இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் திருமதி,இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் ஜக்கிய நாட்டு சபையில் ஒரு முறை உறையாற்றுகின்ற போது இந்தியர்களின் உயரிய மனப்பான்மையை உலக மக்களுக்கு எடுத்து காட்ட தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற வரியான “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தத்துவத்தை உரக்க சொன்னார், இந்த சம்பவத்திற்கு முன்பே தமிழக அளவில் புகழ் பெற்றிருந்த இந்த வார்த்தை இந்திய அளவிலும் புகழுக்குரியதாக கருதப்பட்டது,
சமிபத்தில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் லட்சிய வரிகளாக நமது முதல்வர் அவர்களால் இந்த வரியே பிரதானப்படுத்தப்பட்டது, தமிழ் இலக்கியத்தின் வாசனையை கூட அறியாத மிக சாமான்ய மக்கள் தங்களது குலப்பெருமையை நிலை நாட்டுவதற்காக அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் வாசகமாகவும் இது ஆகிவிட்டது, அப்படி உபயோகிப்பவர்களில் பலருக்கு இதன் உண்மையான அர்த்தம் கூட தெரியவில்லை, சமீபத்தில் ஓமன் நாட்டிலிருந்து வந்திருந்த ஒரு நண்பர் வயிற்ற பிழைப்பிற்காக பல நாடுகளுக்கு ஓடவேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எதை தங்களது சொந்த ஊர் என்பார்கள், அப்பன் பிறந்த ஊரையா? தான் பிறந்த ஊரையா? எதையுமே உரிமை கொண்டாட முடியாது, “யாதும் ஊரோ யாவரும் கேளிர்” என்று போக வேண்டியது தான் என்றார்,
குழந்தைகளுக்கு எது சொந்த ஊர் என்பது இருக்கட்டும், எல்லோரும் எதிலேயும் உரிமை கொண்டாட முடியாத நிலை வருகின்ற போது யாதும் ஊரே என்று தமிழ் இலக்கியத்தை வம்புகிழுத்து சோர்வாக இதை சொல்லுகிறீர்களே அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று அவரிடம் கேட்டேன், அவர் என்னை முழுமையாக அறிந்தவர் போதுமான உலக அறிவு எனக்கு கிடையாது என்ற ரகசியம் அவருக்கு எப்படியே தெரிந்திருக்கிறது, அதனால் எனது இலக்கிய அறியாமையை போக்க சிறப்பான விளக்கம் ஒன்றை தந்தார், நான் பிறந்த ஊரில் மட்டும் தான் மரம் மட்டை இருக்கிறதா என்ன? உலக்திலுள்ள எல்லா ஊர்களிலும் தான் அவைகள் இருக்கின்றன, எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் சக்கரை இனிக்கிறது, மிளகாய் காரமாக இருக்கிறது, அதனால் இது என்னது அது உன்னது என்று போட்டி எதற்கு? எல்லா ஊருமே நம்ம ஊருதான் என்பதை எல்லோரும் கேட்டுக் கொள்ளுங்கள் என்பது தான் அந்த பழமொழியின் விளக்கம் , என்று நான் புரிந்து கொள்ளும் வண்ணம் சொன்னார், பல காலமாக தமிழ் இலக்கியத்தை படித்துக் கொண்டிருந்தாலும் கேளிர் என்ற வார்த்தைக்கு உறவினர் என்று தப்பாக பொருள் கொண்டு இருக்கிறோமே எல்லோரும் கேளுங்கள் என்றல்லவா கனியன் பூங்குன்றனார் எழுதி இருக்கிறார் , என்று உலகை நொந்து கொள்வதற்கு பதிலாக என்னை நொந்து கொண்டேன்.
அப்போது கூட நம் அம்மாஞ்சி தமிழனுக்கு இவர்களுக்கு பிடித்திருப்பது பகுத்தறிவு என்ற விசித்திர நோய் என்று தெரியவேயில்லை, கடவுள் இல்லை என்று சொன்ன போதும் கைதட்டினான், ஒன்றே தேவன் அதாவது ஒரு கடவுள் உண்டு என்று சொல்லிய போதும் கைதட்டினாள், இப்படி கைதட்டி. கைதட்டியே தமிழனுக்கு தனது சொந்த இலக்கிய மரபுகள் எல்லாமே மறந்து போய்விட்டது,பழங்கால தமிழன் நாத்திகன் என்று ஒரு கூட்டம் இன்றைக்கும் உறுதியாக நம்பிக் கொண்டு நாட்டில் திரிகிறது,
பகுத்தறிவாளர்கள் என்ற இந்த திருகூட்டத்தார் இப்போதுயெல்லாம் தங்களை தமிழறிஞர்கள் என்றும். தமிழ் ஆர்வலர்கள் என்றும் அழைத்து கொள்கிறார்கள், இவர்கள் மேடையில் முழங்கும் கருத்துக்களை ஏதாவது ஒரு தொல் பழங்கால புலவன் தப்பி தவறி உயிர் பெற்று வந்து கேட்டு விட்டால் நடுத்தெரு புளியமரத்தில் தூக்கு போட்டு கொண்டு விடுவான், ஆதிகால தமிழனுக்கு இறையுணர்வே கிடையாதா? விதி. கர்மா. மறுபிறப்பு என்பதில் எல்லாம் நம்பிக்கையே கிடையாதா? சங்ககால தமிழ் மன்னர்கள் யாரும் நெற்றியில் திருநீறு கூட பூசுவது கிடையாத இவர்களுக்கு எப்படிதான் நீறு பூசாத மன்னனின் படம் கிடைத்ததோ தெரியவில்லை, அல்லது இவர்கள் எடுத்த சினிமாவை தான் சங்ககால ஆதாரமாக வருங்கால தமிழகம் ஏற்றுகொள்ள வேண்டும் போல் உள்ளது,
செம்மொழி மாநாட்டை பற்றி திருக்குவளை திருமகனார் உடன்பிறப்புகளுக்கு எழுதியிருந்த கடிதத்தை மறுமுறை படித்து பார்க்கும் போது ஓவென்று கதறி சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் போல் உள்ளது, பண்டைய தமிழ் புலவர்கள் விதியை நம்பும் கூனர்களை நிமிர்த்தி வைத்தார்களாம், அதுவும் எந்த பாட்டை பாடியென்றால் புறநானூற்றில் உள்ள யாதும் ஊரே என்ற பாடலை பாடித் தானாம் தமிழ் மக்களுக்கு இலக்கிய அறிவே கிடையாது, அவர்கள் படித்தது எல்லாம் “டாலாக்கு டோல் டப்பிமா”. போன்ற அரிய கவிதைகளை தான் என்று முடிவுக்கே வந்து விட்டார்கள் போல இருக்கிறது, இவர்கள் பேச்சை எல்லாம் கேட்க்கும் போது சங்ககால தமிழ் இலக்கியங்கள் எல்லாமே கடவுள் மறுப்பு இலக்கியங்கள் தானோ என்ற எண்ணம் சாதாரணமாக எல்லோருக்கும் வந்துவிடுகிறது, அதை தடுத்து உண்மையான தமிழ் இலக்கியத்தின் முகத்தை உலகுக்கு காட்ட வேண்டும், என்று நினைப்பவர்களின் குரல்களை தற்கால ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை அல்லது புறகணித்து விடுகிறது, சரி இந்த கந்த கூலங்களின் கருத்துக்களை எல்லாம் மூட்டை கட்டுவோம், உண்மையில் கனியன் பூங்கன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலில் உலக பொதுவுடமை சித்தாந்தத்தை பற்றி தான் பேசுகீறாரா அல்லது வேறு எதை தான் சொல்லுகிறார், இந்த பாடலின் முழுமையான பொருள் என்ன என்று அறிந்து கொள்வதற்கு இலக்கிய ரசனையே இல்லாதவனுக்கு கூட ஆர்வம் ஏற்படுவது இயற்கை, அந்த ஆர்வத்தை தீர்த்து கொள்ள நாமும் கூட கொஞ்ச நேரம் புறுநானூறு என்ற சங்கதமிழ் பூஞ்சோலைக்குள் சென்று உலாவி வரலாமே
பெருங் கூச்சல் போட்ட வெள்ள பெருக்கு ஆரவாரத்தை குறைக்கவில்லை என்றாலும் வேகத்தை மட்டுபடுத்திக் கொண்டு சமநிலத்தை நோக்கி ஆற்று வெள்ளமாக பாய்ந்தோட ஆரம்பித்தது, நிலமகளை தொட்டவுடன் வருண தேவனுக்கு காதல்வெறி ஏறிவிட்டது போல் ஆற்றின் கரையும் உடைத்து கொண்டு ஊருக்குள் புகுந்தும் சமூத்திரத்தை நோக்கி ஓட ஆரம்பித்தது, நதி வெள்ளம் அப்படி போகும் போது எதிர்பட்ட பொருட்களை எல்லாம் அடித்து புரட்டி தன்னோடு இழுத்துக் கொண்டு முன்னேறியது, ஆடு. மாடு. கோழி வண்டி. மரக்கட்டை. வீட்டு கூரை இன்னும் விதவிதமான பொருட்கள் எல்லாம் ஆற்று வெள்ளத்தில் முட்டி மோதி போகின்றன, அவைகள் ஒன்றையொன்று தொடுகின்றன, தள்ளுகின்றன, பிரிந்து தள்ளி போகின்றன, சுற்றி. சுற்றி வருகின்றன, சுழலுக்குள் அகப்பட்டு அடி ஆழத்திற்கு போய் மீண்டும் மேல் ஏழும்பி பாய்ந்து ஓடுகின்றன, இந்த செயல்கள் எல்லாம் நீரோட்த்தில் மிதந்து கொண்டு தான் நீரோட்டத்தின் விருப்பப்படி தான் நடக்கிறது,
விதி வழி தான் எல்லாம் நடக்கிறது என்பது புதிய கண்டுபிடிப்பல்ல, வாழ்க்கையில் உள்ள சகல விதமான இன்பதுன்பங்களையும் ஆண்டு அனுபவித்து அறிவால் தெளிந்து எத்தனையோ சான்றோர்கள் சொல்லி சென்றிருக்கிறார்கள், அவர்களின் ஆப்த வாக்கியம் குழம்பிய எத்தனையோ மனங்களை தெளிவடைய வைத்து இருக்கிறது, எனவே விதி தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது, என்பது குழப்பமோ. கலக்கமோ. மயக்கமோ. சந்தேகமோ இல்லாத உண்மையாகும்,
கடவுளின் பெருங்கருணையாகிய விதி என்ற வெள்ளம் மனிதர்களை குழந்தையை போல் இடுப்பில் வைத்துக் கொண்டு நடந்து போகிறது, அது எங்கே கொண்டு சேர்க்க போகிறது, என்னவாக மாற்ற போகிறது, மனிதர்களின் இறுதி கட்டம் எப்படி இருக்க போகிறது, எதையுமே கற்பனை செய்து பார்கக் கூட முடியாத நிலையில் தான் மனிதன் இருக்கிறான்,
எது முடிவு. எது விடிவு என்று தெரியாத மண்ணுலக வாழ்வில் எதுவரை இருப்போம். எப்போது போவோம் என்ற நிலையற்ற வாழ்க்கை இருக்கும் வரையில் நான் பெரியவன். நீ சிறியவன். நீ அரசன். நான் அடிமை என்ற பேதங்கள் எதற்கு என் நாடு உயர்ந்து. எனது கிராமம் அழககானது. அந்த நாடு எதற்கும் உதவாத குப்பை தொட்டி. அந்த மனிதர்கள் சுத்த அயோக்கியர்கள். அவன் என்னை கெடுத்து விட்டான், உலகத்து கஷ்டத்தை எல்லாம் நான் ஒருவன் மட்டுமே அனுபவிக்கிறேன், என் பசிக்கு உணவு தந்தவன் இவன் என் நோய்க்கு மருந்து தந்தவன் இவன் என்று நன்றி பாராட்டுவதிலோ. கோபம் கொண்டு ஒதுக்கி வருவதிலோ எந்த பயனும் இல்லை
அறிவில் சிறந்த அறிவாளிகளும். ஞானிகளும். மாபெரும் வீரர்களும். தியாகிகளும். போற்றுதலுக்குரியவர்கள் அல்ல, முட்டாள்களும். அசடர்களும். கொலைகாரர்கலும். கொள்ளைக்காரர்களும் வெறுத்து ஒதுக்க தக்கவர்களும் அல்ல, இவர்கள் எல்லோருமே நமக்கு சொந்தகாரர்கள் தான், கல்லானாலும், மண்ணாலும் நமக்கு சொந்த ஊர்கள் தான், எதிலும் பேதமில்லை, யாரும் அந்நியமில்லை, எல்லாம் நமது சொந்த பூமி. எல்லோருமே நமது சொந்த ரத்தம். இது தான் கனியன் பூங்குன்றனாரின் அற்புத பாடலுக்கு ஆழமான அர்த்தம்,
அவர்.
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!""
மனித வாழ்க்கை முழுவதுமே விதி என்ற சட்டத்தின் கீழ் தான் நடக்கும். நடந்து கொண்டிருக்கிறது என்றால் அவனது சொந்த கருத்து. முயற்சி. உழைப்பு என்பதெல்லாம் அர்த்தமே இல்லாத விஷயமல்லவா? ஆயிரம் மூட்டைகளை சுமந்து ஏற்றி இறக்கினாலும் ஒரு பிடி சோறு கிடைக்காது என்ற போது முயற்சி எதற்கு? உழைப்பு எதற்கு?
விதியின் மேல் நம்பிக்கை என்பது தமிழ்நாட்டிற்கோ. இந்தியவிற்கோ சொந்தமானது மட்டுமல்ல, உலக முழுவதுமே அந்த நம்பிக்கை காலகாலமாக இருந்து வருகிறது, இந்த நம்பிக்கையிலிருந்து முழுமையாக இல்லை என்றாலும் சிறிதளவு மாறுபட்ட தேசம் எது என்று கேட்டால் கிரேக்கம் என்று சொல்லலாம், ஆதிகால கிரேக்க மக்கள் ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் தெய்வங்கள் தான் தீர்மானிக்கின்றன என்று நம்பினார்கள், ஒரு விளையாட்டு மைதானத்தில் கிடைக்கும் பந்தை வீரர்கள் தங்களது விருப்பப்படி உதைத்து விளையாடுவது போல் மனித வாழ்க்கையும் தெய்வங்கள் தங்கள் இஷ்டப்படி பந்தாடுவதாக அவர்கள் நம்பினார்கள், பேரழிவுகள். யுத்தங்கள் போட்டி பூசல்கள் நிறைந்த சதுரங்க உலகில் மனித காய்களை உருட்டி தெய்வங்கள் விளையாடுவதாக கிரேக்கர்கள் நம்பியதை மகாகவி ஷேக்ஸ்பியர் அழகான கவிதை வரிகளில் நமக்கு சுட்டி காட்டுகிறார்,
சிறகை உடைக்கும் குழந்தை போல்
மனிதர் வாழ்க்கையை எடுத்து
களி நடம் புரியும் தெய்வம்
As flies to wanton boys
are we to gods;
They kill us for their sport
பல் போகும் காலம் வரையில் மற்றவனுக்கு பல்லக்கு தூக்கியே பழக்கப்பட்ட தமிழனை. தலைவன் என்பவன் கடவுளுக்கு சமமானவன் என்று தூக்கி வைத்து கொண்டாடும் தமிழனை. தலைவனின் நலத்திற்காக தன் பெண்டாட்டி. பிள்ளையை கூட பலி கொடுக்க தயங்காத தமிழனை பார்த்த கணியன் பூங்குன்றனார் நெஞ்சு பதபதைக்க பார்த்து தலைவன் என்பவன் தனியான ஒரு இனமல்ல உன்னை போலவும். என்னை போலவும் சாதாரண மனிதன் தான். நீயும். நானும் அம்மாவின் வயிற்றில் பத்துமாதம் இருந்தது போலவே தான் அவனும் இருந்தான், தலைவன் என்பதற்காக பதினைந்து மாதம் கருவறை வாசம் அவனுக்கு கிடையாது, விதி என்ற நதியில் உருண்டு ஓடும் பல கட்டைகளில் ஒரு கட்டை தான் அவன், அவனுக்கென்று தனியாக மரியாதை தருவதோ. அவனுக்காக மற்றவர்களை அவமரியாதை செய்வதோ சரியான முறையல்ல, எல்லோரையும் சமமாக பார்க்க பழகி கொள் என்ற சமூக அக்கறையோடு தான் பூங்குன்றனார் இந்த பாடலை பழுதி இருக்கிறார், அதற்கு எல்லா தரப்பு மக்களிடமும் அழகாக பதிந்து இருந்த விதி என்ற நம்பிக்கையை கவிதை கருவுக்கு பின்னியாக எடுத்துக் கொண்டார்,
ஒவ்வொரு தனி மனிதனும் தனது வாழக்கையில் விரும்பியோ. விரும்பாம்பலோ ஏற்படுகின்ற இன்ப துன்பங்களை விதியின் பரிசு என்ற மன திருப்தியோடு ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை அமைதியுடன் நடத்துகிறான், தன் வாழ்வில் ஏற்படுகின்ற ஒவ்வொரு துயரத்திற்கு யாரோ ஒருவர் காரணம் என்று மனிதன் பொங்கி எழுந்தால் சமுதாய அமைதி கெட்டுவிடும் என்பதை விட மனிதனின் உடல்நலமும் பாழ்பட்டுவிடும், அனுபவத்தின் வாயிலாக பார்க்கும் போது விதியை நம்புவதினால். பாதிப்புகள் எதுவும் பெரியதாக ஏற்பட்டுவிடவில்லை, தன் சொந்த வாழ்க்கையில் விதியை நம்பும் தமிழன் பொது வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளை விதி என்று அமைதியாக ஏற்றுக் கொண்டு போனதாக சரித்திரம் இல்லை,
கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி காலையில் ராமனை அரசாள வாவென்று அழைத்தான் மன்னன் மாலையில் காடாள போவென்றாள் சிற்றன்னை இதைக் கேட்ட தம்பி லஷ்மணன் அண்ணன் ராமனுக்காக பெற்ற தந்தையின் படையினரையே தாக்க ஆயத்தமாகிவிட்டான், தசரதனின் பெரும்படையால் பூமியில் பாரம் ஏற்பட்டுவிட்டது, அதனால் அவன் படையை ஒழிப்பேன், எதிர்த்து நின்றால் தகப்பன் என்றும் பாராமல் தசரதனோடும் மோதி வெற்றிக் கொள்வேன், வேறு யார் தடுக்க வந்தாலும் அவர்களையும் வெட்டி வீழ்த்துவேன், ரத்ததின் மீது தான் அண்ணன் ராமன் சிம்மாசனம் ஏறுவது என்று இருந்தால் அதை நிறைவேற்றியே தீருவேன் என்று வீர முழக்கம் செய்தான்,
தம்பியின் போர்க்கோலம் அண்ணனுக்கு தெரிந்தது, நெஞ்சு படபடக்க தம்பியை தடுக்க ஓடி வந்தான். தடந்தோள் ராமன், கோபம் என்பதே என்னவென்று அறியாத குணக்குன்றல்லவா நீ ? ஆயுதம் தூக்கலாமா? அதுவும் வணங்கத்தக்க தகப்பானாருக்கு எதிராக? கூடாது, அமைதி கொள் என்று தம்பியை சாந்தப்படுத்துகிறான், இளைய பெருமானின் கோபம் அப்போதும் தனியவில்லை, அண்ணா! இப்போதே உனக்கு மூடி சூட்டியாக வேண்டும், அதை தடுக்க நினைப்பவர்களை எரியூட்டியாக வேண்டும், என்ற கோப நெருப்பை கொப்பளிக்கிறான், அவனது ஆத்திரம் ராமனுக்கு வருத்தத்தை தந்தது, தகாத மொழியால் தம்பி தகப்பானரையும். தாயாரையும் பேசுவது பிடிக்கவில்லை, எவ்வளோ சமதாப்படுத்த முயலுகிறான், ராமன் நில் என்ற வார்த்தையை உச்சரிக்க நினைக்கும் போதே நின்றுவிடும் லட்சுமணன் ராமனுக்காக வந்த கோபத்தை ராமன் தடுத்தும் நிறுத்த முடியவில்லை, அதனால்
“நதியின் பிழையன்று
நறும்புனல் இன்மை அற்றே
பதியின் பிழையன்று பயந்து
நமைப்புரந்தாள்
மதியின் பிழையன்று. மகன் பிழை
அன்று. மைந்த
விதியின் பிழை. நீ இதற்கு
என்னை வெகுண்டதென்றான்”,
என்று கூறி சமாதானப்படுத்த முயற்சித்தான் நேற்ற வரை இரு கரையும் தொட்டு ஓடிய ஆற்று வெள்ளம் இன்று காய்ந்து போய்விட்டது என்றால் அது நதி செய்த குற்றமா? வரத்தை கொடுத்தது தந்தையின் குற்றமா? அதை வேண்டி கேட்டது தாயின் குற்றமா? அல்ல தம்பி அல்ல. யாரும் குற்றம் செய்யவில்லை, தம்பி பரதன் கூட குற்றவாளியல்ல, பிறகு யார் குற்றவாளி என்று நினைக்கிறாயா இது யார் செய்த குற்றமென்று கலங்குகிறாயா இது விதி செய்த குற்றம், விதியால் வந்த குற்றம், இதற்காக கோபப்படுவது தவறு என்கிறான், நடந்த துயரத்திற்குகெல்லாம் காரணமாக இருப்பது கண்ணுக்கு தெரியாமல் எங்கோ மறைந்திருக்கும் விதி எனும் போது கருவிகளான மனிதர்களை வெறுப்பது பாவம் என்பது ராமனின் எண்ணம்,
அண்ணா? என் மனம் ஆற மாட்டேன் என்கிறது, நீ காடு செல்ல வேண்டும் பரதன் நாடாள வேண்டும் என்று விரும்புகின்ற கைகேகியை என்னால் மன்னிக்க முடியவில்லை, அவளின் சூழ்ச்சிக்கு தோள் கொடுக்க தேவாதி தேவர்கள் வந்தாலும் நீ விதி விதி என்று சொல்கிறாயே அந்த விதியே கண் முன்னால் வந்து நின்றாலும் எல்லாவற்றையும் வெல்லுகின்ற மாபெரும் விதியாக என்கையில் வில் இருக்கிறது, இது சாதாரண வில் அல்ல அண்ணா. வெல்ல முடியாத விதியை கொல்லும் எமன் இது. என்று அண்ணனின் ஆறுதலுக்கு மறுமொழி சொல்கிறான் தம்பி,
“,,,,,,,,,,,,, கோள் இழைத்தாள்
மதி மயக்கும்மதியாய். முதல்
வானவர்க்கும் வல் இதாம்
விதிக்கும் விதியாகும் - என்
வில்(த்) தொழில்
காண்டி” என்றான்
(கம்பராமாயணம்)
நன்றாக முற்றி பழுத்த பலாசுலையை கொம்பு தேனில் ஊற வைத்து மாம்பழ சாற்றுடன் பிசைந்தெடுத்தால் என்ன சுவையோ அந்த சுவை தான் கம்பனின் இந்த பாட்டு சுவை, பாடலின் சுவையை அனுபவிப்பது எல்லாம் இருக்கட்டும், விதியை நம்பு என்கிறான் அண்ணன், விதியை கொல்வேன் என்கிறான் தம்பி இருவருக்குள் இத்தனை முரண்பாடு ஏன்? அண்ணனனின் கூற்றை நம்புவதா? தம்பியின் கூற்றை நம்புவதா? குழப்பம் நமக்கு ஏற்படுகிறது, ஆனால் ஆழ்ந்து சிந்திக்கும் போது குழம்ப வேண்டிய அவசியமேயில்லை என்பது தெளிவாக தெரிகிறது,
அரசு பதவி போனது ராமனை பொறுத்து வரை தனிப்பட்ட விஷயம், அதனால் அவன் விதிவசம் என்று தன்னை சமாதானப்படுத்தி கொண்டான், இளைய பெருமாளுக்கோ அது பொது விஷயம். தேச நலன் சம்பந்தப்பட்ட விஷயம், அதனால் அவனால் விதி என்ற சும்மா உட்கார்ந்து விட முடியவில்லை, போராட எழுந்து விட்டான், விதி என்பது உண்டா? இல்லையா? என்று ஆராயும் தருணம் இதுவல்ல விதி கொள்கை தமிழர்களுக்கு உண்டா? இல்லையா? என்பதே நம் முன்னால் நின்ற கேள்வியாகும், அந்த கேள்விகளுக்கு விடைகாண தான் நாம் கணியன் பூங்குன்றனாரையும். கவிசக்கரவர்த்தி கம்பனையும் உரசி பார்த்தேன், இருவரும் இன்றைய தமிழர்களின் வாழ்க்கை தத்துவம் எந்த நோக்கில் பார்க்கப்படுகிறதோ அதே நோக்கில் தான் ஏறக்குறைய அன்றும் பார்க்கப்பட்டு இருக்கிறது, பகுத்தறிவுவாதிகள் சொல்வது போல் பழம் தமிழர்களின் சிந்தனை மரபு இந்து மதத்திற்கு எதிரானது அல்ல, தமிழ் பண்பாட்டின் சாயல் தான் இந்து பண்பாட்டின் சாயலாக எப்போதுமே வெளிபட்டுக் கொண்டிருக்கிறது, இதை மக்கள் முழுமையாக புரிந்து கொள்ள உண்மையான இலக்கியவாதிகள் முன்வந்து உழைத்தால் போலி மத்தாப்புக்கள் பெட்டிக்குள் அடங்கி கொள்ளும்,
கருத்துகள்
"எது முடிவு. எது விடிவு என்று
"எது முடிவு. எது விடிவு என்று தெரியாத மண்ணுலக வாழ்வில் எதுவரை இருப்போம். எப்போது போவோம் என்ற நிலையற்ற வாழ்க்கை இருக்கும் வரையில் நான் பெரியவன். நீ சிறியவன். நீ அரசன். நான் அடிமை என்ற பேதங்கள் எதற்கு." அருமை














