1968இல் இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் நடந்த்தையொட்டி முதலமைச்சராக இருந்த அண்ணா, இரண்டு அமைப்புகளை உருவாக்கினார். தமிழ் நாட்டில் அன்றிருந்த மூன்று பல்கலைக்கழகங்களிலும் திருக்குறள் இருக்கை ஒன்றை நிறுவினார். அதற்குத் தமிழ்நாடு அரசு நிதி வழங்கியது.

இரண்டாவது அமைப்பான உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், கருத்தரங்குகள், பயிலரங்குகள், நூல் வெளியீடு, அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் என்பனவற்றின் வாயிலாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழியல் வளர்ச்சியில் இதன் பங்களிப்பைப் புறக்கணித்துவிட முடியாது.

இன்றையச் செம்மொழி மாநாட்டையொட்டி சில நிரந்தரத் திட்டங்களைத் தமிழக அரசு மேற்கொள்வது தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பயன்தரும். இத்திட்டங்களை நடை முறைப்படுத்தப் புதிதாக அமைப்புகள் எவற்றையும் உருவாக்க வேண்டிய அவசியமில்லை.

ஏற்கனவே செயல்பட்டு வரும்,

1) தமிழ் வளர்ச்சிக் கழகம்
2) தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை
3) உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
4) தமிழ்ப் பல்கலைக் கழகம்
5) சரஸ்வதி மகால் நூலகம்
6) தமிழ்நாடு அரசின் ஆவணக் காப்பகம்

ஆகிய அமைப்புகளின் வாயிலாக, இத்திட்டங்களை எளிதாக மேற்கொள்ள முடியும். வேண்டியதெல்லாம், அந்தந்த்த் துறையில் தக்கவர்களைத் தேர்ந்தெடுத்தலும்,

அவர்கள் உருவாக்கும் நூல்களை அச்சிட்டு வெளியிடுவதும் தான்.

அகராதிகள்

ஒரு மொழியின் பயன்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் அகராதிகள் அடிப்படைத் தேவையாக அமைகின்றன. நிறைவான ஆங்கிலத் தமிழ் அகராதி இன்று நம்மிடையே இல்லை. ஏ.சி.செட்டியாரது அகராதி உருவாகி நாற்பது ஆண்டுக் காலம் கழிந்துவிட்டது. அதன் திருத்திய பதிப்பு வெளியாகவில்லை. வெறும் மறுபதிப்புகள் மட்டுமே வெளியாயின. இன்று அதுவும் கிட்டவில்லை.

தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அருங்கலைச்சொல் அகரமுதலி அருளியின் அருமையான படைப்பு. இதுவும் இன்று விற்பனையில் இல்லை. வையாபுரிப் பிள்ளையின் லெக்சிகன் திருத்தம் எதுவுமின்றி மறுபதிப்பை மட்டும் கண்டு, இன்று அதுவும் கிட்டவில்லை.

தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1985இல் வெளியிட்ட தமிழ் – தமிழ் அகரமுதலி மறுபதிப்பைக் காணவில்லை. செம்மொழி மாநாட்டையொட்டி, இந்நூலையும் அருளியின் அகரமுதலியையும் அடக்கவிலைப்பதிப்பாக வெளியிடலாம். இதில் அரசுக்கு எவ்விதப் பொறுப்புமில்லை. மேற்கூறிய நிறுவனங்களுக்கு அச்சிடுவதற்கான நிதி வழங்கினால் மட்டும் போதும்.

ஏனைய அகராதிகள் திருத்திய பதிப்பாக வர அரசு முன் கையொடுக்க வேண்டும். இவை தவிர மானிடவியல், உளவியல் என ஒவ்வொரு அறிவுத்துறை சார்ந்த அகராதிகளை உருவாக்கி வெளியிடத்திட்டமிட வேண்டும். ஏற்கெனவே தமிழ்ப் பல்கலைக்கழகம் இத்தகைய அகராதிகள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.

தமிழில் ஒரு குறிப்பிட்ட சொல் எந்த நூற்றாண்டில் பயன்பாட்டிற்கு வந்த்து என்பதைத் தெரிவிக்கும் வரலாற்று முறைப் பேரகராதி ஒன்று இன்னும் உருவாகவில்லை. சாந்தி சாகனா அறக்கட்டளை இம்முயற்சியில் ஈடுபட்டு மூன்று தொகுதிகளுடன் தன் பணியை நிறுத்திக் கொண்டது.

வரலாற்று முறையிலான அகராதி என்பது ஒரு மொழியில் நிகழ்த்தப்படும் ஆய்வுகளுக்கு உறுதுணையாய் அமையும் தன்மையது. இதுநாள் வரை இம்முயற்சியில் அரசோ, அரசு சார்ந்த கல்வி அமைப்புகளோ ஈடுபடாத்து வியப்பையளிக்கும் செயலாகும்.

கலைக்களஞ்சியம்

சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாகத் தொடங்கி அறுபதுகளில் முற்றுப் பெற்ற கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா) தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்த ஒன்றாகும். இந்தியாவின் தேசிய மொழிகளில் தமிழில்தான் முதல் முறையாக்க் கலைக்களஞ்சியம் வெளியானது. இன்று அதன் படிகள் எவையும் இல்லை. மேலும் சமூக வளர்ச்சியின் விளைவாக ஆண்டுதோறும் நிகழ்ந்த கண்டுபிடிப்புகளும், மாறுதல்களும் இடம்பெற வேண்டியுள்ளது.

இத்தகைய நிலையில் கலைக் களஞ்சியம் ஒன்றை மீண்டும் திட்டமிட்டு வெளியிட வேண்டயுள்ளது. ஆனால், இது தொடர்பாக எவ்வித முயற்சியும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அதேபோழ்து தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட வாழ்வியல் களஞ்சியம், அறிவியல் களஞ்சியம் ஆகியன பாராட்டத்தக்க நல்முயற்சியாக விளங்குகின்றன என்றாலும் இவற்றின் செய்திகளை மேலும் புதுப்பிக்க வேண்டியுள்ளது.

செம்பதிப்புகள்

நமது பாரம்பரியச் சொத்தாக விளங்கும் சங்க நூல்களுக்கு அவற்றில் இடம் பெற்றுள்ளபடி வேறுபாடுகளை முடிவு செய்து தரமான செம்பதிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஒரு மொழியில் உருவான செவ்விலக்கியங்களுக்கு ஆய்வு முறையில் உருவாக்கப்பட்ட செம்பதிப்பு அவசியமான ஒன்று “எங்கள் தமிழ் உயர்வென்று சொல்லிச் சொல்லி நாள் பல கழித்தோம். குறை களைந்தோமில்லை“ என்று பாரதிதாசன் பாடினார். இன்றுவரை நம் சங்க இலக்கியங்களுக்குச் செம்பதிப்பில்லாக் குறை நீங்கவில்லை.

வரலாற்றாவணங்கள் பதிப்பு

தற்போதைய வேகத்தில் மத்திய அரசின் தொல்பொருள் துறை செயல்பட்டால் இந்த நூற்றாண்டில் கூடத் தமிழ்க் கல்வெட்டுக்கள் அனைத்தும் நூல் வடிவம் பெறுமா என்பது ஐயத்திற்குரியது. ஆங்கிலேயர் காலத்திலிருந்து படியெடுக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகளில் 55% கல்வெட்டுக்கள் இன்னும் வெளிவர வேண்டியுள்ளதாக வரலாற்றறிஞர் சுப்புராயலு கட்டுரை ஒன்றில் எழுதியுள்ளார்.

இந்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையை இனியும் நம்பிப் பயனில்லை என்ற நிலையில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மாவட்ட வாரியாக்க் கல்வெட்டுக்களைப் பதிப்பித்து நூலாக வெளியிட்டு வருகிறது. இம்முயற்சியை விரைவுபடுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு நிதி உதவி வழங்குவதுடன் இத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அறிஞர்களின் உதவியையும் ஒத்துழைப்பையும் பெறுவதற்கு முயல வேண்டும்.

தஞ்சை மராத்தியர் ஆட்சிக் காலத்தில் மோடி ஆவணங்கள் பல அரிய ஆவணங்கள் பல அரிய வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ளன. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பணியாற்றிய வி.ஐ.சுப்ரமணியம் மோடி எழுத்துக்களைப் படிக்க, சிலரைத் தேர்ந்தெடுத்து உதவித் தொகையும் வழங்கினார். பின்னர், அவர்களைப் பணியமர்த்தி மோடி ஆவணங்களை மூன்று தொகுதிகளாக வெளியிட ஏற்பாடு செய்தார். இதுவரை வெளிப்படாத வரலாற்றுச் செய்திகளை இம்மூன்று தொகுதிகளும் தம்மகத்தே கொண்டுள்ளன. ஆனால், இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகள் வெளிவரும் அளவுக்கு ஆவணங்கள் இருக்கும் நிலையில் இம்முயற்சி நின்று போய்விட்டது.

இன்றுவரை தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் வரலாறு தொடர்பான ஆவணங்கள் வெளிக்கொணரப் படவில்லை. குறிப்பாக 16வது நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியக் காலனியமும் 17வது நூற்றாண்டில் டச்சுக் காலனியமும் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகதியில் நிலை கொண்டன. இது தொடர்பான வரலாற்றாவணங்கள் போர்ச்சுக்கீசிய மொழியிலும் ஸ்பானிய மொழியிலும் டச்சு மொழியிலும் உள்ளன.

புனித சவேரியார் எழுதிய கடிதங்களின் மொழிபெயர்ப்பை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, சவேரியார் கடிதங்கள் என்ற பெயரில் சிறு நூலாக வெளியிட்டது. இச்சிறு நூலிலேயே பல அரிய வரலாற்றுச் செய்திகள் மொழிபெயர்க்கப்படாமையால் நமது வரலாற்றாய்வில் புதிய உண்மைகளை வெளிக்கொணர முடியவில்லை. சேசு சபைத் துறவியர் பிரெஞ்சு மொழியில் எழுதிய கடிதங்களும் மொழிபெயர்க்கப்படவில்லை. வரலாற்றாய்வாளர் சத்தியநாதையர் தாம் எழுதிய மதுரை நாயக்கர் வரலாற்று நூலில் இக்கடிதங்களை ஓரளவுக்கு மொழிபெயர்த்துள்ளார். இத்தகைய கடிதங்கள் வெளியாகும் போது பல அரிய வரலாற்று உண்மைகள் தெரிய வரும்.

ஆங்கிலக் காலனிய ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த விடுதலை இயக்கம் தொடர்பான ஆவணங்களை இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் ஆண்டு வாரியாக வெளியிட்டு வருகிறது. கேரள அரசு, வைக்கம் போராட்டம் தொடர்பான அரசு ஆவணங்களைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. இது போன்ற ஆவணத் தொகுப்புகளை வெளியிட தமிழ்நாடு அரசின் ஆவணக் காப்பகம் முன்வர வேண்டும்.

தொல்லியல் ஆய்வு

தமிழ்நாட்டின் வரலாற்றுப் பாரம்பரியத்தை வெளிக் கொணர உதவும் தொல்லியல் ஆய்வும், ஆழ்கடல் ஆய்வும் உரிய நிதியில்லாமல் ஒரு கட்டத்திற்கு மேல் புதிய கண்டு பிடிப்புகளை வெளிக்கொணர இயலாத நிலையில் தள்ளாடி நிற்கின்றன. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறைக்கும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நீரடி அகழ்வாய்வு மையத்திற்கும் சிறப்பு நிதி வழங்கி அவற்றின் ஆய்வுகள் தொடரத் துணைபுரிய வேண்டும்.

இந்திய மத்திய அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வைத் தொடர்ந்து நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

நிலப்பட நூல்கள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பயன்பாட்டிற்குரியதாக மட்டுமே நிலப்பட நூல்கள் (Atlas) தமிழ்நாட்டில் கருதப்படுகின்றன. இந்த எல்லையைத் தாண்டி தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும், தமிழாய்வின் வளர்ச்சிக்கும் நிலப்பட நூல்கள் தேவைப்படுகின்றன.

மாவட்ட அளவிலான பெரிய நிலப்படங்களும் மாவட்டங்களில் உள்ள வட்டங்களின் நிலப்படங்களும் தமிழ்நாடு அரசின் நில அளவைத் துறையினால் சுவரொட்டி அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இது ஒரு பக்கமிருக்க தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள், வட்டங்கள் முக்கிய நகரங்கள் ஆகியனவற்றின் வரைபடங்கள் தொகுக்கப்பட்டு ஒரே நிலப்பட நூலாக வெளியிடப்பட வேண்டும். கூகுள் இணையத்தளம் இவற்றையெல்லாம் வெளியிட்டுள்ள அறிவுச் சூழலில் மிக எளிதாக இத்தகைய நிலப்பட நூலை வெளிக் கொணர்வதில் சிரம்ம் எதுவுமில்லை.

பல்வேறு கிளை மொழிகள் தமிழில் உள்ளன. இவை பேசப்படும் பகுதிகளைச் சுட்டிக்காட்டும் வகையிலான கிளை மொழி நிலப்பட நூலும், ஆதிவாசிகள் வாழும் பகுதிகளைச் சுட்டிக்காட்டும் இனவரைவியல் செய்திகளுடன் கூடிய நிலப்பட நூலும் வெளிவருவது அவசியமான ஒன்று.

இதுபோன்றே தமிழ்நாட்டில் தொல்லியல் சான்றுகள் மற்றும் கலைச் செல்வங்கள் உள்ள பகுதிகளை அறிமுகம் செய்யும் வகையிலான நிலப்பட நூல்களும் தேவை.

ஆய்விதழ்கள்

ஒரு குறிப்பிட்ட அறிவுத் துறையின் வளர்ச்சியில் அத்துறை சார்ந்த ஆய்விதழ்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. புதிய ஆய்வுகளை வெளிப்படுத்தவும், புரிந்து கொள்ளவும் அத்துறை சார்ந்த ஆய்விதழ்கள் துணை நிற்கின்றன. பண்டைய தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்வோர், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப் பொழில், செந்தமிழ் என்ற ஆய்விதழ்களை இன்றும் தேடி அலைவது தமிழாய்வாளர் பலருக்கும் தெரிந்த உண்மை.

இத்தகைய ஆய்விதழ்களை ஆதாய நோக்கில் நடத்தும் அறிவுச் சூழல் இன்றைய தமிழகத்தில் இல்லை. உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை ஆகியன தட்டுத் தடுமாறி ஆய்விதழ்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன.

தமிழ்நாட்டில் ஏனைய பல்கலைக் கழகங்கள் நடத்தும் ஆய்விதழ்களில் தமிழ் மொழிக்கும், தமிழ் வரலாற்றிற்கும் ஓரளவே இடம் ஒதுக்கப்படுகிறது. ஏனைய அறிவுத் துறைச் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கும் இடம் தேவை என்பதால், இதைக் குறைகூற முடியாது. சில பல்கலைக் கழகங்கள் ஆடிக்கு ஒரு முறை, அமாவாசைக்கு ஒரு முறை என்பது போல் அவ்வப்போது ஆய்விதழ்களை ஒரு சடங்கு போல் வெளியிட்டு அமைதியடைகின்றன.

ஆவணம், வரலாறு, பழங்காசு, நா.வா.வின் ஆராய்ச்சி, புதிய ஆராய்ச்சி, பனுவல், சமூக விஞ்ஞானம் South India Folklore என்ற பெயர்களில் ஆர்வம் கொண்ட ஆய்வாளர்களால் நடத்தப்படும் இதழ்களுக்கு அரசின் நிதி நல்கையோ, விளம்பர உதவியோ கிட்டுவதில்லை. அரசு நூலகங்களுக்குக் கூட இவற்றை வாங்குவதில்லை. கருத்துப் பரிமாற்றத்திற்குத் துணை நிற்கும் ஆய்விதழ்கள் வெளிவருவதில் அரசின் ஒத்துழைப்பு மிகவும் தேவை.

செம்மொழி மாநாட்டையொட்டி இத்தகைய ஆய்விதழ்களுக்கு நிதி வழங்க நிரந்தர வைப்புத் தொகை ஒன்றை உருவாக்கலாம். அல்லது ஆண்டிற்கு சில அரசு விளம்பரங்களைத் தருவதற்கு ஒழுங்கு செய்யலாம். அரசு உயர்கல்வி நிறுவனங்களும், நூலக ஆணைக் குழுவும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலாவது இத்தகைய ஆய்விதழ்களை வாங்க ஆணையிடலாம்.

விமரிசையாக மாநாட்டினை நடத்துவதற்குச் செலவிடும் தொகையில் ஒரு சிறு அளவை உண்மையான நிதி வசதி இல்லாத மூத்த தமிழ் அறிஞர்களுக்கும் வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கும், மொழியியல் ஆய்வாளர்களுக்கும், கலை விமர்சகர்களுக்கும் வழங்கினால் பல நல்ல ஆய்வுகளை வெளிக் கொணர அவ்வுதவி துணை நிற்கும்.

--
பேரா. ஆ.சிவசுப்பிரமணியன்
தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
வ.உ.சி. கல்லூரி,
தூத்துக்குடி, தமிழ்நாடு

0
Your rating: None