எனக்கு நினைவில் இருப்பதை பகிர விரும்புகிறேன்.

தூக்குப்பனிய எடுத்துட்டு வா என்றால் என்னவென்று தெரியாமல் விழித்ததுண்டு.தூக்குப்பனி என்றால் பிடி உள்ள சின்ன சில்வர் வாலி போல ஒரு பாத்திரம்.

குடிநீர் குழாய்கள் அல்லது எந்த குழாய்களானாலும் ,ஆங்கில சொல் என்பது தெரிந்தோ தெரியாமலோ பைப் என்று சொல்வதுதான் வழக்கம்.ஆனால் என் அம்மாச்சி ஊரில் கொலாயில் கொண்ட பானைய வைனு சொன்னபோதும் புரியாமல் விழித்ததுண்டு.அடி பைப்பை அடிக்கொலாய் என்பார்கள்.மேலும் எனக்குத் தெரிந்தது மண்ணினால் செய்யப்பட்ட பானைதான் பானை.அம்மாச்சி ஊரில் குடம்,தவளை பேர்தான் பானை.தெருவிலும் சாக்கடையிலும் ஓடுது பாரு அது பேர்தான் தவளை,இது பேர் பானை என்பார்கள்.அப்போ அந்த பானைய என்னான்னு சொல்வாங்கன்னா மம்பானை (மண்பானை) என்பார்கள்.
மிக்சி,கிரைண்டர் வருவதற்கு முன் அந்த காலத்தில் கல்லால் ஆன இயந்திரம் இருக்குமே,அதன் பெயர் கொடக்கல்லுனு நாங்க சொல்லுவோம்.அதை ஆட்டுக்கல்லுனு அம்மாச்சி சொல்வாங்க.அம்மிக்கல்லுக்கு பேரு அம்மிக்கல்லுதான்.
ஒண்டியமா போகனுமா என்றால் அவர்களுக்கு புரியாது.தனியா போகனுமா என்றால்தான் புரியும்.ரொம்ப எட்டி(தொலைவில்) இருக்குல என்றாலும் புரியாது.அதென்ன எட்டி?தொலவா இருக்குனு சொல்லு,அல்லது வெகு தூரம்னு சொல்லு என்பார்கள்.
நாம் எழுதும்போதுதான் வந்தேன்,போனேன்,சொன்னேன், என்று எழுதுவோம்.ஆனால் மதுரையில் இன்றும் வந்தேஏ....போனேஏ..., சொன்னேஏ...என்றுதான் பேசுவார்கள்.கேட்கவே ஆசையாக இருக்கும் . நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது என் அம்மாச்சி ஊரில் பள்ளியில் சேர்ந்து படிக்கும்படியான சூழ்நிலை வந்தது.எனக்கு மறக்க முடியாத நாட்கள் அவைகள்.பெரிய ஆலமரங்கள்,அரசமரங்கள்,வரிசயாக தென்னைமரம்,பனைமரம் பார்டர் போல மலைகள் இவைகளை ரசித்துக்கொண்டே பள்ளிக்குச் செல்வேன்.அங்கு ஆசிரியர்களும் மதுரைத் தமிழில் பேசுவதைப் பார்த்து ரசிக்கவும் முடியாது,சிரிக்கவும் முடியாது.
உதாரணமாக புதுசா வந்திருக்க பிள்ளையா நிஈ.எழுத்துக்கூட்டி வாசிப்பியா?என்றார். என்னவோ வாசிக்கத் தெரியுமான்னு கேக்குறார்னு நினைத்து தெரியாதுனுட்டேன்.நாகப்பட்டினம்ங்கிற வாசிக்க சொல்லித்தரலையா வாத்தியார்க என்றார்.திருதிருன்னு முழித்துக்கொண்டிருக்கையில் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணை வாசிக்க சொன்னார்.புத்தகத்தைப் பார்த்து அந்த பெண் சத்தமாக படிக்கத் துவங்கினாள்.அப்பதான் எனக்கு புரிந்தது சாரு படிக்கத் தெரியுமாங்கிறதைதான் வாசிக்கத் தெரியுமானு கேட்டிருந்திருக்கிறார்.படிக்கத் தெரிந்தும் தெரியாதுனு சொல்லிட்டேனேனு அழ ஆரம்பித்துவிட்டேன்.பயத்தில் அழறேன்னு என்னை சமாதனப்படுத்தினார்.சில மாணவர்கள் படித்த பின் நானும் படிக்கிறேன்னு கஷ்டபட்டு சொன்னேன்.ஆசிரியர் புரிந்துகொண்டு ம்.. என்றதும் படிக்கத் துவங்கினேன்.தமிழ் பாடம்தான் என்ன பாடம் என்று நினைவில்லை.ஒரு பத்தி படித்து முடித்தவுடன் நல்லாதான வாசிக்கிற,ஏன் வாசிக்கத் தெரியாதுன்ன? என்றவுடன் இன்னும் அழுகைதான் வந்தது.
ப்ரேயரில் நிக்கும்போது ஒரு அழகான டீச்சர் ,கிசும்பு பன்றவங்கே தோல உரிச்சிடிவீண்டா,ஒத்தையில நிக்காதடா,வரிசையில நில்லுங்கடானு சொன்னது எனக்கு புரியல.விசாரித்ததில் கிசும்புனா சேட்டைனு ஒருத்தன் சொன்னான்.சேட்டை என்றால் விசமத்தனம்.பத்து நாள் மட்டுமே அங்கு படித்தேன்.இது போன்று பல வார்த்தைகள் தெரிந்துகொண்டேன்.இப்போது நினைவில் இல்லை.என் அப்பா மீண்டும் நாகப்பட்டினத்து பள்ளியிலே சேர்த்துவிட்டார்.
அதற்கு பின் அம்மாச்சி தாத்தா வீட்டிற்கு விடுமுறைக்கு வருவோம்.
அவற்றில் சில நினைவுகள்:
தெருவில் சைக்களில் சாக்கு பைகள் வைத்து கொடி முந்திரி, கொடி முந்திரி என்று சத்தமிட்டு வியாபாரி வருவது கண்டு முந்திரிபருப்பைதான் விற்கிறார் என தப்பு கணக்கு போட்டுவிட்டேன்.அருகில் வரவும் பார்த்தால் அது திராட்சைப்பழம்.கொடி முந்திரி என்றால் திராட்சைப்பழமாம்.
ஏதாவது பொருட்களை முறத்தில் போட்டு சுத்தப்படுத்துவோமே அந்த முறம் பெயர் சொலகு என்பார்கள்.
மண்ணெண்ணையை (கரோசின்) சீமஎண்ணைய் என்பார்கள்.
விளக்கேற்றுவதை - தீபத்த பொறுத்து என்பார்கள்.
சணலை சரடு என்பார்கள்.பேப்பர் என்றே அனைவரும் சொல்லுவோம்.ஆனால் காகிதம் என்றுதான் சொல்லுவார்கள்.தபால் வந்தால் கடுதாசி வந்திருக்கு என்றுதான் சொல்வார்கள்.லெட்டர்னு சொல்லமாட்டார்கள்.
உண்டனா செலவழிக்காத என்றால் நிறைய செலவழிக்காத என்று அர்த்தம்.
என் தாத்தா வெஞ்சனம் வைம்மா என்றால் எனக்கு சிரிப்பு வந்திடும்.வெஞ்சனம் என்றால் என்னனு கேட்டபோது கடிச்சிக்கிறதுதான் என்றார்.அப்படினா சைடிஷ்.சாப்பிடும்போது சைடிஷ் சேர்த்து சாப்பிடுவோமே அதன் பெயர்தான் வெஞ்சனம்.நல்லா மென்னு சாப்பிடுனு சொல்வதற்கு நல்லா மெண்டு தின்னு என்பார்கள்.மீதமாகும் உணவை குளுதாடியில் கொட்டு என்பார்கள்.குளுதாடி என்றால் மாட்டுக்கு தண்ணீர்,உணவு வைப்பதற்கான தொட்டி.
கூதடிக்குது என்பார்கள்.அப்படியென்றால் குளுருகிறது என்று அர்த்தம்.என் மாமாவுடன் கடைக்கு சென்றேன்,அப்போது சாலையோரம் பைசா புதைந்துகிடப்பது போல் மேல் தோற்றம் தெரிந்தது.அருகில் வந்து பார்த்தால் சோடாமூடி புதைந்துகிடந்தது.இந்த சிங்கி என்னைய பலதடவை ஏமாற்றியிருக்கு என்றார்.சிங்கி என்றால் என்னவென்று கேட்டால் அந்த சோடாமூடி பெயர்தான் சிங்கி என்றார்.
நாம் செல்லப்பெயர் வைத்து அழைப்பது போல் அந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டினரை அடையாளம் சொல்ல தனித்தனி பட்டபெயர் இருக்கும்.அதாவது களத்து மேட்டுக்காரேன்,கூலாச்சி,மற்றும் பூர்வீக ஊர்களின் பெயர்கள் -கோவில்பட்டியா,கொண்டையம்பட்டிக்காரி,அய்யனம்பட்டியா....மற்றும் ஜாதிகளின் பெயர்களும் இடம்பெறும்.
சில வார்த்தைகள் புரியாமல் இருந்தாலும் ’வாம்மா....’’ச்சொல்லுப்பா’அடி ஆத்தே,அவுக சொன்னாக,வந்தாக,அவங்கே வாந்தாய்ங்கே,போனாங்கே,பிள்ள,எம்புட்டு,இம்புட்டு,எத்தே மொக்கம்(எவ்வளவு பெரிய),எத்தே தண்டி(எவ்வளவு கனம்/நீளம்/பெரிய), அங்கிட்டு,இங்கிட்டுஅம்மாச்சி,அம்மத்தா(அம்மாவின் அம்மா),அப்பத்தா(அப்பாவின் அம்மா),மதினி(அண்ணி),பைய நட(மெதுவா நட) இப்படி பல தமிழ் வார்த்தைகளுக்கு எனக்கு தமிழிலே மொழிபெயர்ப்பு செய்ய வேண்டியிருந்தது.இப்போதைக்கு இவைகள் மட்டுமே நினைவில் உள்ளது.
தற்போழுது காலமாற்றத்தில் சில பேச்சு வழக்குகள் மாறியிருக்கலாம்.சமீபமாக தேனீ மாவட்டம்,மதுரை,உசிலம்பட்டி தமிழை,அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவரும் திரைப்படங்களை பார்த்திருப்போம்.அதுக்காக மதுரைக்காரவுக தலை வாராம,பரட்டையாகவே இருப்பாங்கன்னு முடிவுபன்னிடாதீக.ரொம்ப பாசக்கார பயபுள்ளைக!உழைப்பாளிக!வம்புக்கு போகமாட்டாங்கே,வந்த வம்ப விடமாட்டாங்கே,நியாயமா நடந்துப்பாங்கேனு சொன்னேஏ....
- thirumathibssridhar's blog
- Login or register to post comments
- 688 reads
கருத்துகள்
வட்டார தமிழை தொகுத்து
வட்டார தமிழை தொகுத்து அனுபவத்துடன் கலந்து தந்திருப்பது சிறப்பு.
மதுரைக்காரங்க பாசக்காரங்க

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
ஏலே மக்கா . நல்லாதாம்ல
ஏலே மக்கா . நல்லாதாம்ல எழுதிருக்கா . ஏலே நீ எங்க ஊர்ப்பக்கம் வந்ததில்லையோ....வந்தன்னா அண்ணாச்சி வீட்டு பக்கம் வந்து ஒருவா ச்சாப்ப்டூ போல...
உ.சரவணன்
திருநெல்வேலி
அண்ணே, ரொம்ப நல்லா
அண்ணே, ரொம்ப நல்லா சொன்னீங்க!!!.. மதுரைய பத்தி தப்பு தப்பபா நினைக்குறாங்கேனே..நாம பாசகாரங்கேன்னு தெரியமாடுதுங்கே ... 
-கோபக்காரன்
அட டா நாகப்பட்டிணம்.
அட டா நாகப்பட்டிணம். சும்மாடுதான இந்த சுருமாடுன்னு இப்பதான் தெரியுது.மதுரையில கொத்தவரங்காய சீனி அவரக்காய்ன்னுடுவாங்க நாம பேய் முழி முழிக்கனும்.என் கடந்தகாலத்தை திரும்பி பார்த்தார் போல் இருந்தது.

இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல
மதுரை, தமிழுக்கு சங்கம்
மதுரை, தமிழுக்கு சங்கம் வளர்த்த நகரம், ஆனால் "ழ"கரம் மறந்த தமிழுள்ளங்கள் அங்கே தான் அதிகம், சேர சோழ பாண்டியர் நாடுடன் தொண்டைநாடும் பேச்சுத் தமிழில் ஆக வித்தியாசம் சென்னையின் கூவம் தமிழும் வித்தியாசம் தான் இருப்பினும் தமிழ் சொல்லை பயன்படுத்துவதில் மதுரை தமிழ் முதன்மை வகிக்கின்றது என்பது உண்மையே!
















நன்றிங்கோ,உங்க ஊர் பக்கம் வந்ததில்லில....,உங்க ஊர் அண்ணாச்சிகிட்ட சொல்லி அல்வாவையும் கொடுக்க சொல்லுங்க,ரொம்ப பிடிக்கும்ல.....வந்துடுறேனுங்க
