ஆங்கிலம் உதட்டோடு ஒட்டிய மொழி; தமிழ் உள்ளத்தோடு ஒட்டிய மொழி:- வெளிநாட்டு தமிழர்கள் பெருமிதம்
வெளிநாடுகளில் தமிழை வளர்ப்பதற்கு பல்வேறு ஆலோசனைகளை செம்மொழி மாநாட்டின் மூலமாக தமிழக அரசுக்கு வெளிநாட்டு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
செம்மொழி மாநாட்டின் பொது அரங்கில், "கடல் கடந்த தமிழும், தமிழரும்" என்ற தலைப்பில் நேற்று (26/06/10) நடந்த கருத்தரங்கில் பல்வேறு நாடுகளின் சார்பில் பேசியவர்கள் விபரம்:-
பால் பாண்டியன் (அமெரிக்கா):-
அமெரிக்காவில் 3 இலட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர்.
* எங்களைப் போல, 40 ஆண்டுகளுக்கு முன்னால் சென்றவர்கள்
* எங்களின் பிள்ளைகள்
* சமீபத்தில் வந்தவர்கள்
என 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் சென்றவர்கள், பெரும்பான்மையாக உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 10 ஆயிரம் தமிழர்கள் வருவதாக, மென்பொருள் துறை புள்ளி விபரம் கூறுகிறது.
நாங்கள் அங்கு சென்று 20 ஆண்டுகளுக்குப்பின், தமிழகத்தோடும், தமிழோடும் உள்ள தொடர்புகளை மேலும் உறுதிப்படுத்தி வருகிறோம்.
எங்களது பெற்றோர் இப்போது இல்லாததால் விடுபட்ட தொடர்பு, தமிழின் பெயரால் தொடர்கிறது.
அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த அமைப்புகள், தமிழை வளர்க்காவிட்டாலும், தமிழைப் பாதுகாக்கும் பணியைச் செய்து வருகின்றன.
இந்தியாவில் வெளியுறவுத்துறை செயல்பட்டாலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களைப் பற்றியே அதிகம் கவனம் செலுத்துகிறது.
எனவே, எங்களைப் போன்ற தமிழர்களின் நலனுக்காக, தமிழகத்தில் வெளியுறவுத்துறைக்கு தனி அமைப்பை அரசு ஏற்படுத்தி, தமிழ் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவ வேண்டும். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அதனால், அடுத்த தலைமுறை பெரிதும் பயனடையும்.
கல்லாறு சத்திஷ் (சுவிட்சர்லாந்து):-
இருபது ஆண்டுகளுக்கு முன், பெருமளவு தமிழ்க் குடும்பங்கள் அங்கு சென்றபோது, கடுங்குளிர், ஜெர்மானிய மொழி தெரியாததால் ஏற்பட்ட பிரச்னை, உணவுப் பிரச்னை, பொருளாதாரப் பிரச்னை, உறவுகளை இழந்ததால் ஏற்பட்ட வேதனை என பல வகையான பிரச்னைகளுக்கு உள்ளானோம்.
ஆனாலும், 6,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழியையும், அது கற்றுத்தந்த மரபும் எங்களுக்கு உதவியது. கடும் உழைப்பால் இன்றைக்கு நல்ல நிலைக்கு முன்னேறியுள்ளோம். பேருந்து நிலையத்தில் தமிழர்கள் காத்திருந்த நிலை மாறி, இப்போது எல்லோரும் சொந்த வாகனங்கள் வைத்துள்ளோம். சொந்த வீடுகள் வாங்கத் துவங்கியுள்ளோம். பல்வேறு தேசங்களிலிருந்து வந்த பல இனத்தவரிடமிருந்து நல்ல மரபுகளை கற்றுக் கொண்டு, நம்முடைய நல்ல மரபுகளை அவர்களுக்கும் கற்றுத் தந்திருக்கிறோம்.
இப்போது எல்லா இனங்களையும் விட, சுவிஸ் தமிழ்ச் சமுதாயம் ஒரு படி மேலே உயர்ந்திருக்கிறது. இப்போது அங்கு மக்கள் பிரதிநிதியாகும் அளவுக்கு முன்னேற்றம் கிடைத்துள்ளது.
அங்கு 50 ஆயிரம் பேராக உயர்ந்துள்ள தமிழர்களின் எண்ணிக்கை, இன்னும் 2 ஆண்டுகளில் 2 இலட்சமாக உயரும். கடல் கடந்து சாதித்த தமிழர்களுக்காக பெருமைப்படுவதோடு, கடல் கடக்க முடியாத தமிழர்களின் கண்ணீரையும் நாம் துடைக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கிடையே தொடர்புப் பாலத்தை ஏற்படுத்த தமிழக அரசு முயலவேண்டும்.
அழகப்பா இராம்மோகன் (அமெரிக்கா):-
இந்தியாவை விட்டுப் பிரிந்து சென்று 45 ஆண்டுகளான பின், அமெரிக்கத் தமிழனாக இங்கு வந்திருக்கிறேன். ஆனாலும், தமிழ் எங்களை விட்டுப் பிரிந்ததில்லை.
நாட்டுக்காக என்ன செய்ய வேண்டுமென்று அமெரிக்க ஜனாதிபதி கேட்டார். தமிழர்களைப் பார்த்து, வெளிநாடு வாழ் தமிழர்கள் கேட்பது, தமிழன் படும் வேதனையைப் பார்த்து ஒரு சொட்டு கண்ணீராவது விட வேண்டுமென்பதுதான்.
ஈழத்தமிழர், மலேசியத் தமிழர், பர்மா தமிழர், கர்நாடகத் தமிழர் என பல முனைகளிலும் தமிழர்கள் பிரச்னையை சந்தித்து வருகின்றனர். தமிழன் இனிமேல் நல்லவனாக வாழ்வதை விட, வல்லவனாகவும் வாழ வேண்டும். நம் எல்லோருக்கும் பொதுவான அடையாளம், தமிழ்தான்.
திருக்குறளை நம் எல்லோரையும் இணைக்கும் மையப்புள்ளியாக மாற்றி, அதனை பைபிள், குர்ஆன் போன்ற வழிபாட்டு நூல் போல எல்லா மக்களுக்கும் பொதுவான மறையாக மாற்ற முயற்சி எடுக்க வேண்டும்.
கேம்பிரிட்ஜ் பல்கலையுடன் இணைந்து, தமிழ் வளர்ச்சிக்கான ஒளி - ஒலி குறுந்தகடுகளை வெளியிட முயற்சி எடுத்து வருகிறோம்.
என்.இராம் (இங்கிலாந்து):-
தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழுவானா, தமிழன் வாழ்ந்தால் தமிழ் வாழுமா என்பது மிகப்பெரிய கேள்வி.
சங்க இலக்கிய காலத்தில் தமிழ் வாழ்ந்தபோது, தமிழன் வறுமையில் வாழ்ந்தான். இன்றைக்கு கணினி கற்ற தமிழன், வளமாக வாழ தமிழ் வறுமையில் வாடுகிறது. ஆனாலும், தமிழ் அழிந்து விடாது.
ஆஸ்கர் விருது பெற்ற போது இரஹ்மான், "எல்லாப்புகழும் இறைவனுக்கே" என்றார். அவருக்கு நன்றாக ஆங்கிலம் தெரிந்தும் தமிழில் அதைச் சொன்னார். ஏனெனில், ஆங்கிலம் என்பது உதட்டோடு ஒட்டிய மொழி; தமிழ், உள்ளத்தோடு ஒன்று பட்ட மொழி. தமிழனை தமிழ்நாட்டிலிருந்து பிரிக்கலாம்; தமிழைப் பிரிக்க முடியாது.
நான் கடந்த 32 ஆண்டுகளாக இங்கிலாந்தில் இருக்கிறேன். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத்தான் மேடைகளில் தமிழை அதிகமாகக் கேட்க முடிகிறது. முன்பெல்லாம் பெரிய அரசியல் தலைவர்கள் பேசும்போது, சமஸ்கிருத சுலோகங்களை மேற்கொள் காட்டி தங்களது ஆங்கில உரைக்கு இடையே குறிப்பிடுவார்கள். இப்போது, தமிழ்க் கவிதைகளை ஆங்கில உரைக்கு இடையில் அடிக்கடி கேட்க முடிகிறது. தமிழ் புதிய மறுமலர்ச்சியைப் பெற்றிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும், தமிழ்ப்பற்றோடு எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். நாங்கள் 1950 - 60களில் இங்கிலாந்துக்கு சென்றபோது, எங்களுக்கு அனுமதிக்கப்பட்ட 30 கிலோ பொருட்களோடு உள்ளத்தில் கருணாநிதி வளர்த்த தமிழ்ப்பற்றையும் எடுத்துச் சென்றவர்கள்.
பாலகிருஷ்ணன் (பிரான்ஸ்):-
இந்தியாவை விட 7 மடங்கு சிறிய நாடு பிரான்ஸ்; 20 மடங்கு மக்கள் தொகை குறைவானது. ஆனால், வல்லரசாக திகழும் நாடு. அங்கு தமிழர்களுக்கென்று தனி மதிப்பு இருக்கிறது. செல்லும் இடத்தில் கொலை, கொள்ளையில் ஈடுபட்டால் தமிழனை யாரும் மதிக்க மாட்டார்கள்.
ஆனால், தமிழர்கள் எல்லோரும் உழைப்பாளிகள் என்பதால் செல்லுமிடத்திலெல்லாம் பெயர் பெறுகின்றனர்.
தமிழ் வாழ வேண்டுமென்றால், அதற்கு வெளிநாட்டில்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது.
பணத்தையும், நகையையும் பாதுகாக்க, வங்கிகளில் வைப்பது போல, வெளிநாட்டில் தமிழை வளர்த்தால் அது நிச்சயம் தமிழைப் பாதுகாக்கும்.
தமிழை வளர்ப்பதற்கு வெளிநாடுகளில் உள்ள நூலகங்களுக்கு இங்கிருந்து பல ஆயிரம் புத்தகங்களை வழங்கிட, அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
நித்யானந்தன் (இங்கிலாந்து):-
சுதந்திர இலங்கையில் வாழ்ந்த தமிழர்களுக்கு எதிராக ஏற்பட்ட இனக்கலவரம், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் புலம் பெயர்ந்தனர். அங்குள்ள தொடர்ச்சியான அரசியல் நெருக்கடிகளால், அவர்கள் அந்தந்த நாடுகளிலேயே வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பரந்து விரிந்த சமுதாயமாக வாழ்ந்த தமிழர்கள், இப்போது முடக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் சென்ற தமிழர்களுக்கு, ஆங்கில மொழிப்புலமை கிடைக்க பல ஆண்டுகளானது.
இப்போது தமிழ்ச் சமுதாயத்தின் கட்டுப்பாடு உடைக்கப்பட்டு, கலப்புத் திருமணங்கள் அதிகமாகியுள்ளது. தமிழ்ப் பெற்றோர்களை பெரிதும் வருத்தமடையச் செய்யும் விஷயம் இது. இதனால், தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழந்து வருகின்றனர்.
பொருளாதாரம், வசதியான வாழ்க்கைக்காக வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்களது பாரம்பரிய பண்பாட்டு வாழ்விலிருந்து விலகிச் செல்கின்றனர்.
வயதான தமிழர்கள் பலர், சொந்தங்களிடமும் செல்ல முடியாமல் முதியோர் இல்லங்களுக்குள் முடங்க வேண்டியிருக்கிறது. ஆனாலும், இங்கிலாந்தில் முன்பிருந்த இனத்துவேஷம், இப்போது இல்லை என்பதால் தமிழர்களுக்கு பரவலான ஆதரவு இருக்கிறது.
நாடு கடந்தும் ஆட்சிகளை அமைத்த தமிழ்ச் சமூகம், இப்போது ஆட்சி, அதிகாரங்களை இழந்து நிற்கிறது. உலகம் முழுவதிலும் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழர்களுக்கென்று தனி நாடு எதுவுமில்லை. தமிழர்களின் நிலை பாதுகாக்கப்பட்டாலே நிச்சயமாக தமிழ் பாதுகாக்கப்படும்.
பாலா எஸ் பாலேந்திரா (ஆஸ்திரேலியா) சிட்னி நகர் மன்ற உறுப்பினர்:-
ஒரு காலத்தில் தமிழர்கள் குடியேற்றப்பட்டனர்; இப்போது குடி அகற்றப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல, 1983ல் இலங்கையில் இனக்கலவரம் ஏற்பட்டபோது, ஏராளமான தமிழர்கள் ஆஸ்திரேலியா சென்றனர். அகதிகளாகச் சென்ற அவர்களுக்கு ஆஸ்திரேலியா ஆதரவுக் கரம் நீட்டியது. ஒரு கண்டமே நாடாக இருக்கும் ஆஸ்திரேலியாவில் மொத்தமுள்ள நிலப்பரப்பில், 20 சதவீத இடத்தில்தான் மக்கள் வசிக்கின்றனர்.
அங்கு 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடியினர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இப்போது ஒரு சில பழங்குடியினரே உள்ளனர். அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில், தெய்வங்களின் பெயர்களில் தமிழ்ப்பெயர்கள் உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் அங்கே வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்தை இது வலுப்படுத்துகிறது. ஆஸ்திரேலியாவில், இப்போது ஏராளமான தமிழ்க் கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கோவில்கள் கட்டப்படுகின்றன; அங்குள்ள தமிழ்க் குழந்தைகளுக்கு தேவாரம், திருவாசகம் கற்றுத்தரப்படுகிறது. சிறுவர்கள் இப்போது நன்கு தமிழ் பேசத்துவங்கியுள்ளனர்.
இந்த கலப்படத்தைத் தடுக்கலாமே! கருத்தரங்கத்தின் இறுதியில் பேசிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாலேந்திரா, "மருந்துப் பொருட்களில் உள்ள கலப்படத்தையும், உணவுப் பொருளில் உள்ள கலப்படத்தையும் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல, தமிழ்த் தொலைக்காட்சிகளில் தமிழில் ஏற்பட்டுள்ள கலப்படத்தை ஏன் தடுக்கவில்லை என்று எங்களுக்கு வேதனையாகவுள்ளது. எங்களுடைய குழந்தைகள், அந்தத் தமிழைப் பார்த்து என்ன மொழி என்றே புரியாமல் தவிக்கின்றனர். அதற்கும் அரசு நல்லதொரு முயற்சியை எடுக்க வேண்டுமென்று வெளிநாட்டுத் தமிழர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்,'' என்றார்.
--
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 - கோவை
- 239 reads

