சென்னையில் உள்ள தமிழ் மையம் அமைப்பு திருக்குறளுக்கு பல்வேறு இசை மரபுகளை பயன்படுத்தி இசை அமைத்துள்ளது.

இந்த இசை ஆல்பம் 10 தினங்களில் வெளியிடப்பட உள்ளது.

* சிம்பொனியில் திருவாசகம்
* மொசார்ட் மீட்ஸ் இந்தியா

உள்ளிட்ட இசை ஆக்கங்களை உருவாக்கிய தமிழ் மையம் அமைப்பு, இப்போது செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துடன் இணைந்து திருக்குறளுக்கு இசை அமைத்துள்ளது.

இது குறித்து தமிழ் மையம் நிறுவனர் ஜெகத் கஸ்பர் புதன்கிழமை (09/06/10) அளித்த பேட்டி:

"திருக்குறள் இசைத்தமிழ்" என்ற பெயரில் சாமான்ய மக்களும் இரசித்து கேட்கும் வகையில், திருக்குறளுக்கு இசை அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி கலை நிகழ்ச்சிகளிலும் இப்பாடல்களை பயன்படுத்தலாம்.

1,330 குறள்களில் 330 குறள்கள் தேர்வு செய்யப்பட்டு இசை அமைக்கப்பட்டுள்ளது.

இவை 50 பாடல்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழிசை, கர்நாடக இசை, மெல்லிசை, இந்துஸ்தானி இசை என பல்வேறு இசை மரபுகளும் இந்த இசை ஆக்கத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறள்களுக்கான விளக்கம் முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள திருக்குறள் உரை புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட "திருக்குறள் இசைத்தமிழ்" ஆக்கப் பணிகளில்,

* சுதா இரகுநாதன்
* அருணா சாய்ராம்
* பாம்பே ஜெயஸ்ரீ
* மாணிக்க விநாயகம்
* நித்யஸ்ரீ
* கார்த்திக்
* சின்மயி
* திப்பு
* மகதி
* சீர்காழி சிவசிதம்பரம்
* அனுராதா ஸ்ரீராம்

உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

"மொசார்ட் மீட்ஸ் இந்தியா" ஆல்பத்துக்கு இசை அமைத்த நெல்லை ஜேசுராஜ், இதற்கும் இசை அமைத்துள்ளார்.

செம்மொழித் தமிழ் மாநாடு தொடங்கும் முன்னர், 6 குறுந்தகடுகள் கொண்ட பேழையாக "திருக்குறள் இசைத்தமிழ்" வெளியிடப்படும்.

4
Your rating: None Average: 4 (1 vote)