மரணங்கள் மலிந்த பூமி எது என்று கேட்டால், ஈழத்தில் உள்ள இறைவனுக்குப் பேசும் சக்தியிருந்தால் அவன் தன் சுட்டு விரலா தொட்டுக் காட்டுவான் அது ஈழம் தான் என்று. வெளித்தெரியாத பல ஜீரணிக்க முடியாத ரணங்கள் உள்ளே அமிழ்ந்து, புதைந்து கிடக்கும் ஒரேயொரு பூமியாக உள்ளது எது என காலத்திடம் கேட்டால், அதற்குப் பேசுகின்ற வல்லமையிருப்பின் அதுவும் கூறும் ஈழம் தான் என்று. உள்ளே கனன்று எரிந்த பெரு நெருப்பின் பின்னர், புதைந்து போன அகழ்வுகளை இலகுவில் கண்டறிந்து விட முடியாதவாறு வெள்ளரசுகள் மீது சட்டித் தொப்பிகள் கவிழ்க்கப்பட்டு அசையும் உயிரினங்களாக நடப்படிருக்கிறது.
காட்சிகளாய் பலவற்றை கண்டவர்களின் உயிர் மூச்சிற்கு ஆயுத அழுத்தம் கொடுக்கப்பட்டு, வெளியே ஏதும் பேச வாய் திறக்கமாட்டாதவர்களாக நாக்கு கிழித்துத் தொங்கும் தோரணங்கள் போல காற்றில் அசைய விடப்பட்டிருக்கிறார்கள். நடை பிணமாய் அந்தரிக்கும் பல ஜீவன்கள், சுற்றி வளைக்கப்பட்ட முட் கம்பி வேலியினுளிருந்து இன்றும் முனகும் உயிர்களின் அவலக் குரல்கள் என எல்லாவற்றையும் பார்த்தும் பாரமுகமாய் தன் நாளாந்த நாழிகைகளை நகர்த்துகிறாள் ஈழத்தாய்.
ஈழத் தாயவள் ஒரு காலத்தில் குளிர்ச்சியுற்றிருந்தாள். தன் மேனியில் வரி கொண்ட தேகங்கள் நடந்து, கொற்றவைக்கு வீரம் எனும் குளிர்த்தி நிறை அர்ச்சனைகள் செய்யப்பட்டு நாளும் வெற்றி எனும் நாமம் வாசலில் பொறிக்கப்பட்டிருந்ததால் ஈழத் தாய் இன்புற்றிருந்தாள். சாவு வரும் வழி எதிர்பார்த்து சரித்திரம் படைப்பதற்காய் காவல் இருந்தவர்கள் பல பேர் கொற்றவை எனும் வீரத்தின் தெய்வத்திற்கு தம் இன மானத்தால் திருமுழுக்காட்டினார்கள்.
இன்றோ, நாளையோ இறப்போமென நோய்வாய்ப் பட்டிருக்கும் ஒருவருக்கோ, உடலெல்லாம் இயக்கமற்று இருக்கும். ஒவ்வோர் நொடிகளையும் அச்சத்துடன் கழிக்க வேண்டும் எனும் ஏக்கம் நிறைந்திருக்கும். ஆனால் இதோ சாகப் போகிறோம் எனச் சந்தோசமாக வழியினப்பும் சூரியனுக்கு கையசைத்து விட்டுச் சென்று சாவார்களே, அவர்களின் இறுதி நிமிடம் வரை மனதில் பயமேதுமிருக்காதாம்.
தங்களால் நாளை ஒரு இனத்தின் இளம் பிஞ்சுகள் சிரித்து மகிழ்வார்கள் எனும் நம்பிக்கையில் சென்றார்களா? இல்லை தொலை நோக்குப் பார்வையுடன் வேள்வி செய்த ஒருவனின் மானத்தை நிலை நாட்டச் செத்தார்களா? எதுவும் இலகுவில் அவர்களிடமிருந்து அறியமுடியாது- காரணம் அவர்கள் ஒவ்வோர் அசைவும் ஒரு காலத்தில் பிறர் அறிய முடியாதிருந்தது. காட்சிப் பிறழ்வுகள் போல திடு திப்பென மாற்றங்களை உருவாக்கக் கூடிய காவற் தெய்வங்களாக அவர்களிருந்தார்கள்.
வேகம் எடுக்கும் விழிகளுக்குப் பின்னாலே இடம் பெறும் நிகழ்வுகளை அவர்களைக் கடந்து செல்லும் காற்றாலும் அறிய முடியாது. தாகம் எடுக்கையிலும் தமிழே வேண்டுமென தமிழ்ப் பால் குடித்த தருக்கர்கள் வாழ்ந்த நிலம் ஈழம். நாம் கூனிக் குறுகி கும்பிட்டு வாழ்கையில்;
தாம் இருக்கிறோம் என உணர்த்தி அடிமைத் தளையுடைத்த அற்புத மனிதர்கள் அவர்கள்.
இன்றோ நாளையோ எமைச் சாவு சூழ்ந்து கொள்ளும் எனும் அச்சத்துடன் வாழ்வது எவ்வளவு கொடுமையானது, ஆனால் இந்தா இதோ போய்ச் சாகிறோம் எனச் சிரித்தபடி- உதட்டோரம் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டுப் போய்ச் சாவதென்பது இவர்களால் எப்படிச் சாத்தியமானது? வரலாறே இவர்களைக் கண்டு அச்சப்பட்டிருக்கும். வானம்- முகில்- ஈழத்தின் காற்று இவையெல்லாம் இவர்களின் நகர்வுகளை உய்த்தறிய முடியாது ஏக்கம் கொண்டிருக்கும்.
வாழ்வில் ஒரு தடவையாவது அடிமைப்பட்ட இனம் நிமிருந்திருக்கிறதென்றால் அது இவர்களால் தானே சாத்தியம். முன்னொரு காலத்தில் ஈழம் சாவிற்குச் சவால் விட்டுக் காத்திருந்தது என்றால் அதுவும் இவர்களின் பிறர்கென வாழும் பண்பால் தானே நிரூபணம்!
இன்று இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இல்லையென பலர் பேசுகிறார்கள். ஆனால் ஈழ வானில் தோன்றும் விடிவெள்ளிகளாகவும், நட்சத்திரங்களாவும் மேலிருந்து அவர்கள் ஏக்க விழிகளுடன் பார்த்திருப்பதை அறியாமலல்லவா அவர்கள் பேசுகிறார்கள்.
நாளை பிறக்கும் தமிழ் குழந்தையின் மூச்சுக் காற்றில் கலந்துமிருப்பார்கள். யாரால் இவர்களின் பிறப்பினை அறிய முடியும். சூட்சுமம் அறிய முடியாத நவீன மனிதர்கள் அவர்கள். அடிமைப்பட்டு அடங்கியிருந்த ஓர் இனம் பற்றி உலகம் தம்மால் தான் அறிந்து கொண்டது எனும் நிம்மதிப் பெரு மூச்சில் காணாமற் போய்விட்டார்களோ தெரியவில்லை. ஆனாலும் நாளை ஓர் சந்ததி நன்றாய் வாழ வேண்டுமென்பதற்காய் தம் வாழ்வைத் துறந்த நவீன முனிவர்கள் அவர்கள்.
இலகுவில் ஒப்புவமை கொண்டு வர்ணிக்க முடியாத வேற்றுக் கிரக வாசிகள் அவர்கள். ஓ யார் அவர்கள்! அவர்கள் தான் இன்று வேற்றுக் கிரகத்தில் நிம்மதியாக வாழும் வேற்றுக் கிரக வாசிகள்!
பிற் சேர்க்கை: இப் பதிவானது கடந்த வாரம் இதே நாளன்று வர வேண்டிய பதிவு. சந்தர்ப்ப சூழ் நிலைகளால் கால தாமதத்துடன் இப் பதிவானது இன்று பிரசுரமாகிறது.
பின்னூட்டமிடும் அன்பு உள்ளங்கள், தயவு செய்து இலங்கையின் ஜனநாயக அரசியல் நிலமைகளைப் புரிந்து கொண்டு பின்னூட்டமிடவும்.
http://www.thamilnattu.com/2011/07/blog-post_12.html
- nirupan's blog
- Login or register to post comments
- 289 reads











