என்னோட பேரு முக்கியம் இல்ல சார் இங்க, நேத்துவரைக்கும் என்ன நடந்துச்சுன்னு சொல்லுறேன் அதை மட்டும் கேளுங்க. அப்போ நான் 11th படிக்க வேற ஒரு ஸ்கூல்ல சேர்ந்தேன் முதல் நாள் அந்த ஸ்கூலையே படிச்ச பசங்க எல்லாம் ஒரு குரூப்பா இருந்தாங்க. நான் அப்பறம் புதுசா அந்த ஸ்கூல்ல சேர்ந்த பசங்க சில பேரு முதல் பெஞ்சுல உக்காந்து இருந்தோம், அப்பதான் ஒரு அழகான பொண்ணு கிளாஸ்க்குள்ள வந்தா (சினிமா இல்ல சார் இது அத்தனையும் உண்மை, அந்த கிளாஸ்ல இருந்த மத்த பொண்ணுகளவிட அவ அவ்வளவு அழகா இருந்தா ) அவ என்னைய கடந்து போன போது ஏதோ ஒண்ணு சல்லுன்னு எனக்குள்ள போச்சு சார்.
அது என்னன்னு எல்லாம் அப்போ தெரியால. செல்வின்னு ஒரு வாத்தியார் சொல்லி கூப்பிடும் தான் அது அவ பேருன்னு தெரிஞ்சிகிட்டேன். புது ஸ்கூல், புது பிரண்ட்ஸ், புது செட் அப்பன்னு புது லைப் தொடங்கிச்சு சார். எங்க தான் நான் சுத்தினாலும் சாயந்திரம் ஸ்கூல் முடிஞ்சி போகும் போது அவள பஸ்ஸ்டாண்ட்ல பார்க்காம போகமாட்டேன். ஆகஸ்ட் 15 அப்போ ஸ்கூல்ல குடுத்த முட்டாய் வேண்டாம்ன்னு சொல்லிட்டு செல்விகாக பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன். வந்தவளிடம் ஏதேதோ பேசி கடைசில லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டேன் சார். அப்போ அவ எதும் பதில் சொல்லல, ஜனவரி மாசம் வரைக்கும் நாய் மாதிரி அலையவிட்டு ஒரு வழியா சரின்னு சொல்லிட்டா. அன்னிக்கு நான் அடைந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை. பிரெண்ட்ஸ்க்கு எல்லாம் பீச் ஆண்ட இருக்கும் டப்பா தண்ணி வாங்கி குடுத்து சந்தோஷத்த பகிர்ந்துகிட்டேன்.
செல்வி ரொம்ப அழகா, கலையா இருப்பா நான் அந்த ஸ்கூல்ல படிச்ச வரைக்கும் அவளை சுத்தி வராத பசங்களே இல்ல. எத்தனையோ பேரு லெட்டர் குடுத்தும் எல்லாத்தையும் வேண்டாம்ன்னு சொன்னவ என்னை ஏன் லவ் பண்ணான்னு தான் தெரியல, எனக்கு மட்டும் இல்ல என்னோட பிரெண்ட்ஸ்க்கு கூட இந்த சந்தேகம் இருந்துச்சு. ஒரு நாள் பேச்சுவாக்குல என்னை ஏன் லவ் பண்ணுறன்னு கேட்டேன் தெரியல சொன்னவ ஒரு முறை என்னோட கண்ணை பார்த்து சொன்னா, உன்னோட முண்ட கண்ணைன்னு நினைகிறேன்னு சொல்லி சூப்பரா சிரிச்சா சார். அவ சிரிச்ச அந்த முகம் அப்படியே போட்டோ எடுத்த மாதிரி என்னோட மனசுல அடைஞ்சி போச்சு சார். ஒரு சுபயோக சுபதினத்தில் அந்த ஸ்கூல்ல இருந்து ரெண்டு பேரும் +2 முடிச்சு வெளியே வந்தோம். அவ அதுக்கு மேல படிக்கல நானோ பட்டய படிப்பு படிச்சிட்டு இருந்தேன், அவளும் நானும் அதிகப்பச்சம் சுத்திய இடம் சென்னை பீச்ல இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சார வண்டியில் செய்யும் பயணம் தான். அந்த இரண்டு மணிநேரமும் பேசிட்டே இருப்போம். நான் வேலை விஷயமா வெளியூரில் இருந்த சமயம், அவளுடன் எனக்கு இருந்த காதல் சிறிய விரிசலை ஏற்படுத்திச்சு. அவள் குடியிருந்த இடத்தில இப்போ இல்லைன்னு மட்டும் உறுதியாக தெரிஞ்சிச்சு, ரொம்ப கஷ்டப்பட்டு அவளை கண்டுபிடித்தேன். அதே காதலுடன் என்னையும் அவள் தேடிக்கொண்டு இருந்தாள் என்பது அவளின் இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டு இருந்த போது தெரிஞ்சிகிட்டேன் சார்.
மீண்டும் ஒரு பிரிவை சந்தித்தோம் வேலை என்கிற சாத்தானால் ஒரு வருடம் நான் டெல்லில வேலை விஷயமா சுற்றியதால் அவளை சந்திக்கமுடியாமல் போச்சு.சென்னை வந்தும் அவளின் முகவரி கண்டுபுடிக்கமுடியல சார், நண்பன் ஒருத்தனின் அண்ணன் கல்யாணத்தில் திரும்ப சந்திச்சோம் , ஆனா இந்த தடவை காதல் என்கிற நம்பிக்கை ஒரு அளவிற்கு தான் இருந்துச்சு எங்க ரெண்டு பேரிடமும். அவ வீட்டுல அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ரொம்ப மும்மரமா ஏற்பாடு பண்ணிட்டு இருந்த சமயம். என்ன பண்ணட்டும்ன்னு கேட்டா,அப்போ இருந்த சூழ்நிலையில் அவளை ஏற்க முடியாததால் பிரிவதை தவிர வேறு வழி இல்லை என்கிற முடிவுக்கு வந்தேன். அவகிட்ட என்னோட இயலாமையை வெளிபடையை சொன்னேன் வீட்டில் இருக்கும் பிரச்சனை எல்லாம் சொன்னேன் சார். கொஞ்ச நாள் வெயிட் பண்ண சொன்னேன், ஏனோ அவ அதற்கு சம்மதிக்கவில்லை. அதுவும் இல்லமா இப்போ வந்து இருக்குற மாப்பிள்ளை கப்பல்ல வேலை செய்வதால் வீட்டில் ரொம்ப தொந்தரவு செய்றாங்கன்னு சொன்னா. ரொம்ப கஷ்டபட்டேன் சார் அந்த டைம்ல . ரொம்ப வேதனையை அனுபவித்த நாள் அது தான் சார். அவளின் கல்யாணத்துக்கு என்னை அழைச்சா சார் ரீசெப்ஷென்க்கு போனேன், மண்டபத்துல என்கூட படிச்ச பசங்க எல்லாம் வந்து இருந்தாங்க. எல்லா பசங்களும் என்னை பார்த்து சிரிக்கிற மாதிரி இருந்துச்சு சார். எங்க இருந்தாலும் வாழ்கன்னு பாடிட்டு போக வந்தியான்னு கேட்டாங்க. ரொம்ப கேவலமா இருந்துச்சு சார். எங்க காதலுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ண ஈஸ்வரி வந்து இருந்தா அவளோட ரெண்டு வயசு பையன் கூட. வேறு எவனோ ஒருத்தன் கூட செல்வியை பக்கத்தில் நிறுத்தி பார்க்கும் போது அவ்வளவு டென்ஷனா இருந்துச்சு சார், ஏனோ அவளை அந்த கோலத்தில் பார்க்கவே பிடிக்கவில்லை சார். சுதாகர் கிட்ட மச்சான் என்னால பார்க்க முடியலன்னு ரொம்ப பீல் பண்ணி சொன்னேன். கைல இருந்த கிப்ட்ட ஈஸ்வரி கிட்ட குடுத்து நீயே குடுத்துடுன்னு சொல்லி அங்க இருந்து நடையை கட்டினேன். கடைசியா அங்கே இருந்து கிளம்பும் போது செல்வியை பார்த்தேன், என் மனதில் இருந்த ஏமாற்றத்தை அவள் கண்களில் பார்த்தேன் சார். வெளிய வரும் போது அவ அம்மா தம்பி சாப்பிட்டு போபான்னு சொன்னங்க, ரொம்ப நல்லா மனுஷி என்னோட வேதனை என்னோடவே இருக்கட்டும்ன்னு வெளிய வந்துட்டேன். நாட்கள் எங்கு எங்கேயோ சென்றது அவளை பற்றிய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக என்கிட்ட இருந்து மறைந்து கொண்டே சென்றது . அவளை பார்க்கும் வரை மட்டுமே, செல்விக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரியும் இருந்தாலும் அவளை மறக்க முடியாமல் ரொம்ப திணறி தான் போனேன் கொஞ்ச நாள். அப்போ தல படம் வந்த நேரம், பர்மா பஜார்ல போய் திருட்டு விசிடி வாங்கி வந்து படம் பார்க்கலாம்ன்னு போனேன், வாங்கிட்டு பஸ்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன் கொஞ்ச தூரத்தில் செல்வி வந்துட்டு இருந்தா சார் !!! ரொம்ப நாள் கழித்து பார்த்தாலும் இன்னும் அதே +2வில் பார்த்தது போல இருந்தா சார். நம்பவே முடியல சந்தோசம் ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் அவளுக்கு கல்யாணம் ஆனதை நினைச்சா கொஞ்சம் சோகமாதான் இருக்கு. சில விசாரிப்புகளுக்கு பிறகு அவளுக்கு பெண் பிறந்து இருக்கிறாள் என்றும் தற்போது திரும்ப ஒரு கரு உண்டாகி இருபதையும் சொன்னாள். (ஹ்ம்ம் நாங்க லவ் பண்ணிட்டு இருந்த நேரத்துல ஒரு நாள் மெரினா பீச் போனோம், அப்போ அங்க வந்து குறி சொல்லுற ஒரு பெண்மணி எங்களுக்கு இரண்டு மகன் பிறப்பான் என்று சொல்லுச்சு). ஏனோ இந்த நினைப்பு அவ சொல்லும் போது திடிர்ன்னு நினைவில் வந்துச்சு. அவளுக்கு பஸ் வந்து ஏறி போய்டா சார். பஸ்ல ஏறி என்னை திரும்பி பார்த்து ஒரு ஸ்மைல் பண்ணா சார். இது போதும் சார் அவ என்னை மறக்கலன்னு நானும் என்னோட வழிய பார்த்து வந்துட்டேன்.
நான் ஏன் சார் செல்விய வேண்டாம்ன்னு சொன்னேன் ?? இப்போ வரைக்கும் விடைதெரியாமல் முழிச்சிட்டு இருக்கேன் சார். அவ இப்போ எங்க இருக்கானு தெரியாது ஆனா ஒவ்வொரு முறை அவ இருந்த பழைய இடத்தை கடந்து செல்லும் போது அவளின் நினைப்பு மனதை போட்டு அரிச்சிடே இருக்கு.
சார் உங்களுக்கு ஒரு நல்ல நியூஸ் சொல்லட்டுமா!! வீட்டுல எனக்கு பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க இது வரை பார்த்த பெண்களில் எல்லோரையும் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். நேத்து அக்கா ஊரில் இருந்து வந்து இருக்காங்க, பேச்சுவாக்கில் எனக்கு ஒரு பெண் பார்த்து இருக்கிறதா சொன்னாங்க. போட்டோ காமிச்சாங்க, சார் நீங்க நம்புவீங்களா அந்த பெண்ணை பார்த்தால் அப்படியே செல்வி மாதிரி இருக்கா சார்,, சந்தோஷத்துல தலை கால் புரியல அந்த பொண்ணு பேரு மட்டும் கேட்டேன் லக்ஷ்மின்னு சொன்னங்க, வேறு எதுவும் கேட்காமல் சரின்னு சொல்லிட்டேன். ஏன் சார் நமக்குள் இருக்கும் ஏக்கம் எல்லாம் ஒரு நாளில் தீர்ந்து போய்விடும்ன்னு சொல்லுவாங்களே அது இது தானா ??









