வலை தளம் உருவாக்கலாம் வாங்க – ட்ரூபால்
ட்ரூபாலில் இணையதளம் உருவாக்கலாம் என்ற தொடரின் தொடர்ந்த பகுதியாக வலைதளம் உருவாக்கலாம் என்ற பகுதி இது. இதற்கு முந்திய பகுதிகளை http://tamilnanbargal.com/node/26686 இங்கே சென்று படித்துக்கொள்ளலாம்.
இப்பகுதியில் ட்ரூபால் மூலம் தனி வலைதளம் உருவாக்குவதைப்பற்றி இங்கே காண்போம்.
வலைப்பதிவு ஒரு முன்னோட்டம்
முன்பெல்லாம் ஒரு இணைய தளத்தைப் பார்த்தால் அதில் அந்த இணைய தளத்தின் ஆசிரியர்கள் எழுதும் கட்டுரைகளையே காண முடியும். அது பிறகு மற்ற பெரிய எழுத்தாளர்களின் கட்டுரைகளையும் சரிபார்த்து தகுதி அடிப்படையில் பதிய ஆரம்பித்திருந்தது. இது எல்லா பத்திரிகைகளும் கடைபிடிக்கும் முறை. அதனால் வாசகர்கள் வெறும் படித்துச்செல்பவர்களாகவே இருந்தார்கள். அவ்வகையில் படிக்கும் பயனாளர்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கும்.
இதை மாற்றி தளத்திற்கு பல பயனாளர்களை வரச்செய்து தளத்தை மேம்படுத்த அவர்களுக்கும் சில வசதிகளை பல வகைகளில் வழங்க ஆரம்பித்திருந்தது இணையதளங்கள். அவைகளில் முன்பு பிரபலமாக இருந்தது USEnet என்பதாகும். பின்பு விவாதகளம் (Forum/ corkboard) போன்றும் அதுவே குழுமங்கள் (Groups) போன்றும் வந்தது. இவைகள் எல்லாவற்றிலும் பயனர் பதிவுகளை மேலாண்மை செய்யும் வேலை அந்தந்த இணைய தளங்களுக்கு அதிகம். மேலும் அதிகமாக அறிஞர்களே இவ்வகை வசதிகளை பயன்படுத்தி வந்ததாலும் சாதாரண பயனர்கள் நம்மால் இப்படி எழுதமுடியுமா என்று யோசித்து விட்டு ஒதுங்கியே நின்று கொண்டிருந்தார்கள். சேவை தளங்களில் போட்டி அதிகமானபோது பயனர்களை தங்கள் சேவைக்கு இழுக்க ஒவ்வொரு நிறுவனமும் பலப்பல சேவைகளை வழங்க ஆரம்பித்தது. அதில் பிரபலமானது திறந்த நாட்குறிப்பு (Bruce Ableson launched Open Diary in October 1998). இதில் அவரவர் தங்கள் நாட்குறிப்பை எழுதி வைத்துக்கொள்ள வசதி இருந்தது. அதுவே பின்பு வளர்ந்து web log என்ற பெயரில் உருவெடுத்து தற்போது அதை Blog என அழைக்கிறோம். இதன் வளர்ச்சி இத்துடன் நின்று விடவில்லை. இதுவே Audio blog, video blog என்றும், podcast எனவும் வளர்ச்சியடைந்துள்ளது. Blog ல் பதிவு போட அதற்கென நேரம் எடுப்பதாலும் இதுவும் எல்லா தரப் பயனாளர்களிடம் சென்றடையாவிட்டதாலும் இப்போது mirco blog என்ற வகையில் சிறுசிறு செய்திகளாக chat status, Twitter, facebook share எனவும் பல வகையில் பரிமாணம் எடுத்ததால் இப்போது இதற்கெனத் தனியாக நேரம் ஒதுக்காமலும், தனிக் கருத்தியல்பு இல்லாமலும் இணையம் பயன்படுத்தும் எல்லோரும் பயன்படுத்தும் வகையில் பரிணாமம் எடுத்துள்ளது.
தற்போது blog சேவையை பல தளங்கள் வழங்கினாலும் wordpress.com , typepad.com, blogger.com தளங்கள் முன்னணியில் உள்ளது.
இப்பகுதியில் ட்ரூபால் மூலம் நமக்கென வலைப்பதிவை எவ்வாறு உருவாக்கலாம் எனக்காணலாம்.
ஒரு வலை தளத்தில் என்னென்ன வசதிகள் இருக்கவேண்டும் என்ற பொதுவான வரையறை இல்லாவிட்டாலும் அதிக தளங்கள் கொடுக்கும் வசதிகளை வைத்து இதை வரையறுக்க வேண்டி உள்ளது. முக்கியமாக கவனிக்க வேண்டியது, wordpress.com , typepad.com, blogger.com போன்ற வலைத்தள சேவை வழங்கும் தளமாக இருந்தால் அதிலேயே எல்லா வசதிகளும் ஏற்கெனவே இணைக்கப்பட்டிருக்கும். அதனால் பதிவர்களுக்கு பதிவை மேலாண்மை செய்வதை மட்டும் கவனத்தில் கொண்டால் போதும். அல்லது அவர்கள் கொடுத்திருக்கும் வசதியை நமக்கு ஏற்ற வகையில் மாற்றியமைப்பது முக்கிய பணியாக இருக்கும். ஆனால் ட்ரூபால் தனிப்பட்டு அல்லாமல் பொதுவான வசதிகளை கொண்டிருப்பதால் தளத்தில் நமக்கு தேவையான வசதிகளை மட்டும் ஒவ்வொன்றாக நாமே செய்து கொள்ள வேண்டும். Blogger.com போல ஒரு தளத்தை நாமே தேவைப்பட்ட வசதிகளை வைத்து நாமே வடிவமைக்கப்போகிறோம். அதே போல வெறும் வலைத்தளமாக இல்லாமல் ட்ரூபாலின் மற்ற எல்லா வசதிகளையும் இணைத்துக்கொள்ளப்போகிறோம்.
ஒரு வலைதளத்தில் நாம் இங்கு உருவாக்கப்போகும் வசதிகளாவன,
-
தளத்தின் முக்கிய அமைவுகள் மற்றும் தகவல்கள்
-
பதிவுகளை மற்றும் பயனர் கருத்துகளை மேலாண்மை செய்தல்
-
பதிவுகளை வகைப்படுத்தல் (categorization)
-
பதிவில் படங்கள், நிகழ்படங்கள் இணைத்தல்
-
தளத்தின் வார்ப்புருவை தேவைக்கேற்ற வகையில் மாற்றுதல்
ட்ரூபாலில் வலைப்பூ வசதிகளை கொடுப்பதற்கு உள்ளிணைக்கப்பட்ட blog எனும் நீட்சி கொடுக்கப்பட்டுள்ளது. அதைச் செயல்படுத்த முதலில் நிட்சிகளை நிர்வகிக்கும் admin/build/modules பக்கத்திற்குச் செல்லுங்கள்.

[குறிப்பு : admin/build/modules எனும் பக்கம் எனச்சொல்லும் போது நீங்கள் உலவியில் http://இணையதளமுகவரி/?q= admin/build/modules எனவோ தெளிந்த முகவரி செயல்படுத்தப்பட்டிருப்பின் இணையதளமுகவரி/admin/build/modules எனவோ போடவேண்டும். இங்கே இணையமுகவரி என்பது முன்பு நாம் நிறுவிய localhost அல்லது துறை எண்ணுடன் சேர்த்து localhost:8000 என்று இருக்கும். ]
அப்பக்கத்தில் உள்ளிணைக்கப்பட்டுள்ள எல்லா நீட்சிகளும் வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் blog மற்றும் Blog API எனும் நீட்சிகளை தெரிவு செய்து சேமித்துக்கொள்ளவும்.
அதே பக்கத்தில் forum, book போன்ற மேலும் சில நீட்சிகள் கொடுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதில் தேவைக்கேற்ப எதை வேண்டுமானாலும் செயல்படுத்திப்பார்க்கலாம்.
இப்போது Blog நீட்சியை நிறுவியாகிவிட்டது.
எனவே தளத்தில் blog post எனும் புதிய பதிவுவகை/உள்ளடக்க வகை (content type) சேர்க்கப்பட்டிருக்கும். இதை நாம் முன்பு பக்கம் உருவாக்கியது போல புதிய blog post உருவாக்கிக்கொள்ளலாம்.
ட்ரூபாலைப்பொறுத்த வரை பக்கப்பதிவற்கும் (page) வலைதளப்பதிவிற்கும் (blog post) தொழில்நுட்ப ரீதியான அதிக வேறுபாடு கிடையாது. நாம் அதை எவ்வாறு பயன்படுத்தப்போகிறோம் என்பதை பொறுத்தே அதன் பயன்பாடும் அமையும்.
முதல் வலைப்பதிவை பதிவோம். node/add/blog பக்கத்திற்குச் செல்லுங்கள். பக்கம் உருவாக்கும் போது வந்த அதே படிவம் (form) இப்போது வரும். இதில் பதிவின் தலைப்பு மற்றும் பதிவைக்கொடுத்து சேமித்துக்கொள்ளவும். இதே போல உங்கள் வலைப்பதிவுகளை எத்தனை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.
நீங்கள் பதிந்த எல்லா வலைப்பதிவுகளும் blog எனும் பக்கத்தில் வரிசைக்கிரமமாக தெரியவரும். ஒரே தளத்தில் பலர் வலைப்பதிவை போடுவதாக இருந்தால் blog/பயனர்எண் போல ஒவ்வொரு பயனருக்கும் தனித்தனியாக பக்கம் இருக்கும். அதாவது blog/1, blog/2 என இருக்கும். blog என்ற பக்கத்தில் எல்லாப் பயனர்கள் பதிந்த வலைப்பூக்களும் தெரியும். எனவே localhost/drupal/blog என்பது போல முகவரி போட்டால் இப்பக்கம் தெரியவரும்.
பதிவுகளை மேலாண்மை செய்ய admin/content/node பக்கத்தில் தளத்தில் உள்ள எல்லாப்பதிவுகளும் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இது தள நிர்வாகிக்கு பதிவுகளை நிர்வகிக்க மட்டும் பயன்படும்.
தளத்தின் முக்கிய தகவல்கள் மற்றும் அமைவுகள்
தளத்தின் முக்கிய தகவல்களை ட்ரூபால் நிறுவும் போதே நாம் கொடுத்திருந்தோம். அவற்றை மாற்ற admin/settings/site-information பக்கத்திற்குச் செல்லவும்.

இதில் உங்கள் வலைப்பூவின் தலைப்பு, மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை தேவைக்கேற்ற மாற்றிக்கொள்ளலாம்.
Footer message என்பது நமது தளத்தின் எல்லாப்பக்கத்திலும் கீழ்ப்பகுதியில் தெரியும் செய்தி ஆகும். உதாரணமாக Copyright © 2010 போடவேண்டும் எனில் இங்கே கொடுக்கலாம்.
Anonymous user என்பது இயல்பாக Anonymous என இருக்கும். இது தளத்தில் உள்நுழையாத பார்வையாளர்களைக்குறிக்கும். அதை வேறு பெயர் தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளலாம்.
Default front page: இது மிக முக்கியமானது. நமது தளத்தின் முதற்பக்கமாக எந்தப்பக்கம் தெரிய வேண்டும் என்பது இங்கே தீர்மானிக்கப்படும். இயல்பாக இது node என இருக்கும். அதாவது முதற்பக்கத்தில் ஏற்றப்பட்ட எல்லாப்பதிவுகளின் பட்டியல். நமக்கு வலைதளம் ஆனதால் எல்லா வலைப்பதிவுகளும் முதல் பக்கத்தில் தெரிய வேண்டும். எனவே இங்கு node என்பதை மாற்றிவிட்டு blog என போட்டுவிட்டால் போதும்.
வலைப்பதிவின் கருத்துகள்
கருத்துகள் என்பது பதிவருக்கு ஊக்க மருந்து போல அல்லது தன்னை செம்மைப்படுத்தக்கிடைக்கும் வாய்ப்புகள். தன் பதிவிற்கு வரும் நல்ல கருத்துகளை யாருமே விரும்புவார்கள். பார்வையாளர்கள் உங்கள் பதிவிற்கு கருத்துகள் சொல்லும் வசதியை ஏற்படுத்த comments நீட்சி பயன்படும்.
admin/content/types பகுதிக்குச் சென்றால் அங்கே தளத்தில் வரையறுக்கப்பட்ட எல்லா உள்ளடக்க வகைகளும் கொடுக்கப்பட்டிருக்கும். வலைப்பதிவின் முக்கிய அமைவுகளை மாற்ற அப்பக்கத்தில் Blog என்பதின் நேரே இருக்கும் edit என்பதை சொடுக்கவும்.
இதில் comment settings பகுதியை சொடுக்கினால் கருத்து அமைவுகள் இருக்கக் காணலாம்.

இந்த உள்ளடக்க வகைக்கு கருத்துகள் பதியும் வசதி தேவையா இல்லையா என்பதை இங்கே தெரிவு செய்யலாம். உதாரணமாக வலைப்பதிவிற்று கருத்து பதியும் வசதி தேவைப்படும். “எம்மைப்பற்றி” போன்ற பக்கங்களுக்கு கருத்து பதியும் வசதி பொகவாக தேவையிருக்காது. எனவே அந்தந்த உள்ளடக்க வகைக்கு உங்கள் தேவைக்கேற்ப இவற்றை தெரிவு செய்து கொள்ளலாம். இவற்றை இங்கே தெரிவு செய்தாலும் ஒரு பதிவை பதிவு செய்யும் படிவத்திலும் அந்த தனிப்பட்ட பதிவிற்கு இவ்வமைவுகளை அனுமதியிருப்பின் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
Default comment setting:
Disabled – கருத்து வசதி இல்லை
Read only – கருத்து படிக்க மட்டும்
Read/Write – கருத்தை பதிய மற்றும பதிய
வலைப்பதிவிற்கு கருத்து வசதி தேவை என்பதால் Read/Write என்பதை தெரிவு செய்து கொள்ளலாம். இதுவே இயல்பாக தெரிவு செய்யப்பட்டிருக்கும்.
Default display mode:
Flat list – collapsed
கருத்தின் தலைப்பு மட்டும் பதிந்த நேர வரிசைப்படி தெரியும், தலைப்பைச் சொடுக்கினால் கருத்து தெரியவரும்.
Flat list – expanded
முழு கருத்தும் பதிந்த நேர வரிசைப்படி தெரியவரும்.
Threaded list – collapsed
கருத்தின் தலைப்பு மட்டும் கருத்தின் வரிசைப்படி தெரியும், கருத்தின் வரிசை என்பது ஒருவரது கருத்திற்கு நாம் பதில் எழுதினால் அந்த கருத்தின் கீழேயே நம் கருத்தும் தெரியும். கருத்து பதிந்த நேரப்படி இது தெரியாது. யார் கருத்திற்கு யார் பதில் அளித்திருக்கிரார்களோ அதே வரிசைப்படி தெரியும்
Threaded list – expanded
முழு கருத்தும் கருத்தின் வரிசைப்படி தெரியும், கருத்தின் வரிசை என்பது ஒருவரது கருத்திற்கு நாம் பதில் எழுதினால் அந்த கருத்தின் கீழேயே நம் கருத்தும் தெரியும். கருத்து பதிந்த நேரப்படி இது தெரியாது. யார் கருத்திற்கு யார் பதில் அளித்திருக்கிரார்களோ அதே வரிசைப்படி தெரியும்
Default display order:
Date - newest first
புதிய கருத்து முதலிலும் மற்றவைகள் தொடர்ந்தும் தெரியும்
Date - oldest first
கருத்து பதிந்த நேரப்படி தெரியும்
புதிய கருத்துகள் முதலில் தெரிய வேண்டும் எனில் இங்கே Date - newest first எனபதை தெரிவுசெய்துகொள்ளலாம்.
Default comments per page:
ஒரு பக்கத்தில் எத்தனை கருத்து வேண்டும் என்பதை இங்கே தெரிவு செய்யவும்.

Comment controls:
கருத்து தெரியும் அதே பக்கத்தில் கருத்தின் வரிசை, எண்ணிக்கை போன்றவற்றை மாற்றும் கருவிப்பட்டை ( tool bar) தெரியவைக்க அதை இங்கே செயல்படுத்தலாம்.
Anonymous commenting:
இப்பகுதி தளத்தில் உள்நுழையாத பார்வையாளர்களின் கருத்து அமைவை தீர்மானிக்கும். இயல்பாக இப்பகுதி செயலாக்கத்தில் இல்லாமல் இருக்கும்(disabled). ஏனெனில் இப்பயனாளர்களுக்கு கருத்து பதியும் அனுமதி நாம் கொடுத்திருக்க மாட்டோம். அதைக்கொடுக்க admin/user/permissions பக்கத்திற்குச்செல்ல வேண்டும். இப்பக்கம் மூலம் ட்ரூபாலின் எல்லா அனுமதிகளையும் கட்டுப்படுத்தலாம்.

ஏற்கெனவே ட்ரூபால் அறிமுகத்தில் பார்த்தது போல பெயரிலாதோர் (Anonymous) என்பது தளத்தில் உழ்நுழையாத பார்வையாளர்கள். அனுமதிக்கப்பட்ட பயனார்கள் (Authenticated Users) என்பது தளத்தில் உள்நுழைந்த பயனாளர்கள். தளத்தின் நிர்வாகிக்கு இல்பாகவே எல்லா அனுமதிகளும் இருக்கும். அது இந்த அனுமதிகள் பக்கத்தில் காட்டப்படாது.
இப்பக்கத்தில் comment module எனும் பகுதியில் கருத்து சம்ந்தப்பட்ட அனுமதிகள் இருக்கக்காணலாம்.
access comments- இதை Anonymous மற்றும் Authenticated Users இருவருககும் தெரிவு செய்யவும்.
administer comments - இது தள நிர்வாகிக்கு மட்டும். எனவே யாருக்கும் இந்த அனுமதி கொடுக்க வேண்டாம்.
post comments – இது தளத்தில் யாரெல்லாம் கருத்து பதியலாம் என்பது பற்றியது. பெயரிலாதோர் (Anonymous) கருத்து பதியலாம் எனில் Anonymous க்கும் இதை தெரிவு செய்யவும்.
post comments without approval – இயல்பாக எல்லாக்கருத்துகளும் மட்டுறுத்தலுக்குப்பின்னரே தளத்தில தெரியும் படி இருக்கும். யாருடைய கருத்துகள் அனுமதி இல்லாமலேயே தளத்தில் தெரியலாம் என்பதை இங்கே தெரிவு செய்யலாம். தளத்தின் பார்வையாளர்கள் பதிந்த கருத்துகள் நிர்வாகியின் பார்வைக்குப்பின்னரும் பயனாளர்களது கருத்துகள் தானாகவேயும் தளத்தில் தெரியலாம் எனில் Anonymous என்பதை தெரிவு செய்யாமல் விட்டுவிட்டு Authenticated Users என்பதை மட்டும் தெரிவு செய்யவும்.
Authenticated Users என்பது தளத்தில் நுழைந்த எல்லாப்பயனாளர்களையும் குறிக்கும். சிலக்குறிப்பிட்ட பனாளர்களுக்கு மட்டும் இவ்வசதி இருந்தால் போதும் எனில் பயனர் பாத்திரங்கள் (user roles) என்பதை பயன்படுத்த வேண்டியிருக்கும். அதைப்பற்றி பின்பு காண்போம்.
இங்கே சேமித்தவிட்டு கருத்து அமைவு பக்கத்திற்கு வந்தால் anonymous பகுதி செயலுக்கு வந்திருக்கும்.
பெயரிலா பார்வையாளர்கள் கருத்து பதியும் போது அவர்களிடம் பெயர், மின்னஞ்சல் முகவரி, இணையதளமுகவரி போன்றவை கேட்கப்படும். அதை கட்டுப்படுத்த இங்கே தேவையானதை தெரிவு செய்யலாம்.
Anonymous posters may not enter their contact information - பெயரைத்தவிர எந்தத் தகவலும் கேட்கப்படாது.
Anonymous posters may leave their contact information – தகவல் கேட்கப்படும். ஆனால் அது கட்டாயமல்ல.
Anonymous posters must leave their contact information – தகவல்களை கட்டாயம் உள்ளீடு செய்தாக வேண்டும்.
Comment subject field: கருத்தில் தலைப்பு தேவையா என்பதை இங்கே தெரிவு செய்யலாம்
Preview comment: கருத்தை முன்மாதிரி பார்ப்பது கண்டிப்பாக தேவையா என்பதை இங்கே தெரிவு செய்யலாம்
Location of comment submission form: பதிவிற்கு கருத்துப்பெட்டி எங்கே தெரிய வேண்டும் என்பது
Display on separate page – தனியான பக்கத்தில் தெரியும்- பதிவுப் பக்கத்தில் அதன் பக்கச் சுட்டி மட்டும் இருக்கும்
Display below post or comments – பதிவின் அதே பக்கத்தில் தெரியும்.
இவற்றை தேவைக்கேற்ப தெரிவு செய்து சேமித்துக்கொள்ளவும்.
பதிவுகளை வகைப்படுத்தல் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.