மீண்டும் ஒருதடவை உங்களுடன் பேசாப்பொருட்களை பேச முனைகிறேன். இங்கும் முன்புபோல உங்கள் ஆணித்தரமன கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிபார்த்திருக்கிறேன்.
கடலையும் மலையையும் ரசிக்கிறோம்,முற்றத்து ஒற்றைப்பனையையும் கருங்குரங்கையும்கூட ரசிக்கிறோம். இவை எல்லாம் அதனதன் இயல்பான நிலையினிலேயே எம்மை ஈர்க்கவில்லையா? ஆனால் எமக்குள்மட்டும், மனிதருள்மட்டும் ஏன் ஒரு பாகுபாடு? ஏன் ஒரு மனநிலை, கருத்தியல் மாற்றம்?
பெண் என்றால் இப்படி இப்படித்தான் இருக்கவேண்டும். இப்படி இப்படித்தான் உடுத்திக்கொள்ளவேண்டும். ஆண்களென்றால் இப்படித்தான் இருப்பார்கள் இருக்கவேண்டும் என்ற வரைமுறைகளும் போலிச்சித்தாந்தங்களும் எதற்கு?
பெண்ணென்றால் தன் அழகாலும் கவர்ச்சியாலும்தான் மற்றவர்களை ஈர்க்க வேண்டுமா? அழகுபடுத்திக்கொள்ளுங்கள். அதில் தப்பில்லை. ஆனால் அதுமட்டும்தான் உங்கள் முதலான மூலதனமா? தன் அறிவாலும் ஆளுமையாலும் ஆற்றலாலும் குணத்தாலும் உங்களால் மற்றவர்களைக் கவர முடியாதா?
வரும் ஆனால் இப்ப வராது என்பதுபோல, மார்பிடைப்பள்ளங்கள் தெரிந்தும் தெரியாமலுமாக ஒரு சட்டையைபோடுவது அல்லது சேலையை கட்டிக்கொள்வது. அப்புறம் நிமிடத்திற்கொருதரம் மேலாடையை இழுத்துவிட்டுக்கொள்வதுவும் சேலைத்தலைப்பை சரிசெய்துகொள்வதுவும் எதற்கு? எதிரே இருப்பவன் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் அந்த இடங்களைத் தேடி ஜொள்ளுவிட்டு கிறங்கி நிற்கவேண்டுமென்ற எண்ணமும் உங்களை அறியாமலே உங்கள் ஆள்மனதில் பதிந்திருக்கிறதென்று இதற்கு அர்த்தம் கொள்ளலாமா? பதினைந்து பதினாறு வயது இளம் பெண்கள்முதல் ஐம்பது அறுபது வயது அம்மணிகள்வரை இதைத்தானே பெரும்பாலும் செய்துகொண்டிருக்கிறீர்கள். இது தேவைதானா? இப்படிச் செய்யச் சொல்லித்தந்தது யார்? கவர்ச்சி காட்டியும் முகப்பூச்சுக்களும் கண்மையும் இட்டுத்தான் மற்றவர்கள் முன்னிலையில் உங்களை முதன்மைப்படுத்திக்கொள்ளவேண்டுமா என்ன?
அதற்காக சிக்குப்பிடித்த வாரிவிடப்படாத தலைமுடியும் கிட்ட வந்தாலே மூக்கை பொத்துகிறமாதிரி அழுக்கும் வியர்வை நாற்றமுமாக இருக்கச் சொல்லவில்லை. ஆணோ பெண்ணோ நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
உலகிலேயே மருந்துப் பொருட்களுக்கு அடுத்ததாக அழகுசாதனப் பொருட்கள் சம்பந்தமான ஆராய்ச்சிகளிற்கே உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிக பணம் செலவு செய்கின்றன. ஏனெனில் அழகுசாதனப் பொருட்களிற்கான சந்தை வாய்ப்புக்கள் மிகவும் பெரியது. அதனால்தான் ஆணாதிக்க கருத்தியலுடன் இப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் கைகோர்த்து நிற்கின்றன. பெண்களது கவர்ச்சியான தோற்றங்களும், அவர்கள், கம்பீரமான ஆண்கள் அநாயசமாக தூக்கிவிளையாடும் ஒல்லிக்குச்சி பொம்மைகள் போன்றதோற்றத்தில் இருப்பதுவும் ஆண்களிற்குப் போதை தரும். ஒரு போதைப் பொருளாக இருப்பதுவேதான் பெண்களிற்கு அழகு, உங்களிடம் உள்ள அதியுச்ச திறமை உங்கள் அழகும் கவர்ச்சியும்தான் என்ற இந்தக் கருத்தியல் காலாகாலமாக பெண்கள் மனதில் விதைக்கப்படுகிறது.
எத்தனை இளம்பெண்கள் Zero size என்ற மாயமானை நம்பி, அதுவே இலட்சியமாகி அடிமையாகி, உணவை உட்கொள்வதையே மிகவும் குறைத்து, அதுவே ஒருவித மனநோயாகி தமது கல்வி, எதிர்காலம் எல்லாவற்றையும் தொலைத்துக்கொண்டு இந்த மனப்பிறள்விற்கான சிகிச்சை முகாம்களில் நீண்டகாலமக தங்கியிருக்கிறார்கள்.
பெண்களே நீங்கள் அழகியலை முதன்மைப்படுத்தி உங்கள் புறத்தோற்றத்தில் கவர்ச்சியை உண்டுபண்ணி மற்றவர்களை ஈர்ப்பதனால், உங்கள் அறிவிலும் ஆளுமையிலும் நம்பிக்கை அற்றவர்கள் என்பதை ஒப்புக்கொள்வதற்கு வெட்கப்பட்வில்லையா? உங்களிடம் உள்ள ஒரே ஆயுதம் அழகுமட்டும்தானா?
நீங்கள்தான் உங்களை ஆளுமை மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் மாற்றிக்கொள்ளவேண்டும். இந்த ஆணாதிக்கச் சமுதாயம் தானாக முன்வந்து இதனை உங்களுக்காகச் செய்யாது.
உயர் சாதியில் இருந்துகொண்டு சாதிய முறைமைகளின் பலனை ருசித்துக்கொண்டிருப்பவர்கள் சாதிய எதிர்ப்புக்கு குரல் கொடுக்கமாட்டார்கள். அதேபோலத்தான் உங்களை அறியாமலே காலாகாலமாக நீங்கள் கடைப்பிடிக்கும் இந்த வழமைகளினால் சொகுசாக சுகங்களை அனுபவித்துகொண்டிருக்கும் பெரும்பாலான ஆண்கள் இதில் மாற்றங்கள் ஏற்பட குரல் கொடுக்கமாட்டாரக்ள்.
ஆண்களில் எத்தனைபேர் தன்னைவிட ஆளுமை மிக்க பெண்ணை தன் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். அடக்க ஒடுக்கமாக தனது சொல்லுக்கு கீழ்ப்படிந்து தனது விருப்பு வெறுப்புகளை ஏற்று நடக்கும் பெண்களைத்தானே விரும்புகிறார்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் ஆண்கள் பலரும் தமது சொந்த வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்தால் நிலைமை புரியும்.
ஒவ்வொரு பெண்ணும் தானாக உணர்ந்து தன்னம்பிக்கையையும் ஆளுமயையும் வளர்த்துக்கொண்டால்தான் ஆணும் பெண்ணும் சமத்துவமாக புரிந்துணர்வுடன் வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்கமுடியும். பெண்களே நீங்கள் மாறினால்தான் பெரும்பாலான ஆண்களும் வேறு வழியின்றி மறுவார்கள். வெறுமனே பெண் உரிமை பெண் உரிமையென்று கூறிக்கொண்டிருப்பதால் மாற்றங்கள் வராது. பெண் அடிமைத்தனத்தின் ஆணிவேர்களைத் தேடி அறிந்து அவற்றை அறுத்தால்தான் புரிந்துணர்வுடன்கூடிய சமத்துவம் உண்டாகும்.
இந்த இடத்தில் மற்றுமொருவிடயத்தையும் குறிப்பிடவேண்டும். இன்றைய இளைஞரில் சிலர் பார்ப்பதற்கு பிள்ளைபிடிகாரன்போன்ற தோற்றத்தில் இருப்பார்கள் அல்லது தமக்குள் பேசிக்கொள்ளும்போது கம்பனை மிஞ்சும் விதமாக காமரசம் நிரம்ப பேசிக்கொள்வார்கள். ஆனால் அவர்களின் மனங்கள் திறந்ததாக அழுக்கற்றதாக இருக்கும். எந்த ஒரு பெண்ணையும் காமக்கண்களுடன் பார்க்காமல் பெண்களை மதித்துப் பழகுவதுடன் நல்லதொரு புரிதலும் இருக்கும்.
ஆனால் தம்மை மிகவும் நல்லவராகவும் பண்பாட்டின் காவலர்களாகவும் காட்டிக்கொள்ளும் நடுத்தர வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய சில ஆண்களின் பார்வைகள்தான் மிகவும் வக்கிரமானதாக இருக்கும். தவறுதலாகத் தொடுவதுபோல முட்டக்கூடாத இடங்களில் முட்டிக்கொளவது, பொது இடங்களில் எதிர் எதிர் மேசையில் உட்கார்ந்திருக்கும்போது கால்களினால் சுரண்டுவதென வக்கிரமாக நடந்துகொள்கின்றனர்.
இதை நானாக கற்பனைபண்ணிச் சொல்லவில்லை. இங்கு பிறந்து வளர்ந்த எமது இரண்டாவது சந்ததியை சேர்ந்த பதினெட்டு இருபது வயதைச் சேர்ந்த மிக இளவயது பெண்பிள்ளைகள் பலர் இந்தவிடயங்களை என்னிடம் கூறி வேதனைப்பட்டிருக்கிறார்கள். இதில் வேதனைக்குரிய முக்கிய விடயம் என்னவென்றால் இவ்வாறு செய்பவர்கள் பெரும்பாலும் அந்தப் பெண்பிள்ளையின் தூரத்து உறவினராக இருப்பார் அல்லது அவர்களது பெற்றோருடன் நெருங்கிப் பழகும் ஒரு நண்பராக இருப்பார். இதனால் இந்தவிடயத்தை தமது பெற்றோரிடம் சொல்லவும் பயந்து அந்தப்பிள்ளைகள் இந்தவிடயத்தை தமது மனதிற்குள்ளேயே வைத்து வேதனைப்படுகிறார்கள்.
இளவயதுப்பிளைகளின் பெற்றோர்களே, இனியாவது உங்கள்து நண்பர்கள் உறவினர்கள் பற்றி சரியான கணிப்பீடுகள் செய்துகொள்ளுங்கள். சந்தேகத்திற்குரியவர்களைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். நட்புகள் உறவுகளைவிட உங்கள் குழந்தையின் நல்வாழ்வுதான் உங்களுக்கு முக்கியம். அதை மறந்துவிடாதீர்கள்.
எனக்கும் இந்தவிடயங்களை என்னுடன் பகிர்ந்துகொண்ட அந்தப்பிள்ளைகளுக்கும் இடையில் உள்ள புரிதலைபோன்றதொரு புரிதலை உங்களுக்கும் உங்கள் குழந்தைகளிற்கிடையேயும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அவர்களுக்கு உங்களுடன் அனைத்து விடயங்களையும் பகிர்ந்துகொள்ளும் தைரியத்தையும் மனப்பக்குவத்தையும் உண்டுபண்ணுங்கள்.
எங்கள் வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சமுதாயத்தை அமைத்துக்கொடுப்போம்.
நேசமுடன் அம்பலத்தார்
- ampalathar's blog
- Login or register to post comments
- 225 reads
கருத்துகள்
அறிஞர் அம்பலத்தார் அவர்களின்
அறிஞர் அம்பலத்தார் அவர்களின் வழிகாட்டலும் மதியுரையும் நல்ல செய்தியைச் சுட்டிக்காட்டுகிறது.
"எந்தப் பிள்ளையும்
மண்ணில் பிறக்கையில்
நல்ல பிள்ளை தான்
அது
நல்லவராவதும் கெட்டவராவதும்
அன்னை வளர்பிலே..." என்று
பாவலர் ஒருவர் பாடியுள்ளாரே!
அறிஞர் அம்பலத்தாரின் கருத்துப்படி பெண்ணில் மாற்றம் வர, ஆண் மாறலாம். சம்பந்தப்பட்டவர்கள் அல்லது பெற்றோர் நாளைய இளசுகளில் மாற்றத்தை ஏற்படுத்தினால் மக்களாயம்(சமூகம்) மாற்றம் காணுமே.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil











