கேள்வி;’’நான் நல்ல வெளுத்த நிறம் உள்ள பெண். அதனால் மேலுதட்டில் உள்ள பூனை ரோமம் மெல்லிய மீசை போலத் தோற்றம் அளிக்கிறது. புருவ முடிகளை த்ரெட்டிங் மூலம் அடர்த்தி குறைப்பார்களே...அப்படி அந்த மேலுதட்டு முடிகளையும் நீக்கலாமா? அப்படி நீக்கினால் அது இன்னும் வேகமாக, அடர்த்தியாக வளரும். ஆண்கள் ஷேவிங் செய்வது போல வாரம் ஒருமுறை த்ரெட்டிங் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்கிறார்கள் தோழிகள். அப்படியா? நான் என்ன செய்யட்டும்?
பதில்;பிரியா-சரும நோய் மருத்துவர்.
‘’பூனை முடி என்பது கிட்டத்தட்ட அனைத்து பெண்களுக்கும் இருக்கும் இயல்பான ஒரு விஷயம்தான். வெறும் பூனை முடிதான் என்றால் பிளீச்சிங் செய்தாலே போதும். மற்றபடி த்ரெட்டிங், வேக்ஸிங் செய்தால் அது முடியை இன்னும் அடர்த்தியாக்கி அசிங்கமாக்கிவிடும். ஒருவேளை அது கூந்தல் போல அடர்த்தியாக இருந்தால் தோல்நோய் சிகிச்சை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். எதனால் அப்படி முடி வளர்கிறது,ஹார்மோன் பிச்னை காரணமா என்று பரிசோதிப்பார்கள். அதன்பிறகு லேசர் ஹேர் ரிமூவர் தெரபி மூலம் மாதத்துக்கு ஒருமுறை என்று ஆறு முதல் பத்து முறை சிகிச்சை அளிப்பார்கள். அது முடி வளர்வதை நிரந்தரமாக நிறுத்தும்.இந்த லேசர் சிகிச்சையைப் பெற பயிற்சி பெற்ற தக்க மருத்துவர்களிடம்தான் மேற்கொள்ள வேண்டும்.மற்றபடி அந்தப் பகுதியில் மஞ்சள், உப்பு தடவுவது பிரச்னைக்குத் தீர்வாகாது. தொடர்ந்து மஞ்சள் தடவுவதால் அந்த இடமே கறுப்பாக கூடும்!’’