உனது கிராமத்தின் பெயர் நன்றாகத் தானே இருக்கிறது. அதை சொல்வதற்கு ஏன் தயங்கிகிறாய்? என்று நான் அவனை கேட்டபோது எங்கள் ஊரின் பெயர் தேவர்யடியார் குப்பம் என்றாலும் நடைமுறையில் அதை தேவடியாள்குப்பம் என்று தான் அழைப்பார்கள். அந்த வார்த்தையை சொல்வதற்கு எனக்கு கூச்சமாக இருந்ததினால் தான் சொல்ல தயங்கினேன். என்று கூறினான். ஊர்ப்பெயரை சொல்ல முடியாத அந்த இளைஞனை பார்த்து எனக்கு வருத்தமாகயில்லை. கடவுளுக்கு அடியவர், இறைவனுக்கு தொண்டு செய்பவர் என்று பொருள்பட உள்ள தேவர்யடியார் என்று அழகான வார்த்தை கொச்சைப்படுத்தபட்டு உச்சரிக்க கூட தகுதியில்லாத அளவிற்கு தரம் தாழ்த்திய சமுதாயத்தை நினைத்து வருத்தமாகவும் இருந்தது, ஆத்திரமும் வந்தது.
தேவதாசி முறை என்பது ஆதிகாலத்தில் இந்தியாவில் இருந்தது மட்டுமல்ல. உலகம் முழுவதுமே நடைமுறையில் இருந்திருக்கிறது. கணித்து கூற முடியாத மிக பழைய காலம் தொட்டே இறை பணிக்கென்றே தங்களை அர்பணித்துக் கொண்ட கலைஞர் கூட்டம் இருந்திருக்கிறது. இந்தியாவின் தொன்மை நாகரீகம் என்று போற்றபடுகின்ற சிந்து சமவெளி நாகரீகத்தில் நடனம் என்பது முக்கிய அங்கமாக இருந்திருக்கிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட வெண்கலத்தில் செய்யப்பட்ட நாட்டிய தாரகையொருத்தின் நேர்த்தியான சிலை வடிவம் அதை நமக்கு பளிச்சென அறிமுகப்படுத்துகிறது இந்துக்களின் மிக பழைய இலக்கியமான ரிக் வேதத்தில் துவங்கி மற்ற வேதங்களிலும் நடனம் நடன மாது போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன.
தேவதாசி என்ற வார்த்தை இந்தியாவில் பல இடங்களில் பலவிதமாக பயன்படுத்த படுகிறது. ஆந்திர பகுதியில் இவர்களை மாதங்கி அல்லது விலாசினி எனவும், கொங்குனியில் நாயகி எனவும், மராட்டியத்தில் பாசவி எனவும், கர்நாடகாவில் சூலி, சானி எனவும், ஒரிசாவில் மக எனவும், உத்திரபிரதேசத்தில் பாவினி எனவும் அழைக்கப்படுகிறார்கள் சங்ககால தமிழ் நூல்கள் இக்கலை மாதர்களை பதியிலாள், மாணிக்கம், தளிச்சேரி பெண்டுகள் எனவும் அழைக்கின்றனர், இந்த பெயர்களின் அர்த்தத்தை மேலுட்டமாக பார்த்தலும் சரி, ஆழ்ந்து அகண்டு பார்த்தாலும் சரி எந்தொரு வார்த்தையும் அவர்களை இழிவு படுத்து தொனியில் இருக்காது. மாறாக கௌரவபடுத்தும் விதத்திலேயே அமைந்திருப்பதை காணலாம்.
சைவ சமய குறவர்கள் என்று போற்றபடுகின்ற மூவரில் முதன்மையானவரான திருநாவுக்கரசர் சாமிகள்.
அருமணித்தடம் பூண் முலையரம்பையரொ டருளிப் பாடியர்
உமையிற்றொழுவர் உருத்திரபல் கணத்தார்.
என்று அழகு தமிழில் போற்றிபாடுகின்றார். சுந்தரமூர்த்தி நாயனாரின் காதல் மனைவி பறவை நாச்சியார் என்பது நமக்கு தெரியும். இவர்கள் இருவரின் காதலுக்கு சிவபெருமானே தூதாக சென்றதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த பறவை நாச்சியார் யார் என்றால் ஒரு நடனமாது, அதாவது தேவதாசி தேவதாசிகளின் நிலை அன்று மிக உயர்வாக இருந்தற்கு இதுவே சரியான எடுத்துகாட்டு.
இரண்டாவது வகையான ருத்திர கன்னிகைகள் என்பவர்கள் இறைவனின் சன்னிதானத்தின் முன்னால் நாட்டியாஞ்சலி செய்தாலும் தனது மனங்கவர்ந்த கணவன் ஒருவனோடு இனிய இல்லறம் நடத்தியவர்களாக இருந்தார்கள். கணவன் இல்லாமல் வாழ்ந்தாலும், கணவனோடு குடும்பம் நடத்தினாலும் ஒழுக்கம் தவறிய வாழ்க்கையை ஆரம்பகால தேவதாசிகள் மேற்கொள்ளவில்லை. பல தேவதாசிகளை விபசாரிகளாக மாற்றியது பிற்கால சமூகமே ஆகும். அது எப்படி நிகழ்ந்தது என்று இன்னும் சிறிது நேரத்தில் சிந்திப்போம். அதுவரை அவர்களை பற்றி வேறொரு முக்கிய விஷயத்தை பார்ப்போம்.
இந்து சமய கோவில்களில் மட்டுமின்றி பௌத்த விஹாரங்களிலும், ஜெயின பள்ளிகளிலும் தேவதாசிகள் பணிபுரிந்தனர். குஜராத்திலுள்ள சோமநாதர் ஆலயத்தில் 1024-ம் வருடம் கஜினி முகமது படையெடுத்து வந்த போது 500-க்கு மேற்பட்ட தேவதாசிகள் பணிபுரிந்திருக்கின்றனர் இவர்களில் பலரை கஜினி முகமது கடத்திக் கொண்டு போய் கற்பழித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் ராஜராஜ சோழன் காலத்தில் நானூறு தேவதாசிகள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சுசிந்திரம், திருவண்ணாமலை, திருச்செந்தூர், போன்ற தமிழக பெரிய கோவில்களிலும் இலங்கையில் உள்ள தேவி நூவர ஆலயத்திலும், இந்தியாவில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் தேவதாசிகள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள தேவதாசிகள் நாட்டியத்திலும், இசையிலும் மட்டும் கைதேர்ந்தவர்களாக இருக்கவில்லை, சிறந்த மொழி அறிஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள். தமிழ், சமஸ்கிருதம் உட்பட தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர், விநோதர மஞ்சரி என்ற நூலில் கவி சக்கரவர்த்தி கம்பன், ஸ்ரீ ரங்கத்தில் ராமாயணத்தை அரங்கேற்ற முற்பட்டபோது கோவில் அதிகாரிகள் உள்ளூர் புலவர்களின் சான்று கவி இருந்தால் தான் அனுமதி வழங்க இயலும் என்று கூறியபோது மீனாட்சி என்ற தேவதாசி சாற்று கவி வழங்கி ராமாயணம் அரங்கேற உதவி செய்ததாக கூறப்படுகிறது. தஞ்சாவூரில் விஜய ராகவன் நாயக்கர் ஆட்சி நடந்தபோது அரசவை நாட்டிய மணியாக இருந்த சந்திர ரேகா என்ற பெண் சிறந்த கவிஞராகவும் இருந்திருக்கிறார் பெங்களூரை சேர்ந்த நாகரத்தினம்மா அவர்கள் சமஸ்கிருத மாநாட்டிற்கு தலைமை ஏற்கின்ற அளவுக்கு புலமை பெற்றிருந்தார்கள்.
ஆசிய ஜோதி என்று உலகமக்கள் அனைவராலும் அழைக்கப்படும் அன்பே வடிவான கௌதம புத்தர் தனது இறுதிகாலத்தில் கடைசி தானமாக அமிரபாலி என்ற தேவதாசி பெண்ணிடம் இருந்தே மாந்தோப்பு ஒன்றினை பெற்று தனது சங்கத்தில் ஒன்றை நிறுவினார் என புகழ்பெற்ற சீன பயணியான யுவாங் சுவாங் தனது நூலில் குறிப்பிடுகிறார். டெல்லியில் இருந்து மாலிக்பூர் என்ற முரட்டு முகமதிய தளபதி ஸ்ரீரங்கத்தின் மீது படையெடுத்து அரங்கநாதர் விக்கரகத்தை சேதப்படுத்த முயன்ற போது அம்சலேகா என்ற தேவதாசி பெண் சாதுர்யமாக மலிக்காபூரை வழிமாற்றி விட்டதாகவும் இதே போலவே திப்பு சுல்தான் சிதம்பரத்தின் மீது படையெத்து நடராஜர் விக்கிரகத்தை அபகரிக்க வந்த போது அவனிடமிருந்து வைப்பி என்ற தேவதாசி பெண் பாதுகாத்ததாகவும் சரித்திரங்கள் சான்று பகிர்கின்றன. இப்படி தேவதாசிகளின் எத்தனையோ நற்செயல்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம்.
ஒரு ஆலயத்தில் பணிபுரியும் தேவதாசி இறந்துவிட்டால் அவள் உடலை சாதாரண துணியால் மூடமாட்டார்கள். ஆலய மூல மூர்த்திக்கு போற்றப்பட்ட புனித ஆடை மரியாதையுடன் கொண்டு வந்து அவள் உடல் மீது போர்த்தப்படும். அன்று முழுவதும் ஆலய வழிபாடு நிறுத்தி வைக்கப்படும். இறுதி ஊர்வலத்திற்கு எடுத்து செல்லப்படும் அவளது உடல் கோவிலின் ராஜகோபுரத்தின் முன்னால் சிறிது நேரம் நின்றே மயானத்திற்கு கொண்டு செல்லப்படும். சாதாரண மனிதர்களுக்கு கிடைக்காத பெரும் பேராகிய ஆலய நெருப்பு எடுத்து செல்லப்பட்டே அவள் சிதை எறியூட்டப்படும். உடலின் அழகை விலைகூறி விற்கும் விலை மகள்ளாக அவர்கள் வாழ்ந்திருந்தால் இத்தகைய மரியாதை அவர்களுக்கு எப்படி கிடைக்கும்? அல்லது இந்த மரியாதையை வழங்குவதற்கு பொதுமக்கள் எப்படி அனுமதிப்பார்கள்? என்பதை சிந்தித்து பார்த்தால் தேவதாசிகளின் சமூக அந்தஸ்து எத்தகையது என்பது புரியும்.
ஒழுக்க கெட்ட வாழ்க்கை வாழ்வதை இன்றைய சமுதாயம் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது அக்காலத்திய சமுதாயம் தேவதாசிகள் ஒழுக்க கெட்டவர்களாக இருந்திருந்தால் ஏற்று இருக்குமா? ஏற்றுதான் இத்தகைய சிறப்பை அவர்களுக்கு கொடுத்து இருக்குமா? கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மிலிந்த பஞ்ஞ என்ற பாலிமொழி நூல் கற்பு ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய இந்துமதி என்ற தேவதாசி பெண் கங்கையின் போக்கையே தனது சாபத்தால் மாற்றினாள் என்று கூறுகிறது. சிலப்பதிகாரத்தில் வருகின்ற மாதவியின் கற்பு திறமும், அவள் மகள் மணிமேகலையின் துறவற சிறப்பும் நாம் அறிந்ததே, இவ்வளவு சிறப்பு மிக்க தேவதாசி பரம்பரை இழிவு மிகுந்ததாக அவமான சின்னமாக எப்போது ஆனது எப்படி ஆனது?
என் மகளுக்கு பதிலாக வேறொரு பெண்ணை தேவதாசியாக்கினால் என்ன, என்று யோசிகிறேன். வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு ஆசை வார்த்தை காட்டி அந்த குடும்ப பெண்ணை விலைக்கு வாங்கி தேவதாசியாக்க விரும்புகிறேன் என்னை போல் இருக்கும் சமுதாய மேட்டு குடியினர் பலர் எனது விருப்பத்திற்கு உடந்தையாகயிருந்து ஆக்கமும், ஊக்கமும் தருகிறார்கள் இன்றைய காலத்தை போல தான் அக்காலத்திலும் சட்டமும் சமூக பழக்க வழக்கமும் வசதி படைத்தவர்களுக்கு உறுதுனையாக இருந்திருக்க வேண்டும். எப்போது வசதியற்ற பெண்களை விலைக்கு வாங்கலாம் என்ற நிலை உருவானதோ அப்போதே ஆண்டவனை மகிழ்விக்க நர்த்தனமாடும் தேவதாசி ஆண்டவனின் மறு வடிவமான அரசனையும் மகிழ்விக்க ஆடலாம் என்ற அவமான நிலை வந்துவிடுகிறது தலைவனே தவறு செய்யும் போது தொண்டர்கள் செய்யும் தவறை தட்டி கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்.
தஞ்சாவூர் போன்ற நில உடமையாளர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்த பகுதிகளில் பல தேவதாசிகள் வலுகட்டாயமாக பாலியல் தொழிலாளிகளாக ஆக்கப்பட்டனர். பாலியல் தொழிலில் ஈடுபட்ட மற்றவர்களும் கூட தங்களை தேவதாசிகள் என்று அழைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனால் தேவதாசிகளுக்கு பிறந்த பல குழந்தைகள் சமுதாயத்தால் அவமான சின்னங்கள் என்று பட்டம் கட்டி கொடுமைபடுத்தப்பட்டனர்.
பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாயினர். வயதான நோய்வாய்ப்பட்ட தேவதாசிகள் பிச்சையெடுத்து பிழைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். உன்னதமாக தெய்வீக மரபு என்பது மனிதனின் வக்கிர புத்தியால் சீரழிந்து சமுதாய அவமானமாக ஆகிப்போன நிலையில் அதை முற்றிலும் ஒழித்து கட்ட 1947-ம் வருடம் தமிழ்நாடு அரசு தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. மிக நீண்டகாலமாக தெய்வீகத்திற்கும் ஆடல் கலைக்கும் அருந்தொண்டாற்றிய ஒரு மரபு தனது கீழ்மையை தானே தாங்காமல் தன் கதையை முடித்து கொண்டது என்றே சொல்லலாம்.
தேவதாசி என்ற சமூகம் இல்லாவிட்டால் இன்று பரத நாட்டியம் என்ற கலையே முற்றிலும் அழிந்து போயிருக்கும். அவர்கள் ஆடிய சதிர், என்ற பரதமே ஈ.கிருஷ்ண ஐயர், ருக்மணி தேவி அருண்டேல் போன்றோரால் செம்மைபடுத்தபட்டு இன்று நம் கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமை தந்து கொண்டிருக்கிறது. இன்று பரத நாட்டிய கலையில் உச்சத்தில் இருக்கும் கலைஞர்கள் சீர்காழி செல்லம் அம்மனி சகோதிரிகள், தஞ்சாவூர் சாரதாம்மாள், காரைக்கால் சாரதா அம்மாள், திருவாரூர் ஜானம், மதுராந்தகம் கெஜதாம்மாள், திருவாளபுத்துர் கல்யாணி, பந்தநல்லூர் தங்கச்சி, திருவாரூர் கமலம், மயிலாப்பூர் கௌரி திருநெல்வேலி முத்துரத்தினத்தம்மாள், கும்பாகோணம் பானுமதி, தஞ்சாவூர் பாலசரஸ்வதி, மட்டுமல்லா லஷ்மி நாராயணி, பெண்டில்லா சத்ய பாமா, துக்கிராலா மாணிக்கம், எண்டமுரி ராமரத்தினம், காளஹஸ்தி ராஜம்மா, திருமுழுடலூர் சுந்தரம்மா, கோலார் நாகரத்தினம் பெங்களூர் சந்திரவதனா போன்யோருக்கு மறக்காமல் அஞ்சலி செலுத்த வேண்டும்.
இறைபக்திக்காகவும், கலைசேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்த பெண்ணினத்தை அவர்கள் சராசரியான குடும்ப வாழ்க்கை வாழாமல் ஒருவித அர்பணிப்பு வாழ்க்கையை வாழ்ந்ததினால் அர்ப்ப மனதுடைய சில ஆதிக்க ஆண் சக்தி தங்களது குறுகிய மன விகாரங்களுக்காக பயன்படுத்தியதினால் போற்ற தக்க மரபு அவமான சின்னமாக முடிந்து போய்விட்டது. ஆனாலும் ஒரு உண்மையை அழுத்தி சொல்ல வேண்டும் தேவதாசி பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் அல்ல, இந்த சிந்தனை இளைய தலைமுறையினருக்கு ஏற்பட்டால் அந்த மரபுகளின் எச்ச சொச்சத்தை கனிவுடன் ஆராய்வார்கள்.
கருத்துகள்
ரொம்ப சிறப்பான கட்டுரையை
ரொம்ப சிறப்பான கட்டுரையை கொடுத்திருக்கிறீர்கள் ஐயா
நன்றி
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...




















