Tamil's படம்

கடந்த திமுக அரசை அதிக பட்ச வாக்கு வித்தியாசத்தில் வென்று ஆட்சியில் அமர்ந்த போது பல பத்திரிகைகளும் அமைப்புகளும் அரசிற்கு வேண்டுகோள் வைத்தன. தமிழ் நண்பர்கள் சார்பிலும் சில வேண்டுகோள்கள் வைப்பட்டன. ஆனாலும் திமுக அரசின் குறைகளையும் மக்களின் அப்போதைய நிலைமையையும் தெள்ளத்தெளிவாக தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வாக்கு கேட்டமையால் திமுக அரசு செய்த தவறுகளை அதிமுக செய்யாது என்றும் ஜெயலலிதா அவர்களுக்கு அறிவுரை தேவையில்லை என்னும் எண்ணம் பலராலும் நம்பப்பட்டது.

தமிழக மக்களின் எண்ணம் நல்ல அரசியல் மாற்றம் வரும் என்பதாக இருந்தது. தற்போதும் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாக மாறும் சூழல் இருந்தாலும் எதிர்பார்ப்பு இன்னும் மீதம் இருப்பதால் தமிழக மக்கள் சார்பில் தமிழக அரசிற்கு சிலவற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

  • அதிகார மாற்றம் வந்துள்ளதே தவிர மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இன்னும் வரவில்லை என்பதே உண்மை. இலவச திட்டங்களின் பயன்கள் இன்னும் மக்களிடம் சென்று சேரவில்லை. இதற்கு நிதிநிலைமையோ கடந்த திமுக அரசையோ குறை கூறுவதை விட்டுவிட்டு அடுத்து செய்ய வேண்டிய திட்டங்களை வகுத்து மக்களை பயனடையச்செய்ய வேண்டுகிறோம்.
  • மின்வெட்டால் அதிமுக அரசிற்கு பாதகம் வரும் என்ற போதிலும் கூடங்குளம் பிரச்சனையில் அரசு மக்களுக்கு ஆதரவான முடிவை எடுத்துள்ளது. பாராட்டுகள். ஆனால் பிரச்சனை பிடிவாதமாக இன்னும் நீண்டுகொண்டிருப்பது நாட்டுக்கு நல்லதல்ல. பிரச்சனையை உடனே முடிவிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 'சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு' விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவான முடிவை அரசு எடுத்தமைக்கு நன்றிகள்.
  • முல்லைப்பெரியாறு பிரச்சனையில் தமிழகமே புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். கேரளாவின் பயம் நிஜமாகவே அணை உடைந்துவிடும் என்று இருந்திருந்தால் கேரளா இதற்கு சம்மதித்தாக வேண்டும். இவ்வாறு சம்மதிக்கவில்லை எனில் சிவகிரி மலையிலிருந்து அணைக்கு நீர் செல்லும் முன் தமிழகத்திற்கு தேவையான நீரை எடுத்து தமிழகம் பயன்பெறும் வழிவகையை ஆராய வேண்டும்.
  • ஒவ்வொரு தடவை பேருந்தில் சீட்டு எடுக்கும் போதும் விலை உயர்வு மக்களிடம் அதிமுக அரசை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. இதை சமன் செய்ய அதிமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த 'மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து அட்டை' என்ற திட்டத்தை உடனே செயல் படுத்த வேண்டும். மேலும் சிற்றூர்களுக்கு இடையே குறைந்த கட்டண பேருந்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
  • பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியிருப்பது பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்திருந்தாலும் விற்பனை விலையானது தனியார் பால் விலை அளிவிற்கு உயர்ந்திருப்பது அரசிற்கு நஷ்டத்தையே கொடுக்கும். எனவே தனியார் பால் கொள்முதல் விலையை விட அதிகமாக அரசு கொள்முதல் விலை இருந்தால் பால் உற்பத்தியாளர்களை ஆவின் நிறுவனத்திற்கே பாலை வழங்க தூண்ட முடியும். இதனால் ஆவின் விற்பனை விகிதம் அதிகமாகும். விற்பனை அதிகரிப்பதால் அதிக லாபமும் ஈட்ட முடியும்.
  • அரசு அறிவித்த இலவச மடிக்கணினிகளில் தமிழை சேர்த்திருப்பதற்கு மிகவும் நன்றிகள். இக்கணிகளில் வினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளத்தையும் இணைந்து வழங்குவதற்கு பதிலாக அனைத்து வசதிகளும் உடைய இலவசமான மிகவும் பாதுகாப்பானது என்பதால் மாணவர்களுக்கு இது மிகவும் ஏற்றதான லினக்ஸை மட்டுமே நிறுவ வேண்டுகிறோம். இதனால் விண்டோஸ் மற்றும் அதனுடன் தேவைப்படும் மென்பொருட்களுக்கான விலையை பெருமளவு சேமிக்க முடியும்.
  • அரசின் இலவச கன்றுகாலிகள் வழங்கும் திட்டத்துடன் இயற்கை எரிவாயு திட்டத்தை அமல் படுத்த வேண்டும். அதாவது ஆடுமாடுகளின் கழிவிலிருந்து அவர்களே தங்களுக்கு தேவையான சமையல் எரிவாயுவை தயாரிக்கும் கருவிகளையும் அரசு மானியத்தில் வழங்கினால் சமையல் எரிவாயுவின் விலையால் திண்டாடும் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாய் அமையும்.
  • அதிமுக அரசு பதவியேற்கும் போது அமைச்சர்களின் அதிகார கட்டுப்படுத்தல் இல்லாமல் காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று காவல் துறையினருக்கும் அமைச்சர்களுக்கும் வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால் அவை தற்போது நடைமுறையில் இல்லை. எனவே அரசு கூறியபடி அமைச்சர்கள் தலையீடு காவல் துறையிடம் இருக்கவே கூடாது என்பதை அரசு உறுதி படுத்த வேண்டும்.
  • கடந்த அரசின் அமைச்சர்கள் வீடுகளிலும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையின் சோதனைகள் நடத்தியும் வழக்குகள் போட்டும் மக்களிடம் திமுக அரசை நியாயப்படுத்தவும் அதன் மேல் அனுதாபம் அடையச்செய்யும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அரசின் ஐந்தாண்டு காலம் முடிந்ததும் அதிமுக அரசு அமைச்சர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தி வருமானத்திற்கு மீறிய சொத்து சேர்க்கவில்லை என்பதை மக்களிடம் தெளிவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அடுத்து வரும் வேறு ஆரசு இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிடும்.
  • கடைசியாக மின்கட்டணத்தை ஏழைகளுக்கு தாக்குப்பிடிக்கும் அளவைத்தாண்டி அரசின் விருப்பப்படி உயர்த்துவதாக இருந்தால் தயவு செய்து ஏழைகளுக்கு தண்ணீரில் விளக்கு எரிய வைக்கும் வித்தையை கற்றுக்கொடுக்க வேண்டுகிறோம்.

தமிழக அரசின் செயல்பாடுகள் தற்போது நடைபெறுவதை போல் தான் தொடர்ந்து, ஐந்தாண்டு முடியும் தேர்தல் நேரத்தில் மட்டும் நல்ல திட்டங்களை அறிவிப்பது எண்ணமாக இருந்தால், மன்னிக்கவும், அடுத்த அரசு அதிமுக ஆக இருக்காது என்பதை மட்டும் உறுதியுடன் தெரிவித்து விடுகிறோம்.

இது திமுக அரசை நியாயப்படுத்தவோ அல்லது அதிகமுக அரசிற்கு வைக்கப்படும் வேண்டுகோளோ அல்ல. தமிழக மக்கள் சார்பில் ஒரு ஞாபகப்படுத்தல் மட்டுமே!

தமிழக மக்கள் சார்பில்
தமிழ் நண்பர்கள்
http://tamilnanbargal.com

8
Your rating: None Average: 8 (4 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

"இது திமுக அரசை


7

"இது திமுக அரசை நியாயப்படுத்தவோ அல்லது அதிகமுக அரசிற்கு வைக்கப்படும் வேண்டுகோளோ அல்ல. தமிழக மக்கள் சார்பில் ஒரு ஞாபகப்படுத்தல் மட்டுமே!" என்ற முடிவை வரவேற்கின்றேன்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


saravanamuthu's படம்

"தமிழக அரசின் செயல்பாடுகள்


8

"தமிழக அரசின் செயல்பாடுகள் தற்போது நடைபெறுவதை போல் தான் தொடர்ந்து, ஐந்தாண்டு முடியும் தேர்தல் நேரத்தில் மட்டும் நல்ல திட்டங்களை அறிவிப்பது எண்ணமாக இருந்தால், மன்னிக்கவும், அடுத்த அரசு அதிமுக ஆக இருக்காது என்பதை மட்டும் உறுதியுடன் தெரிவித்து விடுகிறோம்."

------------------- உண்மை !