ஓர தனியார் தொலைக்காட்சியில் வாரத்தில் இரண்டு நாட்களோ அல்லது மூன்று நாட்களோ சரியாக தெரியவில்லை ஒரு நடன நிகழ்ச்சி காட்டப்படுகிறது. சின்னத்திரையின் நட்சத்திரங்களின் நடன திறமையை வெளிகாட்டுவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறதாம் நடனமாடுபவர்களின் நடன அசைவுகளாகயிருக்கட்டும் ஆடை அலங்கரமாக இருக்கட்டும் முழுகவர்ச்சி என்று சொல்லவே முடியாது. மிகவும் மட்டரகமான ஆபாச தோற்றம் என்று சொல்லலாம். இந்த ஆபாசத்தை கூட மன்னிக்கலாம் நிகழ்ச்சிக்கு நடுவர்களாக இருக்கும் சில நீதிபதிகளின் உடை அலங்காரமும். அரட்டை லூட்டிகளும் கண்களையே குருடாக்கும் அளவிற்கு சகிக்க முடியாமல் இருக்கிறது. தற்செயலாக இந்த சேனலை ஒரு நிமிடம் பார்க்க நேரிடும் நமக்கே அதன் அருவருப்பை தாங்கமுடியவில்லை. மணிக்கணக்காக சிறியவர்களும் பெரியவர்களும் அதை எப்படித்தான் பார்க்கிறார்களோ தெரியவில்லை.
இந்த காலத்து சின்ன பிள்ளைகள் நாம் சிறியவர்களாக இருந்தபோது அம்மாஞ்சிகளாக இருந்தது போல இருப்பதில்லை. நீதிபதி என்றால் கருப்பு கோட் தானே போட வேண்டும் இவர்கள் கோட் அணியவில்லை என்றாலும் புடவையாவது கட்டலாமே என்கிறார்கள் வேறுசில பிள்ளைகள் இவர்கள் வீட்டில் மிகவும் வறுமை போல் இருக்கிறது. முழமையான உடையை வாங்குவதற்கு பணமில்லாமல் அரைகுறையாக அணிந்திருக்கிறாகள் என்று கிண்டலும் செய்கிறார்கள். இந்த மாதிரி அரைகுறை ஆடைகள் அணிவது பண்பாட்டு சிறப்பை வளர்ப்பதே நோக்கமாக கொண்ட தமிழ் சேனலில் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, இந்தி என்று எந்த வேற்றுமையும் இல்லாமல் எல்லா மொழி சேனல்களிலும் பரவிகிடக்கிறது.
பழைய சினிமா மற்றும் நாடகங்கள் பெண்களை குலவிளக்குகளாகவும், பண்பாட்டு தீபங்களாகவும், சோதனைகளின் சுமை தாங்கிகளாகவும் சித்தரிப்பார்கள். இப்பொழுது தொலைக்காட்சி தொடர்களில் ஆட்களை கடத்துவது கொலை செய்வது. கட்ட பஞ்சாயத்து செய்து பழிவாங்குதல், சதி செய்தல், போன்ற இன்னும் பிற வன்முறைகளை பெண்களே செய்வதாக காட்டப்படுகிறது. இதை பார்த்து ரசிப்பது, உருகிபோவது ஏரளமான பெண்களே தவிர ஆண்களல்ல, ஒரு சமுதாயத்தில் கெட்டு போகாதவர்களாக பெண்கள் இருக்கின்ற வரைதான் அந்த சமுதாயம் நல்ல சமுதாயமாக திகழும், குடும்ப அமைப்பும் சீர் கெடாமல் இருக்கும். இன்றைய தொலைக்காட்சி தொடர்கள் பெண்களிடத்தில் உள்ள நல்ல இயல்புகளை விஷம் வைத்து கொன்று வருகிறது.
அடுத்தவர்களிடமிருந்து வரும் சின்ன சின்ன தாக்குதலை கூட தாங்கி கொள்ள முடியாத மனது சதாசர்வகாலமும் ஆர்பரித்த வண்ணமேயுள்ளது. இதனால் அமைதி பூங்காவாக இருக்க வேண்டிய குடும்பம் பல நேரங்களில் யுத்த பூமியாக மாறிவிடுகிறது. அமைதியான வாழ்க்கை என்பதே இந்த காலத்தில் பலருக்கு அமையாததற்கு அல்லது அமைத்து கொள்ள தெரியாததற்கு பல நேரங்களில் தொலைக்காட்சி தொடர்களே காரணமாகி விடுகிறது.
அந்த காலம் முதல் இந்த காலம்வரை மாமியார் என்ற வார்த்தையே கொடுமைக்காரி என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல கணவனின் தகப்பானாரை தவிர மற்ற உறவு முறைகள் எல்லோருமே வீட்டுக்கு வந்த மருமகளை தொல்லைபடுத்துபவர்களாக தான் நம்பப்படுகிறது. தனது தாயார் தன்னை சனியனே என்று அழைத்தால் வருத்தப்படாத பெண்கள் அதே வார்த்தையை மாமியார் உபயோகித்தால் பொறுமை என்பதே இல்லாமல் மகாகாளியாக மாறிவிடுகிறார்கள்.
இன்னொருத்தி பேச ஆரம்பித்தாள் இது பரவாயில்லை. அரளிச்செடி தொடரில் அரவிந்தன் இப்போது என்ன செய்கிறான் தெரியுமா? கல்யாணம் பண்ணிய அழகான மனைவி வீட்டில் இருக்க தனது பி.ஏ-வுடன் சுற்றி அலைந்து குழந்தையும் கொடுத்து விட்டு யாரோ ஒரு நாற்பது வயதுகாரியுடன் குடித்தனம் நடத்தினானாம். பம்பாயில் இருந்து வந்த அவன் நண்பன் சுரேஷ் சொன்னான் என்று பெண்ணாக மாற ஆப்ரேஷன் வேறு செய்து கொண்டானாம். நாற்பது வயதுகாரியையும் விடிமுடியாமல் மனைவியோடும் வாழமுடியாமல் நண்பன் ரமேஷியுடன் தனிக் குடித்தனம் நடத்துகிறான். இவன் மீண்டும் ஆண்மை பெற அமெக்காவிலிருந்து ஒரு டாக்டர் வேற வர போகிறாராம். பாவம் இவன் எப்படியும் மீண்டும் ஆண்பிள்ளையாக மாறி மனைவியோடு குடித்தனம் நடத்த வேண்டுமென்று என் மனது கிடந்து அடிக்கிறது.
இதுதான், இதேதான் இப்போதைய தொலைக்காட்சி தொடர்களின் மைய கதை. பெயர் மாறியிருக்கலாம். நடிகர்கள் மாறியிருக்கலாம் அரங்க அமைப்பு மாறியிருக்கலாம். கதைமட்டும் மாறவே இல்லை. தனியார் தொலைக்காட்சிகள் ஆரம்பித்த காலத்திலிருந்து இதே மாதிரியான கதைகள் தான் தொடர்ந்து வந்து கொண்டுயிருக்கின்றன. இதை பார்க்கும் பெரியவர்களின் மனமே கெட்டு குட்டி சுவராகி விடும் எனும்போது குழந்தைகளின் மனோநிலையை பற்றி கேட்கவே வேண்டாம். பிஞ்சியிலே வெம்பி விடுகிறார்கள்.பதினாறு வயது பிறப்பதற்குள்ளாகவே ஆண்குழந்தைகளும், பெண் குழந்தைகளும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு வக்கர குணம் படைத்தவர்களாகி விடுகிறார்கள் பாய் பிரண்ட், கேர்ள் பிரண்ட் என்ற வகை ஒருபுறம். அவர்களோடு சில மணிநேரம் செல்போனில் அரட்டை இன்னொரு புறம். இரவு முழுவதும் போர்வைக்கடியில் செல்போன் உரையாடல் போதாது என்று எஸ்.எம்.எஸ் தகவல்கள் வேறு.
தொலைக்காட்சி நடத்தும் நிர்வாகிகள் சமூக பொறப்புள்ளவர்களாக இருந்தால் நிச்சயம் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை தங்களது சேனல்களில் ஒளிபரப்ப மாட்டார்கள். யார் எக்கேடு கெட்டால் என்ன எனது கல்லா பெட்டி நிறைந்தால் சரி என்று நினைப்பவர்களே இத்தகைய சமூக கொடுமைகளுக்கு காரண கர்த்தா எனலாம். நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை அரசியலிலும், சமூகத்திலும் மதிப்புமிக்க இடத்தில் இருப்பவர்களே தொலைகாட்சிகளை நடத்துகிறார்கள். கழுகு உயரத்தில் பறந்தால் கூட அழுகிய மாமிசத்தை தான் தேடும் என்பது போல தகுதியிலும் பதவியிலும் உயர்ந்ததாக இருந்தாலும் தனது தராதரம் என்பது இவ்வளவு தான் என்று காட்டுகின்ற தொலைக்காட்சி நிர்வாகிகள் சற்றேனும் யோசித்து திருந்த வேண்டும்.
கடைசியில் ஒரு பாராட்டை சொல்லியே ஆக வேண்டும். ஜாதி சங்கம் வைத்து வளர்ந்த ராமதாஸ், ஜாதிகளுக்கிடையில் காழ்புணர்ச்சியை வளர்த்த ராமதாஸ், வன்னியர்களின் பாதுகாவலர் என்று தனது குடும்பத்தை மட்டுமே உயர்த்திய ராமதாஸ், தனது கட்சிக்காக அடிபட்டு உதை பட்டவர்களை கீழே பிடித்து தள்ளிவிட்டு தனது மகனுக்கு அமைச்சர் பதவியை வாங்கி கொடுத்து ராமதாஸ் நித்தம் ஒரு கூட்டணி, மணிக்கொரு உறவு என்று கொள்கைகளையே கோமாளி தனமாக்கிய ராமதாஸ் தான் நடத்துகின்ற மக்கள் தொலைகாட்சியை மாசற்ற பெட்டகமாக குறை சொல்ல முடியாத கோபுரமாக அறிவு கதவை திறக்கம் கருவூலமாக நடத்துகிறார். ஆச்சர்யம் தான் என்றாலும் நல்லதை பாராட்டாமல் இருப்பது நாகரீகமல்ல என்பதினால் மக்கள் தொலைக்காட்சிக்கு நம் பாராட்டுகள்.
- sriramanandaguruji's blog
- Login or register to post comments
- 763 reads










