drasfar's படம்

அந்த ஆஸ்பத்திரிக் கட்டிலில் படுத்திருந்த கோமதியின் மனம் சூறாவளியில் அகப்பட்ட சிறுபடகு போல அல்லாடியது. கட்டிலில் அசையமுடியாது படுத்திருந்தாள். போர்வைக்குள் குறுகியபடி வளைந்திருந்தது அவளது உடல். வலது காலில் முழங்காலிலிருந்து கீழாக பாண்டேஜ் போட்டுச் சுற்றிக் கட்டியிருந்தார்கள்.

காலை ஒரு அங்குலம் அசைப்பதற்குள் உயிர் போய்த்திரும்பியது. சே! இறைவன் என்ன அவளை இப்படி வதைத்து விட்டான். மிகவும் சுதந்திரமாக, ஒருவருக்கும் எதுவிதமான பிரச்சனைகளும் கொடுக்காமல், தனது பிள்ளைகளுக்கு ஒரு இடைஞ்சலும் கொடுக்காமல் தான் வாழ வேண்டும் என்னும் தனது கொள்கையின் படி தானே வாழ்ந்து கொண்டிருந்தாள், இப்படி விதி தனது வாழ்வில் விளையாடும் என்று எதிர்பார்த்திருந்தாளா?

அப்போது அவள் மனதில் கணவன் கோபாலகிருஷ்ணனின் கம்பீரமான முகம் ஊஞ்சலாடியது. முகத்தில் அவளை அறியாமல் ஒரு மலர்ச்சி தோன்றியது. அப்போது அவளது கட்டிலுக்கு முன்பாக இருந்த கட்டிலில் படுத்திருந்த அந்த இங்கிலீஷ் பெண்மணி,
" என்ன ஓரே ஆனந்தமாக இருக்கின்றாய்? " என்று கோமதியைப் பார்த்துக் கேட்டாள்.

" சேச்சே ! அப்படி ஒண்ணுமில்லே " என்று மழுப்பியபடி சிரித்துக்கொண்டாள் கோமதி.

சிறுவயதில் தாய்நாட்டில் படித்த கான்வேன்ட் படிப்பின் அனுகூலம் இப்போது லண்டனில் ஹாஸ்பிட்டலில் படுத்திருக்கும்போது நேரம் போவதற்காக மற்றைய இனத்தவருடன் சம்பாஷிக்கும்போது கோமதிக்கு நன்றாகத் தெரிந்தது.

லண்டனில் முன்பு அவளும், கணவனும் ஒன்றாக இருக்கும்போது, சாயந்தரவேளையிலே வாக்கிங் போவதுண்டு. அப்படிப் போகும்போது, வழியில் வரும் மற்றைய சில தம்பதியரைப் பார்த்துரிடம் அவள் ஆங்கிலத்தில் சம்பாஷிப்பதை அவள் கணவன் கோபால் பெருமையுடன் பார்ப்பதை ஞாபகப்படுத்திக் கொண்டாள்.

அந்த ஹாஸ்பிட்டல் வார்ட் எத்தனை சுத்தமாக இருந்தது என்பதைப் பார்க்கும் போது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. மிகவும் அழகாக ட்ரெஸ் செய்த டாக்டர்களும், நர்சுகளும் மிகவும் பரபரப்பாக நடந்து செல்லும் காட்சி மனதுக்கு நிறைவைக் கொடுத்தது.
‘எப்படி இத்தனை அன்பாக இவர்கள் பழகுகின்றார்கள். அதற்காக இவர்களுக்கு விசேட பயிற்சி கொடுப்பார்களோ?' தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள்.

சுவரில் இருந்த கடிகாரம் மணி ஆறென்பதை பறைசாற்றியது. " ‘இன்னும் பதினைந்து நிமிடங்களில் சாந்தா வந்து விடுவாள் "' கோமதியின் மனம் அவளையறியுமால் மெளனமாய்க் குதூகலித்தது. ஆமாம் அவளை ஹாஸ்பிட்டலில் பார்ப்பதற்காக வரும் தினசரி விருந்தாளி அவளது மகள் சாந்தா ஒருத்திதான்.
இரண்டு சிறு குழந்தைகளுக்குத் தாயான சாந்தா, தனது தாயாரைப் பார்க்க என்ன பாடுபட்டாவது தினமும் ஓடி வந்து விடுவாள். அவளது மனதில் கொஞ்சம் குற்ற உணர்வு இருக்கும் காரணத்தால்தான் அவள் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்கின்றாளோ என்று கூட சிலவேளைகளில் எண்ணத்தோன்றும்.

ஆமாம் தாயகத்திலிருந்து மகள் சாந்தாவிடம் விருந்தாளியாக வந்திருந்த போதுதானே எதிர்பாராதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டது. அன்று வழமைபோல காலையில் பேரக்குழந்தைகள் ஸ்கூலுக்கு போனதும் அருகிலிருந்த கோவிலுக்குப் போவதற்காக கிளம்பினாள் கோமதி.

பஸ் ஸ்டாப்புக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, நெருங்கிக் கொண்டிருந்த பஸ்ஸைக் கண்டதும் கொஞ்சம் வேகமாக நடக்கவென்று அடியெடுத்து வைக்கும் போது, கால்மூட்டு சிறிது விலக அப்படியே நடைபாதையில் விழுந்தாள். எழுந்திருக்கவே முடியவில்லை.
அப்புறம் என்ன, அருகிலிருந்த ஒருவர் ஆம்பியூலன்சுக்கு போன் பண்ண, ஹாஸ்பிட்டலில் கொண்டுவந்து சேர்த்தார்கள். பரிசோதனை செய்த டாக்டர் இரண்டு இடங்களில் காலில் முறிவு ஏற்பட்டிருக்கின்றது, ஆபிரேஷன் பண்ணவேண்டும் என்று கூறவும், மகள் சாந்தா ஓடிவந்து சேரவும் சரியாக இருந்தது.

ஒருபடியாக ஆபரேஷன் முடிந்து ஆறு வாரங்கள் ஓடிவிட்டன. கொஞ்சம், கொஞ்சமாக கோமதிக்கு நடை பழக்கும் பயிற்சிகள் நடைபெற்றாலும் குறைந்தது இன்னும் ஆறு வாரங்களுக்காவது, மற்றவர்களின் தயவில் வாழவேண்டிய நிர்ப்பந்ததுக்கு அவள் ஆளாகியிருந்தாள்.

"அம்மா, இப்போதுதான் டாக்டரைச் சந்தித்தேன். இன்னும் மூன்று தினங்களில் உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று சொன்னார் " என்று கூறியபடியே வந்த சாந்தாவை கொஞ்சம் மகிழ்ச்சியும், கொஞ்சம் கவலையும் கலந்தபடிப் பார்த்தாள் கோமதி.
"வீட்டிற்குப் போவது சரிதான், ஆனால் எனக்குத்தான் இன்னமும் சரியாக நடக்க முடியாதே, இரண்டு சிறிய குழந்தைகளுடன் நீ எப்படியம்மா.." தயங்கினாள் கோமதி.

" சே ! இதென்னம்மா, நானும் என் கணவர் சேகரும் உங்களின் தேவைகளைக் கவனித்துக் கொள்வதை பாக்கியமாகக் கருதுகின்றோம், தேவையில்லாத விடயங்களை எண்ணி வீணாக வருந்தாதீர்கள் " என்றாள் சாந்தா.

அப்போது அங்கே அவசரமாக வந்தான் கோமதியின் மூத்த மகன் சங்கர்.
" என்னப்பா சங்கர், நீ கொஞ்ச நேரம் என்னுடன் இருக்கலாம் தானே ! பாவம் சாந்தா இன்றாவது கொஞ்சம் நேரத்துடன் வீடு செல்லலாம் " என்ற கோமதியை எரிச்சலுடன் பார்த்த சங்கர்,

" இல்லை அம்மா நான் இன்னும் பதினைந்து நிமிடங்களுக்குள் போக வேண்டும், மகனை ஸ்கூலில் இருந்து பிக் பண்ண வேண்டும், கிரிக்கெட் பிராக்டீஸ் முடிந்து எனக்காகக் காத்திருப்பான் " என்றான்.
சங்கரைத் தயவாகப் பார்த்த கோமதி,

" என்னப்பா சங்கர். இன்னைக்கு ஒருநாள் உன்னோட மனைவி குழந்தையை அழைத்துவர முடியாதா ? !"என்றாள்,.
முகத்தை கடுகடுப்பாக்கிக் கொண்ட சங்கர்,
" அம்மா, எனக்கு டைம் இல்லேன்னு சொல்றேன்ல்ல " என்றான் உறுதியாக.

முகம் மிகவும் மாறிய நிலையில் சங்கரை அவன் முகம் கடுமையானதைப் பார்த்த கோமதி,
" ஆண் பிள்ளைகளைப் பெற்றும் பாவம் நான்அவள் சாந்தாவுக்குத்தான் பாரமாக இருக்க வேண்டி இருக்கு " என்றாள் ஆதங்கத்துடன்.
" ஏன் நான் ஒருவன் தானா உங்களுக்கு மகன்? தம்பி பாஸ்கரை மறந்திட்டீங்களா?" என்று கேட்டு விட்டு விறுவிறுவென்று வெளியேறினான் சங்கர்.

" பாத்தியாம்மா, அம்மா கால் ஒடிந்துபோய் நடக்கமுடியாமல் இருப்பதையும் பொருட்படுத்தாது, என்ன பேசிட்டுப் போறான் பார்த்தாயா? " என்றாள் கோமதி
" சரி அம்மா, அதைப்பற்றி யோசிக்காதீங்க, நானும் கிளம்பவேண்டும் " என்று ஆறுதல் கூறிய சாந்தியைப் பார்த்த கோமதி.
" சரி அம்மா, நீ போயிட்டு வா வீட்ல பிள்ளைகள் பாத்துகிட்டு இருப்பாங்க " என்றாள்.

தூக்கம் வர மறுத்தது கோமதிக்கு. நினைக்க, நினைக்க அழுகையாய் வந்தது. ஒரு பெயர் பெற்ற டாக்டரின் மனைவியாக அவளும் நல்ல நிலையில் தான் வாழ்ந்து வந்தாள். அப்போது அவர்கள் வசித்தது ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவிலே.

அடுத்தடுத்து அழகான மூன்று பிளைகளைப் பெற்றெடுத்த அந்தத் தம்பதியர் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். வறுமைச்சூழலில் வாழ்ந்த அந்த ஆப்பிரிக்கச் சமுதாயத்திற்கு மிகவும் குறைந்த செலவில் வைத்தியம் பார்த்து வந்த கோபாலகிருஷ்ணனுக்கு அங்கே செல்வாக்கு அதிகமாகத்தான் இருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி அடையா நாடுகளுக்கான மருத்துவ ஆலோசனைக் குழுவில் டாக்டர் கோபாலகிருஷ்ணன் இடம் பெற்றிருந்ததால் அவருக்கு ஊதியம் நன்றாகவே இருந்தது.
மிகவும் சிக்கனமாக இருந்து, வாழ்க்கையில் தங்கள் வசதிகளைத் துறந்து பிள்ளைகளின் வருங்காலத்திற்காக பணத்தைச் சேமித்து வைப்பதில் அவர்கள் மிகுந்த சிரத்தையெடுத்தார்கள்.

இன்று கூட நேற்றுப்போல கோமதியின் மனதில் துல்லியமாகத் தெரிந்தது அந்தக் காட்சி. ஆமாம் அப்போது சங்கருக்கு எட்டு வயதிருக்கும் நெருப்புக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தான். அவனுக்கு குணமடைய எடுத்த அந்த இரண்டு வாரங்களும், கோபாலும் கோமதியும் தவணை முறையில் அவன் கட்டிலருகே கண்விழித்துக் காத்த அந்தப் பொழுதுகள் இப்போ அவள் நெஞ்சிலே கனத்தது.

சங்கர், சாந்தா, பாஸ்கர் மூவருக்கும் ஒவ்வொருவரிடையே இரண்டு ஆண்டுகள் வயது தான் வித்தியாசம். அவர்களின் மேற்படிப்புக்கான சந்தர்ப்பம் வந்த போது மூன்று பேரையுமே ஒன்றாக லண்டனுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது அவர்கள் கென்யாவில் வாழும் பிரித்தானியப் பிரஜைகளாகவே இருந்தார்கள்.

"என்னங்க மூன்று பேரையுமே அனுப்புறீங்களே, கட்டுப்படியாகுமா?" கவலையுடன் கேட்ட கோமதியைப் பார்த்துப் புன்னகைத்த கோபால்,
"இன்று நாம் நமது குழந்தைகளுக்குச் செய்தால் நாளை அவர்கள் நமக்குச் செய்யமாட்டார்களா என்ன?" என்று கேட்டார்.
அனுப்பியது மட்டுமல்ல, அவர்கள் தங்கிப்படிப்பதற்கு வசதியாக அவர்களின் பெயரில் ஒரு வீட்டைக் கூட லண்டனில் வாங்கிப்போட்டார்.
அப்போதுதான் ஒருநாள் கோபாலின் நண்பர் ஒருவர் அவருடன் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டாள் கோமதி,
"என்ன சங்கர் நீயும், கோமதியும் கூட பிரித்தானியப் பிரஜைகள் தானே, பேசாமல் போய் லண்டனில் நீங்களும் வசிக்கலாமே" என்றார் அவரது நண்பர்.

"ஆமா போகலாம், ஆனால் நான் இப்போ உழைக்கிற வசதி அங்கே இருக்காதே, அப்புறம் நம்மோட குழந்தைங்க கஷ்டப்பட வேண்டி வந்திடக்கூடாது பாரு" என்றார் கோபால்.
அதைக்கேட்டதும் கோமதிக்கு கண்கள் பனித்து விட்டன.
அதைத் தொடர்ந்து சிறிது காலத்தின் பின்னர் தனது பதவியிலிருந்து கோபால் ஓய்வெடுத்த பின்னர் ஒரு ஆறுமாதகாலம் லண்டனில் வசித்திருப்பார்கள், இரக்கமற்ற காலன் கோபாலின் உயிரை ஹார்ட் அட்டாக் என்னும் பெயரில் பறித்துச் சென்று விட்டான்.
மகளின் திருமணத்தைக் கூடப் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை அவருக்கு..

இத்தனை அன்பாக, தியாகங்கள் செய்து வளர்த்த அவளது ஆண்பிள்ளைகள் இன்று தன்னைச் சுமையாக நினைப்பதை அவளால் தாங்கிக் கொள்ளல முடியவில்லை. அவளது இதயத்துள் ஊறிய உணர்ச்சிகள்ளை வாட்டி வறுத்தெடுத்து விட்டனது.
ஆறு மாதங்களுக்குப் பின்னர்,

கைகத்தடித் துணையுடன் சகஜமாக நடக்கத் தொடங்கி விட்டாள் கோமதி. அன்று அவளது பிறந்தநாள். சாந்தாவின் வீடு அல்லோலலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. ஆமாம் அன்று சாயந்தரம் நண்பர்கள் உறவினர்கள் சிலரைக் கோமதியின் பிறந்தநாளை முன்னிட்டு வீட்டிற்கு அழைத்திருந்தாள் சாந்தா

சாந்தா சமையலிலும், பேரக்குழந்தைகளும், சாந்தியின் கணவனும் வீட்டின் மற்றைய வேலைகளிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
தனது அறையினுள் கட்டிலில் அமர்ந்திருந்தபடியே ஜன்னலினூடாக வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் கோமதி. இன்று மாலை நடக்கப்போகும் சம்பிரதாய விழாவின் பொய்த்தோற்றம் அவளுக்கு மனதில் தீராத வெறுப்பைக் கொடுத்தது.

தேவைகளைக் கவனிக்கத் திரராணியற்ற சொந்தங்கள் இன்று வெளிவேஷத்துக்காக பாசத்தின் சிகரத்தில் ஏறப்போகும் நாடகத்தின் கரு அவளுக்கு வேம்பாகக் கசந்தது.

மாலை ஏழு மணி இருக்கும். அந்த வீடே ஆரவாரத்தால் அல்லோலகல்லொலப்பட்டுக் கொண்டிருந்தது. வந்திருந்த அனைவரும் கோமதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லுவதும், அவளுடைய பிள்ளைகள் எத்தனை புத்திசாலித்தனத்துடன் வாழ்க்கையில் நல்ல பல நிலைகளை அடைந்துள்ளார்கள் என்றும் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.
அவர்களுடன் சம்பாஷணையில் ஈடுபட்டிருந்தாலும் கோமதியின் மனம் மட்டும் எதையோ எண்ணிக் குமைந்து கொண்டிருந்தது. திடீரென கோமதியின் மகள் சாந்தா, தனது தாயாரின் பிறந்தநாள் கேக் வெட்டப்படப் போவதாக அறிவித்தாள். அங்கே நிசப்தம் நிலவியது.

கேக் வெட்ட்டப்பட்டது, அனைவரும் ஹாப்பி பேர்த்டே பாடல் பாடினார்கள். அவளின் கையிலிருந்த முதலாவது கேக் துண்டைப் பெற்றுக்கொள்ள சங்கர் வந்தான், அவன் கைகளில் கேக்கைத் திணித்து விட்ட கோமத. கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்,

"அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்"

அனைவரும் அவளை உற்று நோக்கினர்.,
தொடர்ந்தாள் கோமதி,

"இது வள்ளுவனின் பொன்வாக்கு, அதாவது எத்தனைப் பெரிய கல்வி கற்று பெரிய பதவி வகித்தாலும், மக்களுக்குரிய நல்ல பண்பில்லாதவர்களுக்கும், அறிவற்ற மரங்களுக்கும் எந்ததவிதமான வேறுபாடும் இல்லை. என் வாழ்வில் நான் அடைந்த மக்கள் கூட மரங்கள் போன்றவரே என்னுடைய மகளைத் தவிர" என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறிவிட்டு கதிரையில் அமர்ந்தாள்.

மகன் சங்கரும், பாஸ்கரும் தாயின் முகத்தைத் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த முகத்தின் உணர்ச்சியலைகளில் ஒரு புது விதமான உண்மையெனும் தகிப்புக் கொண்ட தாயின் ருத்திர தோற்றத்தைக் கண்டார்கள்.

0
Your rating: None

கருத்துகள்

velmurugan's படம்

nice


nice


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


uthira's படம்

அருமை


அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


VISWAM's படம்

nice


nice