1,500 பேர் ஆய்வுக்கட்டுரை படிப்பதற்கு அனுமதிக்க முடிவு

Thursday, February 25, 2010 at 6:36pm

கோவை செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்க 6ஆயிரத்து 86 பேர் கட்டுரைச் சுருக்கம் அனுப்பியுள்ளனர்; இதில் 1,500 பேரை கட்டுரை படிக்க அனுமதிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கோவை மாநாடு குறித்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் கருணாநிதி கூறியது:

கோவையில் 2010 ஜூன் திங்கள் 23 முதல் 27ஆம் நாள் வரை 5 நாட்கள் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி - தொடர்ந்து நடைபெற்று வருகின்ற பல்வேறு குழுக்களின் சார்பாகவும், அந்தக் குழுக்களின் தலைவர்கள் சார்பாகவும் கருத்துக்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, இதுவரையில் நடைபெற்றுள்ள செயல்கள் குறித்தும், மேலும் தொடர்ந்து நடைபெற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆய்வரங்கத்தில் பங்கேற்க வலைத்தளம், மின்அஞ்சல், அஞ்சல் மற்றும் நேரில் என்று இந்தியா உட்பட 49 நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 356 பேர் பதிவு செய்து கொண்டுள்ளார்கள். நாடுகளை விவரமாகச் சொல்ல வேண்டுமேயானால் –

அமெரிக்க ஐக்கிய நாடுகள் (யு.எஸ்.ஏ.) –லிருந்து பதிவு செய்திருப்பவர்கள் 44 பேர். அமெரிக்கன் சமோவா - 1, அயர்லாந்து – 3, ஆஸ்திரியா – 1, ஆஸ்திரேலியா – 15, யுனைடெட் கிங்டம் (இங்கிலாந்து) - 18, இத்தாலி - 1, இந்தோனேஷியா – 2, இலங்கை – 91, ஈரான் - 1, எத்தியோப்பியா – 1, ஐக்கிய அரபுக் குடியேற்ற நாடுகள் – 5, ஐல் ஆப் மேன் - 1, ஓமன் - 4, கசகிஸ்தான் - 1, கத்தார் - 1, கனடா – 23, காங்கோ – 1, கிரீஸ் - 1, கென்யா – 2, சவுதி அரேபியா – 6, சிங்கப்பூர் - 90, சீனா - 4, சுவிட்சர்லாந்து - 2, செர்பியா - 1, செஷல்ஸ் - 1, டுனீசியா - 1,டென்மார்க் - 1, டோங்கா – 1, தென் கொரியா – 3, நார்வே – 2, நியூசிலாந்து – 3, நெதர்லாந்து – 3, நைஜீரியா – 1,பக்ரைன் - 2, பார்படாஸ் - 1, பிரான்ஸ் - 7, பிரிட்டிஷ் இந்திய ஓஷன் டெரிடரி – 1, பின்லாந்து – 1, புரூணை – 1, போலந்து – 1, மலேசியா – 181, மொரிசியஸ் - 9, வங்காள தேசம் - 1, ஜப்பான் - 3, ஜெர்மனி – 9, ஹாங்காங் - 1, பிற நாடுகள் – 2, இந்தியா – 6 ஆயிரத்து 800. ஒட்டுமொத்தமாகப் பதிவு செய்திருப்பவர்கள் 7 ஆயிரத்து 356 பேர்.

பதிவு செய்து கொண்டுள்ளவர்களிடம் இருந்து, 6 ஆயிரத்து 86 ஆய்வுச் சுருக்கங்கள் வரப் பெற்றுள்ளன. ஆய்வுச் சுருக்கங்கள் முன்னரே வகைப்படுத்தப் பட்டவாறு, 55 பொருண்மைகளாகப் பிரிக்கப்பட்டன. ஒரு பொருண்மைக்கு மூவர் என்கிற வகையில் பேராசிரியப் பெருமக்களையும், அறிஞர்களையும் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, 6 ஆயிரத்து 86 ஆய்வுச் சுருக்கங்களும் நுண்ணாய்வு செய்யப்பட்டன. நுண்ணாய்வாளர்கள் அளித்துள்ள மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதத்தக்கோர் தெரிவு செய்யப்பட்டு, கட்டுரைகளை எழுதுமாறு அவர்களைக் கேட்டுக் கொள்ளும் கடிதங்கள் அனுப்பப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1500 பேர் ஆய்வுக் கட்டுரைகளைப் படித்திட அனுமதிக்கலாமென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் இணைய மாநாடு தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 75 தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டுள்ளன. கட்டுரைச் சுருக்கங்கள் பெற கடைசி நாள் மார்ச் 15 ஆகும். இதில் மொத்தம் 350 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் இணைய மாநாட்டிலும் வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, தென்கொரியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து பெருமளவில் இணையத்தமிழ் அறிஞர்களும், பேராளர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக பல்லாயிரக்கணக்கான பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, கல்லூரிகளுக்கான போட்டிகள் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி நடைபெற உள்ளன.

செம்மொழி மாநாட்டையொட்டி, ஏறத்தாழ 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

ஒவ்வொரு குழுவும் அவர்களுக்கான பணிகளை எவ்வாறு ஆற்றி வருகிறோம் என்று சொன்னார்கள். அவர்களின் பணி திருப்திகரமாக இருக்கிறது.
டெல்லியில் பிரதமரை அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கரும்பு விலை தொடர்பாக கோரிக்கை வைத்திருப்பது, அவர்களுக்கு கரும்பான செய்தியாக இருக்கலாம். எங்களுக்கு அதைப்பற்றிய விவரம் தெரியவில்லை.

மாநாட்டுச் செலவிற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறீர்கள். மேலும் நிதி, தேவைப்பட்டால் மேற்கொண்டு ஒப்புதலோடு செலவிடப்படும்.

1
Your rating: None Average: 1 (1 vote)