செம்மொழியான தமிழ் மொழியாம்
- நா. கண்ணன்

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
என்ற பாரதியின் கனவு நிறைவேறி இருப்பதை மிகப் பிரம்மாண்டமாக நடந்து
முடிந்துள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு உலகிற்கு எடுத்துக்
காட்டியுள்ளது. இம்மாநாட்டின் scope என்னவென்று நான் முதலில் அறிந்தேன் இல்லை. அங்கு போன பிறகுதான் தெரிந்தது, கதிரவனின் கண்ணில் படும் எல்லாவற்றைப் பற்றியும் தமிழர்கள் அங்கு பேசி விட்டுப் போயிருக்கிறார்கள் என்று. இது மாதிரி ஒரு உலக அதிசயம் இதுவரை நடந்துள்ளதா என்று தெரியவில்லை. மொழி, இன உணர்வு என்பது நமக்கு மட்டும் சொந்தமல்ல. உலகில் பல நாடுகளில் இதைக் கண்ணுற முடியும். ஆனால் எந்த நாடும் இப்படி உலகெலாம்
பரவி இருக்கும் தம்மக்களை அழைத்து மாநாடு நடத்தியதில்லை. அழைப்பு
தமிழர்களுக்கு என்றில்லை. தமிழ் உணர்வு கொண்ட அனைத்து இன மக்களுக்கும்
என்பது இதன் சாரம். யாதும் ஊரே! யாவரும் கேளிர்! எனும் கணியன்
பூங்கன்றனின் இதமான சொற்களை தமிழக அரசு மெய்பித்துள்ளது. ஒரு தாய், தன்னை
விட்டு பொருளீட்ட அகன்ற பிள்ளையை மீண்டும் அழைத்து கண்ணுற்று மகிழும் அளவிலா மகிழ்ச்சியை இம்மாநாடு மெய்பித்துக் காட்டியுள்ளது. தமிழ் உணர்வுடன் பள்ளிக்குச் சென்றவர்கள் நாங்கள். பாரதியும், பாரதிதாசனும் எங்களை வழி நடத்தினர். அந்த உணர்விற்கு செம்மொழி மாநாடு என்ற பேருரு உண்டு என்று நான் கண்டு அதிசயக்கிறேன்.
இதுவொரு தொடக்கம் என்று முதல்வர் தனதுரையில் சொன்னார். அப்படித்தான்
இருக்க வேண்டும். ஒரு செம்மொழி உலகில் எங்கெங்கோ, என்னென்னவோ தொழில்
செய்யும், எவரெவரையோ இப்படி ஈர்க்கும் என்று யார் கண்டார்கள்? இதுவொரு
நல்ல தொடக்கம். தமிழ் உணர்வுடையோர் இவ்வேள்வித்தீயை தாங்கள் வாழ்கின்ற
நாடுகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று வளர்க்க வேண்டும். தமிழகம்
இவ்வுணர்வை செப்பமுடன் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இம்மாநாடு உண்மையான தமிழ் உணர்வுடன் நடத்தப்பட்டிருக்கிறது. திமுக அரசு
செய்திருக்கிறது என்றாலும், கட்சியின் உரத்த குரல் எங்கும் பதியவில்லை.
கட்சிக் கொடிகள் எங்கும் பறக்கவில்லை. கட்சிக்காரர்கள் இருக்குமிடம்
தெரியாமல் பண்புடன் வளைந்து, வளைந்து போய் வந்தனர். என் வாழ்வில் முதன்
முதன்முறையாக பக்கத்து இடம் காலியானவுடன், பணிவாக ஒருவர் வந்து,
இவ்விருக்கை காலி என்றால் அமைச்சர் வந்து உட்காரலாமா? என்று
கேட்டுவிட்டு, ஒரு அமைச்சர் வந்து உட்கார்ந்து கொண்டு நிகழ்ச்சிகளைக்
கூர்ந்து கவனித்தை பார்த்ததில்லை. தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பூங்கோதை
நல்ல நண்பர் போல் எங்கள் எல்லோரிடமும் பழகினார். எந்த பந்தாவுமில்லை.
மாநாட்டுத்துவக்க விழா உரைகள் அனைத்தும் மிகக் கவனத்துடன்
தயாரிக்கப்பட்டு விஷயத்தை மட்டும் பேசின. இதில் முதல்வர் கருணாநிதி,
துணைமுதல்வர் ஸ்டாலின் இவர்களின் உரைகள் விதிவிலக்கல்ல என்பது
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. எல்லாம் கன கச்சிதம். நேரத்தில்
ஆரம்பித்து நேரத்தில் முடிந்தன.
சங்க காலத்தில் வீதிகளில் முத்தும் பவளமும் கொட்டிக் கிடக்குமாம். எதை
எடுப்பது, எதை விடுவது என்று தெரியாதாம். அது போல் ஆகிவிட்டது
இம்மாநாட்டு நடப்பு. எத்தனை அருமையான கட்டுரைகள். எவ்வளவு பெரியவர்கள்!!
அடடா!
இம்மாநாடு பல தொன்மங்களை பொய்பித்துள்ளது. இம்மாநாட்டில் சமயத்திற்கு
இடமில்லை என்றொரு வதந்தி. ஆண்டாளும், ஆழ்வார்களும் போகுமிடமெல்லாம் வலம்
வந்தனர். சைவமும் தமிழும் அங்கிங்கெனாத படி ஆனந்தமாக நடமாடின (தர்மபுரம்,
பேரூர் ஆதீனகர்த்தாக்களை கண்டு பேசியது செம்மொழி வளாகத்தில்தான்).
பிராமணர்களுக்கு இடமுண்டா? என்றொரு உன்குழல் விழிமம் (வீடியோ). எங்கு
பார்த்தாலும் திருமண்களும், திருநீற்றுப்பட்டையும்தான். சரி, தலித்,
அரவாணிகள், ஓரினப்பாலோர், மாற்றுத்திறனாளிகள்? அவர்களும் எங்கு
பார்த்தாலும்! என்ன அதிசயம் இது?
மைக்கேல் கேப்ளன் என்னிடம் சொன்னார் ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ பாட்டு
ராப் இசையுடன் கலக்கல்! என்று. அதுவும் உண்மைதான். சென்னையில் எங்கள்
வீட்டுக்குழந்தைகள் எல்லாம் இதையே பாடிக்கொண்டு இருக்கின்றன.
பொய்த்துப்போன தொன்மங்கள்
பொய்த்துப்போன தொன்மங்கள் என்பதில் முக்கியமாக சேர்க்க வேண்டிய ஒன்று செம்மொழி மாநாட்டில் ஈழத்தமிழர்களின் பங்கேற்பு. மின்வெளியில் வந்த
கடிதங்கள், தொடுப்புகள் (நம் மின்தமிழ் மடல்களையும் சேர்த்து) போன்றவை
மிகக்கடுமையான ஒரு நிலைப்பாட்டை காண்பித்து நின்றன. இந்திய/தமிழகச் சாடல் என்பது அதன் முக்கிய அம்சமாக இருந்தது. ஆனால் செம்மொழி மாநாட்டில் நான் கண்ணுற்றதோ இதற்கு எதிர்மாறான காட்சி. பேரா.சிவத்தம்பி அவர்களுக்கு
மேடையில் முதல்வருக்கு அடுத்த இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. சிவத்தம்பி
அவர்கள் குத்தலாக, நக்கலாக, இடக்கரடக்கலாக ஏதாவது பேசுவார் என்று
எதிர்பார்த்தால் அவர் மிகச் சாவதானமாக மாநாட்டின் சிறப்புகள், தமிழ்
மொழியின் செம்மை பற்றிச் சொல்லிவிட்டு தமிழக முதல்வர் தமிழினத் தலைவர் என்று புகழாரம் சூட்டிவிட்டு அமர்ந்துவிட்டார் (மன்னிக்க அவர் எழுந்து
பேசவே இல்லையே!
. நிறைய ஈழத்துப் பேராளர்கள் மாநாட்டில் கலந்து
கொண்டனர். 70களுக்குப் பிறகு தமிழகத்தைக் காணும் ஒரு ஈழத்துப் பள்ளி
ஆசிரியை என்னிடம் தமிழகம் கண்டுள்ள வளர்ச்சியைக் கண்டு பிரம்மித்துப்
போய் இருப்பதாய் சொன்னார். இலங்கை என்பது தவிர வெளி நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் பாரிய அளவில் மாநாட்டில் கலந்து கொண்டதைக் கண்ணுற முடிந்தது. என்னால் ஒன்று புரிந்து கொள்ள முடிந்தது, என்னதான் வீராவேசமாகப் பேசினாலும், ஒரு கல்யாணம், கார்த்திகை என்றால் உறவுகள் பகைமை மறந்து எப்படிக் கலந்து கொள்ளுமோ, அதே மனோபாவத்தில் ஈழத்தமிழர்கள் அங்கு வந்து சிறப்பித்தமை தமிழரின் அடிப்படை நற்குணத்தைக் காட்டுவதாக
இருந்தது.
4000 மேற்பட்ட வெளிநாட்டுத் தமிழர்களின் ஆர்வமான பங்களிப்பே பாரதி கண்ட
கனவை மெய்ப்பிக்கிறது. அது தவிர தொடர்ந்து வெளி நாட்டில் உள்ள
தமிழர்களின் இந்தியப் பங்களிப்பு இந்திய மேம்பாட்டிற்கு எவ்வளவு
உதவுகிறது என்பது நாம் அறிந்ததே. கருத்தரங்கின் வெற்றி பங்கேற்பவரின்
உற்சாகத்தைப் பொறுத்து இருக்கிறது. எல்லா வகையிலும் இதுவொரு வெற்றிகரமான
மாநாடு என்பதில் இரு கருத்து இருக்க வாய்ப்பில்லை. எல்லோரும் குறைகளையே சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதுவே நமக்கு மனப்பழக்கமும் ஆகிவிட்டது. நானும் கூட..சில நேரங்களில் அப்படித்தான்!!
ஒரு அறிவுஜீவி என்பவன் குறை மட்டும் காண்பவன் என்று கூட சூத்திரம் வந்துவிட்டது 
நான் என்னை அறிவுஜீவியாகவோ, பத்திரிக்கையாளனாகவோ, திறனாய்வாளனாகவோ கற்பனை
செய்து கொள்ளாமல், ஒரு வெளிநாட்டு பங்கேற்பாளன் எனும் கண்ணோட்டத்தில்
எழுதுகிறேன் (எனக்கே இதுவொரு மனப்பயிற்சியாக உள்ளது!).
கருத்துகள்
அருமை. உங்கள் பதிவுகள் மூலம்
அருமை. உங்கள் பதிவுகள் மூலம் மாநாட்டில் கலந்துகொண்டு ரசித்த உணர்வை உண்டாக்கியிருக்கிறீர்கள். நன்றி.




