oruvaarthai's படம்

ஒரு மனுஷனோட வாழ்க்கையில நல்ல நண்பர்கள் அமையிறதெல்லாம் உண்மையிலே அவன் முன்ஜென்மத்துல செஞ்ச புண்ணியங்கள் தான் சொல்லணும். ஏன்னா எத்தனை பேருக்கு நல்ல நண்பர்கள் அமைவாங்கன்னு சொல்ல முடியாது.

பத்து பதினைஞ்சி வருஷம் ஒன்னுமன்னா திரிஞ்ச நண்பர்களெல்லாம் ஏதோ ஒரு சில்லியான காரணத்துக்காக பிரிஞ்சி போயிருக்காங்க...

என்னை பொறுத்தவரைக்கும் ஊர்ல இருக்குற வரைக்கும் என்னோட நண்பர்கள் வட்டம் ரொம்ப சின்னது தான். ஏன்னா என்னோட அப்பாவோட கண்டிப்பு அப்படிப்பட்டதா இருந்திச்சி.

"டேய் அவங்கூடெல்லாம் சேர்ந்து சுத்தாதடா,இந்த சின்ன வயசுலேயே தண்ணி, சிகரெட்னு எல்லா பழக்கத்தையும் அவ கத்து வெச்சிருக்கான்.உனக்கு வாழ்க்கையில உருப்புடுறதா ஐடியாவே இல்லியா..? நீயெல்லாம் எங்க திருந்தப் போற.., கடைசியில ரோட்டுல நின்னு பிச்சை தான் எடுக்கப்போற..? அப்பாவிடமிருந்து தாராளமா அர்ச்சனைகள் வந்து விழும்.

அப்படி பேசுறப்போ எனக்கு அப்பா மேல பயங்கர கோபம் வரும்,"அவன் தண்ணி அடிச்சா உடனே நானும் தண்ணி அடிப்பேன்"னு எப்படி அவர் முடிவு பண்ணலாம்.அப்பா நிக்க வெச்சி அர்ச்சனை பண்ணிகிட்டிருக்கும் போதே வெளியில விருட்டுன்னு போயிடுவேன்.

"போடா..போ உனக்கு இப்போ நாங்க சொல்றதெல்லாம் கசக்கத்தான் செய்யும், இதுக்கெல்லாம் நீ பின்னாடி அனுபவிப்ப..."

அப்பாவிடமிருந்து எனக்கு இப்படி அடிக்கடி விழுற அர்ச்ச்சனைகளுக்காகவே சின்ன வயசுல என்னோட நண்பர்கள் வட்டம் ரொம்ப சுருங்கிப் போச்சி...வீட்டு பக்கத்துல இருக்குற முருகன்னு ஒரே ஒரு நண்பன் தான் இன்னைக்கு வரைக்கும் என்னோட ஊர் நண்பன்.வேற யாரும் சொல்லிக்கும்படியா ஊர்ல இல்ல.

இங்க சென்னைக்கு வந்த பின்னாடி வேறவேற ஊர்களல்ல இருந்து தொழில் நிமித்தமா சென்னைக்கு வந்த நெறைய நண்பர்களோட சேர்ந்து  ரூம்ல தங்கியிருக்கேன்.அதுல குறிப்பிட்டு சொல்லும்படியா இப்பவும் என் மனசுல நிக்குறவன் ரங்கசாமி.அவனுக்கு ஊர் கோயம்புத்தூர்.

கே.கே நகர்ல நானும்,அவனும் ஆளுக்கு பாதி வாடகை குடுத்து ஒண்ணா ரூம் எடுத்து தங்கினோம்,ரங்கசாமிக்கு என்னைவிட ஒரு ரெண்டு மூணு வயசு அதிகம்,ஆனாலும் ணன் அவனை வாடா,போடான்னு தான் சொல்வேன்.ஆளு பாக்குறதுக்கு கொஞ்சம் குண்டா,எப்போ பாத்தாலும் கலகலன்னு இருப்பாப்ல...

அவனோட ஆசை சினிமாவுல நடிக்கிறதுதான்.சினிமாவுல நடிக்கிறதுக்காக அவனோட ரங்கசாமிங்கிற பேரை ஊர் பேரையும் சேர்த்து "கோவைரங்ஸ்" ன்னு மாத்தி வெச்சிக்கிட்டான். ஊர் கோயம்புத்தூர் ங்கிறதுனால அவன் பேசுற அந்த மரியாதையான 'கோயம்புத்தூர் பாஷை' எனக்கு ரொம்ப பிடிக்கும். தெனமும் காலையில எட்டு,ஒம்போது மணிக்கு கிளம்பி போறவன் ஏதாவது நாலைஞ்சி சினிமா கம்பெனிக்கு போயிட்டு வருவான்.

"என்னய்யா இன்னைக்கு எங்க போன..?"ன்னு கேப்பேன்.ஒரு நாலஞ்சி கம்பெனிக்கு போனேன், என்னோட போட்டோவை குடுத்துட்டு வந்திருக்கேன்ன்னு சொல்வான்.

கண்டிப்பா நல்ல நல்ல படங்கள்ல நடிச்சி,கடைசி வரைக்கும் சினிமாவுல கண்டிப்பா இருப்பேன்னு அடிக்கடி சொல்வான். தெனமும் சினிமா கம்பெனிகள் ஏறி இறங்குறதுனால அவனோட தினசரி சாப்பாட்டுக்கு பிரச்சனையே இருக்காது.
அவனுக்கு நல்லா கார் ஓட்ட தெரியுங்கிறதுனால,மாசாமாசம் ரூமுக்கு வாடகை குடுக்குறதுக்கு,கை செலவுக்கும் அப்பப்ப 'வாடைகை கார் டிரைவர்' வேலை பாத்துட்டு வருவான்.

எவ்ளோ கஷ்டம் வந்தாலும், அவன்கிட்ட திருட்டு பழக்கமோ, காசுக்காக பொய் சொல்ற பழக்கமோ இருக்காது.சாப்புட கைல காசு இல்லேன்னா கூட கேக்க கூச்சப்பட்டுக்கிட்டு அன்னைக்கு நைட்டு வயிறுமுட்ட தண்ணிய குடிச்சிக்கிட்டு தூங்கிப்போவான்.

மறுநாள் கலையிலே எந்திருச்சி பேச்சுவாக்குல முதல் நாள் நைட்டு சாப்புடாம படுத்த விஷயத்தை ரொம்ப நாசுக்கா சொல்வான். நான் " காசு இல்லேன்னா கேக்க வேண்டியது தானே ரங்ஸ்..?ன்னு சத்தம் போடுவேன்,சிரிச்சிகிட்டே போயிடுவான்.

எனக்கும்,அவனுக்கு அடிக்கடி சண்டை வரும்,ஆனா எவ்ளோ திட்டினாலும் கொவப்பட்டாலும் அவன் சிரிச்சிக்கிட்டே  போயிடுவான்,சாயன்காளும் மறுபடியும் ரூமுக்கு வந்த உடனே காலையில எந்த சண்டையும் நடக்காத மாதிரி சகஜமா பேசுவான்."எப்படி உன்னால இப்படி இருக்க முடியுது"ன்னு கேட்பேன்...

'இது தான் நிஜம்'னு சொல்வான்.

காலமும் நேரமும் போய்க்கிட்டே இருந்துச்சி,அவனும் நெறைய சினிமா கம்பனிகள் ஏறி இறங்கினான்.பலநாள் அலைச்சலுக்கு அவன் "அன்புத்தொல்லை"ங்கிற பாண்டியராஜன் நடிச்ச ஒரு படத்துல ஆர்.சுந்தர்ராஜன் காம்பினேசன்ல ரெண்டு,மூணு சீன்கள்ல நடிச்சான்.

திடீர்னு ஒரு நாள் சொன்னான் " வீட்டுல எனக்கு பொண்ணு பாத்துக்கிட்டு இருக்காங்க..,இன்னும் எத்தனை நாளைக்கு தான் சினிமாவை நம்புறது,வீட்டுல சத்தம் போடுறாங்க..,அதனால ஊரோட போயி செட்டிலாயிடலாம்னு இருக்கேன்.எனக்கு கார் டிரைவிங் தெரியும்.அதை வெச்சி காலத்தை ஒட்டிக்குவேன்" என்றான்.

"இல்ல ரங்க்ஸ் உன் பொண்டாட்டியை இங்க கூட்டிட்டு வந்து வெச்சிக்க.வேலையும் பாத்துகிட்டு அப்படியே சினிமாவுலேயும் சான்ஸ் தேடலாம்"ன்னு சொன்னேன்.அதுக்கு அவன் "இல்லப்பா வீட்ல ஒத்துக்க மாட்டாங்க..,அப்படியே ஒத்துக்கிட்டாலும் ஓரளவுக்காவது வருமானம் இல்லாம சிட்டியில குடும்பம் நடத்த முடியாது" என்று சொன்னான்.

ஒருநாள் ஊருக்கு கிளம்பி போனவன்,அதன் பின்னாடி சென்னைக்கு ரெண்டு மூணு தடவை வந்து போனான்,அது கொஞ்சம் கொஞ்சமாக குறைஞ்சி போயி நாளடைவுல சென்னைக்கு வர்றதே நின்னு போச்சி..,அதுக்கு பின்னாடி அப்போ போன் தொடர்புல இருந்தான்..,அதுவும் கால ஓட்டதுல குறைஞ்சி போயி அதுவும் சுத்தமா நின்னு போச்சி. பொறவு என்னோட நம்பர் மாறிப்போக,அவனுக்கு கல்யாணம் முடிஞ்சி அவனோட நம்பரும்,ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறிப்போச்சி...

இதோ அஞ்சி,ஆறு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சி, இப்போ அவனோட இருந்த எல்லா தொடர்புகளும் போயிருச்சி.அவன் கோயம்புத்தூர்ல எங்க இருப்பான்?, எப்படி இருப்பான்?, கார் திரிவர் வேலை தான் பாக்குறானா..? இப்பவும் அவன் மனசுல சினிமா ஆசையோட இருக்கானா? இல்லேன்னா இந்த நடைமுறை வாழ்க்கையை பழகிட்டானா..? எனக்கு ஒண்ணுமே தெரியாது...

அவன் எப்பவோ எங்கிட்ட குடுத்த 'அன்புத்தொல்லை' படத்துல ஒரு சீன்ல நடிச்ச போட்டோ ஒண்ணே ஒண்ணு தான் இப்போ என் கையில இருக்கு.அத எப்பவாச்சும் பாக்கும்போது எனக்கு அவனோட பழகிய நாட்களும்,இப்போ அவன் எப்படி இருப்பாங்கிற எதிர்பார்ப்பும்,அவனை எங்காவது மறுபடியும் பாக்கமாட்டோமாங்கிற ஆசையும் வரும்.

சென்னைக்கு வந்த பின்னாடி எனக்கு அமைஞ்ச நண்பர்கள்ல எனக்கு ரொம்ப பிடிச்ச நண்பர்கள்ல அவனும் ஒருத்தன்.இப்பவும் எப்பவாச்சும் கோயம்புத்தூருக்கு போனா அவன் என் கண்ணுல தட்டுப்பட மாட்டானா..? ன்னு யோசிப்பேன்.

எங்க இருக்க ரங்ஸ்..?

என்னைப் பொறுத்த வரைக்கும் மனைவி மட்டுமல்ல, நல்ல நண்பர்கள் கூட அமைவது இறைவன் கொடுத்த வரம் தான்.  இந்த 'நண்பர்கள் தின'த்துல நண்பர்கள் அனைவருக்கும் இனிய "நண்பர்கள் தின" நல்வாழ்த்துகள்.

0
No votes yet
No votes yet
http://oruvaarthai.blogspot.com/2010/08/blog-post.html