எதற்காக இந்த "மகளிர் தினம்" வந்தது?
பெண்களைப் பற்றி தற்போது உலக அளவில் சொல்லப்படும் செய்திகளை ஆராய்ந்து பார்த்தால் நான் எதற்காக இந்தக் கேள்வியை கேட்டேன் என்ற ஒரு உண்மை புலப்படும்.
பெண் அடிமைத்தனம் எங்கு இருக்கின்றதோ அங்குதான் பெண் சுதந்திரம் மற்றும் பெண்கள் எழுச்சி தேவைப்படுகிறது. அதற்காக போராட ஒருநாள் தேவைப்படுகிறது.
அப்படி பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆண்களுக்கு நிகரான அவர்களுக்கு சமஉரிமையை மையமாக வைத்து அமெரிக்காவில் கி.பி. 1909-ல் அமெரிக்க சோசலிஸ்ட் கட்சியினர் முதல் முதலாக மகளிர் தினத்தை பிப்ரவரி மாதம் 28ம் தேதி கொண்டாடினர்.
இதன் தொடர்ச்சியாக 1911 ஆண்டு மார்ச் 19 அன்று ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றம் சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அரசு அலுவலகங்கள் முன் திரண்டு வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் பெண்களுக்கு சமஉரிமை அளிக்கவேண்டும் எனப் போராடினார்கள்.
இதனால் ஏற்பட்ட கிளர்ச்சியினால் ஜக்கியநாடுகள்,ரஷ்யா போன்ற நாடுகளில் வேறுபட்ட நாட்களில் 1917 வரை பெண்களுக்கு உரிமை வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வந்தன.
1917-க்குப் பின் உலக மகளிர் அமைப்புகள் எல்லாம் ஒன்று கூடி மகளிர்தினத்தை
மார்ச்-8 என்று கட்டமைத்து அறிவித்தனர்.அன்று முதல் உலக மகளிர் தினம் ஒவ்வொரு நாடும் உலகம் முழுவதும் மார்ச் 8 -ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஒழுக்கம், பாரம்பரியம், பண்பாடு என மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியா போன்ற நாட்டிலேயே பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வரும் வேளையில் மகளிர் தினத்தை கொண்டாட இருக்கும் பெண்சமுதாயம் மட்டுமல்லாமல் அவர்களை சார்ந்திருக்கும் ஆண்களும், இப்போதும் பெண்அடிமைத்தனத்தைப் பற்றியும்,ஆணாதிக்கத்தை பற்றியும் பேசும் மாமனிதர்கள் வெட்கித் தலைகுனியத்தான் வேண்டும்.
ஆண்களுக்கு நிகராக என்று சொல்வதை விட ஆண்களை விட ஒருபடி மேலே போய் எல்லா வகையிலும் தவறும் செய்யும் பெண்களின் எண்ணிக்கை உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
சிகரெட் பிடிப்பதில் உலக அளவில் இரண்டரை கோடி என்ற எண்ணிக்கையில் அமெரிக்க பெண்கள் முதலிடத்தில் உள்ளனர். இரண்டாவதாக உள்ள சீனாவில் 1.3 கோடி பெண்களும், மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பெண்கள். 1.1 கோடி பேர் புகை பிடிக்கின்றனர்.(இது போன்ற விஷயங்களில் மட்டும் தான் இந்தியா முன்னணியில் இருக்கும்..!)
பாகிஸ்தானில் 30 லட்சம் புகைப்பிடிக்கும் பெண்கள் இருப்பதாகவும் கடைசியாக அந்த நாடு 20வது இடத்தில் உள்ளது.
"புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள இந்திய பெண்கள், மற்ற நாட்டு பெண்களை காட்டிலும் எட்டு ஆண்டுகள் முன்னதாகவே இறந்து விடுகின்றனர்".உலகளவில் ஒரு நாளைக்கு 25 கோடி பெண்கள் புகைப்பிடிக்கின்றனர்
இது அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி கழகம் மற்றும் உலக நுரையீரல் சிகிச்சை அமைப்பு இணைந்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கை.
அதே போல் உலக அளவில் மது அருந்தும் பெண்களின் சதவீதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு (W.H.O) இந்தியாவில் குடிப்பழக்கம் பற்றி எடுத்த ஆய்வில் கவலை கொள்கிறது.
இதில் எங்கே இருக்கிறது பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள்?
இளைஞர் நீதி வாரியம் என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் பிரிட்டனில் திருட்டு, ரகளை, அடிதடி, முறைகேடு போன்ற குற்றங்களில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதே வேகத்தில் சென்றால், இந்த விஷயத்தில் பெண்கள் ஆண்களை மிஞ்சி விடுவார்கள்.கடந்த ஆண்டு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்களில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில், குற்றங்களில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், குற்றங்களில் ஈடுபடும் ஆண்களின் எண்ணிக்கை 2 சதவீதம் குறைந்துள்ளது. திருட்டு, கொடூரமாகத் தாக்குதல், பொது இடங்களில் முறைகேடாக நடத்தல்,மற்றவர்களின் பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்படுதல் போன்ற குற்றங்களில் தான் பெண்கள் அதிக அளவில் ஈடுபடுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் எங்கே இருக்கிறது ஆணாதிக்கம்?
செக்ஸ் விஷயத்தில் பெண்களை ஆண்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், 24 சதவீத இளம் பெண்கள், 15 வயதை அடையும் முன்னரே திருமணத்துக்கு முன்பாக வேறொருவருடன் உடலுறவு கொண்டுள்ளனர். ஆனால், இளைஞர்கள் 9 சதவீதம் பேர் தான் திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துள்ளனர்.திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவு குறித்து இந்தியாவில் தேசிய அளவில் நடத்தப்பட்ட சர்வேயில் இந்த திடுக்கிடும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் எங்கிருந்து வந்தது பெண் அடிமைத்தனம்?
ஊடகங்களில் ஸ்டவ் வெடித்து பெண் கொலை, கிணற்றில் தள்ளி பெண் கொலை மாமியார் கொடுமையால் மருமகள் தற்கொலை என்ற காலம் மாறி, இப்போது இரட்டைக் கொலையில் சதி திட்டம் தீட்டிய பெண் சிக்கினார், துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற வழக்கில் கள்ளக்காதலி சிக்கினாள், தோழியை எரித்துக் கொன்று காதலனுடன் தப்பியோடிய மாணவி சிக்கினார் என்றுதான் ஊடகங்களில் செய்திகள் நிரம்புகின்றன.
"கடந்த 2005 ஆம் ஆண்டில் செக்ஸ் விஷயத்தில் அவரவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். திருமணத்துக்கு முன்போ, பின்போ எப்போது செக்ஸை வைத்துக் கொண்டாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்று திருமணத்துக்கு முன் செக்ஸ் விவகாரத்தில் குஷ்புவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தொனியில் பேசினார் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா.
ஆனால் இன்று வரை இதைப் போன்ற விஷயத்தை எந்த ஒரு ஆணும் உலக அளவில் பேசவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதில் எங்கே நசுக்கப்பட்டுள்ளது பெண் கருத்து சுதந்திரம்?
ஆண்களுக்கு சரிசமமாக எல்லாத் துறைகளிலும் பெண்களும் வளர வேண்டும் என்று மகாகவி பாரதி சொன்னதை தவறாக புரிந்து கொண்டதின் விளைவா இது?
* பெண்கள் எப்பொழுதும் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
* பெண்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிக்கத் துணிவு கொள்ள வேண்டும்.
* பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜையறையில் திருவிளக்கேற்றி வைக்க வேண்டும்.
* பெண்கள் இரவில் விளக்கு வைத்தபின்பு அழக்கூடாது.
* திருமணமான பெண்கள் கைகளில் வளையல் அணியாமல் உணவு பரிமாறக் கூடாது.
* சுமங்கலிப் பெண்கள் நெற்றியில் குங்குமத் திலகமிட்டுக் கொள்வது அவசியம்.
* வீட்டிற்கு யாரும் சுமங்கலிகள் வந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்பதுடன் வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மஞ்சள் இவற்றுடன் குங்குமமும் கொடுக்க வேண்டும்.
இது இந்து மதம் சொல்லும் பெண்களுக்குரிய கடமைகள்.இந்த பெண்களுக்கே உரிய கடைமைகளை செய்யும் பெண்கள் நூறில் எத்தனை பேர்கள் இப்போது இருக்கிறார்கள்?
ஆண்களுக்கென்று சில கடமைகளும்,நியதிகளும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற விதி இருப்பது போல பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விதிகளும் இருக்கிறது,அதை எத்தனை பெண்கள் இன்றைக்கு பின்பற்றுகிறார்கள்?
ஆனால் நாம் பெண் அடிமைத்தனம்,பெண்களுக்கு எதிரான வன்முறை என்று சொல்லி சொல்லியே பெண்களுக்கு அளவுக்கு அதிகமான சுதந்திரத்தை கொடுத்து விட்டோம்.
ஆமாம்,உலக அளவில் ஆண்களை விட பெண் குற்றவாளிகள் தான் அதிகரித்து வருகிறார்கள் என்ற தகவல் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.
ஆகஸ்ட் 2001 ஆண்டு,மும்பை மாநகரம்!அங்கு இருக்கும் ஒரு புகழ்மிக்க கல்லூரி 'பம்பாய் தேசியக் கல்லூரி',அந்தக் கல்லூரியில் படிப்பவர் சபாநட்வார் என்றொரு மாணவி. முதுநிலை பட்டப்படிப்பு மாணவியான அவர் அந்த முதுநிலை பட்டப்படிப்பின் இறுதியில் ஏதேனும் ஒரு தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தி அவர் அறிக்கை தர வேண்டும்.
இந்த மாணவி ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட தலைப்பு :தன்னோடு படிக்கும் சக மாணவிகளின் நடவடிக்கைகள்? அவருடைய களஆய்வில் அவர் எடுத்து வந்த குறிப்புகள் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.ஆமாம்,அவர் தன்னோடு பயின்ற சக மாணவிகள் பலர் பணத்திற்காக தங்கள் இளமையை விற்பனை செய்கின்றார்கள் என்பதை அறிந்தார். இது ஏன்? என ஆராய்ந்தார். அப்போது தான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
இந்த மாணவிகள் மட்டுமல்லாமல் பல குடும்பப் பெண்களும் இதே போல் அமங்கலமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்ற செய்தி தெரிய வந்தது. இதை செய்யும் பெண்கள் படித்தவர்கள் அறிவுடையவர்கள். அதிர்ந்தார் ஆராய்ச்சி மாணவி சபாநட்வார்.
ஆனாலும் தொடர்ந்து தன் ஆராய்ச்சியை நடத்திய அவர் இப்படிச் சொன்னார்: "திருமணமான பெண்கள் தங்கள் உடலை விற்பனை செய்கின்றார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இது பணத்திற்காகவும் தங்கள் சுகத்திற்காகவும் தான்.இப்படிப்பட்ட பெண்கள் எல்லோரும் நல்ல வசதியோடு வாழ்பவர்கள் மேல்மட்டத்துக் குடும்பப் பெண்கள்.
இதில் ஈடுபடும் கல்லூரி மாணவிகள் பெரும்,புகழும் மிக்க கல்லூரிகளில் படிப்பவர்கள்,எல்லோரும் பெரிய இடத்துப் பெண்கள். நான் எடுத்துக் கொண்ட இடங்கள் லோகண்ட் வாலா, ஜுஹூ, நரிமண்பாய்ண்ட், பீச்கேண்டி போன்ற மேட்டுக்குடி மக்கள் வாழும் பகுதிகள் தாம்.
எய்ட்ஸ் போன்ற ஆட்கொல்லி நோய்கள் தங்களுக்கு வந்து விடும் என அஞ்சுகின்றார்களா என்றொரு கேள்வியை அவர் ஆய்வில் எழுப்பிய போது இந்தக் கேள்விக்கு இப்படிப் பதில் வந்திருக்கின்றது.
"நாங்கள் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.இப்போதைய சுகம் தான் முக்கியம். எதிர்வரும் நாள்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. இப்போது நாங்கள் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்" என்று அவர்கள் சொன்ன பதிலால் அதிர்ந்து போனார் சபாநட்வார்.
அவர் தன் ஆராய்ச்சியை இப்படி வெளிப்படுத்துகின்றார். திருமணமான பெண்கள் இதில் ஈடுபடுவது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்களுக்கு குழந்தைகள் இருக்கின்றன ஆனால் அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. அவர்கள் வீட்டிலேயே இது நடைபெறுகின்றது.
சபாநட்வாரின் இந்த ஆய்வை டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (All India Institute of Medical Science) அவரிடமிருந்து ஏற்றுக் கொண்டு பாராட்டி பதக்கமும் வழங்கியது. இப்படி எல்லோரையும் அதிர வைத்த இந்த ஆய்வு பெண்களின் நடத்தைகள் சம்பந்தமான பல உண்மைகளைப் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டி யிருக்கின்றது.
உண்மையைச் சொன்னால் பெண்களுக்கு ஏன் வாழ்கின்றோம்? என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை. அதனால் எதிர்வரும் நாட்களைப் பற்றி எந்தக் கவலையுமில்லை. இந்த உலகில் இப்போது சுகமாக இருக்க வேண்டும் என்பதே இலட்சியம்!
இவர்களுக்கு மட்டுமல்ல பெரும்பாலான மனிதர்களுக்கு ஏன் வாழ்கின்றோம்? இந்த வாழ்க்கையின் முடிவென்ன? என்ற கேள்விகளுக்க விடை தெரியவில்லை. இதனால் தான் எப்படி வாழ வேண்டும்? எனத் தெரியாமல் தங்களை அழிக்கும் கொடிய வழிமுறை ஒன்றை எந்தச் சலனமுமில்லாமல் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
தீயவைகளை அழித்து நல்லவைகளை தருவதே பெண்களின் குணம் அப்படிப்பட்ட பெண் சமுதாயம் மேன்மைபெற நான் சொல்லும் இந்த உண்மைகள் கூட பெண்களுக்காகத் தான்.
எப்போது திருந்துவார்கள் இந்த பெண்கள்?
* நண்பர்களின் மகத்தான ஆதரவில் எனது 100 -ஆவது பதிவு இது. தொடர்ந்து பதிவுலகில் எனது எழுத்துகளுக்கு தங்களது ஊட்டமான பின்னூட்டங்கள் மூலம் ஊக்கம் கொடுத்து கொண்டிருக்கும் சக பதிவுலக நண்பர்கள்,பின்னூட்ட நண்பர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நான் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
ஒருவார்த்தை
- oruvaarthai's blog
- Login or register to post comments
- 355 reads








