இந்த ரவா தோசை இருக்கே ரவா தோசை, இதை பொதுவா வீட்டில் வார்ப்பது மிகவும் அரிது. ஹோட்டலில் தான் கிடைக்கும். இப்போது எல்லாம் ரவாதோசை மிக்ஸ் கிடைக்கின்றது எனினும் அப்போதெல்லாம் 80 களில் அதல்லாம் கிடையாது. ரவா தோசை கிடைக்கும் கடைகளில் சிலது மாத்திரம் ஸ்பெஷல். அதில் ஒன்று தான் மாயவரத்தில் இருக்கும் மயூராலாட்ஜ் ஹோட்டல். இரண்டு கடைகள். அதிலே ஒன்று ரயில்வே ஜங்ஷனில் இருந்து வெளியே வந்தவுடன் இருக்கும் மற்றும் ஒன்று மாயவரம் கடைத்தெருவில் ஏ ஆர் சி ஜுவல்லரிகள் எதிரே ராமூர்த்தி அய்யர் இரும்பு கடைக்கு பக்கத்தில் இருக்கும். இரண்டுமே பிரமாதம் தான் ரவாதோசைக்கு. செங்கோட்டை பாசஞ்சரோ, போட்மெயிலோ மாயவரத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு அதிகமா நிற்குதே என்ன காரணம் என கேட்டா மயூரா ரவா தான் காரணம். ரயிலை நிப்பாட்டி விட்டு ஓடி வந்து பார்சல் வாங்கி போகும் இஞ்சின் டிரைவர்களும் டி டிக்களும் அனேகம் பேர். அத்தனை ஒரு பேர் அந்த ரவாதோசைக்கு.
ரவாதேசைக்கு உலகிலேயே ஒரு சிறப்பு என்னான்னா, மாவு தோசை மாதிரி ஒரே நேரத்தில் கரைத்து பக்குவமா வைக்க முடியாது. மாவு தோசை முதல் தோசை நல்லா இருந்துச்சுன்னா கடைசி தோசை வரை நல்லா இருக்கும். முதல் தோசை என்ன ருசியோ அதே தான் கடைசி தோசை வரைக்கும். ஆனால் இந்த ரவா தோசை இருக்கே அது ஒரு ஒரு நான்கு அல்லது ஐந்து பேருக்கும் அதாவது அப்போது டேபிளில் இருக்கும் ஆர்டர் எத்தனையோ அத்தனைக்கு உண்டான மாவு மாத்திரம் அவ்வப்போது கரைக்கப்படும். அதனால் சாதா மாவு தோசை போல முதலில் கரைக்கும் போது மட்டும் கேர்புல்லா இருந்துட்டு பின்னே மாஸ்டர் பார்துப்பாருன்னு விட முடியாது. ஒரே நேரத்தில் முதல் டேபிளில் சாப்பிடும் ரவாதோசைக்கும் கடைசி டேபிளில் சாப்பிட்டு கொண்டிருக்கும் தோசைக்குமே சுவை மாறித்தொலையும் அபாயம் உண்டு.
ஆனால் மயூரா ரவா தோசை அப்படி இல்லை. ஒரே டேஸ்ட் அன்றைக்கு முழுவதும் இருக்கும். இது மயூரா ரவாதோசையின் சிறப்பு. ரவா தோசை சிலருக்கு முறுகலா பிடிக்கும், சிலருக்கு பதமா பிடிக்கும். ஆனால் என்னைப்போல வித்யாசமான சிலருக்கு ரெண்டு விதமாகவும் பிடித்து தொலைக்கும். அதனால் மயூராவில் எனைப்போல கிறுக்கன்களுக்கு என பிரத்யோக பார்முலா உண்டு. தோசையை வார்த்த பின்னே தனியே கொஞ்சம் மாவெடுத்து நட்ட நடுவே அதன் மேல் ஊற்ற வேண்டும். அந்த இடம் பதமாகவும் ஓரத்தில் முறுகலாகவும் இருக்கும்.
அதிலேயும் ஒரு குழப்பம். ரவா தோசையை ரவுண்டாக வார்க்க முடியாது. இந்தியா மேப் போல வரும். இலங்கை போல வரும், அவ்வளவு ஏன், எண்பதுகளில் அமரிக்க விசாவுக்கு அப்ளை செஞ்சுட்டு கால் கடுக்க நின்று அது ரிஜக்ட் ஆன விரக்தியில் செங்கோட்டை பாசஞ்சரில் வரும் நபர்களுக்கு அமரிக்கா மேப் போலவும் வரும். எம்பசியில் கிடைக்காத அமரிக்கா எங்கூர்ல கிடைக்கும். அதிலே எங்கே "நடு செண்டர்" பார்த்து மொத்தமாக்குவது? அதையும் செய்வாரு அந்த மாஸ்டர்:-))
அதிலே சிலருக்கு நெய் ஊற்றினால் பிடிக்கும். ஆனால் மிதமிஞ்சி இருக்கவும் கூடாது. திகட்டி விடும் அபாயம் உண்டு. அதையும் பதமா ஊற்ற வேண்டும். வார்த்து முடித்து அதற்குண்டான நேரத்தில் அதை புரட்டி போட்டு தோசை திருப்பியால் அதை பாசமுடன் வருடிக்கொடுத்து தோசைக்கல் மேலேயே அதை குடும்பக்கட்டுப்பாடு சின்னமாக்கி அதை வாழையிலையில் வைத்து அந்த வாழையிலையை ஒரு எவர்சில்வர் தட்டில் வைத்து நம் டேபிள்க்கு கொண்டு வந்து ஒரு சுத்து சுத்திவிட்டு சர்வர் நம்மை பெருமையாக பார்க்கும் போது நமக்கு எச்சில் ஊறி தாவங்கட்டை வலிக்கும்.
அதன் ஜோடியாக சின்ன வெங்காயம் போட்ட சாம்பார் வாளியை தூக்கி வந்து டேபிளில் வைக்கும் போது அந்த இந்தியாவுக்கோ, அமரிக்காவுக்கோ எல்லைப்பிரச்சனை எதும் இல்லாதபடி முறுகல் எல்லாம் பிய்த்து விழுங்கி இருப்போம்.
"அது என்ன அந்த சாம்பாரில் சின்ன வெங்காயத்தை முதலில் வேக வைத்து போட்டீங்களா சார், பார்க்கும் போது முழுசா இருக்கு தொட்டால் கரைந்து போகுது" என சர்வரை கேட்கும் போது அவர் முகம் வெட்கத்தால் சிவக்கும். ரவாதோசையின் சீரகமும், கருவேப்பில்லையும் என்னவோ ஒத்துமையான புருஷன் பொண்டாட்டி மாதிரி அத்தனை ஒரு ஒட்டுதல். கூடவே சின்ன வெங்காய சாம்பாரும் பக்குவமா இருந்திட்டா ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் தான்.
கூட வரும் கெட்டி சட்னி (தேங்காய் சட்னி)யும் , தக்காளி கார சட்னியும் சரியான பக்கவாத்தியம்... இல்லை இல்லை பக்கா வாத்தியம் போங்க... சார் சிலதை சொல்லி புரியவைக்கலாம். ஆனால் மயூரா ரவாவை "ஜொள்ளி"த் தான் புரிய வைக்க வேண்டும்!
நன்றி : அபி அப்பா
- VISWAM's blog
- Login or register to post comments
- 230 reads
கருத்துகள்
இந்தியா மேப் போல வரும்.
இந்தியா மேப் போல வரும்.
சின்ன வயதில் தோசை சுட்ட ஞாபகத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...





