VISWAM's படம்

"என்ன அண்ணே! இன்னைக்கி என்ன பதிவு ?"

"வாம்மா... என் தங்கச்சி! மந்திரச் சொல்லைப் பற்றி எழுதப் போறேன்!"

"அண்ணே! நானும் கூட கலந்துக்கலாமா?"

"எனக்கே பதிவு எழுத நேரம் கிடைக்கலே. என் தொழில் அப்படி! நேரம் கிடைக்கிற நேரத்திலே கரண்ட் போயிடுது... சரி! வா மகாராணி! நீயும் கலந்துக்கோ. 'நல்லது நடந்தா சரி!' முதல்லே நீ சௌக்கியமா? வீட்டிலே எல்லாரும் நலமா? குட்டிச் செல்லம் எங்கே? மாப்ளே எங்கே?"

"சௌக்கியம் அண்ணே! வீட்டிலே எல்லோரும் நல்லாயிருக்காங்க... குழந்தை அண்ணியோட விளையாடுறான். என் பொண்ணு ஸ்கூலுக்கு போயிருக்கு. அவரு வெளியூறு போயிருக்காரு. என் ஆபீசிலே அரை நாள் தான் வேலை... அதான் உங்களைப் பார்க்க வந்துட்டேன்."

"ரொம்ப 'சந்தோசம்!' ஆரம்பிக்கலாமா?

"இப்ப நான் முதல்லே சொல்றேண்ணே! 'அம்மா' என்னும் மந்திரச் சொல்லுக்கு இணையாக வேறு சொல்லே இல்லை"

"ஆரம்பமே அசத்திட்டே! இதை உணர்ந்தவர்கள் வாழ்விலிருந்து அவர்களின் 'அம்மா' பிரிவதேயில்லை. அவர்களின் ஆசீர்வாதத்தோடு எழுதுவோம். பெற்றோர்களின் 'ஆசீர்வாதம்' இருந்தால் எதையும் சாதிக்கலாம். 'துணிந்தவனுக்கு தோல்வியில்லை!' என்று தன் தாய் சொல்லைக் கேட்ட சிவாஜி, ஒருபோதும் தோல்வியை நெருங்கவிடாத மாவீரன் ஆனார்."

"நான் சொல்றேண்ணே... 'நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்!'- இந்த மந்திர வார்த்தைகள் தான் ஒரு சாதாரண இளைஞனாக இருந்த ஆபிரகாம் லிங்கனை அமெரிக்க ஜனாதிபதியாக்கியது."

"அருமை! இதையும் தெரிஞ்சிக்கோ.... 'நன்றி மற்றும் பாராட்டு'-இந்தச் சொற்களை ஒரு மந்திரச் சொல்லாக நாம் வைத்துக் கொள்ளக் கூடாது. நம் வாழ்க்கையில் எப்போதும் கலந்து இருக்க வேண்டும். நம்ம மனசுக்குள்ளேயே ஒருத்தரைப் பற்றி பாராட்டினாலோ, நன்றி தெரிவித்தாலோ எந்தப் பிரயோசனமும் இல்லை"

"ஆமாம் அண்ணே! அன்னை தெரசா சொன்னது : 'அன்பு, ஆதரவு, நன்றி' - இவைகளுக்கு ஏங்குவோர்களின் எண்ணிக்கை பஞ்சத்தால் தவிப்போரை விட அதிகமாம்!"

"அப்புறம் தங்கச்சி! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் தூக்கு தூக்கி படத்தில் ஒரு வசனம் வரும். "கொண்டு வந்தால் தந்தை... கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்...சீர் கொண்டு வந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி... உயிர் காப்பான் தோழன். " இந்த பழமொழிகள் எல்லாம்....."

"ஒரு நிமிஷம் அண்ணே! நீங்க என்ன சொல்லவறிங்கன்னு தெரியுது. 'இந்த பழமொழிகள் எல்லாம் அந்தப் படத்தில் அரச குமாரன் வாழ்க்கையில் நடப்பதாக அருமையான திரைக்கதை மூலம் சொல்லியிருப்பார்கள்.' என்று தானே? அதை விடுங்க. ஒவ்வொன்ன கேட்குறேன். அதென்ன கொண்டு வந்தால் தந்தை? நம்ம அப்பா அப்படியா இருக்கார்? என்னைத் தான் அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும். தெரியுமா?"

"உனக்கு மட்டுமல்ல. முக்காவாசி வீட்டிலேயும் இப்படித்தான். அப்பாக்களுக்கு மகள்களைப் பிடிக்கும். அம்மாக்களுக்கு மகன்களைப் பிடிக்கும். அது ஒரு பிரியம் என்று சொல்வதை விட ஒரு கவனிப்பு அல்லது கண்காணிப்புன்னு வைச்சிக்கோ. 'கொண்டு வந்தால் தந்தை' என்றால் நீ பணம் அல்லது பொருள் என்று நினைக்கிறே. அப்படி கொண்டு வந்து கொடுத்தாலும் அவரா அனுபவிக்க போகிறார்? நமக்குத் தானே உழைக்கிறார்? எந்தெந்த அனுபவத்தைக் கொண்டு வந்தான்? எந்தெந்த 'நல்ல பழக்க வழக்கம்' கொண்டு வந்தான்? அப்படீன்னு எடுத்துக்கோ."

"அடுத்தது தான் கோப கோபமாக வருது. சீர் கொண்டு வந்தால் தான் சகோதரியா? நானென்ன அப்படியா இருக்கேன்?"

"அடியேய்! தெரியாத் தனமா சொல்லி மாட்டிக்கிறது... இது தானா? இந்த பழமொழிகள் எல்லாம் அம்மாவை உயர்வாக சொல்வதற்காக சொல்லப்பட்டது. இப்படி ஒப்பிட்டு ஒப்பிட்டே நாம காலத்தை கடத்துகிறோம்... இப்ப அது ஒரு கலாச்சாரமாக ஆகி விட்டது."

"இதுக்குத்தான் கமல் சார் சொன்னாரு போலிருக்கு 'பழமொழி சொன்ன ஆராயக் கூடாது. அனுபவிக்கனும்'-ன்னு... போதும் அண்ணே!"

"இங்கே பார்! நீ தான் நடுவிலே கேள்வி கேட்டே! 'செய்வதைச் திருந்தச் செய்'... அடுத்து 'கொலையும் செய்வாள் பத்தினி' என்றால் சகல குணங்களும் பொருந்திய ஒரு பெண், தான் அடி எடுத்து வைத்த குடும்பத்தை எல்லா வழிகளிலும் உயர்த்திக் காட்டுவாள். ஏழ்மை, வறுமை, கல்லாமை, இல்லாமை மற்றும் பல கெட்ட பழக்கங்களை கொலை செய்வாள் என்று அர்த்தம்."

"நான் கூட வேற மாதிரி நினைச்சிட்டிருந்தேன். அண்ணே! நான் ஒன்னு சொல்றேன். 'அம்மா இல்லேன அன்பு போச்சி, அப்பா இல்லேன அதிகாரம், உறவுகள் போச்சி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இல்லேன ஆதரவு போச்சி, சம்சாரம் போச்சின்னா சகலமும் போச்சி'"

"அம்மா! தாயே! நீ சொன்ன சரிதாம்மா! அதோட 'நண்பர்கள் இல்லேன வாழ்க்கை நாசமாப் போச்சி' இதையும் சேர்த்துக்கோ. 'உயிர் கொடுப்பான் தோழன்' என்றால் நமக்காக உயிரை விடுவதல்ல. ஒரு மனிதனுக்கு உயிரை விட மேலானது மானம். அந்த மானத்திற்கு இழுக்கு வரும் தருவாயில் நம் தோளோடு தோள் சேர்த்துக் கொண்டு நம்மை காப்பாற்றுபவன் மட்டுமே உயிர்த் தோழன். நம்ம திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால் ....."

"திருக்குறள் சொல்லப் போறீங்களா? போதும் அண்ணே! நேரம் ஆகும்!"

"அடிப்பாவி! சரி.... நட்பைப் பற்றி ஐந்து அதிகாரம் இருக்கு. நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு-குறள் எண் 781 முதல் 830௦ வரை... அப்புறம் படி. திருக்குறள்லே எல்லாமே மந்திரச் சொல் தான்! கண்ணதாசன் பாடல்களிலும், நம்ம நடிகர்களின் 'பஞ்ச்' வசனக்களிலும் நிறைய மந்திரச் சொற்கள் உள்ளது!"

"சரி அண்ணே! அப்புறம் 'மெய்ப் பொருள் காண்பது அறிவு'" என்று அடிக்கடி சொல்வீங்களே... அதைப் பற்றி சொல்லலாமே"

"ஓ அதுவா! இறைவன் நாடினால் அதைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன். அந்தக் கருத்தை ஒட்டி 'அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?' என்று மூன்று பதிவுகளாக ஏற்கனவே எழுதி உள்ளேன்... இப்ப ஒரு கதையைக் கேள்"

ooOoo
ஒரு குருவிடம், சீடன் ஒருவன் கோபமாக கூறினான் : "எனது தியானம் கொடுமையாக இருக்கிறது. கவனம் சிதறுகிறது. உடம்பும் ஒத்துழைக்க மறுக்கிறது. கொஞ்ச நேரத்தில் தூங்கியும் விடுகிறேன்"

குரு அமைதியாக கூறினார் : "இந்த நிலை மாறும்"

சிறிது நாள் கழித்து அதே சீடன் கூறினான் : "இப்போதெல்லாம் என் தியான அனுபவம் அற்புதமாக உள்ளது. தூக்கம் இல்லாமல் விழிப்புணர்வோடும், மனம் அமைதியாகவும் இருக்கிறேன்"

குரு சிரித்துக் கொண்டே கூறினார் : "இதுவும் கடந்து போகும்"

'வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை' என்பதை உணர்த்து விட்டான் என்பதை, குரு, சீடனின் முகம் பார்த்து அறிந்து கொண்டார்.
ooOoo

"இங்கே பாரு... இவ்வளவு நேரம் பொறுமையா படித்து விட்டு நண்பர்கள் டீ குடிக்கிறாங்க... அண்ணி கிட்டே சொல்லி டீ போடச் சொல்லு."

"சரி அண்ணே! அப்புறம் பொண்ணு நல்ல மார்க் வாங்குது. பையன் தான் சுமார். அவனை என்னான்னு கேளுங்க"

"அது சரி! மறுபடியும் வாயக் கிளறாதே... ரெண்டு பேரும் வேலைக்கு போறீங்க. அது தப்புன்னு சொல்லலே. குழந்தைகளுக்கு சொத்து சேர்க்கிறதை விட படிப்பு செல்வம் தான் முக்கியம்! நீயாவது தினமும் இரண்டு மணி நேரமாவது டி.வி. பார்க்காம குழந்தைகளுக்கு சொல்லித் தா. குழந்தைகளுக்கு படிப்பு தான் முக்கியம். மார்க்கெல்லாம் பார்க்காதே. புரிந்து படிக்கிறார்களா என்று பாரு. உன் சமையல் பற்றி அண்ணி சொன்னா... எப்ப பாரு நூடுல்ஸ், பிரட், பாக்கெட் புட்ஸ்-காலையிலே இதை சாப்பிட்டு மதியமும் இதையே குழந்தைகள் எப்படி சாப்பிடும்? ஒன்னு செய்! நீ ஒரு நாள் மதியம் ஆபிஸ் கேண்டீன்லே சாப்பிடாம, நீ காலையிலே செய்ற ஐட்டங்களை நீயே மதியம் சாப்பிட்டுப் பாரு! உண்மை தெரியும். கொஞ்சம் சீக்கிரம் எழுந்து சாதம், இரண்டு காய்கறி கூட்டு, முக்கியமா கீரை, செஞ்சா என்னவாம்? 'நம்ம உடம்பும் மனசும் தான் ரொம்ப முக்கியம்'..... என்ன மௌனமாயிட்டே?"

"இல்லே 'மௌனம்' கூட சில இடங்களில், சில நேரங்களில் மந்திரச் சொல் என்று சொல்ல வந்தேன்."

"அது சரி! இப்ப அறிவுரை சொன்னாலும் சரி, ஆலோசனை சொன்னாலும் சரி!
யாருக்கும் பிடிப்பதில்லை. ஒரு சின்ன கணக்கு கேட்குறேன்... பதில் சொல்லு."
ooOoo
"பால்காரன்கிட்டே இரண்டு அளவுப் பாத்திரம் தான் இருக்கு. 3 லிட்டர் ஒன்னு. 5 லிட்டர் ஒன்னு. நீ 4 லிட்டர் பால் வாங்கணும் என்று வைத்துக் கொள். அவன்கிட்டே இருக்கிற இரண்டு அளவுப் பாத்திரத்தை மட்டும் வைச்சிக்கிட்டு ஏதோ பண்ணி உன்னோட பாத்திரத்தில் ஒரே தடவையாக 4 லிட்டர் ஊத்திட்டுப் போயிட்டான். அது எப்படி ஒரே தடவையா 4 லிட்டரா ஊத்தினான்?"
ooOoo
"அண்ணே! கொஞ்சம் இருங்க! டீ கொண்டு வந்துறேன்"

"என்ன பதிலையே காணோம்? உன் பொண்ணுகிட்டே போன வாரமே கேட்டேன். இரண்டு முறைகள் சொன்னா. அதிலே எது ஈஸி?-ன்னு என்கிட்டே கேட்குறா. இப்ப படிக்கிற குழந்தைக்ககிட்டே நாம தான் நிறைய தெரிஞ்சிக்கணும்"

"நான் பதில் சொல்லட்டா? பால்காரன் தானே ஊத்தினான்? அவனுக்கு தெரிஞ்சா போதும். உங்களை மாதிரி என்கிட்டே கேட்டா பால்காரனையே மாத்திருவேன்!..."

"ஹா ஹா ஹா ஹா"

"சீரியசாக எழுதுகிறீர்களே என்று உங்களை சிரிக்க வைத்தேன். எனக்கும் பதில் தெரியும். மனிதனுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அவசியம் அண்ணே! அது சரி... இப்ப மேலே இருந்து படிக்கிறேன். தப்பு இருந்தா சரி பண்ணுங்க!... ...ம்... ஏன் அண்ணே! அங்கங்கே என்னை 'டி' 'டி' ன்னு சொல்ற மாதிரி இருக்கு"

"மன்னிச்சிக்கோ தாயே! உன் பேரு திவ்யா இல்லையா? அந்த 'D'-ன்னு எடுத்துக்கோ தங்கச்சி. சரி..... பப்ளிஷ் பண்ணறதுக்கு முன்னாடி சரி செஞ்சிறேன்."

"அண்ணே! சும்மா ஒரு ஜாலிக்காக கேட்டேன். நீங்க அப்ப 'டி' பேசினால் தான் எனக்குப் பிடிக்கும். ஒரு சின்ன விசயத்திற்கும் 'மன்னிப்பு' கேட்கிறீங்க. இந்த மாதிரி இருந்தா குடும்பத்திலே எந்த பிரச்சனையும் வராது. அதை விட நல்லா சமாளிக்கிறீங்க... உங்களை மாதிரி 'எல்லா இடத்திலும் சமயோசிதமாக சமாளிக்கிற திறமை வேண்டும்'. அப்புறம் அண்ணே! நான் வந்ததாலே இந்தப் பதிவே மாறிப் போச்சா? உங்க மந்திரச் சொல் என்ன?"

"வரிசையா 25 மந்திர சொல்லோ, மந்திர வார்த்தைகளோ எழுதி விட்டு, "நண்பர்களே உங்களின் வாழ்க்கையில் படிக்கும் சமயத்திலோ, செய்யும் தொழிலோ, கஷ்டப் படும் போதோ, இல்லை எப்போதாவதோ, ஒரு மந்திரச் சொல் அல்லது மந்திர வார்த்தை உங்களை மாற்றி இருக்கும். அது என்ன?"-என்று கேட்டு முடிக்கலாம் என்று இருந்தேன். சரி இருக்கட்டும். 'நடப்பதெல்லாம் நன்மைக்கே!' என்று நான் நினைப்பதில்லை. 'நடப்பதெல்லாம் நம்மலாலே!' என்று தான் நினைப்பேன். அப்புறம் என் மந்திரச் சொல்லை தான் மேலே கதையிலேயே சொல்லிட்டேனே!"

"சரி நீங்க எழுந்திரீங்க அண்ணே! என் குழந்தையோடு விளையாடிட்டே இருங்க! முடிவுரையை நான் டைப் செய்து பப்ளிஷ் செய்றேன்"

"எனது நண்பர்களே! (அண்ணனின் நண்பர்கள் எனக்கும் நண்பர்கள் தான்) இதுவரை எழுதியதில் எனக்குத் தெரிந்த சில சொற்களையோ, வார்த்தைகளையோ ஹைலைட் பண்றேன் மந்திர சொல்லாக! உங்களின் கருத்துகளை எழுதுங்கள். ப்ளாக் வைத்துள்ளவர்கள் 'உங்களின் வாழ்க்கையை மாற்றிய மந்திரச் சொல் என்ன?' என்பதை எழுதுங்கள். நானும் உங்கள் தளத்திற்கு வந்து கருத்துச் சொல்கிறேன்.
அண்ணனுக்கு நன்றி! உங்களுக்கும் நன்றி!

நன்றி :
Read more: http://dindiguldhanabalan.blogspot.com

6
Your rating: None Average: 6 (1 vote)

கருத்துகள்

yarlpavanan's படம்

சிறந்த வழிகாட்டல் அண்ணே!


6

சிறந்த வழிகாட்டல் அண்ணே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


VISWAM's படம்

மிக்க நன்றி.


மிக்க நன்றி.