தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக ஆர்.நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். டி.என்.பி.எஸ்.சி - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடுகள் புகாரைத் தொடர்ந்து அதன் தலைவர் பொறுப்பில் இருந்து செல்லமுத்து விலகினார். இந்நிலையில், அந்தப் பதவிக்கு ஆர்.நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிபியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி இவர். இந்திய அரசியல் சட்டம் 316(1)-ன் படி, தமிழக ஆளுநர் இவரை பதவியில் நியமித்துள்ளதாகவும், ஆர்.நட்ராஜ் 62 வயது நிறைவுறும் வரை பதவியில் இருக்கலாம் என்றும் ஆளுநர் உத்தரவை சுட்டிக்காட்டி அரசின் தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.
தலைவர் பதவிக்கு ஐ.பி.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுவது இது முதல் முறை. இவரது பதவிக்காலம் 2013ம் ஆண்டு மார்ச் 2ம்தேதி வரை உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த அவர், இயற்பியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இளங்கலை படிப்பை தனது சொந்த மாவட்டத்தில் படித்தாலும், முதுகலைப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தார். 1975-ல் ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தின் எஸ்.பி.யாக தனது போலீஸ் பணியைத் தொடங்கினார். தென் மாவட்டங்களை கலக்கி வந்த சீவலப்பேரி பாண்டியைப் பிடிப்பதிலும், காட்டுக் கொள்ளையன் வீரப்பனைத் தேடும் பணியிலும் முக்கியப் பங்கு வகித்தவர். வீரப்பனைத் தேடி சுட்டுக் கொன்ற அதிரடிப்படையில் கூடுதல் டிஜிபியாக நடராஜ் பணியாற்றினார். இதன் பின், சென்னை மாநகர போலீஸ் ஆணையராக கடந்த 2003 முதல் 2006 வரை பணியாற்றினார். மாநில மனித உரிமைகள் ஆணையம், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். தனது சிறப்பான போலீஸ் பணிக்காக 1993-ல் குடியரசுத் தலைவரின் போலீஸ் பதக்கம் நடராஜுக்கு வழங்கப்பட்டது. தினமணி பத்திரிகையில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி வருபவர். சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், பணியில் நேர்மையாளராக அறியப்படுபவர்.. 
- Rainthriller's blog
- Login or register to post comments
- 215 reads







