பெரும்மதிப்பிற்கும் பெருமைக்கும் உரிய தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு!
தமிழக தேர்தலில் தாங்கள் அமோக வெற்றி பெற்றமைக்கும், சரியான தருணங்களில் துணிச்சலான முடிவுகளை எடுப்பதற்கும் 2012 புதுவருட வாழ்த்துக்களைக் கூறி எனது வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்!
நான் இந்தியன் என்ற முறையிலும் தமிழகத்தில் தங்களின் ஆட்சிக்கு உட்பட்டவன் என்ற வகையிலும் தங்களது நல்ல ஆட்சி தமிழகத்தில் அமைய வாக்களித்த கோடானுகோடி தமிழர்களில் நானும் ஒருவன் என்ற நல்எண்ணத்துடன் தங்கள் முன் சமர்ப்பிக்கும் ஒரு சிறு கோரிக்கை!
தமிழகத்தில் தங்களது நல்லாட்சியால் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற நம்பிக்கை பலிக்கும் என்பதை நம்புகின்றோம், அதே சமயம் நடுத்தர வர்க்கத்தினரின் நிலைமை மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படக் கூடியதாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் தமிழக மக்களின் மனதில் வேறூன்ற இடமளிக்கக் கூடாது என்று தான் இக்கடிதம்!
நாடாளும் தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை, எத்தனையோ இலவசங்கள் மூலம் மக்களுக்கு நல்லதை செய்யும் தாயுள்ளம் கொண்டவர் தாங்கள்,
ஆனால் அரசின் பொருளாதாரச் சிக்கலை தீர்க்க மாற்று வழிகள் ஏராளம் இருக்க எலைட் மதுக்கடைகள் திறப்பதன் மூலம் மட்டுமே ஈடுகட்ட இயலுமா என்பதை தாங்கள் தமிழக மக்களின் இடத்திலிருந்து யோசித்துப் பார்ப்பது மிகவும் போற்றுதற்குறியது,
ஏழைகள் பணக்காரர்கள் ஆகலாம் பணக்காரர்கள் ஏழைகள் ஆகலாமா?
நடுத்தர வர்க்கத்தினர் முன்னேற்றம் பெறலாம் ஆனால் அவர்களை கடன்காரர்களாக முடக்கப்படலாமா?
குடி குடியைக் கெடுக்கும் என்ற வசனத்தை எழுதி விட்டு மது விற்கலாம் என்ற பழையக்காலப் பதாகையை தாங்களும் கையிலெடுப்பது தகுமா?
ஒரு பெண்ணின் உள்ளம் இன்னொரு பெண்ணிற்கு தான் தெரியும் என்பார்கள் தமிழக மக்களுக்கு தாயாக விளங்கும் தாங்கள் தங்களது பிள்ளைகளைப் பற்றி யோசித்து பாருங்கள் தயவு செய்து,
நாளைய சமுதாயம் தரமுடன் இருக்க நல்வழிகளை தேர்ந்தெடுக்கக் கூடியவர் தாங்கள்,
இன்றைய இளைய தலைமுறைகள் தாறுமாறாகச் செல்ல மக்களை ஆளும் தாங்கள் காரணம் ஆகக்கூடாது என்ற நல்ல எண்ணம் தான் காரணம்,
டாஸ்மாக் கடைகளின் வரத்தால் இளம் தலைமுறைகளின் தள்ளாட்டம் அதிகம் ஆகிவிட்டது, அதைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்களே அவர்களுக்கு கடனுக்கு கொடுத்து விட்டு அச்சிறுவர்களிடம் பொருட்களைப் பிடுங்கும் நிலைமையைக் கண்ணால் கண்டவன் நான் என்ற காரணமும் கூட இதை நான் எழுத வேண்டியக் கட்டாயம்,
வீட்டில் இனி அடுப்புகள் எரிவது குறையும், அவர்கள் வீட்டு பெண்களின் வயிறெரிய தமிழக அரசு காரணம் ஆகலாமா?
நாளை கஞ்சா, அபின், பிரவுன்சுகர் போன்ற போதைப் பொருட்கள் உள்நுழைய இது பிள்ளையார் சுழியாகி விடக்கூடும் கற்பனையல்ல இது நிஜம்,
இப்படித்தான் மேல்நாடுகளில் போதைப் பொருட்கள் கும்பல் உருவாகின்றது என்ற உண்மைகள் எனது நண்பர்கள் சொல்லிக் கேட்டுறிக்கின்றேன்,
மதுவுக்கு மக்களை அரசு அடிமையாக்கி விட்டு பின்பு அவர்களைத் திருத்த அரசே மறுவாழ்வு நிலையங்களைத் தோற்றுவிக்கும் நிலைக்கு ஆளாகலாமா?
தங்கம் விலையேறிவிட்ட இக்காலத்தில் வீட்டுப் பெண்களின் காது மூக்குகளில் உள்ளப் பொருட்கள் அவர்கள் வீட்டு ஆண்களே கொள்ளையடிக்க அரசே வழிவகை செய்வது போலாகிவிடாதா?
மது என்பது அரசிற்கு சாதாரணமாகப் படலாம், ஆனால் அதன் காரணம் அவஸ்தைக்கு உள்ளாகும் குடும்பத்தைப் பற்றி அரசு கவலைப்படாதது ஏன்?
திருமணத்திற்கு, தாலிக்கு தங்கம் இலவசம் என்ற திட்டத்தின் மூலம் பெயர் பெற்ற தாங்கள் அத்தாலி அடகுக் கடைக்கு செல்ல தாங்கள் காரணம் ஆகலாமா?
தங்களால் தாங்கள் எது நினைத்தாலும் செய்து முடிக்கயியலும் தயவு கூர்ந்து தமிழக மக்களின் மரண அவஸ்தையாக்கும் மதுவை முற்றிலும் ஒழிக்க தாங்கள் முன்வரவேண்டும்,
அம்மா தங்களது அரசால் மதுவை ஒழிக்க இயலாது என்றால் கீழ்கானும் குறிப்பை நன்றாக கலந்தாலோசித்து நடைமுறைப் படுத்துங்கள்!
(1) மது பழக்கம் உள்ளவர்களுக்கு மாதத்திற்கு குறிப்பிட்ட அளவே மது விநியோகம் அளிக்க ரேஷன் கார்டு முறையைக் கொண்டு வாருங்கள்.
(2) 30 வயதிற்கு உட்பட்டவருக்கு மதுக்கடைகளில் மது வழங்கும் உரிமையை ரத்து செய்யுங்கள்.
(3) மது அருந்தி விட்டு சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவோரை 3வருட கடின சிறை தண்டனை அறிவியுங்கள்.
(4) மதுவிற்கு அடிமையாகி குடும்பத்தை சீரழிக்கும் ஆண்களுக்கு அரசு கடின தண்டனையும் அபராதமும் அவருக்கு எந்த விதத்திலும் மதுவளிக்கத் தடையும் அளியுங்கள்.
(5) அரசாங்கமே மதுவை விற்பதால் அதனால் ஏற்படும் குடும்ப இழப்பிற்கு அரசே உடந்தை எனவே அக்குடும்பத்திலுள்ளவருக்கு அரசு இழப்பீடுகள் வழங்க வழிவகைகள் செய்யுங்கள்.
(6) கள்ளச்சாரயம் விற்பவர்கள் எந்த நிபந்தனையும் இல்லாத எவ்விதத்திலும் அவர்கள் வெளியுலகம் வர முடியாத அளவு சிறையிலடையுங்கள்(அரசு மதுவை திருட்டுத்தனமாக விற்பவருக்கும், ரேஷன் கார்டை முறைத் தவறி பயன்படுத்தி அதில் இலாபம் சம்பாதிப்பவருக்கும் இது பொருந்தும்)
(7) இது போன்ற வழக்குகளுக்கு வக்கீல்கள் வக்காலத்து வாங்கவோ வழக்காடவோ இயலாத சட்டத்தைக் கொண்டு வாருங்கள். மீறினால் அவ்வழக்கறிஞரும் அத்தண்டனைக்கு உள்ளாகும்படி சட்டம் இயற்றுங்கள்.
(9) காவல் துறையினர் மது குற்றங்களுக்கு உடந்தையானால் அவர்களை நிபந்தனையில்லா தண்டனைக்கு உட்படுத்துங்கள், அவர்களை பணிநீக்கம் செய்யுங்கள்.
(10) இதற்காகப் போராட்டம் செய்யும் இழிவான அரசியல்வாதிகளை மக்கள் மன்றம் அமைத்து அவர்களிடம் விட்டு விடுங்கள்,
அம்மா தாங்கள் தயைக் கூர்ந்து தங்களது கவனத்தில் இதை கவனித்து தமிழக மக்களுக்கு தாயாக விளங்கும் தாங்கள் நடவடிக்கை எடுக்கவும்,
இது மட்டும் நடந்து விட்டால் தமிழக மக்கள் ஆண்கள் பெண்கள் ஏழைப் பணக்காரன் என்ற வித்தியாசமின்றி தங்கள் கட்டளைக்கு கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன்!