாலும் இறைவன் நம் உள்ளத்தாமரையில் வெளிப்படுவான்.
*தெரியாத ஒருவனுக்கு ஒரு விஷயத்தை தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு அந்த விஷயத்தின் நுட்பங்களைக்கூறி மேலும் தெளிவுபடுத்தலாம். ஆனால், இது நல்லது இது கெட்டது என்று அறியாதவனைச் சீர்திருத்த ஆண்டவனாலும் முடியாது.
*சந்திரன் இரவுப் பொழுதைப் பிரகாசிக்கச் செய்கிறது. சூரி யன் பகல் பொழுதினைப் பிரகாசிக்கச் செய்கிறது. ஒருவன் செய்த தருமம் மூன்று உலகங்களிலும் பிரகாசிக்கச் செய்யும். நல்ல பிள்ளை, பிறந்த குடும்பத்தை பிரகாசிக்கச் செய்கிறான்.
*ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும்.
*பசுக்கள், வேதங்கள், பதிவிரதைகள், சத்தியசீலர்கள், பற்றற்ற ஞானிகள், தருமசீலர்கள் இவர்களாலேயே உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது
4. உன்னை யாராவது புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. அதேபோல், உன்னை இகழும் போது கவலையும் கொள்ளாதே.
புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மனஅமைதியுடன் வாழ முடியும். ஆண்டவனை வழிபடுவதைக் காட்டிலும், அடியாரை வழிபடுவது சிறந்தது. ஆண்டவனை வழிபட்டால் ஒரு மடங்கு பலன். அடியாரை வழிபடுவோருக்கு இருமடங்கு பலன். தாய், தந்தையரின் பழக்கம் தான் பிள்ளைகளிடத்தில் உண்டாகும். ஆகவே, நல்ல பழக்கவழக்கங்களைப் பிள்ளைகளிடத்தில் உண்டாக்க தாயும், தந்தையும் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.
நாம் செய்த செயல்களின் விளைவு நம்மை வந்து சேரும். நல்வினையும், தீவினையும் வயலில் விதைத்த விதைபோல, பலமடங்கு பெருகி நம்மையே வந்தடையும். இளகிய தங்கத்தில் ரத்தினக்கல் பதியும். அதுபோல,
இறைவனை மனமுருக வழிபட்டால் உருகிய நமது உள்ளத்தில் கடவுள் ஒன்றி விடுவார். எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாகவே வழிபடுங்கள். சாதாரணநீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்
கருத்துகள்
பகிர்தலுக்கு நன்றி
பகிர்தலுக்கு நன்றி
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...





