oruvaarthai's படம்

நானெல்லாம் சின்ன வயசுல ஒன்னாம் வகுப்பு படிக்கும் போது அதுல பாஸான உடனே ரெண்டாம் வகுப்பு போவேன்.அப்போ ஒன்னாம் வகுப்பு பாட புஸ்தகம் வீட்ல அப்படியே இருக்கும்,அத எடைக்கு போட்டு சீனிக்கிழங்கு வாங்கி திங்கலாம், இல்லேன்னா அப்பளப்பொறியும்,சோளக்கதிரும் வாங்கி திங்கலாம்னு அப்பாகிட்ட சொல்வேன்.

அதுக்கு அப்பா "இல்லடா... இந்த வருஷம் புதுசா ஒன்னாம் வகுப்புல சேர்ந்திருக்குற  பசங்க யாராவது இருந்தா அவங்களுக்கு இத இனாமா குடுத்துடு"ன்னு சொல்வாரு

நான் எதுக்குப்பா இனாமா குடுக்கணும்னு கேப்பேன்

அதுக்கு அப்பா "பாட புஸ்தகம் சரஸ்வதி தெய்வத்துக்கு சமமானது,அத விலைக்கு விக்கக் கூடாது அது ரொம்ப தப்பு"ன்னு சொல்வாரு...

அதுலேர்ந்து நான் என்னோட ஒவ்வொரு வகுப்பு பாட புஸ்தகத்தையும் அடுத்த வகுப்புக்கு பாசாகி போறப்ப என்னோட வீட்டு பக்கத்துல இருக்குற பசங்க யாருக்காவது இனாமா கொடுத்துடுவேன்.

அதிகம் படிக்காத எங்க அப்பாவுக்கு இருக்குற அந்த நல்ல சிந்தனை கூட இப்போ கல்வியாளர்ங்கிற போர்வையில இருக்குற கல்வி வியாபாரிங்ககிட்ட இல்ல...

இனாமா குடுக்க வேண்டிய கல்வியை இப்போ நூறு ரூபாய் முதலீடு போட்டு முன்னூறு ரூபாய் லாபத்தை சம்பாதிக்கிற அக்மார்க் தொழில் வியாபாரமா மாத்திட்டாங்க.

கடந்த ரெண்டு மாசமா தமிழ்நாட்டுல ஓடிக்கிட்டு இருக்குற பிரச்சனை தனியார் கல்வி நிறுவனங்கள் அடிக்கிற கல்வி கட்டண கொள்ளை தான்.

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம,கல்விக்கு குறைந்தபட்ச கௌரவத்தை கூட குடுக்காம எல்.கே.ஜி யா 10,000 குடு,யு.கே.ஜி யா 20,000 ஆயிரம் குடு இப்படி குழந்தை பொறந்த உடனே பேர் வெக்கிற மாதிரி ஒவ்வொரு படிப்புக்கும் இவங்க இஷ்டத்துக்கு ஒரு அமௌண்டை பிக்ஸ் பண்ணிட்டு இத குடுத்தா குடுங்க இல்லன்னா வேற ஸ்கூல் பாருங்கன்னு மீன் மார்க்கெட்டுல பேரம் பேசுற மாதிரி நடந்துக்குற அந்த கேவலமான முறை இருக்கே அப்பப்பா...அது கடவுளுக்கே அடுக்காது.

எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் "எம்புள்ள படிக்கிற ஸ்கூல்ல எல்.கே.ஜி யில சேர்றதுக்கு 30000 ரூபாய் கேக்குறாங்க"ன்னு வருத்ததோட சொன்னாரு...தனியார் பள்ளிகள் இப்படி கட்டண கொள்ளையில ஈடுபடுறதுக்கு ஒரு வகையில அரசாங்கமும் காரணம் தான்.இருக்குறவன் ஒழுங்கா இருந்தா இந்த பிரச்சனை எதுக்குங்கிற மாதிரி அரசாங்கம் நடத்துற பள்ளிக் கூடங்கள்ல படிப்பும்,ஒழுக்கமும் நல்லா இருந்துச்சின்னா இப்படி தனியார் பள்ளிகளோட எண்ணிக்கை அதிகமாயிருக்குமா..? இல்லேன்னா அவங்களோட இந்த வியாபார தந்திரம் தான் கல்விக்குள்ல வந்திருக்குமா..?

பெரும்பாலான அரசாங்க பள்ளிகள் ஒழுங்கா நடக்கிறதே இல்லை,அப்படி நடந்தாலும் அங்க படிப்பு சரியா இருக்குறதில்லை,மழை பேஞ்சா ஓடுகள் ஒழுகும்,வகுப்பறைக்குள்ள இருக்குற சேர்கள் உடைஞ்சி போயிருக்கும்,கட்டடங்கள் இடிஞ்சி விழுற ரேஞ்சில இருக்கும்,இல்லேன்னா ஸ்கூலுக்கு வாத்தியாரோ,டீச்சாரோ வந்திருக்கவே மாட்டாங்க...இப்படி இந்த லட்சணத்துல அரசாங்க பள்ளிகள் இருந்தா மக்கள் மேல எப்படி அரசாங்க பள்ளிகள் மேலேயும்,அவங்க சொல்லிக் குடுக்குற படிப்புகள் மேலேயும் நம்பிக்கை வரும்...

இதாவது பரவாயில்லை,நான் பள்ளிக்கூடம் படிக்கும் போதெல்லாம் செமத்தியா கூத்து நடக்கும். என்னன்னா, ஸ்கூல்ல மத்தியானம் ஒரு மணிக்கு சாப்பாடு சாப்புடுறதுக்கு இடைவேளை விடுவாங்க,பசங்க எல்லாரும் சாப்புட்டுட்டு கரெக்டா ரெண்டு மணிக்கெல்லாம் வகுப்புக்குள்ள வந்துருவாங்க,ஆனா டீச்சர்களும்,வாத்தியார்களும் நல்லா ஒரு உறக்கத்தை போட்டுட்டு சாவுகாசமா மூணு மணிக்கு வகுப்புக்குள்ள வருவாங்க...அப்புறம் என்ன நடக்கும் நாலு பீரியடு நடக்குற நேரத்துல ரெண்டு பீரியடு தான் நடக்கும்.

அதிலேயும் சில டீச்சர்கள் ஒரு மணிக்கு வேகமா போய் சாப்புட்டுட்டு அங்க இருக்குற மேஜை மேல சாஞ்சி படுத்து கிடப்பாங்க,அவங்க பக்கத்துல ரெண்டு மூணு பொம்பள புள்ளைங்க டீச்சர்களோட தலைமுடியில பேன் பார்த்துக்கிட்டு இருப்பாங்க.,இதுல அவங்களுக்கு என்ன பிரயோஜனம்னா முந்தினநாள் ஏதாவது வீட்டுப்பாடம் குடுத்து அதை செய்யாம வந்தாங்கன்னா அவங்களுக்கு மட்டும் அடி கிடையாது..இதெப்படி இருக்கு?

அரசாங்கமே கோடிக்கணக்குல செலவு பண்ணி நடத்துற ஸ்கூல்கள் இப்படி மட்டமா இருந்துச்சின்னா அந்த கல்விக்கு அரசாங்கம் குடுக்குற மரியாதை தான் என்ன..?சொல்லிகுடுக்குற டீச்சர்கள் குடுக்குற மரியாதை தான் என்ன?

"அய்யோ...உம் புள்ளையை கவர்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்துடாத அங்க இருக்குற புள்ளைங்க கூட சேர்ந்து கெட்டுப் போயிடுவான்" இப்படி ஒரு பழிச்சொல் கவர்மெண்ட் ஸ்கூல்கள் மேல மட்டும் இருக்க காரணம் என்ன? இந்த மாதிரி சில மோசமான சம்பவங்கள் நடக்குறதுனால தான்.

இந்த மாதிரியான விஷயங்கள் தான் தனியார் பள்ளிக்கூடங்களோட கல்வி கட்டண கொள்ளைக்கு ஒரு ஆரம்பமா அமைஞ்சதுன்னா இதை யாருமே மறைக்கவோ மறுக்கவோ முடியாது.ஆக தனியார் பள்ளிகளோட கட்டண கொள்ளைக்கு அரசாங்கமும் துணை போயிருக்குன்னு தானே அர்த்தம்.

இந்த நிலை மாறணும்,கல்வியை கல்வியா பாக்குற மனப்பக்குவம் எல்லா பள்ளிக் கூடங்களுக்கும் வரணும்,கல்வியை வியாபாரமாக்கி அதுல சம்பாதிச்சி உடம்பை வளக்குற பள்ளி நிர்வாகிகளோட கொடூர எண்ணம் மாறணும்.அதே மாதிரி மக்களும் தனியார் பள்ளிகள்ல தான் படிப்பு நல்லா இருக்கும்னு நம்புற எண்ணத்தை மாத்தணும்,இப்போ தனியார் பள்ளிகளுக்கு நிகரா அரசாங்க பள்ளிகள்லேயும் படிப்பு நல்லா சொல்லிகுடுக்குறாங்க.

அதுக்கு உதாரணமா, ரெண்டு வாரத்துக்கு முன்னாடி வந்த பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை சொல்லலாம்.அதுல மாநிலத்திலேயே முதலாவதா வந்த மாணவி ஜாஸ்மின் திருநெல்வேலியில இருக்குற ஒரு மாநகராட்சி பள்ளிக்கூடத்துல படிச்ச பொண்ணு தான்.அது மட்டுமில்லாம அவங்க எந்த தனியார் பள்ளியிலேயும் ஆயிரக்கணக்குல பணத்தை குடுத்து படிக்கல.., 

இந்தியா வல்லரசா ஆகணும்னு அரசாங்கம் மட்டும் சொல்லிட்டு இருந்தா போதாது அதுக்கு அடிப்படையா அமையிற கல்வியை குடுக்குறவங்களும் இந்த எண்ணம் வரணும்.அப்போ தான் பேச்சளவுல இருக்குற வல்லரசு கனவு நிஜமாகும்.

0
Your rating: None
http://oruvaarthai.blogspot.com/2010/06/30000.html