புஷ்பங்கள் பற்றி ஆகமங்களும் புஷ்பவிதி என்ற நூலும் விவரமாகச் சொல்லியிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இன்ன இன்ன புஷ்பங்களை சுவாமிக்குச் சார்த்த வேண்டிய காலம் பற்றியும் கூட சொல்லியிருப்பதைக் காணலாம். தோஷமில்லாத , அதாவது பூச்சி அரிக்காத, எச்சம் இடப்படாத விடியற்காலத்தில் பறிக்கப்பட்ட புஷ்பங்களால் பூஜை செய்வது விசேஷமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதைத்தான் "நன் மாமலர்" என்று ஞானசம்பந்தர் பாடுகிறார்.
இனி, அஷ்ட புஷ்பங்கள் எவை என்று பார்ப்போம்.புன்னை,சண்பகம்,பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம்,அரளி, நீலோத்பலம், தாமரை என்பனவே அஷ்டபுஷ்பங்களாக பூஜைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் நந்தியாவர்தம்,அரளி ஆகியவை வீடுகளிலேயே வளர்க்கப்படுகின்றன. இவற்றைத் தவிரவும், மல்லிகை,முல்லை,பாரிஜாதம், மயில் கொன்றை ,விருக்ஷி போன்ற புஷ்பச் செடிகளையும், வில்வ மரத்தையும் வீடுகளில் பூஜைக்காக வளர்ப்பது உண்டு.
புன்
னை: இம்மரம் பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுவது. மயிலாப்பூரில் புன்னை மரத்தின் நீழலில் கபாலீச்வரர் வீற்றிருப்பதை , "மட்டிட்ட புன்னையங்கானல்" என்று துவங்கியபடி பதிகம் பாடுகிறார் சம்பந்தர். இக்கோயிலில் புன்னை மரம் ஸ்தல விருக்ஷமாக இருக்கிறது. பசுமையான இலைகளையும் வெள்ளை நிறம் கொண்ட பூக்களையும் கொண்டது இம்மரம். இதில் கோடைக்காலத்தில் பூக்கள் அதிகமாக
இருக்கும்.
சண்பகம்: வாசனை மிக்க இம்மலர்கள் சித்திரை முதல் புரட்டாசி வரை பூக்கக் கூ
டியவை. இம்மரத்தின் இலைகளும் பசுமையாக இருப்பவை. செண்பகவல்லி என்று அம்பாளுக்கும் சென்பகாரன்யேச்வரர் என்று சுவாமிக்கும் பெயர்கள் வழங்குவதைப் பார்க்கலாம்.
பாதிரி: நீண்ட மலர்களைக் கொண்ட பாதிரி மரம் உயரமாக வளரக்கூடியது. இம் மலர்கள் வாசனையானவை. இதனைத் தல விருக்ஷமாகக்கொண்ட ஸ்தலம் திருப்பாதிரிப்புலியூர் ஆகும்.
வெள்ளெருக்கு:
வெள்ளெருக்கும் பாம்பும்
சுவாமியின் ஜடையில் விளங்குவதை, "வெள்ளெருக்கு அரவம் விரவும் சடை" என்று அப்பர் தேவாரம் குறிப்பிடுகிறது. முதலில் சிறிய செடியாக விளங்கி , சிறிய மரமாகவும் வெள்ளெருக்கு வளர்ச்சி பெறுகிறது. வெண்மை நிறம் கொண்ட இம்மலர்கள் ஆண்டின் பல மாதங்களில் பூக்கக் கூடியவை. எருக்கத்தம்புலியூர் என்ற சிவ ஸ்தலத்தில் இம்மரம் விருக்ஷமாக விளங்குகிறது.
நந்தியா
வர்தம்: நந்தியாவட்டை என்று பேச்சு வழக்கில் சொல்லப்படுவது. வருடம் முழுவதும் பூக்கக்கூடியது. வெள்ளை நிறம் கொண்ட இம்மலர்களை மாலையாகவும் அர்ச்சனைக்கும் பயன் படுத்துவர்.
இதுவும் மாலைகளில் பயன்படுத்தப்படுவது. அர்ச்சனைக்கும் பயன்படுத்துவர். அநேகமாக ஆண்டு முழுவதும் பூப்பதால் நந்தவனங்கள் மற்றும் வீடுகளில் இச்செடியை வளர்க்கிறார்கள்.
நீலோத்பலம்:
நீர்நிலைகளில் வளரக்கூடியது. இதைக் குவளை என்றும் சொல்வர். கண்களுக்கு இதை உதாரணம் காட்டுவார்கள். "குவளைக்கண்ணி " என்று அம்பாளைத் திருவாசகம் குறிப்பிடுகிறது. திருவாரூரில் அம்பாளுக்கு, நீலோத்பலாம்பிகை என்று பெயர்.
தாமரை: தாமரையில் மகா லக்ஷ்மி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகி
ன்றன. இத் தாமரை மலர் குளங்களிலும் நீர் நிலைகளிலும் வளர்வதைக் காணலாம். ஆயிரம் தாமரை மலர்களால் திருவீழிமிழலையில் மகாவிஷ்ணு சிவ பூஜை செய்து சக்கரம் பெற்றதாக அந்த ஊர்ப் புராணம் சொல்கிறது. அதற்காகவே பஞ்சாக்ஷர சஹஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை செய்தாராம் விஷ்ணு.
ஊமத்தை ,மந்தாரை, மகிழம்பூ,போன்ற புஷ்பங்களையும் ஈச்வரன் ஏற்றுக்கொள்கிறான். இருந்தாலும் மேலே சொன்ன அஷ்ட புஷ்பங்களே மிகவும் உயர்வாகக் கூறப்படுகின்றன. இந்த "எட்டு நாண்மலர் " கொண்டு ஈசனது பாதார விந்தங்களுக்கு அர்ச்சித்தால் எல்லாப் பாவங்களும் நீங்கும் என்று அப்பர் தேவாரம் நமக்கு உணர்த்துகிறது.
ஸ்ரீ பரமேச்வரனது பாதங்களோ இயற்கையிலேயே வாசனை மிக்கவை. அம மலர்ப்பாதங்களுக்கு மலர்களால் அர்ச்சிக்கிறோம். "நறுமலராய் நாறும் மலர்ச் சேவடி " என்று இதைக் குறிப்பிடுவார் அப்பர் ஸ்வாமிகள். இப்படி இயற்கையிலேயே மணம்மிக்க பாதங்களைச் சுற்றி ரீங்காரம் செய்கின்றனவாம் வண்டுகள். ஆகவே, "வண்டினங்கள் சூழ்ந்த அடி" என்பார் அப்பர் பெருமான்.
முருக நாயனார் திருப்புகலூர் வர்தமாநீச்சரத்தில் புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தவர்.பக்தியையும் கூடவே பகவானுக்கு மாலையாகச் சார்த்தி மகிழ்ந்தவர்.அந்த ஊர்ப் பதிகத்தில் முருக நாயனாரது இத்தொண்டு திருஞான சம்பந்தரால் போற்றப்படுகிறது.
அத்தகைய மலர்ப்பாதங்களை நாமும் அஷ்ட புஷ்பங்களால் அர்ச்சித்து சஞ்சித வினைகள் நீங்கி , பிறப்பு இறப்பு இல்லாத நிலையை அடைவோமாக.
by
அகத்தியர்அடிமை வலைப்பூ
- selva_red's blog
- Login or register to post comments
- 520 reads








