நான் இந்த பதிவுக்கு வச்சிருக்குற தலைப்பை நீங்க படிச்ச உடனே ‘அவன்-இவன்’ படம் எப்படிப்பட்டதாக இருக்கும்னு உங்களுக்குள்ளே நீங்க ஒரு முடிவுக்கு வந்திருப்பீங்க..,
பாலாவோட முதல் படமான சேது படத்தை தூத்துக்குடியில இருக்குற மினிசார்லஸ் தியேட்டர்ல பார்த்திட்டு வெளியில வந்தப்போ ஒரு மணி நேரம் என்னால யார்கிட்டேயும் பேச முடியல. அந்த படத்தோட பாதிப்புல இருந்து வெளியில வர்றதுக்கு எனக்கு குறைஞ்சது ஒரு பத்து நாள் புடிச்சது.அந்தளவுக்கு அந்த படத்தோட திரைக்கதையை அமைச்சிருந்தார் பாலா.
அப்படிப்பட்ட ஒரு இயக்குனர்கிட்ட ஒரு ரசிகன் அதே எதிர்பார்ப்போட போறது தப்பில்லை தான். இதை பாலா அவன்-இவன் படம் ஆரம்பிச்சப்போ கொஞ்சம் மனசுல வெச்சி படத்தை பண்ணிருக்கலாம்.ஆனால்,நான் எடுக்குறது தான் படம் அதை நீ பாத்து தான் தீரணும்னு கங்கணம் கட்டினா ஏமாற்றம் ரசிகனுக்கு மட்டும் கிடையாது,தன்னோட படத்துக்கு ரசிகர் கூட்டத்தை எதிர்பார்க்குற கலைஞனும் தான்.
திருட்டு தொழிலையே குலத்தொழிலா கொண்டிருக்குற ஒரு கிராமம்.அந்த கிராமத்துல எல்லாத்தையும் இழந்து நிக்குற ஒரு ஜமீனுக்கு காலம் முழுக்க விசுவாசமா இருக்குறது தான் படம்.
படத்தோட ஓப்பனிங் விஷாலோட பரபரன்னு இருக்குற நடனத்தை பார்த்தவுடனே சீட்ல இருந்து கொஞ்சம் நிமிர்ந்து உக்கார வைக்கிற இயக்குனர், அடுத்த பத்தாவது நிமிஷத்துல கொட்டாவி விட வைக்கிறாரு...
கதாபாத்திரங்களை வித்தியாசமா காட்டனும், ரசிகனுக்கு அது என்ன? எதுக்கு?ன்னு கேள்வி கேட்க வைக்கிற அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பை உண்டு பண்ணனும்னு நெனைக்கிறதெல்லாம் சரிதான்.ஆனா அதுக்கான காரணங்கள் சரியானதா இருக்கணும்.இந்தப் படத்துல அப்படி சரியான காரணங்கள் எதுவுமே இல்லை.
“ஒரு வீடு இரு வாசல்”ங்கிற மாதிரி விஷால்-ஆர்யாவோட அப்பா அனந்த் வைத்தியநாதன்.அவருக்கு அம்பிகா-பிரபாரமேஷ்னு ரெண்டு பொண்டாட்டிகள், முதல் பொண்டாட்டி அம்பிகாவோட புள்ளை விஷால்,ஆர்யா ரெண்டாவது பொண்டாட்டி பிரபாரமேஷோட புள்ளை. ஆக ரெண்டு பேரும் அண்ணன் –தம்பி.
விஷால் இந்தப் படத்துல ‘வால்டர் வணங்காமுடி’ங்கிற பேர்ல ஒரு அரவாணியா வர்றாரு, அவர் எப்படி அரவாணியா ஆனாரு..?அந்த டோரி கண்கள் எதுக்கு? ஒருவேளை அவரை வித்தியாசமா காட்டுறதுக்கா..?இல்லேன்னா படத்தோட கதாபாத்திரத்துக்காகவா..? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்களே இல்லை.
‘கும்புடுறேன்’ சாமி ங்கிற பேர்ல ஆர்யா வர்றாரு. சேது படம் தவுத்து பாலாவோட பட ஹீரோக்கள் எல்லாருமே தலையில தேங்காய் எண்ணெய் வைக்காத பிளிச்சிங் முடியோட தான் வர்றாங்க.அதே மாதிரி தான் இந்த படத்திலேயும் ஆர்யா.(இது என்ன வேண்டுதலா பாலா ஸார்...)
ஆர்யாவும்,அவரோட அம்மா பிரபாரமேஷும் சேர்ந்து தெருவுல காலையும்,கையையும் தூக்கிக்கிட்டு ஆடுற ஒரு கெட்ட ஆட்டம் பார்க்கவே சகிக்கல.நிஜத்துல இப்படியும் நடக்குமான்னு என்னால நம்பவும் முடியல.அதேமாதிரி தன்னோட புள்ளை விஷால்கிட்ட அம்மா அம்பிகா சரக்குல "எனக்கும் ஒரு கட்டிங் வை"ன்னு சொல்றதெல்லாம் அதிர்ச்சியா இருக்கு.
பொதுவா இலக்கிய உலகத்துல இருக்குறவங்க சினிமாவுக்குள்ள வர மாட்டாங்க,கேட்டா சினிமா ஒரு வியாபார உலகம். அங்க நாம நெனைக்கிற மாதிரி இலக்கியம் சார்ந்த எழுத்துகளை எழுத முடியாதுன்னு சொல்வாங்க,,ஆனா அதுவே அவங்க சினிமாவுக்குள்ள வந்தாங்கன்னா அவங்களும் அந்த வியாபார வட்டத்துக்குள்ள உக்காந்துக்கிட்டு இலக்கியத்தை மறந்திடுவாங்க.(இது நான் சொல்லல ஒரு எழுத்தாளர் ஒரு நூல் வெளியீட்டு விழாவுல சொன்னது.)
இந்த படத்தோட வசனகர்த்தா எஸ்.ராமகிருஷ்ணனும் அப்படித்தான். விகடன் மாதிரியான மிகப்பெரிய இதழ்கள்ல அவரோட தலைசிறந்த எழுத்துகளை விரும்பி படிச்சிட்டு வர்றேன். இப்போ அதே பேனாவுல “பீயை நக்குவேன்” ”அம்மா பீ மாவு மாதிரி போவுது,விடு இவுகளுக்கு என்ன தோசையா சுட்டு குடுக்கப்போறோம்”, ”பேரென்ன தேன்மொழி,அப்போ நக்குனா இனிக்குமா...?”ங்கிற மாதிரியான வசனங்களை படத்துல கேட்குறப்போ கண்ணும் மட்டுமில்ல,காதும் கூட அநியாயத்துக்கு கூசுது. (ஸாரி...ஸார் உங்க பேனாவுல இருந்து இப்படி ஒரு நாற்றமெடுக்கும் வசனங்கள் நான் எதிர்பார்க்கவே இல்லை.)
படத்துல வர்ற மதுசாலினி,ஜனனி ஐயர் தவுத்து வேற யாருமே அழகு கெடையாது.லட்டு மாதிரி இருக்குற ரெண்டு பொண்ணுகளும் ‘அரவாணி’ விஷாலையும்,பிளிச்சிங் தலையோட திரியிற ஆர்யாவையும் லவ் பண்றாங்கங்கிறது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.
ஒரு சின்னப்பையன் போலீசை “ஏவ் சொட்டத்தலை”ன்னு சொல்லி கிண்டல் பண்றது, புரமோஷன்
கெடச்சதுக்காக ஒரு போலீஸ் திருடன்களுக்கெல்லாம் ஸ்டேஷனுக்குள்ளேயே கெடாவெட்டு பிரியாணி போடுறது,அந்த விழாவுக்கு வர்ற திருடன்கள் எல்லாரும் போலீஸ் ஸ்டேஷன்லேயே சரக்கடிச்சிட்டு கும்மாளம் போடுறது, இப்படி நிஜத்துல நாம பார்த்திராத,கேள்விப்படாத விஷயங்கள் படத்துல நெறைய உண்டு.
அதேமாதிரி ஒருகோடி ரூபாய் மதிப்புள்ள சந்தனக்கட்டைகளை கடத்திட்டுப் போறது விஷால்,ஆனா ஆர்யாவையும் அவன் கூட்டாளி சின்னப் பையனையும் போலீஸ் பிடிச்சி விசாரிக்குது.அதுக்குப் பொறவு அந்த விவகாரம் என்ன ஆச்சின்னே தெரியல.
இது யுவனோட இசையா இல்லேன்னா இளையராஜாவோட இசையான்னு ஒரு சந்தேகம் கண்டிப்பா வருது. அந்தளவுக்கு பின்னணி இசை காட்சியோட ஒன்றிப்போகாமல் இருக்கு.(சமீபகாலமா இசைஞானி இசை அப்படித்தான் இருக்கு.) டியா டியா டோலா...ராசாத்தி ஆகிய பாட்டுகளை சூப்பர்.
மொத்தத்துல படத்துல மூனே மூணு ஆறுதல்கள் :
ஒண்ணு , ஆர்தர் ஏ.வில்சனின் ஒளிப்பதிவு,இன்னொன்னு ஜி.எம்.குமாரோட கதாபாத்திரம் அவர் ஏற்று நடித்த ஜமீன் கதாபாத்திரம் படம் முழுக்க சரியான அளவுகோலில் வருவதால் நம்மை வெகுவாக கவர்கிறது.அதேநேரம் அவரை முழுநிர்வாணமாக்கியிருப்பது அவசியமா என்ற கேள்வி எழுகிறது. அடுத்ததா ரெண்டாவது பகுதியில வில்லனா வர்ற ஆர்.கே. ஒரு சில காட்சிகள் தான் வந்தாலும் மனசுல நிக்குறாப்ல.
இயக்குனர் அமீர் சாதாரண ரசிகனுக்கு ரொம்ப புடிச்ச பருத்திவீரன்ல இருந்து வேற கலருக்கு மாறினார்.அவருக்கு யோகியில் தோல்வி. சசிக்குமார் சுப்ரமணியபுரத்திலிருந்து வேறு உலகத்தில் சஞ்சரிக்க ஆசைப்பட்டார் அவருக்கு ஈசனில் தோல்வி. பாலா ஸார், நீங்க சேதுவில இருந்து வெளியில் வந்து நந்தா,பிதாமகன் என்று தொடர்ச்சியா வெற்றியா கொடுத்தீங்க,ஆனா ‘அவன்-இவன்’ வரை அதை நீங்க தொடர்ந்ததால உங்களுக்கு இதுல வெற்றிங்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்.
மறுபடியும் நீங்க வெற்றி பெற ஒன்னே ஒண்ணு தான் செய்யனும், நீங்க மறுபடியும் சேதுவுக்கு திரும்பணும். ஏன்னா அதுதான் எல்லா தரப்பு ரசிகனுக்கும் புடிச்ச மாதிரியான ஒரு பக்கா கமர்ஷியல்படம், அவன்-இவனுக்கு ரொம்ப எதிர்ப்பார்ப்போட போனேன்,ஏமாத்திட்டீங்க,ஆனா உங்க அடுத்த படத்துல ஏமாத்த மாட்டீன்கன்னு எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு.
- oruvaarthai's blog
- Login or register to post comments
- 284 reads







