ட்ரூபாலின் முக்கிய உள் கட்டமைப்பு பதங்கள்

ட்ரூபால் புதிதாக கற்றுக்கொள்ளுபவர்கள் அதை கடினமாக பார்க்கும் நிலமை இருக்கிறது. இதற்கு ட்ரூபாலின் முக்கிய உள் கட்டமைப்புகள் சரிவர அறியாமையே காரணம். ட்ரூபாலின் கட்டமைப்பை சரியாக அறிந்துவிட்டால் மிக மிக எளிதாக ட்ரூபாலை கற்றுக் கொள்ளலாம் மேலும் பல விசயங்களை தாமாகவே உணர்நது கொள்ள இயலும். எனவே இப்பகுதி மிக மிக முக்கியமானதாகும்.

இங்கே முக்கியமான தகவல்கள் மட்டும் தரப்பட்டுள்ளது. இவைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கமாக பின் வரும் பகுதிகளில் காணலாம்.

உள்ளடக்கம் (Nodes/Content), உள்ளடக்க வகைகள் (Node/Content types)

இணைய தளத்தின் பல்வேறு பதிவுகளை உள்ளடக்கங்கள் (Node/Content) என்கிறோம்.

ஒரு தளத்தில் பக்கம், வலைப்பதிவு (blog post), கட்டுரைகள் (Articles), நூல் (Book page), வாக்குப்பதிவுகள் (Polls), செய்தி போன்று பல்வேறு பதிவு வகைகளை நாம் தேவைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ளலாம். இவ்வகை பதிவு வகைகள் நாமாகவோ அல்லது நீட்சிகளினாலோ உருவாக்கப்பட்டிருக்கும்.

பதிவிற்கு கருத்துகள் தேவையா?, பதிவுகள் இயல்பாக தளத்தில் வெளியிடப்பட வேண்டுமா? அல்லது நிர்வாகி சரிபார்த்து வெளியிடப்படுமா?, முதற்பக்கத்தில் ஏற்றப்பட வேண்டுமா?, பதிவில் இணைப்புகள் தேவையா? போன்ற பல அமைவுகள் ஒவ்வொரு பதிவு வகைகளுக்கும் கொடுத்து வைத்திருக்கலாம்.

ஏன் இவ்வாறு தனித்தனி பதிவு வகைகள் உருவாக்க வேண்டும் எனில் அவைகளை மேலாண்மை செய்வது எளிதாக இருக்கும். மேலும் கட்டுரைகள் எனில் ஆதாரங்கள், வேறு சுட்டிகள், சமையல் பதிவு எனில் தேவையான பொருட்கள், செய்முறை
என ஒவ்வொரு பதிவு வகைக்கும் என்று தனிப்பட்ட புலங்கள் (fields) அமைப்பது எளிதாக இருக்கும். இவை பற்றி வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

பகுப்புகள் (அ) பிரிவுகள் (Taxonomy), Vocabulary and Terms

மேற்சொன்ன பல பதிவு வகைகள் இருப்பினும் ஒரே வகை பதிவில் உட்பிரிவுகள் தேவைப்படும். உதாரணமாக செய்தி வகை பதிவில் அது அரசியல், சினிமா, கல்வி, பொது என பலவகை உட்பிரிவுகளை நிர்ணயிப்பது பகுப்புகள் எனலாம்.

இவ்வாறான பல பகுப்புகள் சேர்ந்தது சொல் தொகுதி என்கிறோம்.

இந்த சொற்குவியல் ஒவ்வொரு பதிவு வகைக்கும் தனித்தனியாகவோ அல்லது இணைத்தோ, ஒரே பகுப்பில் அதன் கீழ் பல பகுப்புகள், ஒரே பகுப்பிற்கு பல மேன் பகுப்புகள் என தளத்திற்கு ஏற்றப்படி உருவாக்கிக்கொள்ள முடியும்.

உதாரணமாக

செய்தி (பதிவு வகை)
கட்டுரை (பதிவு வகை)
சமையல் (பதிவு வகை)

சமையல் வகை (சொல் தொகுதி) (சமையல் பதிவு வகைக்காக)
- சைவம்
- அசைவம்

பதிவு வகை (சொல் தொகுதி) (செய்தி/கட்டுரை பதிவு வகைக்காக)
- அரசியல்
- கல்வி
- திரை
- வரலாறு

இவை போன்று பதிவு வகை மற்றும் பகுப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது இவைகள் உள் கட்டமைப்பு மட்டுமே. பயனாளருக்கு இவைகளை எவ்வாறு தளத்தில் கொடுக்க வேண்டும் என்பது தளத்தின் பயன்பாட்டைப் பொறுத்தது ஆகும்.

சுட்டி வழிகள் (URL Paths), பட்டிகள் (Menus)

ஒரே இணைய தளத்தில் இருக்கும் பல பக்கங்களின் வழிகளை அமைப்பது சுட்டி வழிகள் எனலாம், இவைகள் நீட்சிகளால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.
ட்ரூபாலின் இயல்பான சுட்டி வழிமுறையானது ‘q’ எனும் துணை அலகால் (Parameter) நிர்ணயிக்கப்படும்

உதாரணமாக
http://tamilnanbargal.com/?q=tamil
http://tamilnanbargal.com/?q=tamil/posts

என்பது போல அமைந்திருக்கும். இவைகளில் tamil மற்றும் tamil/posts இவைகள் இரண்டும் இரண்டு பக்கங்கள்.

இதே பக்கங்களை
http://tamilnanbargal.com/tamil
http://tamilnanbargal.com/tamil/posts

என்றும் அணுகலாம். இவைகளை தெளிந்த வழிகள் (Clean paths) எனலாம். இவ்வாறான தெளிந்த வழிகளை நிறுவுவது இணைய வழங்கியை (Web Server) பொறுத்தது. அதைப்பற்றி பின்பு விளக்கமாக காணலாம்.

சில சிறப்பு சுட்டி வழிகள் உள்ளது. அவற்றில் ஒன்று <front> என்பதாகும். வழிகளை கொடுக்க வேண்டிய இடத்தில் இவ்வாறு கொடுத்தால் அது தளத்தின் முதல் பக்கத்தை சுட்டும்.

user என்பது பயனாளரின் பக்கம்,
user/1 என்பது முதல் பயனர் பக்கம், user/2 என்பது இரண்டாவது பயனர் பக்கம் என்பது போல வரிசையாக வரும்.

node/[nid] என்பது உள்ளடக்க பக்கங்கள். node/1 என்பது முதல் பதிவின் பக்கம், node/2 என்பது இரண்டாவது பதிவின் பக்கம் என்பது போல வரிசையாக வரும். கவனிக்க வேண்டியது node/10 என்பது செய்தி வகையாகவும் node/11 என்பது கட்டுரை பதிவு வகையாகவும் இருக்கலாம்.

node/add என்பது புதிய பதிவை பதியும் வழி.

admin என்று வருவது எல்லாம் தள மேலாண்மைக்கான பக்கங்கள் ஆகும்.

இதில் பயனாளருக்கு அந்த பக்கத்தை அணுக அனுமதி இல்லை எனில் “அனுமதி மறுக்கப்படுகிறது” என ட்ரூபால் சொல்லிவிடும்.

இவ்வாறான சுட்டிகள் பலவற்றை சேர்ந்தது பட்டியல் (Menu) என்கிறோம்.

பல பட்டியல்களை நாம் தேவைக்கேற்ப உருவாக்கிக் கொள்ளமுடியும். இதை பின்பு காண்போம்.

Blocks & Regions (இவைகளுக்கு சரியான தமிழாக்கம் தரவும்)

ஒரு முழு பக்கத்தை பார்த்தால் அவை பல மறைமுகமாக பகுதிகளாக பிரிக்கப்பட்டிருப்பதை காணலாம். முத்திரை (Logo) பகுதி, தலைப்புப்பகுதி, கீழ்ப்பகுதி, இடதுபக்கம், வலது பக்கம், முதன்மை உள்ளடக்கப் பகுதி என பல பகுதிகள் இருக்கும்.

இவ்வாறு ஒவ்வொரு Regions களிலும் பலவகை Blocks இருக்கக் காணலாம். அந்த Blocks, உள்ளடக்கமாகவோ, பட்டிகளாகவோ, படிவங்களாகவோ, படங்களாகவோ அல்லது வெறும் எழுத்துக்களாகவோ எந்தவகையாகவும் இருக்கலாம்.

இந்த blocks எந்த பக்கத்திற்கு மட்டும் வரவேண்டும் என்பது போன்ற அமைவுகள் அதன் மேலாண்மை பக்கத்திற்கு சென்று மாற்றியமைக்க முடியும்.

(வலைப்பூவில் Widget என்று நாம் பயன்படுத்துவது இங்கே blocks எனக் கொள்ளலாம்)

Region களை நிர்ணயிப்பது வார்ப்புரு வடிவமைப்பு தீம் ஆகும்.

நீட்சிகள் ( Modules ) & வார்ப்புரு (அ) வடிவம் (Themes / Templates)

நீட்சிகள் என்பது ட்ரூபாலுக்கு ஒரு வசதியை ஏற்படுத்த அல்லது ஏற்கெனவே இருக்கும் வசதியை மாற்ற ஏற்படுத்தப்பட்ட ஒரு தனிநிரல் தொகுப்பு. ஒரே நீட்சி பல வசதிகளையும் பல வசதிகளை ஒரே நீட்சியும் கொடுப்பதற்காக எழுதப்பட்டிருக்கலாம்.

தீம் அல்லது வார்ப்புரு வடிவம் என்பது மேல் சட்டை போல எனலாம். தகவல்களில் எதை எந்த நிறத்தில் எந்த இடத்தில் எவ்வாறு பயனாளர்களுக்கு காட்ட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் வடிவமைப்பு ஆகும். பார்வையாளர்களை கவர பல நிறங்களில் பலவிதமாக இவைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்

பயனர் (Users), பாத்திரங்கள் (Roles) & அனுமதிகள் (Permissions)

இணைய தளத்தினை பயன்படுத்துவோர்கள் பயனாளர்கள்.

இவர்களை இருவகைகளாக பிரிக்கலாம்.
1. பெயரிலாதோர் (Anonymous)
2. அனுமதிக்கப்பட்ட பயனார்கள் (Authenticated Users)

பெயரிலாதோர் என்போர்கள் தளத்தினுள் நுழையாமல் பார்வையிட்டு செல்வோர்கள். இவர்களது பயனர் எண் 0 ஆக இருக்கும்.

தளத்தில் நுழைந்து அதை பயன்படுத்தும் அனுமதிக்கப்பட்ட பயனார்களை பல வகைகளில் நாம் பிரிக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.

உதாரணமாக நாம் ஒரு பத்திரிகை தளம் வைத்திருக்கிறோம் எனில் அதில் ஆசிரியர்கள், நிரூபர்கள், விளம்பரம் தருவோர்கள் வாடிக்கையாளர்கள், தள வடிவமைப்பாளர்கள் என பயனர்களை பல வகைப்படுத்த வேண்டிய நிலை வரும். இந்த பயனர் பிரிவுகளை பாத்திரங்கள் (Roles) என்கிறோம்.

இவ்வகை பிரிவுகளில் ஒருவரே பல பாத்திரத்தை ஏற்றுக்கொள்ள முடியும். அதாவது ஒருவரே நிரூபராகவும், ஆசியராகவும் இருக்க முடியும். அதை ட்ரூபால் அனுமதிக்கும். மேலும் பல நிரூபர்கள், பல ஆசிரியர்கள் இருப்பது போல பல பயனாளர்கள் ஒரே பாத்திரத்தை கொண்டிருக்க முடியும்.

இவ்வாறு ஒவ்வொரு பயனர் நிலைக்கும் சில செயல்களை செய்ய மட்டும் அனுமதி இருக்கும். ஆசிரியருக்கு எல்லாப் பதிவுகளை மாற்றம் செய்யும் உரிமையும் நிரூபருக்கு அவரது பதிவுகளை மட்டும் மாற்றம் செய்ய உரிமையும் கொடுப்பதை நாம் அனுமதிகள் என்கிறோம்.

இவ்வாறு எத்தனை வகைப்பட்ட பாத்திரங்கள் இருந்தாலும் அவை அனுமதிக்கப்பட்ட பயனார்கள் (Authenticated Users) வகையை சேர்ந்ததே. அதனால் அனுமதிக்கப்பட்ட பயனார்களுக்கு ஒரு பதிவை பதிய அனுமதி இருக்கிறது எனில் அது மற்ற எல்லா பாத்திரங்களுக்கும் உரித்தாகும்.

இவர்களைத்தவிர முதன் முதலில் நாம் உருவாக்கும் பயனர், தளத்தின் நிர்வாகியாக இருப்பார். அவருக்கு எல்லா உரிமையும் தானாகவே இருக்கும். இவரது உரிமைகளை தளத்தின் மூலம் நேரடியாக கட்டுப்படுத்த இயலாது. இவரது பயனர் எண் 1 ஆகும்.

உள்ளீட்டு வடிகட்டிகள் (Input Filters)

கணினி உலகில் சில விஷமிகள் தளத்தில் பதிவுகளில் கணினி நிரல்களை உள்ளிணைத்து தகவல் திருட்டுகளை நிகழ்த்திவிடுவார்கள். இவ்வாறான விஷமிகளின் முறைகள் பலவிதமாக உள்ளது. தளத்தின் பாதுகாப்பிற்காக பயனர்கள் தளத்தில் பதியும் உள்ளீடுகளை வடிகட்டிகட்ட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. வடிவமைப்பாளர்கள் நிரல்களை எழுத அனுமதிக்க வேண்டும். ஆனால் சாதாரண பயனாளர்கள் சில நிரல்களை பதிந்தால் அதை வடிகட்ட பல வடிகட்டிகள் உள்ளிணைக்கப்பட்டுள்ளது.

இம்மாதிரி உள்ளீட்டு வடிகட்டிகள் பாதுகாப்பிற்காக மட்டுமல்லாமல் வேறு பல பயன்பாடுகளுக்காகவும் பயன்படுகிறது. அவைகளில் சில

  • தவறான நிரல்களை சரியாக்க, தேவையற்றவற்றை நீக்க
  • இணைய முகவரிகளை மற்றும் மின்னஞ்சல் முகவரியை சுட்டிகளாக மாற்ற, அல்லது நீக்க
  • Youtube வீடியோ முகவரியை மட்டும் கொடுத்தால் அவற்றை பக்கத்திலேயே நிகழ்படமாக காட்ட
  • Flickr பட முகவரியை கொடுத்தால் அதை பக்கத்திலேயே படமாக உள்ளிணைத்து காட்ட
  • அரட்டை குறியீடுகளை (smiles) களை கொடுத்தால் அவற்றை சிறு படங்களாக காட்ட

இவ்வாறு பலவிதங்களிலும் பயன்படும்.

படிவங்கள் (Forms)

தளத்தில் உள்ளீடு செய்யும் முறைகள் இருப்பது அதிகமாக எல்லாமே படிவங்களாக இருக்கும். உதாரணமாக பயனர் நுழைவு படிவம், புதிய பதிவை பதியும் படிவம், கடவுச்சொல்லை மாற்றும் படிவம், தொடர்பு படிவம் மேலும் பல.

இவ்வாறான படிவங்கள் எல்லாமே ட்ரூபாலினாலோ அல்லது நீட்சிகளினாலோ நிரல்களால் உருவாக்கப் பட்டிருக்கும்.
இவ்வாறான படிவங்கள் நிரப்பப்பட்டு அதை சமர்ப்பிக்கப்படும் போது அவைகள் ட்ரூபாலினால் சரிபார்க்கப்பட்டு படிவத்தைப் பொறுத்து அதன் அடுத்த கட்ட செயல்கள் நடைபெறும்.

செயல் தூண்டிகள் (Trigger) & செயல்கள் (Actions) or Rules

ஒரு செயல் நடைபெறும் போது சில கட்டளைகளுக்குட்பட்டு வேறு செயல்களை தூண்டிவிடுவது செயல் தூண்டிகள் எனலாம்.

உதாரணமாக

எப்போது : ஒருவர் பதிவை/கருத்தை பதியும் போது
எவ்வாறு இருந்தால் : பதிவில் தேவையில்லாத வார்த்தைகள் இருந்தால்
நடவடிக்கை : வெளியிடாமல் தடுப்பது, இதைப்பற்றி நிர்வாகிக்கு தெரிவிப்பது.

தானியங்கி (CRON)

தானியங்கி (Crontab) என்பது யூனிக்ஸ் (UNIX) குடும்ப இயங்கு தளங்களில் காணப்படும் தானியங்கி உத்தி ஆகும்.
விண்டோஸ் தளத்தில் இது Scheduler எனப்படும்.
இந்த வகை தானியங்கி ட்ரூபாலில் சில செயல்களை அமைவுகளுக்கேற்ற வகையில் தானாக செயல்படுத்த உதவும். உதாரணமாக தினமும் பனாளர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்புதல். இதனை செயல் படுத்த cron.php என்பது முகவரி ஆகும்.

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)