sugiri's படம்

மின்னும் நட்சத்திரங்களை பரவசத்துடன் ஜன்னல் வழியே பார்த்துகொண்டு, பட்டு வேட்டி சட்டையில் நின்ற செந்தில் தன் வாழ்விலும் ஏற்பட்ட வசந்தம் உண்மை தானா என்ற பிரமிப்பில் இருந்து இன்னும் மீள முடியாதவனாய் தன்னையே மெதுவாக கிள்ளி விட்டு கொண்டான். படுக்கையறை அலங்காரத்தில் தொங்கிய மல்லிகை பூவும் ஊதுபத்தியும் கலந்து அவன் மேல் பரப்பிய நறுமணம் ஒரு மயக்கத்தை உண்டாக்கியது. நான்கு வருடமாக பல இடர்களையும் தாண்டி வந்த காதல் அன்று காலை தான் திருமணத்தில் ஜெயித்திருந்தது. பக்கத்து வீட்டிலிருந்து ஹரிணியும் மதுவும்

விழியும் விழியும் இணையும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது ...

மெல்லிய குரலில் குழைந்தது செந்தில் காதில் நுழைந்து, முகத்தில் ஒரு ரகசிய சிரிப்பை தோற்றுவித்தது. ஆவலுடன் அறை கதவு பக்கம் பார்வையை திருப்பினான். தங்க பதுமையாய், சாம்பல் நிறத்தில் பச்சைகரை போட்ட பட்டுப்புடவையில், முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் உள்ளே நுழைந்த வள்ளி, அன்னநடை நடந்து வந்து பால் சொம்பு, டம்ளர் அடங்கிய ட்ரேயை செந்தில் கையில் கொடுத்தாள். திரும்பி சென்று அறை கதவை தாளிட்டு திரும்பியவள் அவன் முன்னே கீழே குனிந்தாள்.அவசரமாக ட்ரேயை டேபிளில் வைத்துவிட்டு அவள்புறம் குனிந்தான்.

“சே சே இதென்ன பட்டிக்காட்டு சம்ப்ரதாயம், காலிலே எல்லாம் விழறது? எழுந்திரு.”

"ஓ உங்களுக்கு இந்த நினைப்பெல்லாம் வேற இருக்கா? செருப்பு கடிச்ச இடத்திலே மெட்டி உறுத்திச்சு, அதை தான் சரி செஞ்சேன்“, குறும்பாக அவள் சிரித்தாள்.

அவன் சிறிது அசடு வழிந்தான். இருவரும் மலர் படுக்கையில் அமர்ந்தனர்.பலவருட பழக்கம் இருந்தும் இன்று ஏனோ இயல்பிற்கு புறம்பான தயக்கம், செந்திலை ஆட்கொண்டது. நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தன.

"என்ன செய்யலாம்?" இன்று வரை செந்தில் அறியாத ஒருபுது உணர்ச்சி இப்படி ஒரு அபத்த கேள்வியை கேட்க வைத்தது.
கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா?
இப்போது பக்கத்து வீட்டு டி.வியில் விக்ரம் த்ரிஷாவை காதலித்தார்.

ஏங்க? நாமளும் எங்கேயாவது ஓடி போலாமா?" செந்தில் திடுக்கிட்டு அவளை பார்த்தான்.

"ரொம்ப நாள் ஆசைங்க. லைப்ல ஒரு த்ரில் வேணும். யாருக்கும் தெரியாம வெளியே எங்கேயாவது போயிட்டு விடியறதுக்குள்ள திரும்பி வந்துடலாம். சரின்னு சொல்லுங்க, ப்ளீஸ் ப்ளீஸ்", குழந்தையின் குதுகலத்துடன் அவள் குரல் கெஞ்சியது.

"வாசல் கதவை திறந்தவுடன் எல்லாருக்கும் தெரிஞ்சு போய்டும்."

"எதுக்கு கதவு வழியா போகணும்? ம்ம்? பால்கனி எதுக்கு இருக்கு?"

‘ஒரு ஸ்ட்ரிக்ட் போலீஸ்காரன் பெண்டாட்டிதானா இவ?’ என்ற நம்ப முடியாத பார்வையை அவளிடம் செலுத்தி, "இப்படியேவா?" என்றான். அவள் அலமாரியை திறந்து ஒரு ஏர் பேகை எடுத்தாள். அதில் அவர்களுக்கு சாதாரண உடைகள் இருந்தன. செந்தில் மேலும் தடை சொல்லும் முன் குளியல் அறையில் புகுந்தாள்.அவன் வாய் பிளந்து பார்த்து கொண்டிருக்கையிலேயே ஒரு சல்வார் உடையில் வெளியே வந்து, நகைகளை கழற்றி அவன் அலமாரியில் வைத்து பூட்டினாள்.

அவனிடம் திரும்பி "உங்களுக்கு காபி வேணுமா?" என்று வேறு கேட்டாள்.

"வேண்டாம்."

அவன் நம்ப முடியாத தலை ஆட்டலுடன் உடை மாற்ற சென்றான். திரும்பி வந்த பொது அவள் கையில் ரெண்டு கப் காபி இருந்தது.

"காபி எங்கிருந்து வந்தது?"

இன்ஸ்டன்ட் காபி சாஷே எடுத்து, விளம்பர படத்தில் வரும் பெண்ணை போல கையை ஆட்டினாள். தன் புது கணவன் கையில் ஒரு காபி கப்பை திணித்தாள்.

"எனக்கு வயித்தை வலிக்க கூடாது பாருங்க, தவிர நீங்க தூங்கிட்டா நாம எப்படி வீட்டுக்கு திரும்பி வரது?"

"அடிப்பாவி, இன்னிக்கு ஒரு முடிவோட தான் வந்திருக்கியா?" ஒரு அப்பாவி புன்னகையை அவன் புறம் வீசினாள்.

வள்ளி தோளில் ஒரு ஜோல்னா பை ஏறியது. கதவு தாளிட்டு இருகிறதா என்று மறுபடி உறுதி செய்துகொண்டு, விளக்கை அணைத்து விட்டு பால்கனி கதவை திறந்தாள். கிரில்லை தாண்டி, சன்ஷேட், ஜன்னல் கம்பிகள், தண்ணீர் குழாய்கள் மூலம் பழக்கப்பட்ட லாவகத்துடன் சரசரவென்று முதல் மாடியிலிருந்து கீழே இறங்கினாள். செந்தில் இறங்க சிறிது நேரம் பிடித்தது.

"வாசலில் செக்யூரிட்டி இருப்பான். அதனால காரோ பைக்கோ எடுக்க வேண்டாங்க."

வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டம் முக்கால் இருட்டாக இருந்தது. காம்பௌண்டு சுவரின் எல்லையில் இருந்த சிறு கல்லின் மீது கால் வைத்து சுவர் ஏறி வள்ளி பின்பக்க வீட்டிற்குள் மெதுவாக குதித்தாள். சுவர் ஓரமாகவே நடந்து சென்று ஒரு சிறு கதவை திறந்த போது, ஒரு ஒத்தை அடி பாதை தெரிந்தது. வள்ளியை பின்பற்றிய செந்தில், அவளை நிறுத்தி மெதுவாக கேட்டான்,
"வள்ளி, ப்ளீஸ் ஒரு உண்மையை சொல்லேன். என்னோட பேனா, வாட்ச், டைரி எல்லாம் இந்த வழியா தான் காணாம போச்சா?"

முகத்தில் வெட்கச் சிவப்பு அவள் மாட்டிகொண்டதை அறிவித்து அழகை கூட்டியது.

"அஞ்சு ஆறு தடவை வந்திருப்பேன்."

‘போலீஸ்காரன் வீட்டு பாதுகாப்பே இந்த லட்சணத்தில் இருந்திருக்கு’ செந்திலுக்கு சிறிது எரிச்சலாக இருந்தது.

"ராத்திரி நேரத்துல வந்திருக்கமாட்டே, ஆனா பகலில் உன்னை ஒருத்தர் கூடவா பார்க்கலை?"

"முன்னெல்லாம் என்னோட அப்பா குடிச்சிட்டு வந்து வீட்டுல ரகளை செய்வாரு. உங்ககூட இருந்தா மனசு அமைதியா இருக்கும்னு தேடி தேடி வருவேன், ஆனா நீங்க எப்படி வெரட்டி வெரட்டி துரத்துவீங்க! அப்பெல்லாம் என்னோட க்ளோஸ் பிரெண்ட் ரதி தான் எனக்கு ஆறுதல். உங்க பின்வீட்டிலே கீதா ஆன்ட்டி இருக்காங்களே, அவங்க அண்ணன் மகள் தான் ரதி. அத்தை வீட்டுல தான் அவ மோஸ்ட்லி இருப்பா. அவங்க வீட்டு மொட்டை மாடியிலே உட்கார்ந்து உங்க வீட்டை பார்த்துட்டு இருப்பேன். உங்க அம்மா அப்பா வீட்ட பூட்டிட்டு கோயிலுக்கு போனப்புறம், ரதி செக்யூரிட்டி கிட்டே பேச்சு குடுத்து திசை திருப்புவா, அப்போ நான் உங்க ரூம்ல போய் உட்கார்ந்திட்டு இருப்பேன். மனசு அமைதி ஆகிடும், கொஞ்ச நேரம் கழிச்சு இறங்கி போய்டுவேன். கொஞ்ச நாளிலே நீங்க வேற ஊருக்கு போய்டீங்க. அப்புறம் எங்க அப்பாவோட இறப்பு, ஹாஸ்டல் வாசம்….. வெளியூர் வேலை.... இன்னும் என்ன என்னமோ நடந்து போச்சு.”

பழைய நினைவில் அவள் பெருமூச்செறிந்தாள். செந்தில் அவளை மெதுவாக அணைத்துகொண்டான்.

"சாரிம்மா, உன்னை பத்தி நான் அப்போ எல்லாம் சரியா புரிஞ்சுக்கவே இல்லை, கண்ட கண்ட சினிமா பார்த்துட்டு வயசு கோளாறிலே மனச கெடுத்துட்டு அலையறேன்னு தான் உன்னை அவாய்டு பண்ணேன். அதே காரணத்துக்கு தான் நான் டிரான்ஸ்பர் வாங்கிட்டு போனதும். வெளியூர் போனப்புறம் தான் என்னோட மனசும் எனக்கு புரிஞ்சிது.”

புரிந்து கொண்டவளாய் அவன் மார்பில் கன்னத்தை இழைத்தாள்.

"ரூம்க்கு திரும்ப போய்டலாமா?" அவள் தலையில் புதைந்த உதடுகள் கிசுகிசுத்தன.

"ஆசை தோசை அப்பளம் வடை."

"இன்னும் சின்ன குழந்தை மாதிரி அதே சொல்லிட்டு இருக்கியே! புதுசா எதாவது சொல்லேன்."

"ஆசை பூசை கட்லெட் சமோசா"

"சரியான சாப்பாட்டு ராமிடீ நீ"

துப்பட்டாவை தலை சுற்றி அணிந்து, முகத்தை ஓரளவு மறைத்து கொண்டாள். ஜோல்னா பையிலிருந்து செந்திலுக்கு ஒரு மங்கி கேப்பை தந்தாள்.

"வாங்க போகலாம்."

ஒத்தை அடி பாதை அடுத்த தெருவில் சென்று சேர்ந்தது. ரோட்டில் கால் வைத்த செந்தில் கை கடியாரத்தை திருப்பிப் பார்த்தான், நேரம் இரவு 9:30. தெரு இருட்டில் அடங்கி இருந்தது. கணவனும் மனைவியும் நடக்க தொடங்கினார்கள். தெரு முனை கடையில் டீயை உறிஞ்சு கொண்டு இருந்த செக்யூரிட்டி இவர்களை கவனிக்கவே இல்லை.

"நாம எங்கே போறோம்னு தெரிஞ்சுக்கலாமா?"

"ஏங்க, எதாவது சினிமா போகலாமா?"
திடீர்னு ஒன்று தோன்றியவளாய் அவனை பார்த்து கேட்டாள், "என்னங்க, பணம் எடுத்துட்டு வந்தீங்களா?"

அவன் முகத்தில் ஒரு கேலி சிரிப்பு மலர்ந்தது, "ஏன், அந்த ஜோல்னா பையிலே காசு கொண்டு வரலையா?"அசடு வழிய அவனை பார்த்தாள்.

"இருக்கும்மா, பணமும் இருக்கு, கிரெடிட், டெபிட் கார்ட்ஸ் எல்லாமும் இருக்கு, போதுமா தாயீ? சரி, எந்த தியேட்டருக்கு போகலாம்?"

"ஈ சீ ஆர் ரோட்ல மாயாஜால் இருக்கே, அங்க 11 மணி ஷோ இருக்கு, இங்கேர்ந்து ஆட்டோவிலே வேளச்சேரி, அங்கிருந்து MRTS ட்ரெயின்லே திருவான்மியூர், அப்புறம் பஸ்ல மாயாஜால். ஒகேவா?" ஆவலுடன் அவன் முகத்தை பார்த்தாள்.

'திருட்டு கள்ளி, பெரிய திட்டம் தான் போட்டு இருக்காள்' அவனுக்கு சிரிப்பாய் இருந்தது.

"சரி, உங்க உத்தரவு மேடம்"

சந்தோஷத்துடன் கணவன் கையுடன் தன் கையை இறுக்கமாக கோர்த்துக்கொண்டாள். அவர்களுக்கு 30 அடி முன்னே மெதுவாக கிளம்பிய ஆட்டோவை நோக்கி இருவரும் ஓட தொடங்கினார்கள். கை தட்டல் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த டிரைவர் வண்டி வராது என்று கையாலேயே ஜாடை காட்டிவிட்டு போய்விட்டான். வேறு ஆட்டோவும் கிடைக்காமல் இருவர் நடையும் மெயின் ரோடு வரை நீண்டு கொண்டே போனது. வேளச்சேரி செல்ல ஒரு ஷேர் ஆட்டோ தயாராக இருந்தது. செந்தில் டிரைவருக்கு பக்கத்தில் அமர, வள்ளி பின்னே இடுக்கி கொண்டு அமர்ந்தாள். ஆட்டோ பத்து பேரை சுமந்து கொண்டு தான் நகர்ந்தது. ஏனோ அப்போது செந்திலுக்கு தன் உத்யோகத்தை காட்டி டிரைவரை கண்டிக்க விருப்பமில்லை. அவன் கேட்ட இருபது ரூபாயை தந்துவிட்டு வேளச்சேரி ரயில்வே ஸ்டேஷன் உள்ளே வந்தபோது 10 :12 மணி ரயில் நகர தொடங்கியது. அவசரமாக ஓடிய செந்தில் கடைசி பெட்டியில் தாவி ஏறி, பின்னால் வந்த வள்ளியை கை பிடித்து உள்ளே இழுத்தான். காலியான இருக்கையில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அமர்ந்த இருவருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. வள்ளி தன் பையிலிருந்து கிட்காட் சாக்லேட் எடுத்து அவனிடம் ஒன்று கொடுத்து, தானும் ஒன்று எடுத்து கடிக்க துவங்கினாள். அந்த ஜோல்னா பைக்குள் இன்னும் என்ன என்ன ஆச்சரியங்களை வைத்திருப்பாள் என்று அவனுக்கு யோசனை ஓடியது.
ரயில் வேகம் எடுத்து ஓட துவங்கியது. இன்னும் 8 நிமிஷத்தில் திருவான்மியூர் போய்டலாம், பிரச்சனை இருக்காது என்று எண்ணம் ஓட, செந்தில் திடீரென்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.

"அய்யய்யோ, ட்ரெயின் டிக்கெட்டே வாங்கலையே!"

வள்ளிக்கு புரை ஏறியது. சமாளித்து கொண்டு, "ராத்திரி நேரம் தானே, TT வந்தா பார்த்துக்கலாம் விடுங்க."

வண்டியிலிருந்து இறங்கி, ரோடிற்கு வரும் வரை செந்திலுக்கு உதைப்பாகவே இருந்தது. பைன் கட்டறது பெருசில்ல, ஆனா பேரு கெட்டுடுமே. TT யிடம் மாட்டாமல் வெளியே வந்த பிறகு தான் செந்திலுக்கு மூச்சு ஒழுங்காக வந்தது.

"முருகா என் மானத்தை காப்பாத்திட்டே, டிக்கெட் பணத்தை உண்டியல்ல போடறேன்", மனமுருக வேண்டிகொண்டான்.

மீண்டும் 10 நிமிட ஓட்டத்திற்கு பின் பஸ் ஸ்டாப்பிற்கு போய் சேர்ந்தனர். 5 நிமிடத்தில் கிளம்பிய கோவளம் பஸ்சில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்த போது பெரிய சாதனை புரிந்த பெருமிதம் ஏற்பட்டது. காற்று சில்லென்று வீசியது. வள்ளி துப்பட்டாவை சரி செய்து கொண்டாள். சுற்றுபுறத்தை மறந்து இருவரும் சுவாரஸ்யமாக பேசிகொண்டிருந்தார்கள். திடீரென்று கேட்ட சத்தத்தில் வள்ளியின் உடம்பில் ஒரு நடுக்கம் ஓடியது. தாறுமாறாக ஓடிய பஸ்ஸை டிரைவர் கட்டுபாட்டிற்கு கொண்டு வந்து ஓரமாக நிறுத்தினார். டயர் வெடித்து இருந்தது. ஸ்டெப்னி இல்லாததால், கண்டக்டர் டிக்கெட் பின்புறம் எழுதி கொடுத்தார். எல்லோரும் கீழே இறங்கி அடுத்த பஸ்சுக்காக காத்துகொண்டு இருந்தார்கள். நேரம் போய்கொண்டே இருந்தது, ஆனால் ஒரு பஸ் கூட கண்ணில் படவில்லை. ‘ஏன்டா இந்த தியேட்டரை தேர்வு செய்தோம்’ என்ற கவலை வள்ளிக்கு வந்தது. செந்தில் கண்டக்டரிடம் ஏதோ பேசிவிட்டு வந்தான்.

"வள்ளி, ஒரு பத்து நிமிஷம் நடந்தா மாயாஜால் வந்திடுமாம். உன்னால நடக்கமுடியுமா?"

கடவுளே! மறுபடியுமா என்று தோன்றிய களைப்பை மறைத்து, வலுகட்டாயமாக வரவழைத்த தைர்யத்துடன் "முடியும், போலாங்க", என்றாள். ஒரு வழியாக மாயாஜால் வந்த போது, மணி 11:35 ஆகி இருந்தது.

"படம் தொடங்கி அரை மணி நேரம் ஆகிடுச்சுங்க சார், அதுகூட பரவாயில்லைனாலும் ஹவுஸ்புல் சார், சாரி", டிக்கெட் கொடுப்பவர் கையை விரித்தார்.

வள்ளியின் முகம் அழ தயாரானது. 'இதுக்கு மேல எனக்கு வேலை குடுக்காதே' என்று அவள் கால்கள் கெஞ்சின. செந்தில் அவள் கையை பிடித்து வெளியே அழைத்து வந்தான். இருவரும் ஒரு பெஞ்சில் அமர்ந்தனர். வள்ளி கால்களை நீவி விட்டு கொண்டே, "சே, இப்படி ஆயிடுச்சே", தனக்கு தானே நொந்து போனாள். கொஞ்ச நேரம் அவர்களிடையே பேச்சே காணாமல் போனது.

திடீரென்று செந்தில் "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா", என்று முணுமுணுத்தபோது அவளுக்கு அழுகையும் சிரிப்பும் மாறி மாறி வந்தது.

செந்தில் அங்கே இருந்த ரிசார்ட்டில் ரூம் கிடைக்குமா என்று விசாரித்தான். அங்கேயும் இடம் இல்லை.இனி மறுபடியும் சிட்டிக்கு திரும்பி போவது தவிர வேறு வழி இல்லாமல், மெயின் ரோட்டிற்கு வந்தார்கள். மீண்டும் ஒரு 15 நிமிஷ காத்தலின் பிறகு ஒரு ஆட்டோ அவர்கள் பக்கம் வந்து நின்றது. பின்னால் உட்கார்ந்த பயணி, டிரைவர் பக்கத்தில் அமர, இவர்கள் இருவரும் பின்னால் ஏறி உட்கார்ந்தார்கள். ரிவ்யூ கண்ணாடி மூலம் அவர்களை விஷமமாக பார்த்த டிரைவரை அவர்கள் கவனிக்கவே இல்லை.

ஆட்டோ டோல்-கேட்டை கடந்து அரை கிலோமீட்டர் சென்று இருக்கும். டிரைவர் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினான். பெட்ரோல் டாங்கை பார்ப்பது போல வண்டிக்கு பின்னால் சென்றான். சிறிது நேரத்தில் முன்னால் அமர்ந்த பயணியும் பின்னால் சென்றான். நேரமாக ஆக செந்திலுக்கு ஏதோ சந்தேகம் தோன்றியது. ஆனால் அவன் உஷாராகும் முன் டிரைவர் செந்தில் பக்கமும், அடுத்தவன் வள்ளி பக்கம் கத்தியுடனும் நின்றார்கள்.

"மருவாதியா கீழே எறங்கி கைல இருக்கற பொருளெல்லாம் குடுத்துடு", டிரைவர் வில்லனாக மாறினான்.

செந்தில் தங்களை கொள்ளையடிக்க வந்தவர்களை அளவிட்டு கொண்டு நிதானமாக இறங்கினான். அவனை பின்பற்றி கலவரத்துடன் அவசரமாக இறங்கிய வள்ளி கழுத்தில் ஏதோ உறுத்தியது.

"பையை திறந்து கொட்டு", டிரைவர் உறுமினான்.

பையை திறக்க வள்ளி தடுமாறிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி செந்தில் டிரைவர் மேல் பாய்ந்து அவனை அடித்து கீழே தள்ளினான். அதற்குள் மற்றவன் கத்தியுடன் செந்திலை தாக்க வந்தான். இருவரும் தரையில் விழுந்து புரண்டார்கள். சிறிய போராட்ட முடிவில் செந்திலின் ஒரு கையில் கத்தியும், மறுகையில் காயமும் வந்து சேர்ந்தன. இதற்குள் டிரைவர் எழ முயற்சி செய்ய, வள்ளி ஜோல்னா பையால் அவன் மண்டையில் மாறி மாறி அடித்தாள். அவன் ஐயோ அம்மா என்று அலறிக்கொண்டே ஆட்டோவை கிளப்பினான். அடுத்தவனும் தொத்திக்கொள்ள, ஆட்டோ இவர்கள் இருவரையும் ‘அம்போ’ என்று நடு ரோட்டில் விட்டுவிட்டு போய்விட்டது. வள்ளி சிறிது பயத்துடன் தன் கணவனை பார்க்க, அவன் முகமோ கல்லாக இருந்தது.

"உங்க பர்ஸ் பத்திரமா இருக்கா பாருங்க", குரல் ரொம்ப மெலிந்து நடுக்கத்துடன் ஒலித்தது.

சட்டை, பான்ட் பாக்கெட்களை சரிபார்த்து செந்தில், "உம் உம்" என்றான். அந்த குரலில் திடுக்கிட்ட வள்ளி தயக்கத்துடன் நிமிர்ந்த போது தான், அவன் கையில் இருந்த ரத்த கறையை பார்த்தாள். குற்ற உணர்ச்சி மேலோங்க, கையில் கட்டு போட துப்பட்டாவை கிழிக்க போனாள்.

"சின்ன ஸ்க்ராட்ச் தான், துணியை கிழிக்காதே", அவன் குரலில் கடுமை அதிகமா இருந்தது.

செய்வதறியாது அவள் விழித்து கொண்டு நிற்கையில், அவன் குரலில் மேலும் சுதி ஏறியது, "இங்கேயே நின்னு என்ன செய்ய உத்தேசம்? கொஞ்ச தூரம் நடந்தாலாவது அடுத்த ஸ்டாப் போய் சேரலாம்."

வள்ளி பையை மார்புடன் அணைத்துக்கொண்டு பேசாமல் அவனுடன் நடக்க துவங்கினாள். கழுத்தில் எரிச்சல் தோன்ற, அனிச்சையாய் கை கழுத்துக்கு செல்ல, வள்ளி திகைப்புடன் கூவினாள் , "ஐயோ என்னோட டால்பின் தங்க செயினை காணோமே! ஆட்டோவிலிருந்து எறங்கும்போது என்னமோ உறுத்திச்சு. என் பக்கத்திலே நின்ன படுபாவி தான் கட் பண்ணிட்டு போய் இருக்கணும். கடவுளே! ஏன் இன்னிக்கு எல்லாம் தப்பு தப்பா நடக்குது?" அவள் அழ ஆரம்பித்தாள்.

செந்தில் பொறுமையை இழந்தான். அவள் கையை அழுத்தமாக பற்றி, "முதல்ல அழுகையை நிறுத்தபோறியா இல்லையா?"

அவள் வாயை பொத்தி கேவல்களை நிறுத்த போராடினாள். செந்திலுக்கு தன் மேலேயே கோபம் அதிகமாக வந்தது. ‘ச்சே, எப்படிப்பட்ட முட்டாளாக இருந்திருக்கிறான்? இந்த நடு இரவில் இப்படிப்பட்ட ஆபத்துகளை எதிர்பார்த்திருக்க வேண்டாமா? தன் போலீஸ் மூளை எங்கே தூங்கப்போனது’ என்று தன்னையே குற்றவாளி கூண்டில் நிறுத்திக்கொண்டு துடித்தான். ‘ஒழுங்கா சொந்த வண்டியை எடுத்திட்டு வந்திருந்தா எந்த பிரச்சனையும் ஏற்பட்டு இருக்காது. ஒஹ்! இதென்ன நேரம் சரி இல்லைன்னா யானை மேல உட்கார்ந்தாலும் நாய் கடிக்காம விடாது போல இருக்கே!’

வள்ளி சிறிது சமாதானம் ஆனவுடன் இருவர் நடை பயணம் மீண்டும் துவங்கியது.
கொஞ்ச நேர அமைதிக்கு பின்னால் வள்ளி மீண்டும் தன் பொலம்பலை ஆரம்பித்தாள்,
"எனக்கு எப்பவும் இப்படி தான்… பேட் லக். நான் எதாவது செய்ய போய் அது எப்படியோ முடியுது. நேரம் நல்லா இல்லைன்னா யானை மேல உட்கார்ந்தா கூட நாய் கடி பட்டே ஆகணும்னு பெரியவங்க சொல்லுவாங்களே, அப்படியே ஆயிடுச்சே."

செந்திலின் கோபம் அப்படியே காற்றிலே கரைந்துபோனது. 'எங்க ரெண்டு பேருக்கும் இத்தனை மன ஒத்துமையா? நான் நெனச்சதையே இவ சொல்றா', அவன் மனம் ஆச்சரியப்பட்டது.

வள்ளி ஏக்கத்துடன் தொடர்ந்தாள், "ஏங்க? நீங்க என்ன என்ன கற்பனை செஞ்சு வெச்சிருந்தீங்களோ, எல்லாத்தையும் நான் கெடுத்துட்டேனா?"

"பரவாயில்லை விடு." அவன் குரல் அவளை உசுப்பியது.

"விடமாட்டேன், விவரமா பேசுங்க."

"வண்டியை எடுத்துட்டு வந்திருக்கணும்னு தோணிச்சு. போகட்டும் விடு, நம்மளால அடுத்தவங்க சந்தோஷமா இருந்தா, அதுவே போதும்னு திருப்திபட்டுக்கவேண்டியது தான்", விட்டேற்றியான பதில் அவளை சீண்டியது.

"என்னால உங்களுக்கு சந்தோஷம் இல்லை, முதல் நாளே தெளிவு படுத்திட்டீங்க. ரொம்ப தேங்க்ஸ்."

"நான் அப்படி எங்கே சொன்னேன்?"

"நீங்க சொன்ன பதிலுக்கு இதானே அர்த்தம்", குரலில் கோபம் தெரிந்தது.

"நீ கேட்டதுக்கு சொன்னேன், அவ்வளவு தான். இதுக்கு ஏன் இப்படி அலட்டிக்கிறே?”

"நான் அப்படி தான் கேட்பேங்க, ஆனா உங்ககிட்டே என்ன பதில் எதிர்பார்க்கறேன் தெரியுமா? நம்ம சொந்த வண்டியிலே வந்திருந்தாலும் இதெல்லாம் நடந்து இருக்கலாம், நீ கவலைபடாதேன்னு ஆறுதல் சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன்."

செந்திலுக்கு நொந்து போனது. 'பிரமாத மன பொருத்தம் தான். இவளோட சேர்ந்து கூத்தடிக்கறதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். ஒழுங்கா வீட்டுல இருந்திருந்தா கொசு கடியோட போய் இருக்கும்.'

அப்படியே நடந்து உத்தண்டியை போய் சேர்ந்தார்கள். ரோட்டோர டீ கடையில் ரெண்டு மூன்று ஆட்கள் தெரிந்தார்கள். வள்ளியிடம் ‘எதுவும் பேசாதே’ என்று செந்தில் ஜாடை செய்தான். வயதான டீ கடைக்காரர் ஒரு சுவாரஸ்யமான பார்வையை இவர்கள் மீது ஓட்டினார்.

"என்ன தம்பி சாப்பிடறீங்க?"

"2 ஸ்ட்ராங் டீ குடுங்க."

"இந்த நேரத்துல நடந்து வரீங்க?" டீயை ஆற்றியபடியே பெரியவர் கேட்டார்.

"எங்க வண்டி வழியிலே ரிப்பேர் ஆயிடுச்சு, ஆதம்பாக்கம் போக இங்கேர்ந்து வேற வண்டி எதாவது உண்டா?"

"கடைசி பஸ் போய்டுச்சு, ஆட்டோகாரன் எவனும் இப்ப வரமாட்டான். கால்-டாக்ஸி கூப்பிடலாம், ஆனா காசு அதிகமா செலவாகும், அவங்களும் வர ஒரு மணி நேரமாவது ஆகும். நான் ஒரு வழி சொல்லட்டா? இதோ இந்த சர்தார் இருக்காரு பாருங்க, இவரை எனக்கு 30 வருஷமா தெரியும், நம்பகமான மனுஷர், பட்டினத்துல எறக்கி விட சொல்றேன்", பெரியவர் நீளமாக பேசினார்.

சர்தார் சிரித்த முகத்துடன் இவர்களை வண்டியில் ஏற்றி கொண்டார். டிரைவருக்கு அருகில் செந்திலும், கதவு ஓரம் வள்ளியும் அமர அந்த லாரி கிளம்பியது. சர்தாருக்கு அவர் பெண் ஞாபகம் வந்ததோ என்னவோ, 'பேட்டி’, ‘பேட்டி' என்று வள்ளியை வாஞ்சையுடன் அழைத்தார். முதல் உதவி பெட்டியை எடுத்து அவள் கையில் கொடுத்தார். வள்ளி செந்திலின் காயத்துக்கு மென்மையாக மருந்து போட்டாள். தன்னால் தான் என்ற குற்ற உணர்ச்சி மேலோங்க, சண்டை போட்டதற்கு மிகவும் வருந்தினாள். “ச்சே, நான் சொன்னேன்ற ஒரே காரணத்துக்காக என் பின்னால லொங்கு லொங்கு என்று வந்த மனுஷனை, அதுவும் காயம் பட்டு இருக்கற இந்த நிலைமைல ரொம்ப நோகடிச்சிட்டேன், எனக்கு கொஞ்சம் கூட இரக்கம் இல்ல” என்று தன்னையே திட்டி கொண்டு, இனி வாயை திறக்கக்கூடாது என்று முடிவு செய்து கொண்டாள். கையை பிசைந்து கொண்டு, வாய் மூடி மௌனியாக இருந்த வள்ளியை பார்க்க செந்திலுக்கு பாவமாக இருந்தது. ஜன்னலை பிடிக்க நீட்டிய அவன் கை, சிறிது நேரத்தில் அவள் இடது தோளிலே ஆறுதலாய் இறங்கியது. தன் இறுக்கம் தளர, கணவன் தோளில் வசதியாக சாய்ந்து கொண்டாள் வள்ளி. இந்த லாரி பயணம் தான் தடையற்ற பயணமாக அவர்களுக்கு அமைந்தது. சர்தார் அவர்களை லைட் ஹவுஸ் பக்கத்தில் இறக்கிவிட்டார். செந்தில் பணம் கொடுத்த போது கண்டிப்பாக வாங்க மறுத்துவிட்டார்.

"நஹி பேட்டா, இந்த பொண்ணை நல்லா பார்த்துக்கோ."

‘இனி என்ன செய்யணுமோ, நீங்களே சொல்லுங்க’ என்பது போல வள்ளி செந்திலை நிமிர்ந்து பார்த்தாள்.

"இத்தனை தூரம் வந்தாச்சு, கொஞ்ச நேரம் பீச்ல உட்கார்ந்துட்டு அப்புறம் வீட்டுக்கு போலாம் வா."

யாரும் இல்லாத பீச் மணலில் நடக்கும் சுகமே தனி என்று எண்ணியபடியே இருவரும் பேசாமல் கிழக்கு திசையில் தோள்கள் உரச நடந்தார்கள். மணலில் உட்கார்ந்தார்கள்.

"உன் பையிலே இன்னும் என்ன என்ன இருக்கு?"

செந்தில் பையை திறந்து பார்த்தான். பெரிய கிளிமூக்கு மாங்காய், ஒரு பிளாஸ்டிக் டப்பா, சின்ன கத்தி, ஸ்பூன் இன்னும் என்ன என்னமோ தெரிந்தன.

"அடி என் செல்லமே, இந்த ஒரு விஷயத்துக்கே இன்னிக்கு நடந்த எதையும் நான் மனசுல வெச்சுக்க போறதில்ல."

வள்ளி சிறு புன்னகையுடன் அந்த மாங்காவை சிறு கத்தியால் வெட்டி, அதன் மேல் டப்பாவில் கொண்டு வந்த மிளகா பொடி, உப்பு எடுத்து தூவினாள். இரவு 2 மணிக்கு, செல்ல அலைகள் கால்களை நனைக்க, மினு மினுக்கும் நட்சத்திரங்களின் கீழே, புது மண தம்பதிகள் மாங்கையை ரசித்து தின்றார்கள். வள்ளி சாமான்களை தன் பையிலே திரும்ப வைத்து ஜிப்பை போட்டாள். கைகளை தலையணையாய் வைத்து மல்லாந்து படுத்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துகொண்டு இருந்த செந்தில் திடீரென்று அடக்க முடியாமல் சிரித்தான்.

திகைப்புடன் பார்த்த வள்ளியிடம்,
"அந்த திருடன் தலைல இந்த கல்லு மாங்காவை வெச்சு பூந்து விளையாடிட்டே, அதை தான் நெனச்சிட்டு இருந்தேன்."

வள்ளியும் வாய் விட்டு கல கலவென்று சிரித்தாள். அவர்கள் தேன் நிலவு பயணம், மரீனா கடற்கரையிலே நிஜ நிலவின் கீழே, கால்களை தொட்டு தொட்டு முத்தமிட்டு சென்ற அலைகளின் அருகில் இனிமையாக முடிந்திருக்கலாம். ஆனால் அவர்கள் விதியில் இன்னும் நாய் கடிகள் பாக்கி இருந்தன போலும்.

"இன்ன, பீச்சுக்கு ப்ரீயா கேசை தள்ளிகினு வந்துட்டியா பேமானி கய்தே?" பின்னாலிருந்து வந்த ஏளன குரல் அவர்களை துள்ளி எழுந்திருக்க வைத்தது.

கையில் லத்தியை சுழற்றியவாறு ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் இவர்களை அருவருப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தான். வள்ளியின் கழுத்தில் தொங்கிய புத்தம் புது மஞ்சள் கயிறை நோட்டம் விட்ட அந்த போலீஸ்காரன் குரலில் வெறுப்பு கூடியது, "ரெண்டு ரூபா மஞ்சா கயித்தை கட்டிக்கின்னு வந்து, பீச்சை நாஸ்தி செய்திடுதுங்க, த்தூ." கனவில் கூட நினைக்க முடியாத குற்றச்சாட்டை கேட்ட செந்திலுக்கு ஒருகணம் வாய் அடைத்து போய்விட்டது. உச்சக்கட்ட அவமானத்தில் வள்ளியின் உடல் பதறி நடுங்கியது.

"எந்த ஸ்டேஷன் கான்ஸ்டபிள் நீங்க? பப்ளிக்கிட்டே கொஞ்சம் மரியாதையா பேச மாட்டீங்களா?" செந்தில் கோபத்தை அடக்க ரொம்ப பாடுபட்டான்.

"இத பார்றா, துரை கணக்கா நின்னுகினு பெரிய கமிஷனர் கணக்கா சவுண்ட் வுடறாரு சாரு, பயமா இருக்குடா", கான்ஸ்டபிள் குரலில் நக்கல் அதிகமாகியது.

"நீங்க தெரிஞ்சு சொன்னீங்களோ, தெரியாம சொன்னீங்களோ, இவர் டெபுட்டி கமிஷனர் தான்", வள்ளி படபடத்தாள்.

இதை கேட்ட கான்ஸ்டபிள் ‘இதான் இந்த வருஷத்து பெரிய ஜோக்’ என்று சிரிக்க ஆரம்பித்தான்.

‘யானை என்ன, ஐபில் டவர் மேல உட்கார்ந்தா கூட நாய் கடிக்காம விடாது போல இருக்கே!’ செந்திலுக்கு பிரமிப்பாக இருந்தது. மெயின் ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த ஜீப்பை நோக்கி நடக்குமாறு கான்ஸ்டபிள் லத்தியால் ஜாடை செய்தான். வள்ளி கலவரத்துடன் செந்திலை பார்க்க, அவனோ ‘நட’ என்பது போல தலை ஆட்டினான். மௌனமாக ஜீப்பை அடைந்த அந்த ஜோடியின் கைகளில் விலங்கை மாட்டி உள்ளே உட்கார வைத்துவிட்டு இன்ஸ்பெக்டரை தேடி கான்ஸ்டபிள் சென்றான். ‘தலைக்கு மேலே வெள்ளம் போயாச்சு, இனி ஜான் என்ன, முழம் என்ன?’ செந்திலுக்கு சிரிப்பு பெருகியது. அவளுக்கோ மேலும் மேலும் கண்ணீர் பொங்கியது. ஒரு பத்து நிமிட நரக அவஸ்தைக்கு பிறகு அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ஜகன் இவர்களை பார்த்து பதறிவிட்டார். அவசர அவசரமாக விலங்குகளை கழற்றி விட்டு சல்யூட் அடித்தார்.

"தேங்க்ஸ் ஜகன்."

விஷயம் புரிந்த கான்ஸ்டபிள், இருவர் காலிலும் மாறி மாறி விழுந்தான், "நான் புள்ள குட்டிக்காரன் சார், என்ன ஒண்ணும் செஞ்சிராதீங்க சார், அம்மா மன்னிச்சிடுங்கம்மா.. சார் .... அம்மா... சார்..."

பயணத்தின் அடுத்த கட்டமாக ஜீப் இவர்களை சுமந்துகொண்டு வீட்டு தெரு முனை நோக்கி கிளம்பியது. போகும் வழியில் ஒரு 24 மணி நேர மருந்து கடையில் செந்தில் ஏதோ வாங்கி விட்டு மறுபடி ஜீப்பில் ஏறிக்கொண்டான்.

"தேங்க்ஸ் ஒன்ஸ் அகைன், ஜகன்.அப்புறம் பார்க்கலாம்"

ஜகன் செந்திலுக்கு மறுபடி சல்யூட் அடித்துவிட்டு ஜீப்பை கிளப்பினார். தெருவில் கால் வைத்து நடக்க தொடங்கியவுடன், அடுத்த நாய்கடி, நிஜ தெரு நாய்கள் மூலமாக இவர்களுக்கு வந்து சேர்ந்தது. அவற்றுக்கு தப்பி ஒத்தையடி பாதை சின்ன கதவை சாத்தியபிறகு தான் இருவருக்கும் மூச்சு வந்தது. இம்முறை சுவரை தாண்டி குதித்து, தங்கள் வீட்டு பால்கனிக்கு ஏறி செல்ல பல பல நிமிடங்கள் பிடித்தன. செந்தில் ரூம் கதவை திறந்து, படி இறங்கி கீழ் தளத்தில் இருந்த அவன் பெற்றோர் அறைக்குள் சென்றான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவர்களை பார்த்துவிட்டு, நிம்மதியுடன் வெளியே வந்தான். ஹால் ஜன்னல் வழியாக மெயின் கேட்டை நோக்கியவன் கண்ணில் குறட்டை விட்டு தூங்கிகொண்டு இருந்த செக்யூரிட்டி தெரிந்தான்.
சுறு சுறு வென்று கோபம் தலைக்கு ஏற, "உனக்கு நாளைக்கு இருக்குடா கச்சேரி", செந்தில் மனதிற்குள் கருவினான்.

மீண்டும் மாடி ஏறி, அறையிலோ பாத்ரூமிலோ வள்ளியை காணாமல், பால்கனிக்கு வந்தான். அங்கே சுவற்றில் சாய்ந்தவாறு கால்களை நீட்டி அமர்ந்திருந்த வள்ளி "சாரிங்க.. சாரிங்க" என்று தூக்கத்தில் விசும்பி கொண்டு இருந்தாள். அவள் கால்கள் கன்றி சிவந்து இருந்தன. அங்கங்கே ரத்தம் கட்டி இருந்தது. மனமும் பார்வையும் கனிவுற பார்மசி கவரை பாக்கெட்டில் இருந்து வெளியே எடுத்து, வள்ளி கால் பக்கத்தில் செந்தில் உட்கார்ந்தான்.

காலையில் எழுந்து மாடிக்கு வந்த ஜெயா பதட்டத்துடன் தன் கணவரிடம் சென்றார்.

"என்னங்க என்னங்க, ரூம் கதவு திறந்து இருக்கு. வாச கதவும் உள்ளே தாள் போட்டு இருக்கு, ஆனா செந்திலும் மருமகளும் எங்கேன்னு தெரியலை."

"பதறாதே ஜெயா, இரு பொறுமையாய் தேடலாம்", பொன்வண்ணன் மாடி ஏறி வந்து ஒரு ஒரு இடமாக பார்த்து விட்டு கடைசியில் பால்கனி திரை சீலையை விலக்கி ஒதுக்கினார். அங்கே கண்ட காட்சி அவர் கண்களை விரிய செய்தது. பால்கனியில் இருந்த தட்டு முட்டு சாமான்களோடு செந்திலும் வள்ளியும் ஆளுக்கு ஒரு மூலையில் சுருண்டு தூங்கி கொண்டு இருந்தார்கள். பால்கனியில் மூன்று காலி 'மூவ்' ஆயின்மென்ட் ட்யூப்கள் எப்படி வந்தன என்று புரியாமல் நாள் முழுவதும் ஜெயா குழம்பி கொண்டு, பொன்வண்ணனையும் பிடுங்கி எடுத்து விட்டார். அன்று மாலை இன்ஸ்பெக்டர் ஜகனிடம் இருந்து செந்திலுக்கு வந்த போன்காலை ஜெயா தான் எடுத்து பேசினார்.

"என்ன நடந்ததுனு தெரியலை ஜகன், 2 பெரும் அப்படி அடிச்சு போட்ட மாதிரி தூங்கறாங்க. எழுப்பவே முடியலை"

காலையில் பூவிலங்கில் ஒன்று சேர்ந்த ஜோடி, இரவு கடற்கரையில் இரும்பு விலங்கோடு போலீஸ் ஜீப்பில் உட்கார்ந்திருந்த காட்சி ஜகன் மனதில் மின்னலாய் தோன்றி மறைந்தது.

"பரவாயில்லை அம்மா, நான் நாளைக்கு சார் கிட்டே பேசிக்கறேன்" எதையும் காட்டிக்கொள்ளாமல் சாதாரண குரலில் ஜெயாவிற்கு பதில் கூறி, ‘ஹிட் அண்ட் ரன்’ கேசில் கைதான ஒரு ஆட்டோ டிரைவரிடம் பிடிபட்ட டால்பின் டிசைன் தங்க சங்கிலி பற்றி செந்திலிடம் மறு நாள் பேசலாம் என்று நினைத்துகொண்டே ஜகன் போனை கீழே வைத்தார்.

சுபம்

இந்த கதை மூலமா தெரியற கருத்து தான் என்ன? சினிமா பார்க்க போறவங்க டிக்கெட் ரிசர்வ் செஞ்சிட்டு போன பிரச்சனை இல்லாம படம் பார்த்துட்டு வரலாம். bye

7.25
Your rating: None Average: 7.3 (8 votes)

கருத்துகள்

rajesh00's படம்

(No subject)


Siju's படம்

மிக மிக அருமை... படமே


10

மிக மிக அருமை... படமே எடுக்கலாம்...
Very very interesting and fantastic story...§

jeyalakshmi's படம்

nice..


6

nice.. enjoying music

sugiri's படம்

நன்றி ராஜேஷ் சிஜு மற்றும்


நன்றி ராஜேஷ் சிஜு மற்றும் ஜெயலக்ஷ்மி. சுறுசுறுப்பா கதையை பதிவு செய்திட்டேன். விமர்சனம்(நல்லவோ, திட்டியோ) இருந்தால் தான் பதிவில் ஒரு களை கட்டும். எப்படி ஏத்துப்பாங்கனு யோசிச்சிட்டு இருந்தேன். நீங்க எல்லாம் நல்ல வரவேற்பு குடுத்து என்னை உற்சாக படுத்திட்டீங்க.


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


zilverprinz's படம்

very good. lovely


9

very good. lovely

zilverprinz's படம்

(No subject)


9

Innocent

edpshunmugam's படம்

ஏனுங்க அம்மணி, சீரியல்ல


4

ஏனுங்க அம்மணி, சீரியல்ல இடையிலே விளம்பரம் கொஞ்சம் போட்டா நல்லா இருந்திருக்கும் ?!. இருந்தாலும் நல்ல முயற்சி !. வாழ்த்துக்கள் !.


----
என்றென்றும் அன்புடன்,
‍‍உங்கள் ச.சண்முகம்,
திருநெல்வேலி.தமிழ்நாடு.


sugiri's படம்

நன்றி சில்வெர்ப்ரின்ஸ்


நன்றி சில்வெர்ப்ரின்ஸ் மற்றும் ஈடிபிஎஸ் bye

ஈடிபிஎஸ், கொஞ்ச‌ம் யோசிச்சு பாருங்க! டிவில வர விளம்பரங்களுக்காக ஒரு முறை (கருத்து கணிப்பு என்று நினைக்கிறேன்) நீங்க உணர்ச்சிவசப்பட்டது ஞாபகம் இருக்கா? Smile Smile


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/